நூல் விமர்சனம்புனைவு

நூறு நாற்காலிகள்


நாயாடிகள். அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு. இவர்களை பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாட முடியாது. இவர்களை நேரில் பார்த்துவிட்டால் உடனே சத்தம்போட்டு சூழ்ந்துகொண்டு கல்லால் அடித்துக் கொன்று அங்கேயே எரித்து விடும் வழக்கம் இருந்தது. ஆகவே இவர்கள் பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் பன்றிகள்போல ஒடுங்கிக்கொண்டு தூங்குவார்கள். இரவில் வெளியே கிளம்பி வேட்டையாடுவார்கள். இவர்கள் மூதேவியின் அம்சம் என்று நம்பப்பட்டமையால் இவர்களுக்குத் தவிடு ,மிஞ்சிய உணவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வெளியே பிச்சையாகத் தூக்கி வைக்கும் வழக்கம் உண்டு”

இதுதான் அல்லது இவர்களின் ஒருவர்தான் ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகளின்’ கதாநாயகன். என் போல் சிலர் சினிமாவில் வரும் எப்படிப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளுக்கும் அழுதுவிடமாட்டோம் . ஆனால் ஒரு கதை படித்துவிட்டு கூட உங்களால் அழ முடியும் என்பதை ஜெயமோகன் தான் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வரிகளும், ஒவ்வொரு வார்த்தைகளும் அத்தனை வலியாக இருக்கிறது. வெறும் 64 பக்கங்களில் சமூகத்தின் வெளிறிய முகத்தில் சாணத்தை வாரி ஊற்றிக்கொண்டே செல்கிறார். இப்படிக்கூட இருப்பார்களா என்றுதான் யோசித்தேன்.

ஒடுக்கப்பட்ட அல்ல மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்த ஒருவன் எப்படியோ வெள்ளைச்சட்டை அதிகாரத்தில் அமர்கிறான். அமர்ந்தால் அவன் சார்ந்த சமூகத்தை முன்னேற்றிவிடுவானா?முடியுமா? ம்ம்ம்ம்.. அவனுக்கு முன்பிருந்த அதிகாரிக்குப் போடப்பட்ட சொகுசு நாற்காலிகூட நீக்கப்பட்டு சாதாரண மரநாற்காலியை தருவது வன்மம். இங்கு அவனை அவனே கூட முன்னேற்றிக்கொள்ள விடுவதில்லை. அவனுக்குக் கீழே பணி புரியும் உயர் சாதி அதாவது அப்படி தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் கேடுகெட்ட பிரிவுகளில் சிலர் அவனைக் குனிய வைத்தே நடக்கச்செய்கின்றனர். இது எக்காலத்திற்கும் முற்றிலும் ஏற்புடைய வாக்கியம்.மருத்துவரோ , காவல்துறை அதிகாரியோ நீ எதுவாக இருந்தாலும் உன் சாதியை வைத்துதான் உனக்கு மரியாதை. இதைத்தான் ஜெயமோகன் சொல்கிறார்.

பாழாப்போன பொழப்பு சார். கிளினிக் வைச்சா எங்ககிட்ட மேல் சாதிக்காரன் வர்ரதில்லை.எங்காளுங்களிலேயே காசிருக்கிறவன் வர்ரதில்லை. எனக்கு ஊரிலே தோட்டி டாக்டர்னு பேருசார்” என்று ஒரு மருத்துவரும் “வேற எந்த வேலைக்கு வந்தாலும் இதே கதிதான். சிவில்சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன?நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி” என்று ஒரு ஆட்சியரும் பேசிக்கொள்கிறார்கள். படித்தால் மட்டும் போதுமா உனக்கு மண்டையில் மயிர்க்குடுமி கூட வேண்டும் என்றுக் கூறுகிறார்களோ?

கைக்குழந்தையாக இருந்த காலம் முதல் ஒருநாளும் ஒரு நிமிடமும் என்னுடைய சாதியை நான் மறக்க எவரும் அனுமதித்ததில்லை“என்று புலம்பும் கதாநாயகனின் கண்ணீர்த் துளிகளில் ஒன்று என் மேலும் தெரித்தது.குழந்தையை எல்கேஜி சேர்க்கப்போனால் அவன் எந்த சாதில பொறந்தவனு எழுதுங்க என்கிறார்கள். எதிர்க் கேள்வி எழுப்பி அவன் சாதியற்றவன் என்று கூற எனக்கும் ஆசைதான். என் ஆசை மட்டும் போதுமா? அவன் வளர்ந்து நிற்கும் சமூகமும் இப்படிப்பட்டதாக இருக்காதென்பதற்கு என்ன சாட்சி? மேலிருந்து முன்னும் பின்னுமாகச் சாதியென்ற பெயரையும் மயிரையும் ஒவ்வொன்றாக நாம் அனைவரும் சேர்ந்துதான் அழிக்கவேண்டும்.

தாய் படித்தவளாகப் பணி புரிந்தவளாக இருந்தாலே முதுமையை காரணங்காட்டி அவளை வசதிக்கேற்ப முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் சமூகத்தில் இப்படிப்பட்ட வகுப்பில் வந்த பெண் அதாவது அவன் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் என்ன செய்வான் ஒரு மனிதன். ஜெயமோகனின் கதாநாயகன் மனிதன்தான். ஆனால் துளியளவு அன்பும் இருந்தது. அதனால்தான் தன் தாயை எப்படியாவது தன்னுடன் வைத்துக்கொண்டு நல்வாழ்வு தரவிரும்புகிறான். அவள் நிலையற்றவள். ஆங்காங்கே உணவிற்காக அலைந்து திரிந்தவள். பெரும்பாலும் மாராப்பு அணிவதில்லை. ஆறடி ஆஜானுபாகுவான தோற்றத்தில் காயங்களில் சீழ் வடிந்த வண்ணமும் நினைவற்ற நிலையில் ஒடுக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் (அப்படி ஒன்றும் இருக்கிறது) உயிருக்குப் போராடிக் கிடக்கிறாள்.நீண்ட ஆண்டுகள் இடைவெளியில் கண்ட தன் மகன் பதவியில் இருப்பது புரிந்தும் ‘லே காப்பா கச்சேரி வேணாமுடே, கொந்நூறுவாடே’ என்று ஒரு தாயின் பரிதவிப்பில் கடைசி வரை புலம்பி அழுகிறாள். உண்மையில் அவள் உணர்ந்துதான் கூறியிருக்கிறாள்.

மனைவி சுபா மேல்குடி சார்ந்தவள்.நுனிநாக்கில் ஆங்கிலம் புரளுகிறது.வழக்கமான மாமியாராகவே இருந்திருந்தாலும் அவள் அவளை மதித்திருப்பது யூகம்தான். ஆனால் இப்படிப்பட்ட மாமியாரை அவள் எப்படியோ பொறுத்துக்கொள்ள முயற்சி செய்தாலும் அவள் பச்சிளம் குழந்தையை இரண்டொரு முறை யாரும் அறியாமல் தூக்கிச் சென்று காணாமல் போனதை ஒரு தாயாக அவளால் மட்டும் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? உயர் பதவியில் இருந்தாலும் அவன் தன் தாயால்தான் தன் பின்புலம் பற்றிய உண்மைகள் அனைவரும் அறிந்துகொண்டு காப்பானை எள்ளி நகைக்கிறார்கள்.அதனால் கடைசிவரை அவனால் அவன் பணியை நிம்மதியாக செய்ய முடிவதில்லை.

சிவில் சர்வீஸுக்கான நேர்முகத்தேர்வு காட்சி ஒன்று வருவதாக எழுதி இருப்பார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் அப்படி ஒரு பதிலைக் கூறி இருக்கமாட்டேன். ஆனால் நம் தர்மபாலன்(கதாநாயகன்) பதில் கூறுகிறார் நேர்மையாக. பணி நியமனமும் கிடைத்துவிடுகிறது.அந்த கேள்வி இதுதான் “நீங்கள் அதிகாரியாக இருக்கும் வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒருபக்கம் நியாயம் இருக்கிறது. இன்னொருபக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள். என்ன முடிவெடுப்பீர்கள்” என்கிறார் அதிகாரி. சில நிமிட சுவாரஸ்யமான செயல்பாடுகள் கடந்து தர்மபாலன் “சார் ,நியாயம் என்றால் என்ன?நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் இருந்தாகவேண்டும்.அல்லவா?சமத்துவம்தான் விழுமியங்களிலேயே மகத்தானது . புனிதமானது.ஒரு நாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருபக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிவிடுகிறான்.அவன் என்ன செய்திருந்தாலும் அவன் நியாயப்படுத்தப் பட்டு விடுகிறது”. இவ்வாறு யோசிக்கவும் எழுதவும் எப்படிப்பட்ட மனம் வேண்டும். அங்குதான் ஜெயமோகனின் எழுத்துக்கள் உண்மையில் மேலோங்குகின்றன.

தன் கடின உழைப்பில் பெற்ற வெள்ளைச்சட்டை பணிக்கும், தன்னை வளர்க்காத ஆனால் பெற்றெடுத்த தாயின் செயல்களுக்கும், தன்னை தட்டிக்கொண்டே இருக்கும் மேல் சமூகத்திற்கும், மனைவியின் நடவடிக்கைகளுக்கும் இடையில் தர்மபாலனால் என்ன செய்ய முடியும்? இறுதியில் தாயின் மரணப்படுக்கையில் அவளைப் பிழைக்க வைக்க வேண்டுமா என்ற கேள்வியுடன் சுற்றி வரும் கதாநாயகனுடன் “அமர வேண்டும். இந்த பிச்சைக்கார கிழவியைப் புதைத்து இவளது இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாக வேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறு நாற்காலிகள் வேண்டும்” என்கிறார் ஜெயமோகன்.

சாய்வைஷ்ணவி

 

நூல் தகவல்:

நூல் :  நூறு நாற்காலிகள்

பிரிவு:  குறுநாவல்

ஆசிரியர் :  ஜெயமோகன்

வெளியீடு : வம்சி புக்ஸ்

வெளியான ஆண்டு :  2020

விலை: ₹50

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *