“காஞ்சிமா” ஆறு என்ற பெயர் கொண்ட “நொய்யல்” “காணாமல் போன ஆறு” என்று பெயர் கொண்டிருப்பதுதான் மனிதன் நீரை வஞ்சித்த கதை. நிஜம் அடித்து நீர் வடித்த பிழை. சமகாலம் கொண்ட வாழ்வாதாரங்கள் சந்திக்கும் இயற்கையின் வலி.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை- வெள்ளியங்கிரி மலை-யில் உருவாகும் இந்த ஆறு “நீலி”யாறாக மாறி….பின் “தொள்ளாயிரத்து மூர்த்தி கண்டி” என்ற வைதேகி நீர்வீழ்ச்சியாகவும்  இந்தப்பக்கம் “கோவைக் குற்றால”மாகவும் பிரிந்து மீண்டும் பல சிற்றோடைகளோடு இணைந்து “தொம்பிலிபாளையம் கூடுதுறை”யில் “நொய்யல்” என்ற ஆறாக உருவாகிறது.

அதன் பிறகு கோவையை சுற்றியுள்ள உக்குளம்.. பெரிய குளம்… வேடப்பட்டி குளம், முத்தண்ணன் குளம், செல்வா சிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்ற பல குளங்களை நிரப்பி விட்டு ஒரத்துப்பாளையம், திருப்பூர், ஊத்துக்குளி வழியாக கரூர் சென்று காவேரியில் கலக்கிறது.

உருவாகும் இடத்தில் இருந்து காவேரியில் கலக்கும் வரை நொய்யல் ஆறு கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் பயணிக்கிறது.

கோவையை சுற்றி இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் வளம் கொழிப்பவை. பசும் புல் வெளிகளும், சோலை வனங்களும் பசுமை மாறாக் காடுகளுமாக உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ச்சுனைகளும்… நீரோடைகளும் நிறைந்தவை. அதன் ஒரு பகுதி தான் “தென்கயிலாயம்” என்று சொல்லும் வெள்ளியங்கிரி மலை. அதிலிருந்து ஜடை ஜடையை வெள்ளி நீர் துளிகள் கொட்டுவதை காணவே நற்பயன் செய்திருக்க வேண்டும். வெள்ளியங்கிரியில் “சீதைவனம்” என்ற இடத்தில் உருவாகும் இந்த நொய்யல்.. பல பள்ளங்களை நிரப்பி.. அணைக்கட்டுகளை நிரப்பி இறுதியில் கரூரில் நொய்யல் கிராமத்தில் காவேரியில் கலக்கிறது. வழியெங்கும் ஏராளமான பகுதிகளை செழித்தோங்க வைத்து போனது பசுமையான வரலாறு என்று ஆசிரியர் சொல்ல சொல்ல நினைவுகளில் பசுமை சொட்டுகிறது. இன்றைய நிஜம் தேளின் தீவிரத்தோடு கொட்டுகிறது.

நொய்யலின் மூலமாக 40க்கும் மேற்பட்ட குளங்கள் பயனடைகின்றன என்று கல்வெட்டு கூறுகிறது. ஆனால் நிதர்சனங்கள் அதற்கு எதிர்மறையாகவோ.. அதனை விட குறைவாகவோ தான் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்தில் நொய்யலின் உருவாக்கத்தில் ஏற்படும்.. பளீர் புன்னகை….. அதிசயம்….. ஆச்சரியம்…. ஆர்ப்பரிப்பு…. ஆனந்தம்….. எல்லாம் மெல்ல மெல்ல கழிவு நீரும் சாக்கடை நீரும் கலந்து நுரை பொங்க உரத்துப்பாளையத்தில் தன்னை மாய்த்துக் கொள்கையில் பகீர் என்று திக்கி திணறுகிறது. நா வறண்டு முகம் சுருங்கி….. போகும் வழி தெரியாமல் நிற்கையில், நொய்யல் மட்டுமல்ல படிக்கும் நாமும் கூட எழுதப்பட்ட இப்புத்தகம் கூட தடுமாறுகிறது. சாக்கடை வாசத்தை உணருகையில் சாயக்கழிவு நீரை சுவாசிக்கையில்…  மானுட பிழை காரி உமிழ்கிறது.

ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கும் நொய்யல் தலை விரித்து தண்டவமாடுவதை கடந்த காலங்களில் கண்டதாக ஆசிரியர் எச்சரிக்கிறார். இனி அது போலொரு சம்பவம் நிகழுமெனில் கோவை தாங்குமா என்பது சந்தேகம் என்றும் கடுமையாக எச்சரிக்கிறார். கோவையின் கட்டுமான அமைப்பு அப்படி. சென்னை மாதிரியான நகரம் அல்ல கோவை. சீக்கிரத்தில் நீர் வடியாத தன்மை கொண்டவை. கடந்த 80 களில் “ஒண்டிப்புதூர், செல்வசிந்தாமணி குளம் அருகே, போன்ற பல இடங்கள் நீரால் மூழ்கிய கதையை படிக்க படிக்க நீரின் கோபம் என்ன செய்யும் என்று உணர முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில்-தாராபுரம் சாலையில் நீர் சூழ்ந்து கொண்ட கதையையும் படிக்கையில்… நொய்யல் பொங்கி அழிக்கும் காட்டாறு என்பது உண்மை தான் என்று நம்ப வேண்டி இருக்கிறது. நதி எத்தனை அழகோ.. அத்தனை ஆபத்து நிறைந்தவை. அது அதன் போக்கில் முன்னோர் உருவாக்கிய அணைகளின், குளங்களின் துணை கொண்டு போய்க் கொண்டிருக்கும் வரை பிரச்னை இல்லை. இடையே ஆறு செல்லும் வழியெல்லாம் பிளாட் காட்டி, நீரின் போக்கை மடை மாற்றி, மணல் அள்ள போக்கு காட்டி, பனியன் கம்பெனிகளுக்கு நீரள்ளி சாயக் கழிவுகளை நீரில் கலந்து என்று நுரை பொங்க ஆற்றை கதற விட்டால் அது தன் வேலையை காட்டும்.

நீண்ட நெடிய தொன்மையான வரலாறு நொய்யலுக்கு உண்டு என்பதை நொய்யல் கரையோரம் கிடைக்கும் கி மு 5ம் நூற்றாண்டு கல்வெட்டுகளை கொண்டு அறிய முடிகிறது. கி பி 12ம் நூற்றாண்டில் பேரூரில் சோழனால் கட்டப்பட்ட “கோளூர்” அணை, “தேவிசிறை” அணைக்கட்டு நொய்யல் ஆற்றுக்கு சாட்சியாக இன்னமும் இருக்கின்றன. மிகப்பெரிய வரலாற்று ஆவணமாகவே இந்த நொய்யல் இருக்கிறது. ஆனால் அது பற்றிய பெருமை உணர்வோ….வரலாற்று தகுதியுள்ள சான்றாகவோ நாம் அதை கருத்தில் கொள்ளாதது மிக கொடுமையான சாபக்கேடாக உணர்கிறேன். இத்தனை அருகாமையில் கால பொக்கிஷத்தைக் கொண்டுள்ள நாம் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

நொய்யலின் வழியெல்லாம் சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு அதன் போக்கையே மாற்றி விட்ட பெருமை நம் சம கால மனிதர்களையே சாரும். எந்த காலத்துக்கும் இல்லாத அதி தீவிர அசுத்தத்தின் காலம் இது தான் என்று தாராளமாக நம்பலாம். மணல் திருட்டு வழியாக நீரை மடை மாற்றும் வழியாக. போர் போட்டு நீரை உறிஞ்சும் வழியாக என்று அதன் இயல்பான போக்கை கொன்று குவித்ததை காலம் ஒரு போதும் மன்னிக்காது. நொய்யலின் இயல்பே துள்ளி வருவது தான். பார்க்க காட்டறாரு போல தோற்றம் கொண்டாலும்.. அது சீசனுக்கு வரும் ஆறு இல்லை. ஆனால் அப்படி ஒரு காலத் தோற்றத்துக்கு பொருளாக்கி வைத்திருக்கிறோம் என்று சாடுகிறார் ஆசிரியர்.

“நொய்யல் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு வாய் தண்ணிக்கு சாகட்டும்” என்று சாபமிடும் கவிஞர் புவியரசின் கண்களில் காண்கிறேன். மிகுந்த சோகம் வருத்தம் பயம் பதற்றம் என எல்லாமே உணர முடிகிறது.

“இந்து’வில் தொடராக வந்த இந்த கட்டுரை, பின் “சப்னா” மூலமாக புத்தகமாக போடப் பட்டிருக்கிறது. பக்கத்துக்கு பக்கம்.. நொய்யலின் வாழ்வும் வீழ்ச்சியும்… புள்ளி விபரங்களோடு நம்மை உலுக்குகிறது. மீட்டெடுக்க வேண்டிய தேவையையும் உரிமையையும் நாமே கொண்டுள்ளோம்.

கவிஜி

நூல் தகவல்:
நூல் :

நொய்யல் இன்று: பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

பிரிவு : கட்டுரைகள் | சூழலியல்
ஆசிரியர்: கா.சு.வேலாயுதன்
வெளியீடு: சப்னா புக் ஹவுஸ்; கோவை
வெளியான ஆண்டு : 2017
பக்கங்கள் : 220
விலை : 140
தொடர்புக்கு: 0422 – 4629999
  Kindle Editon

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *