நூல் விமர்சனம்புனைவு

சொல் எனும் வெண்புறா


 ‘சொல் எனும் வெண்புறா’ கவிதைத் தொகுப்பு  குறித்து கவிஞர் தேனம்மை லெஷ்மணன் எழுதிய விமர்சனப் பார்வை. 

 

சொல் எனும் வெண்புறா தத்தித் தத்திப் பறந்து பிரிந்து இணைந்து பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறது. கவிஞரின் கைச்சொடுக்கில் அது நம் அருகே நின்று தம் பாதரசநிறக் கண்களால் ஊடுருவுகிறது. அதில் உண்மை வாய்மை இவற்றோடு பெண்ணின் மென்மை, மெய்மையும் புலப்படுகிறது.

பதின்பருவக் கவிதைகள் என்று எவையுமேயில்லை. எல்லாம் குழந்தைப்பருவம் அதனிலிருந்து குடும்பத்தலைவி என்ற பரிமாணத்தில் தாவி விடுகின்றன. பிள்ளையாருடன் கொண்ட குழந்தைப் பருவ நட்பையும் பருவம் வந்து முறித்துப்போட்டு விடுகிறது. அவர் கடவுளாகவோ ஆணாகவோ ஆகிப் பிரிந்துவிடுகிறார். பெண்ணின் அக உலகில் அவருக்கும் இடமில்லாமல் போகிறது .

திருமண வாழ்வின் தினசரிப் பாடுகளை பதமாகப் பட்டியலிட்டுச் செல்கின்றன கவிதைகள். பிணைத்த சங்கிலிகள் சீட்டெடுக்கும் கிளியாகவோ தொழுவத்தில் மாடாகவோ, ஆலயத்தில் ஆனையாகவோ, எதாக மாற்றும் என்று தொக்கி நிற்கும் கேள்வியில் ஒரு நுகத்தில் மாட்டிய மனைவியாகவும் பரிணாமம் காட்டுகிறது.

மதுராவின் கவிதைகளில் சொல் எனும் வெண்புறா துள்ளி விளையாடுகிறது. நஞ்சு செரிக்காத நெஞ்சக் குடுவை, நேரமறியாது பூத்து  நேர்ந்துவிட்ட கணப்பிழையில் காத்திருக்கும் அகலிகை, நீறுபூத்த கனற்குஞ்சு, , சூரிய ரேகைகள் சுருக்கிட்டு மொட்டவிழ்தல், நட்சத்திர ஒளிக்குடுவை, காரண காரியங்களை விசாரிக்காத கடவுளாதல், வினாக்குறிகள் அசைந்தாடுதல், நித்திரை இறகுகள், சொற்குஞ்சுகள், மனச்சிப்பி என பிரமிக்க வைக்கிறார்.

கண்ணகியை மட்டுமல்ல சூர்ப்பணகையையும் கவிதையாக்கி இருக்கிறார் மதுரா. மோகித்ததற்கு மூக்கறுப்பும், முரண்படுவதற்கு முகச்சிதைவும் என ஆக்ரோஷத்தின் மொழியில் பேசினாலும் யதார்த்தத்தையும் நிராசையையும் முற்றுப் புள்ளியாக்குகின்றன கவிதைகள். கரும்புள்ளி அதுபோல ஒன்று.

சாமியாடி என்னைப் புன்னகைக்க வைத்த கவிதை. இன்ப நுகர்ச்சியை மிக அழகான கவிதையாக யாத்திருக்கிறார்.

“அண்டசராசரங்களைக்

கடந்து அற்புத உலகொன்றை

கண்முன்னே விரித்து..

சுழற்சியில் சலித்துப் போன

அணுக்களை உயிர்ப்பித்து..

அகக்கிடங்கில்

அமிழ்ந்துகிடக்கும்

அதிசயங்களைக் காட்டி

மனக்குளத்துள்

மறைந்து கிடந்த

மொட்டுக்கள் அத்தனையும்

ஒருசேரப் பூக்கவைத்து”

காதல் எல்லாம் காமத்தில் முடிவதையும் அவையும் கானலாகிப் போவதையும் காரியம் கருதிக் காத்திருப்பதையும் நச்சென்று பதிவாக்கியிருக்கிறார். நியாயம், அநியாயம்,தர்மம், அதர்மம் பற்றிய சிந்தனைகளும் அப்படியே. கனவுகளும் மாயாலோகமும் இவரையும் அதோடு நம்மையும் இழுத்துச் செல்கின்றன.

அதிகார மையங்களின் நீட்சியைப் பற்றிய அவசம் பல்வேறு கவிதைகளில் சலிப்பாய் வெளிப்படுகிறது. கேள்விகளின் பயணங்கள், மாறும் நியாயங்கள், இரவிவர்மாவின் ஓவியம்  அனைவருக்கும் பொதுவானவை. முதுமையில் வேலை செய்பவரைத் துணையாக எண்ணும் மாயாலோகமும், கருச்சிதைவு பற்றிய குடைக்குள் மழையும் , ஆயாவின் குழந்தை கவிதையும். மகனுக்கான கவிதைகளும் மனதை என்னவோ செய்தன.

கனவுலகிலும் நனவுலகிலும் மாறிப் மாறி அழைத்துச் செல்கின்றன அநேகக் கவிதைகள். நதியைப் போல நிச்சலனமாக நகரும் ஆசையை உண்டு பண்ணுகின்றன. மௌனமே அநேக கவிதைகளில் பேசு பொருளாகிறது. பேச விழையும் ஆனால் பேச்சைக் கட்டுப்படுத்தி நடப்பனவற்றுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் விதியின் பொம்மையாகப் பெண்மையைப் படைக்கின்றன இவை.

“கற்பூர பொம்மையின் பின்

காற்றாய் அலைகிறது நேசம் “

எதிர்ப்பார்ப்புகளோடும் ஏக்கத்தோடும் வாழ்ந்து செல்லும் இந்தியப் பெண்மையினைச் சுட்டுகின்றது மீட்டெடுக்கிறேன் என்னும் கவிதை. மனதைப் பல்வேறு வடிவுகளில் வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். மௌனக் குமிழிகள் அதை வரைந்து காட்டுகிறது.

யுகங்கடந்து

பெய்தபின்னும்

பெருநெருப்பு

அணைவதாயில்லை.

கனன்றுகொண்டே

இருக்கிறது

பெண்ணுக்குள்

தீராத் தீ.

 

“தீக்குளித்தலுக்கு அஞ்சியே

தாண்டப்படாமல் இருக்கின்றன

இலட்சுமணக் கோடுகள் “

என்று காலங்காலமாய் ஆண் மட்டுமல்ல யாருமே புரிந்து கொள்ளாத பெண்ணின் அக புற உலகை, உணர்வை நிணமும் சதையுமாய்ப் படைப்பதில் இக்கவிதைகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

நூல் தகவல்:

நூல் : சொல் எனும் வெண்புறா

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : மதுரா (தேன்மொழி ராஜகோபால்)

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2019

விலை: ₹ 80

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *