• மதுராவின் “ சொல் எனும் வெண்புறா” கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிஞர் சக்தி ஜோதி எழுதிய அணிந்துரை.

பெண்கள், கவிதைகள் எழுதத் தொடங்கும்போது பெரும்பாலும் அவர்கள் முதலில் தொடுகிற உணர்வு என்பது அன்புதான். அன்பு என்கிற உணர்வின் வழி நின்று வாழ முற்படுகிற ஒரு பெண்ணுக்கு காதல், நேசம், பிரியம், காமம், வாத்சல்யம், வாஞ்சை, பிரிவு, துயரம், தனிமை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆற்றாமை, சுய பச்சாதாபம், கோபம், ஆக்ரோசம் என ஒன்றைத்தொட்டு ஒவ்வொன்றாக விரியத்தொடங்குகிறது. பின்பு ஒருநிலையில் அது ஆழ்ந்த மௌனமாக நிலைப்பெறத் தொடங்குகிறது. இவற்றில் ஏதோவொன்றில் அல்லது எல்லாவற்றிலும் தன்னைக்கரைத்துக் கொண்ட கணங்களையே அநேகமான பெண்கள் தங்கள் கவிதை மொழியாகக்  கைகொள்கிறார்கள்.

“யுகங்கடந்து பெய்த பின்னும்
பெருநெருப்பு
அணைவதாயில்லை
கனன்றுகொண்டேயிருக்கிறது
பெண்ணுக்குள்
தீராத் தீ”

என்றெழுதுகிற மதுரா தன்னுடைய சில கவிதைகளில் பெண் மனதின் மீள முடியாமல் மேலும் மேலும் சுழலுக்குள் அமிழ்த்தி வைக்கும் மீள்நினைவுகளில் கடலையே கனவுக்குள் நிரப்பி வைக்கும் காலத்தின்  சூட்சுமத்தையும், பால்யத்தில் பிள்ளையாருடன் ஒரு பெண்ணுக்கு இருக்கும் சிநேகிதம் பிறிதொரு மழைநாளில் மாறிப்போவதையும், கடலோடு கொள்கிற நட்பையும், நிலவோடு கொண்ட நேசத்தையும் எழுத முயல்கிறார்.

பெண்களின் அகத்தில் அடங்க மறுக்கும் கனவுகளை, அவர்களின் வாழ்க்கையில் நிகழ்கிற நிராசைகளின் நீட்சியை, கானல் நீரென மறைந்து போகிற பிம்பங்களை, காற்றுப்பட்டு உடையும் நீர்க்குமிழிகள் போன்ற உறவுகளை, காலத்தின் கரும் புள்ளிகள் என்று அறிகிற அன்பை, நிலவின் களங்கம்போல உதறித் தள்ளமுடியாத பிரியங்களையும் அவை எவ்வாறு பெண்களின் உயிரசைத்துப் பார்க்கிறது என்பதையும் எழுதியுள்ளார்.

பெண்களின் அகத்தில் மொழிகளற்றுப் புரளுகிற யாமத்தின் மொழி, நிலவில் கரைக்கும் அவளது நினைவுகள், பார்வை வளையத்துக்குள் புதைந்து போயிருக்கும் மோன சமிக்கைகளை அறிந்தவுடன் அவிழ்கிற பெண் மனதின் முடிந்து வைத்திருக்கும் காதல், தீண்டிக் தீக்காய்கிற தனிமை என்பன போன்ற உணர்வுகள்  தவிர, இன்னமும்கூட வாங்கி வந்த “வரம்” என்றோ “விதி” என்றோ “விதியின் விளையாட்டு” என்றோ தன்னை ஒடுக்கிக்கொள்கிற பெண்களைப் பற்றியும் எழுத முனைந்துள்ளார்.

“பழக்கப்படுத்தப்பட்ட தடத்திலேயே உழன்று
சீட்டெடுக்கும் கிளியாகவோ,
தொழுவத்தின் மாடாகவோ,
ஆலயத்தின் ஆனையாகவோ
நவீன யுகத்தில்
ஏதோவொன்றின் அடிமையாக
கட்டிய கயிறுகள் அவிழ்த்த பின்னும்
பழக்கப்படுத்தப்பட்ட
தடத்திலேயே உழன்று” (நிகழ் தகவு)

ஆக்ரோஷம் அடங்காமல் அடுத்த பிரளயத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் பெண்ணின் மனதை, வாத பிரதி வாதங்களை வளர்த்து வார்த்தைகளின் கணத்தைக் கூட்டிவிடாத மௌனத்தை, அப்போதெல்லாம் அசைந்தாடும் வினாக்குறிகளில் தான் யாரென்று கேட்டு காதுகளையும் கண்களையும் திறந்தபடி நான் கடவுளாகிறேன் என்று உணர்ந்தபடி தன்னுள் ஒடுங்கிக்கொள்கிற பெண்களைச் சொல்ல முனைகையில்,

“ஆழ் கடலின் மையத்தில்
ஒற்றை மரமொன்றில்
உட்கார்ந்தே வேடிக்கை பார்க்கும்
சிறுபறவையென
சிறகசையாது மனம்
காத்துக்கிடக்க
நீண்ட மௌனத்தில்
கனத்துக்கிடக்கும்
இதயக் கூடொன்றை
மெல்லிய மயிற்பீலியும்
உடைத்து விடக்கூடுமோ“  என அஞ்சுகிறார்.

கண்ணகி, அகலிகை, ஏவாள், சூர்ப்பனகை, சத்தியவான், கர்ணன்  போன்ற புராண, இதிகாச கதாப்பாத்திரங்களையும், இன்றைய காலகட்டத்திலும் தாண்டப்படாத இலட்சுமணக் கோடுகளையும், அலாவுதீனின் அற்புத விளக்கையும், புறாக்கறிக்கு ஈடாக தன் உடலின் சதையைத் தருகிற, தேர்க்காலில் அடிபட்டு இறந்த கன்றுக்கு பதிலியாக தன் மகனை பலியாக்கும் தொன்மக்கதைகள் பலதும் இன்றைய வாழ்வோடு மாறுபடுகிற, வேறுபடுகிற இடங்களை கவிதைகளாக எழுதியுள்ளார்.

“ஆலகால விடமென்று
அறியாது விழுங்கி வைத்த
நஞ்சு செரிக்காத
நெஞ்சக் குடுவைக்குள்
ஒவ்வாமை உணர்வலைகள்”. ( ஏவாளின் உலகம் )

 

“நேரமறியாது பூத்து
நேர்ந்துவிட்ட கணப்பிழையில்
அகலிகையானவள் காத்துக்கிடக்கிறாள்.”  (சாபவிமோசனம்)

 

“பிறிதொரு நாளில்
யானையைப் பார்க்க
நேர்ந்தது
புரியாத புதிரொன்று
அவிழ
அனிச்சையாக
தாலிச் சங்கிலியை
நிரடுகிறது விரல்கள்” ( பிணைத்த சங்கிலிகள்)

சாமியாடி, ஆக்டோபஸ் ஆசைகள், மாறும் நியாயங்கள், பயணங்கள், கிளி ஜோசியம், காக்கைக்கூடு, உரைகல், சலிப்பு, உறுதியற்ற பொழுதுகள், கனவுப் பிரதிமைகள், தர்மம், ஆயாவின் குழந்தை, கோட்பாடுகள், தாய் மனசு, அங்காடிகள், தவிப்பு, மழலை மொழி போன்ற கவிதைகள் பெண்கள் சார்ந்த புறவாழ்வினை அடையாளம் காட்டுபவை.

“பிழைத்த தப்பு விதையின்
துளிர்த்த முனையொன்று
முள் மரத்திடம்
படர்ந்து கிடக்கிறது

தலை நசுங்கி
மூலையில்
முனகிக்கொண்டிருக்கிறது
தர்மம்

அகக்காடுகளை அலசிப்பார்த்தாலும்
அன்பின் துளி அகப்படுவதில்லை
விஷச்செடிகளின் வீர்யத்துக்கு முன்
வலுவிழந்து கிடக்கிறது
வாய்மையின் வாசம்” (தர்மம்)

பரந்து விரிந்து கண்களுக்குப் புலப்படுகிற பரப்பல்ல கடலும் பெண் மனதும் என்பதை,

“ஊற்றெடுக்கும்
பிரளயத்தை
குப்பியில்
அடைத்துத் தரச் சொல்கிறாய்
காற்றாற்று வெள்ளத்தை
எதைக்கொண்டு நிறுத்தி வைக்க?
சமுத்திரத்தைப் படைத்து விடுகிறேன்
கையள்ளிக் குடிப்பதோ
கரையோரம் நின்று ரசிப்பதோ
உன்பாடு”

என்கிற மதுராவின் வரிகள் வெளிப்படுத்த முயலுகின்றன. அவரது கவிதைகளும் அவ்வாறே தன்னை ஒருமுகம் காட்டி வெளிப்படுத்தியுள்ளன. அவரவர் நிலையில் நின்று மதுராவின் கவிதைகள் வழியாக பெண்களின் அக உலகத்துக்குள் பயணிக்க இந்தத்தொகுதி தன்னைத் திறந்துள்ளது. “சொல் எனும் வெண்புறா” என்கிற இந்தக் கவிதைத் தொகுதி மூலம் அறிமுகமாகும் கவிஞர் மதுராவுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அன்புடன்,
சக்தி ஜோதி.
22-03-2019

 

நூல் தகவல்:

நூல் : சொல் எனும் வெண்புறா

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : மதுரா (தேன்மொழி ராஜகோபால்)

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2019

விலை: ₹ 80

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *