நான் ஒன்னும் பெரிய விமர்சகர் எல்லாம் இல்லை எழுத்தாளரின் வளர்ச்சியை அவருடைய முந்தைய எழுத்துக்கள் பற்றி எல்லாம் விமர்சிக்க. ஆனால், ஒன்னே ஒன்று தாழிடப்பட்ட கதவுகள் தந்த எதிர்ப்பார்ப்பை, சிதார் மரங்கள் தாண்டி அகல்யாவுக்கும் ஒரே ரொட்டி அப்படியே தக்க வைத்துள்ளது. அதே வார்த்தைகளின் எளிமை, எளிய மனிதர்களின் வாழ்வு கூடியவரைக்கும் அச்சு அசலாய், தேவையற்ற வார்த்தைகள் திணிப்பு என இல்லாமல் சிறப்பாய் இருக்கு இத்தொகுப்பும் என சொல்லலாம்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, பஷீரின் கடைசி கிடாய், அன்பே ஆசியா என இவை மூன்றோடு எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வறண்ட நிலத்தில் ஒரு பூ ஒரு “அட” போட வைத்தது.

இந்திய குடியரசின் விடுதலைக்கு பின்னான இந்த 75 ஆண்டு காலத்தில் மக்களை மொத்தமாக நிராதரவாக விட்டுவிட்ட அரசு என்ற ஒன்று இதுவரையிலும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஒரு பெருந்நோய் தொற்று காலம் எந்த ஒரு அரசினையும் கொஞ்சமாகவாவது கருணையோடு இருந்திட செய்யும். ஆனால் எதுவும் இல்லாது போன ஒரு அரசினை அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி, கானல் நீர் உருவங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டும். கருணையில்லாத காலங்களிலும் கருணைக்கென ஏதோ ஒரு மனசு துடித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவே சொல்கிறது பல கதைகளும். நம்பிக்கை என்ற ஒன்றுதான் கடைசிவரை என ஒரு சொலவடை போல அநேக கதைகள் இருண்ட காலத்திலும் ஒரு ஒற்றை ஒளிக்கீற்றை அடையாளம் காண்பித்து நிற்கின்றன என்பதே இத்தொகுப்பின் பலம் என சொல்லலாம்.

ஒரு பக்கம் பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதத்தை ஒடுக்கிவிட அத்தனை வன்முறைகளையும் சதிகளையும் அரங்கேற்றி இருந்திட சிறுபான்மை மதக் காவலர்களாக பழமைவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் தோன்றி வரவேற்பு பெறுவதும் அதனாலும் அச்சிறுபான்மை மதத்திற்கே பெரும் பகை நேருகிறது என்பதையும் அன்பே ஆசியாவில் பிரமாதமாக சொல்கிறார். சிறுபான்மையினரில் பழமைவாதம் அடிப்படைவாதம் செய்யும் ஒரு சிறிய தவறு எப்படி காலம் கடந்தும் அந்த சிறுபான்மையினரை குற்றப் பரம்பரை போல மாயத்தோற்றத்தை உருவாக்கி அப்பாவிகளை பழிவாங்குகிறது என சொல்லும் தஸ்தகீர்… சிறுகதை அருமை. இவை இரண்டும் ரொம்பவே ஸ்பெஷல் கதைகள்.

கிருமி நாசினிகள் இம்மண்ணின் இந்திய தேசத்தின் அசல் உருவத்தை தன்மையை அசத்தலாக நமக்கு நினைவுப்படுத்துகிறது. பஷீரின் கடைசி கிடாய் என்னைப் பொறுத்தவரை இத்தொகுப்பின் எனக்கு ஒரு freshness feeling தந்த கதை என சொல்வேன். பாஸ்கர் சக்தி என்னும் எளிய படைப்பாளியின் பல கதைகளிலும் இந்த எளிய மனிதர்களது innocence மற்றும் மனிதம் விலங்கினம் என பாகுபாடு இல்லாமல் சகல் உயிர்களையும் உறவாக காண்பதை நான் வாசித்து இருக்கேன். அது போன்ற ஒரு ஸ்பெஷல் கதை பஷீரின் கடைசி கிடாய்….

அந்த எம்ஜியாருக்கு வயசாயிடுச்சு ஒரு தனிப்பட்ட ரகம். தேசவிரோதியின் எஞ்சிய குறிப்புகள் மிக முக்கியமான ஒன்று. படித்துவிடுங்கள் மக்களே.. உங்களுக்கும் இக்கதை ரொம்பவே பிடிக்கும்.

நன்றி :  ராம் கோபால்

நூல் தகவல்:

நூல் : அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : அ.கரீம்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  முதல் பதிப்பு : பிப்ரவரி 2021

விலை: ₹ 140

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *