‘மானுடக் கற்பு எது கொண்டும் ஏறிக் கொள்வதேயில்லை களையெடுக்கும் வயல் தாண்டி ‘

னிதன் பேசுவது எழுதுவது மொழியால்தான். மனிதன் அறிவை உணர்வதும், இதயம் மலர்வதும் மொழியால்தான். ஒரு மனிதனுக்கு எந்த வாழ்விடம் இயல்பாய் அமைகிறதோ அதன் சூழலுக்கேற்ப அறிவு மொழியையும், உணர்வு மொழியையும் பிறப்பு முதல் இறப்பு வரை கற்று தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் தனக்கான புரிதல்களுடன் தன்னோடு இரண்டறக் கலந்திருக்கும் சமுதாய அமைப்புகளோடும் தேர்ந்து தெளிந்து ஒரு கட்டுமானத்தில் தன் எழுத்தையும், எண்ணங்களையும் பதிவு செய்ய மிக எளிய வழியாகக் கவிதையின் மொழியே அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

  இரண்டே அடிகளில் தேர்ந்தெடுத்த சொற்கட்டுமானங்களில் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வியல் நெறிகளையும், பண்பாட்டு முறைகளையும் குறள் நெறியாக நமக்கு வழங்கிய திருவள்ளுவர் முதல் கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் என்று தமிழின் மூத்த கவிதா விலாசங்களைத் தொடர்ந்து இன்று நம் காலத்திலேயே வாழ்ந்து மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்ற மக்கள் கவிஞர்களையும் மற்றும் தற்போது புதுக் கவிதையிலும், நவீனங்களிலும் தங்கள் எண்ணப் பதிவுகளைத் தடம் பதிக்கும் எண்ணற்ற கவிஞர்களையும் மொழியே தேர்வு செய்கிறது.

     மனிதனின் புறவாழ்வில் புரையோடிய போலிப் பாசாங்குகளையும், பொல்லா வேஷங்களையும், வெற்று அரற்றல்களையும், புரட்டல்களையும் நையப்புடைத்து நளினமாய் தோலுரிக்கும் வார்த்தைகள் யதார்த்த மொழிக் கவிதைகளாக இங்கே கொண்டாடப்படும் போது நவீன வாதங்களால் அம் மொழியை முறிப்பதும் மறுப்பதுமாய் கவிதைச் சூழல் பல மேடைகளில், சமூக வலை தளங்களில் போர்க்களமாய் மாறியுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. நவீன முறையில் எதிர்வாதங்களால் கவிதைகள் எதுவென்று கேட்பதும், தனக்குத் தானே புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயாவாத வலைக்குள் தன்னையும் தன் மொழியையும் சிக்க வைத்துக்கொண்டு பேசுவதும் நவீனத்துவம் என்ற பெயரில் எதையோ எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவர்களின் சாரமற்ற வலுவற்ற கருத்தாகும்.

ஒரு மொழியின் திறன் தான் சார்ந்த வாழ்வியல் விழுமியங்களைப் படைப்பவர் அல்லது படைப்பாளியின் மூலமாகக் கவிதையாகப் பல்வேறு வகைப்பட்ட வடிவங்களுடன் தன்னை வடிவமைத்துக் கொண்டு மனித சிந்தனையும் மொழியும் இணைந்து வலுப்பெற்று ஒரு படைப்பாக இயக்கமுற்று வாசகர் முன் வந்து விட்டால் அப்படைப்பின் ஆற்றலை வேறு எந்த வகை வாதங்கள் கொண்டும் அழிக்க முடியாது. மாறாக, மாயா வாதங்கள் தமக்குத் தாமே மோதிக் கொண்டு அழியும்.

கவிஞர் மு. செல்லாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘தொலைந்து போன நடைவண்டிகள் ‘மனித வாழ்வின் எல்லையற்ற மகத்துவங்களை, பண்பாடுகளை, மனித நேயங்களை அதன் பூரண நிலைப்பாடுகளோடு பொருத்திப் பார்க்க முயன்று தோல்வியுற்ற மனம் தன் ஆறாத வலியோடு பிரசவித்த வலிகளை வரிகளாக்கி நம் முன்னே காட்டிச் செல்லும் போது, நாமும் அவ் வலிகளில் துவண்டு விழுகிறோம்.

பகையான பனைகள் 

நிரம்பவும் சுடுகிறது வெயில்
பருக
பதின்மூன்று சதம் பூச்சி மருந்து
பன்னாட்டுப் பானங்களில்
அறிக்கை பார்த்து
பல்லிளித்து நின்ற
அரசியலின் முன்னே
பரிதவித்து நிற்கின்றன
பகையாகிப் போன
உள் நாட்டுப் பனைகள்

பதநீரில் குளிர்ச்சியென
பாட்டி பகரலாம்
தாதுக்கள் நிரம்பிக் கிடப்பதாய்
அறிவியல் அறிவிக்கலாம்
உழைக்கும்
உள்நாட்டுப் பாட்டாளியின்
உயிர்த்தொழிலாய்
பொதுவுடமை போதிக்கலாம்

ஆனாலும் என்ன….
ஐந்து ரூபாயில் வருமா
அயல் நாட்டு ஜாடை?

எந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவுவர்
இனி
பன்னாட்டுப் பானம் பருகி !

இனி….
வீதி தோறும்
கனவான்களின் கையில்
பெப்சியும், கோக்கும்
கோலோச்சும் !

பக்கத்துத் தள்ளு வண்டியில்
மூச்சிரைக்கக் கிடக்கும்
உள்நாட்டுப் பதநீர்

    உள்நாட்டுப் பதநீர் -என்று சொல்லும் பொது இயற்கை, அறிவியல், பொதுவுடைமை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு முன்னே வந்து முகம் காட்டும் அயல் நாட்டு ஜாடைகளுக்கு நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் போது மூச்சிரைத்தாலும் பரவாயில்லை என்று வாழப் பழகிய நமக்கு இது வலியென்று தெரியாமல் போனது ஏன்? ஆனால் கவிதையை வாசிக்கும் பொது வலிக்கிறது நமக்கு. இனி மூச்சிரைப்போடுதான் அடுத்த தலைமுறையும் வாழக் கற்குமோ? என்று கேட்கத் தோன்றுகிறது. கவிஞர் மு. செல்லாவின் ‘பகையான பனைகள் ‘என்ற இந்த கவிதை வலியையும், பயத்தையும் முன் வைத்து பேசுகிறது.

கற்பு !

“மாய மானுக்காய்
தெய்வீகச் சீதைகள்
லட்சுமணக் கற்பைக் காறித்துப்பி
ஜடாயுவைக் காவு கேட்டு
இதிகாசம் ஏறிக் கொள்ளலாம்

மானுடக் கற்பு
எது கொண்டும்
ஏறிக் கொள்வதேயில்லை
களையெடுக்கும் வயல் தாண்டி “

கற்பு என்ற இந்தக் கவிதையில் இதிகாசக் கற்பையும், மானுடக் கற்பையும் வேறுபடுத்தியிருக்கும் தன்மையில் கற்பென்பதாக இங்கே மானுடத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பின் விதிகளை ‘ களையெடுக்கும் வயல் ‘ என்று கவிஞர் கூறும் போது, எந்த விதிகளை மனித சமுதாயம் தன் நலனுக்காக உருவாக்கியதோ, அதே விதிகளால் தனக்குள் தாக்குறும்போது, மனிதக் கற்பு எங்கு போய் ஒளிந்து கொள்ளும்? கற்பைப் பற்றிய சர்ச்சைகள் அவ்வப்போது ஒலிப்பதும், அடங்குவதுமாய் உள்ள நிலையில் இக் கவிதையின் மூலமாகக் கற்பென்ற சிராய்ப்புகளில் தோலுரித்துக் கிடக்கும் சிந்தனைகளை முடுக்கி விடுகிறார் கவிஞர்.

மனிதனின் ‘ஆறாம் அறிவு ‘ அவலமாக பார்க்கப் படுகிறது கவிஞர் மு. செல்லாவின் வேறொரு கவிதையில். ஆறாம் அறிவால் அனைத்தையும் கற்கும் மனிதன், ஆறாத துயரத்தையும் மனித குலத்திற்கு விட்டுச் செல்வது ஏன்? ஐந்தறிவெல்லாம் இயற்கையோடு இணைந்து இன்பமாய் வாழ்ந்திருக்க, ஆறாம் அறிவு மட்டும் தன் செயல் நிலைகளை மாற்றிக் கொண்டு தனக்காகவே வாழ்ந்து விடுகிறது. கயமையும், சுயநலமும் மிகுந்த இந்த ஆறாம் அறிவு, தான் வாழத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்துச் சூழல்களுக்கும் கேடு விளைவிக்கும் கொடுமையை 

“சிறகால் கோதிவிட்டு
பறவைகள்
வானத்தையும் வசமாக்கும்
அதன்
எச்சம் கூட
தேமல் திட்டாய்
பூமியின் மீது தான் !

நிற்க இடம் கொடுத்த பூமிக்குள்
வேர் இறக்கி
நீர் தின்ற நெடு மரங்கள்
தன் பசுமை மூச்சை
வானத்திற்கு வழங்கி
வளமாக்கும் !

நீர்க் கருவை
பூமியிடமே பெற்று
சூழ் கொண்ட மேகங்களும்
மழையை பிரசவித்து
வானழுக்கைச்
சரி செய்யும் !

வண்டினங்கள்
மோதிய ரீங்காரமோ
பாட்டலையாய்….
வானமெங்கும்
வசந்த ஒலி எழுப்பும் !

இவையெல்லாம்
ஐந்தறிவாய் குறுகிப் போக
ஆலைக் கரங்களால்
ஆகாசப் புகை நஞ்சூட்டி
வானத் தாய்
வாழாமல் செய்யும்
மானுடத்திற்கு ஆறறிவாமே? “

என்று மனிதனின் ஆறாம் அறிவை நயமாக கேலி செய்கிறார்.

     கிராமங்களில் வீடுகள், வயல்கள், ஆறுகள், கோவில்கள், மரங்கள், பறவைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? பேரன் அடுக்கும் கேள்விகளுக்கு விடை பகரும் தாத்தா நகரத்தையும், நகர வாழ்க்கையையும், நகர மனிதர்களையும் சட்டென அழுத்தி நொறுக்கும் வார்த்தைகளால் விமர்சிப்பது கவிதைக்கான பாடுபொருள் கனத்தைப் போலவே நம் மனதையும் நிரப்பி கனக்கச் செய்து விடுகிறது. சற்றே கவலையும் கூட !  கிராமங்களைச் சாத்தாத மனிதர்கள் நகரங்களுக்கு வரும் போது நாம் என்ன செய்கிறோம்?….

தொலைந்தே போகிறோம் !

கிராமங்களைச் சாத்துவதில்லை 

“மரங்களே இல்லையா
கிராமத்து வீடுகளில்?
அலுத்துக் கொண்டான்
பட்டணத்துப் பேரன்
ஆனாலும் இவை
மனிதர்கள் உள்ள வீடுகள்
என்றார் தாத்தா

சப்தமின்றி
போகிறதே ஆறு !
வியந்தான் பேரன்
ஆம் !
சாக்கடையின்றியும்
போகிறது என்றார் தாத்தா

குளத்தங்கரை
சிறிய கோயிலிலே
கோபுரம் இல்லையே !
ஆச்சரியப்பட்டான் அவன்
“ஆனாலும், இதில்
கடவுள் உண்டே “
என்றார் அவர்

“ஆற்றோர ஆலமரத்தை
ஏன் கும்பிட்டாய்? “
பேரன் கேட்டான்

“ஏனென்றால்
இதில் தானடா !
வேர் போனாலும் விழுதிறங்கி
மரத்தைக் காக்கும்
மாண்பிருக்கிறது “
என்றார் தாத்தா
…………….
……………
“நான் பிறந்த போது
இறந்த பாட்டியை
எங்கே புதைத்தீர்?
அவன்தான் கேட்டான்
“இங்கே ! “
என்று இதயத்தைக் காட்டினார்
தாத்தா

மீண்டும்
இங்கே நான்
எப்போது வரட்டும்?
கேட்டான் பேரன்
எப்போதும் வரலாம்
நாங்கள்
இதயத்தை மட்டுமல்ல
இனிய இந்தக் கிராமத்தையும்
சாத்துவதேயில்லை
என்றார் தாத்தா ”

‘பல்லியும் பரமசிவமும் ‘ என்றொரு கவிதையில் தனிமனித வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி உழைப்பு ஒரு இடமும், உயர்வு வேறொரு இடமுமாய் இருப்பதை நம் காதருகில் வந்து சொல்வதைப் போல் அருகில் வந்து நமது காதுகளையும் சமுதாயக் கதவின் மீது ஒட்டிப் பார்க்கச் சொல்கிறார். சமுதாயக் கதவு யாருக்காக திறந்து வழி விடப் போகிறது? உழைப்பவனுக்கா? பிறர் உழைப்பில் உயர்ந்தவனுக்கா?  பரமசிவத்தைப் போல் உழைக்கும் வர்க்கத்தை இந்த உலகம் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறது?  உழைப்பின் இடத்தை விட உயர்ந்த இடம் எது? என்ற கேள்விகளை நம் முன் விட்டுச் செல்லும் மு. செல்லா  அவர்களின் வரிகள் சமுதாயத்தின் முன் ஒரு சாட்டையைச் சொடுக்கி உள்ளது.

திரவப் பூக்கள் 

நெற்பயிர் வயிற்றில்
உரங்களின் பிறப்பு
அதன் கருவில் கூட
செயற்கையின் வாடை !

அறிவியல் என்பது மனித குலத்தின் பயன்பாடுகளைத் தாண்டி, மனிதப் பண்பாட்டைச் சிதைக்கும் அதன் கோர முகத்தையும் சுட்டிக் காட்டும் ‘திரவப் பூக்களில் ‘ நம் கண்களும் கனவுகளும் கருகிவிடுகின்றன.

மனித மனத்தின் ‘மறுபக்கத்தை ‘ விபத்துக்களின் விசிறியாக நமக்கு அறிமுகப்படுத்திய கவிஞர், இன்னொரு கவிதையில் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வாழ்க்கை நிலத்தில் நம்பிக்கையே விதை! என்று கூறி நம்மைத் தேற்றுகிறார்.

  வாழ்க்கை முரண்பாடுகளையும் உடன்பாடுகளையும் தன் மனவெளியில் வாழ்ந்தனுபவித்த கவிஞர் காத்திருந்து வேளை கனிந்த போது, தன் கவிதைகளுக்கான பாடு பொருள்களைத் திரட்டி, நம் முன்னே கவிதைகளாக நெய்யப்பட்ட பட்டு நூல்களுக்கு எவ்வித சாயங்களும் ஏற்றாமல் அசல் இருக்கும் போது நகல் தேவையில்லாதது போல் வார்த்தை சிக்கனங்களோடும் சிறந்த வடிவமைப்போடும் ‘தொலைந்து போன நடைவண்டிகள் ‘ மூலம் நம் உணர்வுகளையும் எழுந்து நடக்கச் செய்துள்ளார். மனிதன் தன் ஆன்மாவோடு அறிவையும் இணைத்துப் பயணப்பட வேண்டிய அவசியத்தை இந்தநூல் கற்றுத் தருகிறது.


     –  கவிஞர் மஞ்சுளா 

நூல் தகவல்:
நூல் :

தொலைந்து போன நடை வண்டிகள்

வகை : கவிதைகள்
ஆசிரியர்: மு.செல்லா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு: அக்டோபர் 2009
விலை : 40

நூலிலிருந்து :

மு.செல்லாவின் கவிதைகள், மனித உணர்வுகளோடு சஞ்சரிக்கின்றன; அந்த உணர்வுகளை, வாசகரோடு பகிர்ந்து கொள்கின்றன. சாதாரணமாகிப் போன இந்த வாழ்க்கையின் சில அசாதாரணமான கணங்கள், இயற்கைப் பொருள்கள் மீது ஈடுபாடு, கிராமத்து நினைவுகள், மனிதனுக்குள் இருந்து மனிதனை மறைக்கும் போலித்தனங்கள், முரண்பாடுகள், பளிச்செனச் சீறும் சில உணர்வுப் பீறல்கள் இவை செல்லாவின் கவிதைகளில் யதார்த்தமாய் வெளிப்பட்டு நிற்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் இருந்து இழையோடிக் கிடப்பது, சக மனிதர்கள் மீதும் பிற உயிர்களின் மீதும் இருக்கிற நேசம், நேசம் கொண்ட கவிதைகள் என்றும் சோரம் போவதில்லை. வாசகனோடு அவை கை கோர்த்துக் கொள்கின்றன.

– தி. சு. நடராசன்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *