கசார்களின் அகராதி
ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி
எனது மூளையின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி நான் மிக நிதானமாக நீண்ட நாள் வாசித்தப்புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு புத்தகங்களையும் அருகருகே வைத்துக் கொண்டு நான்கு கரங்கள் இரண்டு ஜோடிக்கண்களாலும் சேணமிட்ட குதிரையைப் போல் இப்புத்தகங்களை வாசிக்க நேரிட்டது.
வழக்கில் பால் அற்ற நிலையில் ஒரு புத்தகம் ஒரே பதிப்பாகத் தான் வருவது மரபு. ஆனால் இப்புத்தகம் ஆண்பிரதி, பெண்பிரதி என இரண்டு புத்தகமாக பிறந்துள்ளது. இதன் கட்டமைப்பு எனது வாசிப்பு வரலாற்றில் மட்டுமல்லாது இலக்கிய உலகிற்கே புதிது.அகராதி வடிவில் புனையப்பட்ட மீமிகையான புதுமை நிகழ்வுகள் நிறைந்த புதினம்.
இந்த பிரதிகள் ஒரே ஒரு பத்தியில் மட்டும் வித்தியாசப்பட்டுள்ளன. இந்த புதிரை விடுவிக்க அகராதியின் 100,000 + 100,000 சொற்களை முழுமையாக வாசித்து முடித்த பிறகே அறிந்து கொள்ள முடிகிறது.
அகராதி வடிவிலான உலகின் இந்த முதல் புதினத்தை மிலோராத் பாவிச் செர்பிய க்ரவோஷிய மொழியில் எழுதியுள்ளார். இதை ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர் க்றிஸ்டினா ப்ரிபிசெவிக் ஸோரிச். அதிலிருந்து தமிழுக்கு பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ் .
வாசகன் இந்நூல்களை வாசித்து முடிக்கும் கடைசி தருணத்தில் இந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் மீதும் ஒரு ஆச்சர்யப் பார்வையை வீசுவான்.
1691 -ல் பதிப்பிக்கப்பட்ட நூலை வாசித்த வாசகன் போல் தற்போதைய நூலினை வாசிப்பவர் மரணமடைய தேவையில்லை என்ற பூடக பீதியுடன் நூல் துவங்குகிறது.
காரணம்..,
அப்போது பதிப்பிக்கப்பட்ட 500 பிரதிகளில் ஒரு பிரதி மட்டும் நஞ்சு கலந்து மையினால் அச்சிடப்பட்டதாம். இது தங்கப்பூட்டு உடையது. வெள்ளிப்பூட்டு உடைய துணைப்பிரதியும் இதற்கு உண்டு. இதனால் ஏற்பட்ட மரணத்தை நிறுத்த 1692-ல் திருச்சபை அத்தனை பிரதிகளையும் அழித்துவிட்டது. அழிக்கப்பட்ட தாவுப் மன்னூஸ் பதிப்பின் மறு கட்டமைப்பு (1988 ) தான் இந்த பதிப்பு.
இந்த அகராதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கசார்கள் கேள்வி குறித்த கிறிஸ்தவ ஆதாரங்கள் சிவப்பு புத்தகமாகவும், இஸ்லாமிய ஆதாரங்கள் பச்சை புத்தகமாகவும், எபிரேய ஆதாரங்கள் மஞ்சள் புத்தகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசியப்பகுதியில் காகசஸ் மலைப்பகுதியில் தோன்றிய துருக்கிய இனப்பழங்குடிகள் ஹாசர்கள்/கசார்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர். போர் மரபினர்களாகவும் இருந்தனர். லிங்கவழிபாடு மற்றும் சிலை வழிபாட்டினை துவக்கத்தில் பின்பற்றி அகராதிப்படி யூதர்களாக துவங்கி இஸ்லாம் சமயத்திற்கும் பின்பு கிறிஸ்தவ சமயத்திற்கும் மாறியதாக கூறப்படுகிறது.
கசார் அரசர்களின் கனவு குறிகளுக்கு பலன் சொல்லும் குருமார்களின் மதத்திற்கு மக்களோடு சேர்ந்து மதம் மாறும் வழக்கமிருந்தது.
கனவு வேட்டையர்கள் கசார் மதத்திற்குள் இருந்த மிகப் பலம் வாய்ந்த ஒரு பிரிவினர். இவர்கள் மற்றவர் கனவுக்குள் உட்புகுந்து கனவுகளை பின் தொடர்வார்களாம்.
” கசாரியா ” எனப்பட்ட கசார்களின் நிலம் வரையறுக்கப்பட்டது . காஸ்பியன் கடல் “கசார் கடல் “என்பதேயாகும். இவர்களுக்கு 5-ம் நூற்றாண்டிலிருந்து 13 நூற்றாண்டு வரையிலான 800 வருட தனித்த இன வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது.
கூர்மதி படைத்த கசார்கள் மரக்கிளையில் சிப்பிகளை வளர்க்கும் யுக்தியை அறிந்து வைத்திருந்தனர் .கடலுக்கு அருகில் ஒரு மரத்தை தேர்ந்து அதன் கிளைகளை நீருக்குள் வளைத்து ஒரு பாறையின் மூலம் அவற்றை நிலைபெறச்செய்வார்கள்.
இரண்டு வருடங்களுக்குள்ளாக கிளைகள் சிப்பிகள் மூலமாக எடை அதிகரித்து மூன்றாம் வருடத்தில் மரம் சுவையான சிப்பிகளோடு நீரை விட்டு வெளிவருமாம்.
17-ம் நூற்றாண்டில் ஒரு நிச்சயதார்த்த ஒப்பந்தம் போடப்படுகிறது. கசார் கலாச்சாரப்படி இதில் மணமகன் மணமகளுக்கு பரிசு பொருட்கள் அளிக்க வேண்டும்.
சாமுயேல் கோஹென் மற்றும் லீடிசியா சரோக்கின் மணவுறுதி ஒப்பந்தப்படி மணமகன் மணமகளுக்கு கை காப்புகள், கழுத்து மாலைகள், மோதிரங்கள், தொப்பி, காலுறைகள், பாதவுறைகள், ஆகியவற்றோடு சேர்த்து 24 பொருட்கள் அளிக்க வேண்டும். இரண்டரை வருட காலத்திற்குள் மணமுடிக்கவில்லையெனில் இது இறுதிப் பரிசாக பெண்ணுக்கே சொந்தமாகும். இந்த வாக்கின்படி (திருமண நாள் வரை) மணமகன் வேறு பெண்ணை தழுவுவதும் உறவு கொள்வதும் குற்றம்.
கசார்களால் நிறங்களை இசைக்குறிப்பு போல எழுத்துக்களாக அல்லது எண்களாகப் படிக்க முடியுமாம். ஒவியத்தை இவ்விதமாகத்தான் அவர்கள் வாசிப்பார்கள்.
கண்ணிமை மீது எழுத்து கொண்ட “அதே” இளவரசியின் இமைகளைப் பார்த்தால் அது வாசிப்பவர்கள் உயிரை பறிக்கவல்லதாம். வியப்பு என்னவென்றால் அனைத்து கசார்களின் முகங்களும் ஒன்று போலிருக்குமாம்.
பழமையான கசார் இனத்தவர் பத்து தலைமுறைகளுக்கு ஒருமுறை மறுகுடியமர்வு செய்திருக்கிறார்கள்.
கசார்கள் மொழியை கிளியிடமிருந்து கற்க இயலுமாம். அகராதி குறிப்புகள் அழியாமல் இருக்கும் பொருட்டு கிளிகளுக்கு அது ஒரு முறை கற்பிக்கப்பட்டதாம்.
உலகிலுள்ள பறவைகள் ஒரே மொழியை பேசுவதில்லையாம். ஆப்பிரிக்கப் பறவையும் நைல் நதிப் பறவையும் ஒரு போதும் ஒன்றையொன்று புரிந்து கொள்ளாது. அண்டரண்டப் பறவைகள் மட்டுமே உலகெங்கும் ஒரே மொழியை பேசுமாம்…
*(அண்டரண்டப்பட்சி என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு நமது கரிசல் எழுத்தின் முன்னோடி முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறுநாவல் ஒன்றை எழுதினார். இது கையெழுத்துப் பிரதியாகவே வாசகர் மத்தியில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது).
கூம்பலகுப் பறவைகள் என்ற புது அறியாத பெயரிலான பறவைகள் பற்றி பேசப்படுகின்றன.
கசார் அகராதி கசார்களின் வரலாற்றை காலந்தோறும் அவ்வகராதியை உருவாக்கியவர்கள் கதை வழியே பேசுகிறது. காலவெளி முன்னும் பின்னுமாக நகர்கிறது.
கதைத் தொடர்ச்சி, நிகழ்வு தொடர்ச்சி, புனைவின் ஒழுங்கமைப்பு எதுவுமில்லாத இந்நூல் தீவிர வாசகனை மட்டுமே உண்ணத்துவங்கும்… அதுவும் சில வேளைகளில் அவனை வெளித்துப்பி விட வாய்ப்பும் உண்டு. பல இடங்களில் விதைக்கப்பட்ட அதன் கனவில் நாம் அரை மயக்க நிலையிலே பயணமாகிறோம்.
பேரழகியின் கைகளில் இருந்து உடைத்தெறிந்து வீழ்ந்த கண்ணாடி வளைத் துணுக்குகள் போன்ற குறிப்புகள் இவை. உங்கள் நுண்ணுணர்வை பொறுத்து அவள் வாசத்தை நுகரலாம். காகனின் காகனகம்(காகனின் பேரரசு ) உங்களை வரவேற்கிறது.
பாதுகாப்பு குறிப்பு: உள்நுழைய துணிவை விட கவனமும் பொறுமையும் அவசியம்.
” அறிவென்பது அழியக்கூடிய பண்டம்.
நொடியில் புளித்துப்போகக் கூடியது.
எதிர் காலத்தைப் போலவே.., “
– மஞ்சுநாத்
நூல் : கசார்களின் அகராதி ஆண் பிரதி
பிரிவு: நாவல்
ஆசிரியர் : மிலோராத் பாவிச்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2018
விலை: ₹ 500
நூல் : கசார்களின் அகராதி பெண் பிரதி
பிரிவு: நாவல்
ஆசிரியர் : மிலோராத் பாவிச்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2018
விலை: ₹ 500

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.