கதையின் ஆரம்பமே ரெட்டை கதவு திறந்து வரவேற்கிறது.

அடடே ! பெரிய ஆச்சரியம் ரொம்பவே குட்டி கதை, அதுக்குள்ள எவ்வளவு பெரிய செய்திகளை அசால்டாக சொல்லி இருக்கிறார்.

இப்படியும் எழுதலாம்னு, பாடம் சொல்லுதே கதை.

கீதாரி என்றால் என்ன என்பதை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகதான் அம்மாவிடம்‌ கேட்டு தெரிந்துக் கொண்டேன். என் சித்தி, யாரையோ நம்ம வீட்ல கீதாரி வேலை பார்த்தவ பேசுற பேச்சைப் பார்த்தியானு சொல்லிக்கிட்டு இருந்தவர்.., நான் வரவும், ஒம் பொண்ணு வந்திருச்சு, யாரை பத்தியும் குறை பேசாதேன்னும், நீ டீய போடுக்கா, குடிச்சுட்டு போறேன்னார்.

ஒண்ணும் புரியலை,  ‘அம்மாவிடம்‌ கீதாரின்னா என்ன?’ என்றேன்…

சுருக்கமா  ‘ஆடு மேய்க்கறவங்க’ என்று சொல்லிட்டாங்க. அப்புறம் அதை பற்றி மறந்து போயிட்டேன்.

கி.ரா அய்யா விலாவாரியா சொல்லிட்டாரே.  கிடை என்பது தனி ராஜ்ஜியம், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன்தான்‌ கீதாரி  என்று.

ரெட்டைக்கதவு, மோப்பு திண்ணை என்றவுடன் கும்பகோண வெத்தலை, சீவல்னு அடுத்து வரும்னு நினைச்சி படிச்சேன். கும்பகோண வெத்தலை சீவலா கமகமன்னு வட்டார மொழி மணம் வீசுது.

அடடா ! சொற்களஞ்சியம், சில சொற்கள் எங்க ஊர்லேயும் அதேதான், அதனால் பெரிதாக சிரமம் இல்லை, கூடவே வட்டார மொழிவழக்கு கதைகளில் ஒரு மயக்கம் உண்டு எனக்கு.

வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பாடு, கிடா ன்னு கொஞ்ச பேருதான் தெரியும் மத்தபடி சிவப்பா இருந்தா செவலைன்னு சொல்லுவாங்கன்னு தெரியும்.

இங்கே கி.ரா அய்யா கொடுத்திருக்கும் பெயர் பட்டியலை படிக்க படிக்க…,  எங்க தாத்தா வீடு, பெரிய நிலத்தில் நடுவில் இருக்கும், சுத்தியும் உயிர்வேலி இருக்கும், கருவேல மரம்… ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, புறாபண்ணை, வாத்துப்பண்ணை, ஒத்த குதிரை, மூணு ஜோடி மாடுன்னு ஒரே கோலகலமாக இருந்த நாட்கள் மனசுக்குள் நினைவாட ஆரம்பிச்சிருச்சு.

அட ! அதுதானே எழுத்தின் சிறப்பு, நம்மள வேறொரு உலகத்துக்கு கூட்டிட்டு போறது. ஆடுக கருவேல மர காயை கரக் கரக் ன்னு திங்கும், பாலாட்டாங் குழை என ஓரிடத்தில் கதையில் வர, டக்குன்னு அப்போ இருந்த ஆடும் அவை அசைப்போட்ட தழைகளையும் அசைப்போட ஆரபித்து விட்டது மனம்.

தாலி புதுசான செய்தி என்பதாலேயே சந்தோசமான செய்தியாகவும் இருந்தது, சில ஆட்டுக்குட்டிக ஓடி வரும்போது, அது தாடைக்கு கீழே இரண்டு தொங்கட்டான்கள் மாதிரி இருக்கும் அதை வேடிக்கை பார்த்திருக்கேன் பேரு தெரியாது, இன்று தெரிந்து கொண்டேன்.

பள்ளை ஆடு, ஓங்கோல் ஆடெல்லாம் புதுசா கேள்விபடுகிறேன்.

ஒரு சின்ன கதையில் ஆட்டின் பெயர்கள், ஆட்டுப் பாலின் நன்மைகள், (அதில் ‘உதவி” என்ற ஒரு சொல்லாடல் வருகிறது அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் மகிழ்வேன்)

சில தழைகளின் பெயர்கள், ஆடுகளை மேய்க்கும் மனிதர்களின் வாழ்வியல், அவர்களின் நம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வு, நடுநிலையோடு இருக்கும் மாந்தர்கள் சாதிய அடுக்குகளை காத்து நிற்பதற்காக காலங்காலமாக மறைக்கின்ற உண்மைகள், வல்லமை கொண்டோர்களின் கரங்கள் தனிமனிதர்களின் வாழ்வை வெளியில் தெரியாத வண்ணம் அடக்கி ஆள்வது,

பொதுவாக, கிராமப் புறத்தில் இருக்கும் கேலி, திருட்டு, உடன்போதல், பயிர்களுக்கு ஏற்படும்‌ இழப்பு, அதற்கு தீர்வு வழங்கும் சபையென அத்தனை செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு நுட்பமான கலை படைப்பாக மிளிர்கிறது  கிடை.

எல்லப்பனின் கல்யாண ஊர்வலத்தின் போது நடக்கின்ற செவனியின் பேயோட்டும் நிகழ்வு சமூக முரண்களை படம் பிடித்துக் காட்டுகிறது. பெண்ணின் மனநிலை புரியாது பேயோட்டுவதும், அடிப்பதும் கொடுமை. செவனியின் நிலை மனதை விம்ம செய்கிறது.

கூடவே, கல்யாணம் என்றால், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களை தாரை வார்க்கும் முறையை மிக நுட்பமாகவும், பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்ற போக்கு என பல்வேறு சமூக கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ள கதை.

பொடி போடும் அழகை பதனமாக கஞ்சிராவுக்கு ஸ்ருதிப் பார்ப்பதைப் போல ஆட்காட்டி விரலால் பொடி எடுப்பதை கூறியிருப்பது அய்யாவின் உசை ஞானத்திற்கு சான்று, ஈறுகளில் ஒட்டாத பொடியை பூ என ஊதிவிட்டு, உதட்டை உம்‌ என்ற “அழகில்” வைத்துக் கொள்ளும்போது என்பதெல்லாம், வெகு இயல்பான காட்சிப்படுத்துதலும், அவதானிப்பும், அழகிய ரசனையுமாகும்.

அடிக்கடி பென்ஸ் கார் மோட்டாரைப் போல கஹ் என்ற ஒரு சப்தத்தை கொடுத்து மூச்சு காற்றை வெளியேற்றிக் கொண்டிருப்பார். மெல்லிய சிரிப்பொன்று படர்ந்தது. அன்றைய காலம், பென்ஸ் காலம்.

பனைநார் பற்றிய குறிப்புகள் மண் வாசனை… ! கத்தாழை நார் போல நரைத்த கொண்டை… அடடா ! ஒப்பீடு, கூடவே ஒரு தாவரத்தின் பெயர் பதிவு என ஏக அமர்க்களம்.

மீசையில்லாத ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்ற, தமிழகப் பெண்களின் ரசனையை ஓரிரு சொற்களில் போகிற போக்கில் சொல்வதையும், மீசையில்லாத ஆணை, பெண் வேசம் போட எங்காவது அச்சாரம் வாங்கியிருக்கீகளா? என்று கேட்பதையும் மிகவும் ரசித்தேன்…

மீசை இல்லாத ஆண்களை எனக்கும் பிடிக்காது, என்ற உளவியல் கூட இந்த ரசனைக்கு காரணமாக இருக்கலாம்.

டணா கம்பு, தொறட்டி கம்பு, கம்பராக் கத்தி… கிராமத்தை படம் பிடிக்க போதுமான சொற்கள்.

பஞ்சத்திலும் ஆவாரம்பூ செழித்திருக்கும் என்பதும், ஆடு தின்னாத பாளையையே ஆடு தின்னும்‌ என்பதும்,இடைகாட்டர், வரகை மண்ணோடு பிசைந்து கோட்டை கட்டி வாழ்ந்ததும், ஆடு சுவரில் உரச உதிரும் வரகை, ஆட்டுப்பாலில் சமைத்து உண்பதும்… ஆகா ! அறிவியல் நுட்பம் அல்லவா.

எங்க தாத்தா வீட்டில் ஒரே ஒரு முறை, ஆட்டுப்பாலில் காஃபி தயாரித்தார்கள் என் சித்தி, என் அம்மா, வேண்டாம் கொச்சை வாடையடிக்கும் என்று சொன்னதும் நினைவில் இருக்கிறது.

அவளுடைய கீழுதடுக்கும் நாடிக்கும் இடையில் “பாசிபருப்பு” அளவில் பாலுண்ணி இருக்கும்.

தானியம் கொண்டு அளவீடு செய்வது பண்டைய முறை, இதுவரை படித்த கதைகளில், இந்த கதையில் மட்டும்தான் அம்முறை கையாளப்பட்டிருப்பதை பார்க்கிறேன்.

‘கூடவே, அவளுடைய பாம்படத்தை விற்று சந்தையில் நாலு புருவைகள் வாங்கி வந்தார், இப்போ அவரிடம்‌ ஒரு மொய்க்கு மேலே இருக்கு. ஒரு மொய் என்பது 21 ஆடுகள், முதல் ஈத்துலேயே கொச்சைக் கிடா கிடைத்தது.. எச்சத்தை வைத்து பறவையை கண்டு பிடிச்சுடுவார்’ என்ற வரிகளில் பாம்படம் என்ற நகை, மொய் எனும் அளவீடு, ஆட்டின் பெண் உறுப்பை அறை எனும் சொல், எச்சம் வைத்து கண்டுபிடிக்கும் நுண்ணறிவு என காலம் கடந்தும் கடத்தப்படும் பதிவுகள் அற்புதம்.

பொன்னுசாமி நாய்க்கரின், பேய் கதைகள் சூப்பர். எங்கள் கிராமத்திலும் இவ்வகை கதைகளை எங்க ஆத்தா சொல்லி கேட்டிருக்கிறேன்.

மேலுதடு கிழிந்து மேற்பற்கள் தெரியும் ஒரு விவரணையை படிக்க, சிறுவயதில், கிராமத்தில் அப்படி ஒருவரை பார்த்த நினைவு வந்து சென்றது.

கிராமத்தில் பார்த்ததை மீளப்பெற்றேன். அம்மாவிடம் கொஞ்சம் விவரங்கள் பெற்றால், ஒரு கதை உருவாகலாம்.

கி.ரா வின் கிடை வாசிப்பவரை அந்த space and time ல் சஞ்சரிக்க வைக்கிறது.

வாழ்வில் ஒவ்வொன்றையும் அவதானித்து வாழ்வதே பெரு வாழ்வு என்பதை கதை இயல்பாக சொல்கிறது..

கிடை மனதை மேயும் வசீகரம்!

கோ.லீலா.

நூல் தகவல்:

நூல் : கிடை

பிரிவு :  குறுநாவல்

ஆசிரியர் :  கி.ராஜநாராயணன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :    

முதற்பதிப்பு : 1968  (அறுசுவை, வாசகர் வட்டம்)

மறுபிரசுரம் :  டிசம்பர் 2017

பக்கங்கள்: 61

விலை :  ₹ 75

Kindle Edition:

கி.ராஜநாராயணின் “கிடை” நாவலை தழுவி அம்சன் குமார் இயக்கத்தில்  “ஒருத்தி” எனும் பெயரில்  2003 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. இதுகுறித்து மேலதிகமாக அறிய  இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *