எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு” சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் அணிந்துரை.


கிருஷ்ணமூர்த்தியின் இந்தத் தொகுப்பை வாசிக்கும் தமிழ் வாசகர் ஒருவருக்கு அவற்றை எதிர்கொள்வதில் சில சவால்கள் இருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தமிழ் நவீன இலக்கிய வாசகன் சந்தித்திராத சவால்கள் அவை.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்னும் தொகுப்பின் தலைப்புக் கதையை, அல்லது தாயம், ஞமலி முதலான வேறு சில கதைகளை வாசிக்க விரும்பும் ஒரு தமிழ் வாசகன் வாசிப்பு சார்ந்து சேமித்து வைத்திருந்த கருவிகள் தன்னைக் கைவிடுவதன் பதற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். சென்னையின் புறநகரில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணையும், அவளது சகோதரனையும், அவர்களைச் சூழும் காரிருளையும், அலைந்து திரியும் பேய்களையும், அவற்றுடன் அவள் கொள்ளும் உறவையும் வாழ்வைப் பற்றிய படிமங்களாகவோ குறியீடுகளாகவோ புரிந்துகொள்வதற்கான தடயங்கள் ஏதுமற்ற அந்தக் கதை வாசகனை முற்றாகக் கைவிடுகிறது. சிறில், ஜெனோபெல், கவான் டஃபே, தேவாலயம் எனக் கதையின் பரப்புகளுக்குள் தோன்றி மறையும் உடல்கள் உடல்களாகக் கற்பிதம் செய்துகொள்ள முடியாமல் போகும் கையறுநிலையை வாசிப்புக்கான தூண்டுகோளாக மாற்ற முயன்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இருள் சூழ்ந்த பேய்களின் உலகத்தை பொழுதுபோக்கு மையங்களில் காணம்போது அது நவீன வாழ்வின் கொண்டாட்டங்களுக்கான வெளியாக இருக்கிறது. அதில் புதிர்கள் இல்லை, திட்டவட்டமான விதிகளுக்குக் கீழ்படிந்த உலகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் ஜெனோபெல்லை நீங்கள் மனச்சிதைவுக்குள்ளான ஒரு பெண்ணாகக் கற்பனை செய்துகொள்ளலாம். பொழுது போக்கு மையங்களில் தென்படும் பேய்களாலும் அங்கு சூழ்ந்துள்ள இருளாலும் கிளர்ச்சியடையலாம். ஜெனோபெல் கவான் டஃபேயின் குகையை அடையும்வரை நீடிக்கும் கிளர்ச்சி பிறகு தன்னைக் கைவிடும்போது ஒரு வாசக மனத்திற்குக் கிடைப்பது என்ன? வாசிப்பு இன்பம் குறித்த கற்பனைகளில் மூழ்கித் திளைத்திருக்க முடியுமா?

வாசிப்பு இன்பம் என்னும் போதைக்கு இரையாவதிலிருந்து தனது வாசகனை மீட்டெடுக்க முயல்கிறாரா கிருஷ்ணமூர்த்தி?

தொகுப்பின் மற்றொரு முக்கியமான கதை தாயம். அதில் தென்படும் உலகம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக் கதையின் உலகத்தைப் போல் புதிர்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்ட ஒன்று அல்ல.

வேலையிழந்த ஒரு கணவனும் கல்லூரி ஆசிரியையான மனைவியும் எளிய சிக்கனமான வீடும் கைவிடப்பட்ட ஒரு அறையும் இரண்டு சிறிய உலோகத்துண்டுகளும் மட்டுமேயான உலகம். அதைக் கண்டு பதற்றமடைவதற்கு ஒன்றுமே இல்லை. தாயக்கட்டைகளாக மாற்றப்பட்ட இரண்டு உலோகத்துண்டுகள் அவர்களது வாழ்வில் எப்படிக் குறுக்கிட முடியும்? ஒருவேளை நீங்கள் அந்தக் கணவனை மனச்சிதைவுக்குள்ளான ஒருவனாகக் கற்பனை செய்துகொள்ளலாம். அவனது மனச்சிதைவு உங்களுக்கு ஒரு கேளிக்கையாகலாம், நீங்கள் சற்று விளையாடிப் பார்க்க விரும்பலாம். அதன் போதை தரும் சுகத்தில் திளைத்திருக்க முற்படலாம். ஆனால் கதை அதற்கான வாய்ப்புகளை மறுக்கிறது. உயிரற்ற, தன்னிச்சையான இயக்கமற்ற, இரண்டு சிறிய, மிகச்சிறிய உலோகத் துண்டுகளை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். உருளும்போதும் புரண்டு விரியும்போதும் அவை விடுக்கும் சவால்களை நீங்கள் ஏற்க வேண்டும். உங்களால் அவற்றைப் புறக்கணிக்க முடியாது, அவற்றின் கிரீச்சிடும் சத்தங்களிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. நீங்கள் அதன் அதிகாரத்தைக் கண்டு பதற்றமடைகிறீர்கள். கடைசியில் தற்கொலை செய்துகொள்கிறீர்கள்.

ஞமலியில் நீங்கள் நாய் பிடிப்பவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாய் பற்றிய கற்பிதங்கள் உருவாக்கியிருக்கும்

அறக்கோட்பாடுகளிலிருந்தும் அச்சத்திலிருந்தும் வெளியேறத் திணற வேண்டியிருக்கும். நாய்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். நீங்கள் எதற்காக அவைகள் வசிக்கும் தெருக்களுக்குள் பிரவேசிக்கிறீர்கள் எனத் தெரியும். உங்களிடமிருந்து தப்புவதற்கான வழிகளைத் தேட முடியாத போது அவை பிடிபடுகின்றன. கூக்குரலெழுப்புகின்றன. பரிதாபமாக உயிர்விடுகின்றன. உங்கள் தெருக்களில் எண்ணற்ற நாய்கள் இருக்கின்றன. நீங்கள் நாய்களுக்கு நாய்கள் என்று பெயர் சூட்டி அவற்றை வளர்க்கிறீர்கள், அவற்றுக்குச் சோறிடுகிறீர்கள், அவற்றை நேசிப்பது போல் நடிக்கிறீர்கள். பிறகு அவற்றைக் கொல்கிறீர்கள். உங்கள் குழந்தையை ஏதாவதொரு உயிர்க்கொல்லி நோய் தாக்குகிறது. நீங்கள் நாய்களைக் கைவிட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடுகிறீர்கள். உங்கள் வாகனம் நின்றுபோய்விடுகிறது. நீங்கள் அதற்கு டீசல் அடிக்கத் தவறிவிடுகிறீர்கள். பதற்றமடைகிறீர்கள். நீங்கள் உங்கள் அதிகாரத்தை இழக்கிறீர்கள்.

அதிகாரத்தை இழப்பது பற்றிய பதற்றம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள வேறு சில கதைகளின் மையமாக இருக்கிறது.

கவான் டஃபே தனது கட்டுப்பாட்டில் உள்ள இருளை இருளின் மீது பயம் கொண்டவர்களுக்கான களியாட்டவிடுதியாக மாற்றுகிறான். அதில் பிரவேசிப்பதற்கு, அச்சம் தரும் களிப்பில் மூழ்கித் திளைத்திருப்பதற்கு நீங்கள் கவான் டஃபேக்குப் பணம் தர வேண்டும். போதுமான அளவுக்கு அச்சத்தில் மூழ்கித் திளைத்த பிறகு நீங்கள் அதிலிருந்து விடுபட விரும்பினால் கவான் டஃபே உதவி செய்வான். திறவுகோல் அவனிடம் இருக்கிறது. அது அவனுடைய மரபு வழிச் சொத்து. ஜெனோபெல் அதைக் கண்டறிந்துவிடும்போது அவனது அதிகாரம் பறிபோய்விடுகிறது. பறிபோய்விட்ட அதிகாரத்தை ஜெனோபெல் மீதான காதலாலோ காமத்தாலோ மீட்க முடியவில்லை. அப்போது அவன் காணாமல் போகிறான்.

பைபிள் கதை போல் தோன்ற வைக்கும் கிருஷ்ணமூர்த்தியின் இந்தக் கதையை நீங்கள் நவீன வாழ்வின் மீது கவிந்திருக்கும் புதிர்களுக்கான குறியீடாகக் கொள்ளலாம். ஆனால் உங்களால் அவற்றை விடுவிக்க முடிவதில்லை. அதற்கான திறவுகோல்களை கிருஷ்ணமூர்த்தி ஒளித்து வைத்துவிடுகிறார்.

கவான் டஃபேயைப் போல நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க முயல்கிறீர்கள். காணாமல் போய்விட விரும்புகிறீர்கள். ஆனால் கிருஷ்ணமூர்த்தி காலத்தால் கைவிடப்பட்ட அஞ்சல்துறையில் உங்களுக்கு ஒரு வேலையை வாங்கித் தந்துவிடுகிறார். அது உங்களை ஆசுவாசப்படுத்திவிடுமென கற்பனை செய்துகொள்கிறீர்கள். அது உங்களுக்குச் சிறிதளவு பாதுகாப்பைத் தருகிறது, சோற்றுக்குப் பஞ்சமில்லாத ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதத்தைத் தருகிறது. ஆனால் கொண்டு சேர்ப்பிப்பதற்கான எந்தக் கடிதமும் உங்களுக்கு வருவதில்லை. நீங்கள் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள். சலிப்பு உங்களைச் சூழத் தொடங்குகிறது. சலிப்பின் போதையில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கத் தொடங்கும்போது சன்னாசியின் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. காலத்தால் கைவிடப்பட்ட அஞ்சலட்டை. கருணையே இல்லாமல், அஞ்சலகத்தின் யாராலும் திறக்கப்படாத புழுதி படிந்த 8ஆம் எண் அறையைத் திறந்து வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதனுள் குவிந்து கிடக்கும் சென்று சேராத கடிதங்களைக் கிளறுகிறார். இப்போது நீங்கள் சன்னாசியைத் தேடிச் செல்கிறீர்கள்.

புதிர்விளையாட்டுக்களின் சாயல்களில் தன் புனைவுகளை உருவாக்க விரும்புகிறார் கிருஷ்ணமூர்த்தி. வாழ்க்கையைக் குறித்துப் பேசுவதற்கு, விமர்சிப்பதற்கு அல்லது கொண்டாடுவதற்குப் பயன்பட்டு வந்திருக்கும் படைப்பு மொழியை இவ்விதமாக அவர் மாற்ற முயல்கிறார். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே அலையும் மொழி. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மொழியின் கருணையின்மையையே கிருஷ்ணமூர்த்தி தனது படைப்புமொழிக்கான ஆதாரமாகக் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட கருணையின்மை உலகப்போருக்குப் பிந்தைய மேற்கத்திய இலக்கியங்களில் பலவற்றில் காணக்கிடைப்பது. போரின் சிதைவுகள் நம்பிக்கைகளைக் குலைத்தபோது வாழ்வின் மீதான மதிப்பீடுகள் சரிந்தபோது மேற்குலகின் படைப்பிலக்கியவாதிகள் தங்கள் படைப்புமொழியை அடியோடு மாற்ற முற்பட்டார்கள். வரலாறு கற்பித்த அறக்கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தினார்கள். புனிதங்களைச் சிதைத்தார்கள், மதங்களைத் துறந்தார்கள், தங்கள் கடவுளர்களைக் கேலி செய்தார்கள். நம்பிக்கைகளை மீட்டெடுத்துக்கொள்வதற்கான வேட்கையைத் தங்கள் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தினார்கள். சார்த்தர், காமு, சீக்ப்ரட் லென்ஸ் முதலான அப்போதைய மேற்குலகின் எண்ணற்ற போருக்குப் பிந்தைய கலைஞர்கள் அவ்விதமாகத் தங்களுக்கான புதிய படைப்பு மொழியைக் கண்டறிய முற்பட்டனர்.

படைப்பு மொழியைக் கண்டடைவதே ஒரு எழுத்தாளன் முன்னால் உள்ள ஆகப்பெரிய சவால். படைப்பிலக்கியத்தின் வரலாறு என்பதே அதுதான். தமிழிலும் சங்க காலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருவது. மணிமேகலையும் திருக்குறளும் பழந்தமிழ் இலக்கியத்தில் நடந்த அவை போன்ற நிகழ்வின் மிகப் புகழ்பெற்ற உதாரணங்கள். நவீன இலக்கியத்தில் மௌனி, புதுமைப்பித்தன் எனத் தொடங்கி நீண்டு வருவது. தமிழ் நவீன இலக்கியம் வாழ்வு பற்றிய பல கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, மதிப்பீடுகளைக் குலைத்திருக்கிறது. கோடுகளாலும் வண்ணங்களாலும் ஆன சித்திரங்களை சொற்களின் வழியே உருவாக்கியிருக்கிறது. வரலாறு விடுத்த சவால்களைப் படைப்பின் வழி எதிர்கொள்வதே அவர்களது படைப்புச் செயல்பாடுகளின் ஆதாரம். அவர் வாழ்வை, அதன் யதார்த்தத்தை, அதன் மீது கவிந்திருக்கும் மரபுகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், அரசியல் சார்ந்த அதிகாரத்தின் வேட்கையைப்  பொருட்படுத்தாதவரல்ல. தொகுப்பிலுள்ள மண்டூகம் என்னும் கதையை வாசியுங்கள். அதை அதிகாரத்தின் உடல்களாலான மிக எளிய படிமங்களைக் கொண்ட கதையாக வாசிக்க முடியும். அளகபாரம், நிர்தாட்சண்யம், புனைசுருட்டு ஆகிய கதைகளின் எளிய உலகத்தினுள் அவை போன்ற படிமங்களைக் காண முடியும்.

ஆனால் 2000க்குப் பின்னர் உருவான தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் அதிகம். வாழ்வு பற்றி அவர்கள் உருவாக்க விரும்பும் சித்திரங்கள் புதிர்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்ட பாதையொன்றின் புலப்படா இருளுக்குள் பிரவேசிப்பதை ஒத்தவை. இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல. உண்மைக்கும் பொய்க்குமிடையே அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை. நம்பிக்கையூட்டி ஏமாற்றிக்கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன.  வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற உருவாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியின் கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள்.  அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது. அதன் இருளைத் துளைக்க முயல்கிறது. அவரது படைப்பு மொழி வாசகனுக்குப் பதற்றம் தருகிறது, வாசிப்பை சவாலானதாக மாற்றுகிறது. சவாலை எதிர்கொள்வதற்கான கருவியை கிருஷ்ணமூர்த்தி தன் படைப்புக்களில் ஒளித்து வைத்திருக்கிறார். அதைக் கண்டுபிடிக்குமாறு கோருகிறார்.

இவ்விதமாகத்தான் தனது படைப்பு மொழியைக் கண்டறிய முற்படுகிறார், மெய்நிகர் உலகம் விடுக்கும் சவால்களை மொழியின் வழியே எதிர்கொள்ள முற்படுகிறார், கிருஷ்ணமூர்த்தி.


  • தேவிபாரதி
நூல் தகவல்:
நூல்: காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
பிரிவு :  சிறுகதைகள்
ஆசிரியர்: கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
பதிப்பு ஆண்டு: 2018
பக்கங்கள் : 160
விலை : ₹ 180

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *