சில நேரங்களில் நமது கனிப்பு சரியாகி விடுகிறது. எனக்குப் பிடித்த அயல் எழுத்தாளர் ஒரான் பாமூக் எழுதிய “இஸ்தான்புல் ” அவர் வாழ்த்த நகரின் நினைவுக்குறிப்புகள் பின்புலத்தில் கதையாடும் நூல். அதில் இஸ்தான்புல் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்தது தன்பினார் எழுதிய நிச்சலனம் எனப் பரிந்துரைத்திருப்பார். பாமூக்கின் இஸ்தான்புல் வாசிக்காமல் நிச்சலனத்தில் மூழ்கி எழுவது சாத்தியமில்லை. வழி தெரியாத நகரில் தொலைந்தது போல் மூச்சுத் திணறலாம்.

தி.ஜா , கி.ரா, தஞ்சை பிரகாஷ், கண்மணி குணசேகரன் மேலும் சில தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தங்கள் வாழ்ந்த/பிறந்த மண்ணின் இருப்பை வாசகன் மனதில் இருத்த கதை நிகழ்வுகள் வழியேயான காட்சியமைப்பில் அதைக்கொண்டு வருவார்கள். இது அவ்வாசகனை நாவலில் ஒரு மாய பாத்திரமாக்கி ஒன்றச்செய்துவிடும்.

அரிதான ஒரு முறை இருக்கிறது. கடினமான அந்த முறையைத் தான் தன்பினார் இதில் கையாள்கிறார். சரியான ஆளுமையில்லாவிடில் குழப்பமான படைப்பாகி விடும் அபாயமும் இருக்கிறது.

நகரின் இடவாகு இருத்தலியல் மூலம் அதாவது அஃறிணைகள் வழியே கதைக்கு உயிர்ப்பு தருவது. கதைக்கு என்பதை விட நகரத்திற்கு என்று கூறலாம். இங்குக் கதை நிகழ்வுகள் வழியே நகரம் விழித்துக்கொள்ளவில்லை. மாறாக நகரம் மூலம் கதை விழிப்படைந்துகொள்கிறது.

காட்சிகள் மாற்றத்திற்கு பின்புலத்திரையாக பின்பாட்டு பாட வேண்டிய நகரம் ஜீவன் ததும்பும் மாயாஜாலாத்திரையாக முன்னால் செயல்படுகிறது. நகரின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்பாக தன்னகத்தில் சேர்த்துக்கொண்ட இந்தப்படைப்பு உருகொண்ட உயிராய் மெல்ல நகர்கிறது.

ஒரு காலத்தில் மினுமினுப்பாய் இருந்த ஓட்டோமான் இராஜப்பாட்டையில் நொறுங்கும் பகட்டின் சோககீதங்கள் இசையாகப் பிழிகிறது.

வயதான யாளிகள் (மாளிகைகள்), சரிந்து குவிந்து நிமிர்ந்தெழும் இருளடைந்த குறுகிய சாலைகள், நவநாகரீகத்தின் சுமையால் மூச்சுத்திணறும் ஆன்மீக மையங்கள், பால் நிலவு பிரதிபலிப்பில் வெள்ளிப்பனி பாலங்களாய் வசீகரிக்கும் பாஸ்போரஸ் நீரிணைப்பு, கடந்தகால நினைவு சேமிப்பகங்களாகப் புழுங்கும் அருங்காட்சிக் கூடங்கள் என நகரின் நிச்சலமான தடங்கள் வழியே பயணிக்கும் மைய கதாப்பாத்திரத்தின் தேடல் முடிவு என்பது நகரத்தில் மறைந்திருக்கும் நிழலின் சாயல்.

முதல் உலகப்போரின் (1914-18) தழும்பை உலகம் தடவிப் பார்த்து நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் உலகப் போருக்கான (1939-45) முன்கட்ட நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. முதல் உலகப்போரில் ஓட்டோமான் பேரரசு நேச நாடுகளுக்கு எதிரான அணியில் இருந்ததும் பின்பு தொடர்ச்சியாக அந்நாடு சந்தித்த போர்களும் புரட்சிகளும் துருக்கியைக் குடியரசு நோக்கி விரைவுபடுத்தியதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

மரணத்தின் வாடை நாசியிலிருந்து நீங்குவதற்கு முன்பே புகைந்து கருகிக் கொண்டிருந்த உலக அரசியல் ஒவ்வொரு தனி மனிதன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பதட்டமான இந்த நிலையற்ற வாழ்வின் சூழலில் (கி.பி.1939) கதை நிகழ்கிறது.

மும்தாஜ் சிறுவனாக இருந்த போது முதலாம் உலகப்போர் ஓய்ந்து போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் கீரிஸ் படையெடுத்த சமயத்தில் குடியிருப்பின் சொந்தக்காரர் எனத் தவறாகக் கருதி அவனது அப்பாவை ஒருவன் சுட்டுக் கொன்று விடுகிறான். நகரத்தில் பெரும் பதற்றம் . இறுதிச் சடங்கு அவசர அவசரமாக நிகழ்கிறது. தோட்டத்தின் மூலையிலிருந்த ஒரு சினார் மரத்தடியில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தின் உதவியால் மும்தாஜின் தந்தை புதைக்கப்படுகிறார்.

எரிந்து கொண்டிருந்த நகரின் பிடியிலிருந்து மும்தாஜின் கையை இறுகப் பிடித்த அவனது தாய் வாழ்வின் நம்பிக்கை ஒளியைத் தேடி பயணமாகிறாள். பயண வழியில் மும்தாஜ் எதிர்கொள்ளும் இரவு கனவுகளும் வழியில் அவர்களோடு இணைந்து கொண்ட அவனைவிட மூத்த ஒரு பெண்ணின் உடல் ஸ்பரிசம் தந்த இச்சையும் பின்னால் அவனது வாழ்வின் தருணங்கள் வழியே கசியும் இன்ப துன்ப வண்ணக் கலவையின் இடைப்பொருளாய் இருக்கிறது.

தாயை இழந்த பின்பு இஸ்தான்புல் பெரியம்மா வீடு அவன் வாழ்விடமாகிறது. பெரியம்மா மகன் இக்ஸான் ஒரு நல்ல நண்பனாக வாழ்வின் மீதான பல தரிசனங்களைத் தேடும் உந்து சக்தியைத் தருபவனாக அமைகிறான்.

தேடல் உள்ளவன் காதல் உணர்வைக் கடந்து செல்ல முடியாது. பிரின்ஸஸ் தீவுக்குச் செல்லும் பயணிகள் படகு ஒன்றில் நூரன் தன் மகள் பாத்மாவுடன் அறிமுகமாகிறாள். மும்தாஜின் எண்ணத்தைப் பொறுத்தவரைப் பெண்களின் அழகு என்பது ஒன்று அவள் இஸ்தான்புல்காரியாக இருக்க வேண்டும். இல்லை பாஸ்போரஸ் கரையோரம் வளர்ந்தவளாக இருக்க வேண்டும் .பின்பு அந்த எண்ணத்தில் நூரன் போல் இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு அவன் காதலில் தொலைந்து போகிறான்.

நூரன் உடன் ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்திச் சலித்த அவளது கணவன் ஃபாஹிர் ஒரு ரோமன் நாட்டு பெண்னின் சதையில் சலிப்பை போக்கிக் கொள்ள விழைகிறான். தனது விருப்பத்திற்கு மாறான கணவனின் விழைவு அவளை விவாகரத்தை நோக்கி நகர்த்துகிறது. மும்தாஜ் வயதில் இளையவன் என்றாலும் அவனது அன்பும் அரவணைப்பும் அவளை ஆட்கொள்கிறது. தனது நேரத்தை தன் தாயிடமிருந்து மும்தாஜ் அபகரித்து கொள்வதை சிறுமி பாத்மா விரும்பவில்லை.

மும்தாஜ் ஒரு இரண்டுங்கெட்டான் கருத்தியல்களின் குவியல். நூரனும் இரண்டுங்கெட்டான் தான். அவள் சூழலின் கைதி. இதையெல்லாம் மீறி அவர்களது சந்திப்பு விரிவடைகிறது.வெளிப்படையாகவே குடும்பம் மற்றும் நண்பர்களின் பார்வைகளையும் அது எதிர்கொள்கிறது. காதலர்களின் பயணங்கள், சந்திப்புகள், உரையாடல்கள் வழியே இஸ்தான்புல் நகரம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.நம்மைத் தழுவிக்கொள்கிறது. பாரம்பரிய இசை இசைக்கப்படும் போதெல்லாம் அந்நகரம் திறந்து கொள்கிறது. மௌன சாட்சிகளாய் நிற்கும் கட்டிடங்கள் வரலாற்று முடிச்சுகளை அவிழ்க்கிறது.

தாகத்தில் தவிக்கும் விலங்குகள் தண்ணீர் குட்டையை கண்டவுடன் பருகுவது போல் நூரனை தனதாக்கிக் கொள்கிறான். அவளது அருகாமை அவனது இருப்பின் சுவையை அதிகப்படுத்துகிறது. நூரனை பொறுத்தவரை அவள் வேறு வேறான வீடுகளில் வசிக்கிறாள். காதலின் வீட்டிலும் கடமையின் வீட்டிலும் .இருக்குமிடத்திற்கேற்ப அவளை உருமாற்றிக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

உள்ளார்ந்த எதிர்பார்ப்புகள் , உணர்வுகள், கருத்தியல்கள் மத்தியில் சில நண்பர்களின் நிழல் ஊடுருவி பெரும் சாபத்தைத் திணிப்பது போல் சூயத் என்கிற அவர்களது நண்பன் நுழைகிறான். நூரன் மீதான அவன் இச்சையைப் பலவகையில் வெளிப்படுத்துகிறான். கடிதம் தருகிறான். இருவரும் அவனை நிராகரித்து விட்டு இன்னும் பத்து நாட்களே இருக்கும் தங்கள் திருமண நாளுக்குக் காத்திருக்கிறார்கள்.

இருப்பின் விகாசிப்பு இல்லாமல் போகும் போதும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற தந்திர யுக்தியில் நூரன் – மும்தாஜ் எதிர்கால இருப்பின் நினைவைச் சுமக்கப்போகும் இல்லத்திலேயே சூயத் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த அதிர்ச்சிகரமான செயலின் பாதிப்பு காதலர்களைக் கலக்கமடையச் செய்கிறது. அமைதி நீரோட்டமாய் இருந்ததைக் கொந்தளிப்பாய் மாற்றி விடுகிறது.

தன்பினாரின் மகத்தான படைப்பான இது அவரது காலத்திற்கு பிறகே பெருமளவு வாசகர்களைச் சென்றடைந்து கொண்டாடப்பட்டது. புறச் சூழல்களை அக உணர்வுடன் சரியான விகிதத்தில் சேர்த்து எழுதியுள்ளது சிறப்பானது.

இசை, இலக்கியம், ஓவியம், கலைச்சின்னங்கள், கலாச்சாரங்கள் எனத் துருக்கியின் நிர்வாணத்தில் ஒளிந்திருக்கும் நிச்சலனத்தை தரிசிக்க வைக்கிறார்.

“போர் முனைக்குச் சுமை கூலியும் செல்ல வேண்டும். படித்த சீமானும் செல்ல வேண்டும். சுமை கூலிக்கு எதற்குப் போர் என்றே தெரியாது. படித்த சீமானோ லட்சிய எதார்த்தாவாதம் தெரிந்து போரிடுவான். போர்க்களத்தில் இருக்கும் போது சுமைகூலி மனைவியின் சிந்தனை தான் சீமானின் மனைவியான சீமாட்டிக்கும் இருக்கும் ” என்கிறார் தன்பினார்.

துக்கம் ( ஹூசுன்) மட்டுமே ஒரு பொதுவான இழையாக ஆடையில் மறைந்து காலத்தின் முகத்தில் முக்காடுயிட்டுள்ளதே வாசகனாக நாம் அறிந்து கொள்ளலாம்.

மனித அக உணர்வின் நடைமுறையோடு ஒன்றிப்போகும் தன்பினாரின் செறிவார்ந்த தத்துவக் கருத்துகள் சில:-

எதை வேண்டாம் என்று நினைக்கிறாமோ அதன் மீதுள்ள கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும்.

சமூக மாற்றத்திற்கான சிந்தனை மாறும்போது மக்களும் மாறுகிறார்கள். கடவுளர்களின் முகங்கள் வெளிறிப்போகின்றன.

 மரணம் என்றோ வாழ்வு என்றோ எதுவுமில்லை. இருப்பதெல்லாம் நாம்தான். அவ்விரண்டும் நம்மோடு இருப்பவை. பிற விஷயங்களெல்லாம் காலக்கண்ணாடியில் கடந்துபோகும் மகத்தான/சில்லறை விபத்துகள்.

வாழ்க்கை என்பதே கனவுகளின் கூடாரம். நாளை நீயும் கூட கனவாக மாறிவிடலாம். கருத்தியல்களே போரில் இறங்கியிருக்கின்றன. கருத்தியல்கள் தான் கலவரங்களைத் தூண்டிவிடுகின்றன. தன்பினாரிலிருந்து பிரித்தெடுத்த எழுத்து சாயலை ஓரான் பாமூக்கின் படைப்புகள் மீது காணலாம்.

நிச்சலனம் உச்சபட்ச செயல்முடிவின் செயலற்ற உயர்வான நிலை. எந்தவொரு நூலையும் பொறுமையாக நிதானித்து வாசித்து செல்லும் போது அது ஒரு மலையேற்றத்திற்கு நிகரானது. பாதியில் திரும்பும் துக்கத்தின் மனஅழுத்தத்தை விட முனைப்பாய் உச்சயடைந்தப்பின் வரும் உடல் அழுத்தம் மதிப்பானது. கதவுகளற்ற உலகத்தைத் தரிசிக்க முனையுங்கள்.

இந்த கடினமான நூலைத் தமிழில் மொழிபெயர்த்த தி.அ. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.


மஞ்சுநாத்.

நூல் தகவல்:
நூல்: நிச்சலனம்
பிரிவு : மொழிபெயர்ப்பு நாவல்
மூலம் : A Mind at Peace (Turkish: Huzur)
ஆசிரியர்: அகமத் ஹம்தி தன்பினார்
தமிழில்: தி . அ . ஸ்ரீனிவாசன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு  2014
பக்கங்கள்: 424
விலை : ₹ 375
நூலைப் பெற:

4 thoughts on “நிச்சலனம்- மொழிபெயர்ப்பு நாவல் ஒரு பார்வை

  1. கடினமான நூலை மொழிப்பெயர்த்தவருக்கு நன்றி செலுத்திய உங்கள் வாசிப்பின் நேசிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரம் இத்தகைய நூலை அறிமுகம் செய்யும் தங்கள் விமர்சனமும், vimarsanam.in ம் தமிழ் இலக்கியச்சூழலுக்கு இன்றியமையாத பங்களிப்பு என்பதை பின்வரும் காலங்கள் உணரும்.

    1. மொழிப்பெயர்ப்பாளருக்கு நன்றி நீங்கள் சொல்லிவீட்டீர்கள் நூல் அறிமுகத்திற்கு உங்களுக்கும் , vimarsanam.in க்கும் எனது நன்றிகள்.

      1. நன்றியும் அன்பும்

    2. ஒவ்வொரு புத்தகமும் ஒரு விதையைப் போன்றது. விதை விளைகிறதா என்கிற கவனத்தை விட மண்ணின் மீது நாம் கவனம் செலுத்தினாலே தகுதியான விதைகள் நம்முள் வளரும் என்பதே எனது புத்தக விமர்சனங்களின் நோக்கம். நன்றி

Comments are closed.