பகிர்வுகள்படைப்பும் பகுப்பாய்வும்

தேவதச்சனும் கடவுள் விடும் மூச்சும்


கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது? என்ற கேள்வியை யாராவது எதிர் கொண்டால், நாம் என்ன பதிலை முன் வைப்போம்?

நான் தேவதச்சனின் இந்த கவிதையை மட்டுமே முன் வைப்பேன் என்று தோன்றுகிறது.

காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.

கவிதையின் மொழியும் காற்றின் நடனத்தைப் போலவே இருக்கிறது.
சொற்களால் வெளிப்பட்டும், சொற்களின்றி மறைந்தும் கவிதை காற்றிலாடும் இலையைப் போலவே இருக்கிறது. அதன் அற்புத நடனத்தை அறிந்து கொள்பவர்கள் மிகச் சிலரே.
இந்த கவிதையிலிருந்து தொடங்கினால் தேவதச்சனின் ஒவ்வொரு கவிதையுமே ஏதோ ஒரு ஆழத்தில் முடிவில்லாத அதன் பாதையில் சென்று கொண்டே இருக்கிறது.

வாழ்வில் நாம் அறியாத ஆழமும் நாம் அறியாத பாதையும் தேவதச்சனின் கவிதை வழியாகவே அறிய முடியும். மனிதப் பயணத்தில் இந்தப் பாதையை பின்பற்றுபவர் மிக குறைவு. அதிலும் மிக குறைவாகவே இருக்கிறார்கள் கவி மனம் கொண்டவர்கள்.

“காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்து பூச்சிகள், காலில்
காட்டை தூக்கி கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்து கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை ”

“கடவுள் விடுகிற மூச்சைப் போல்
காற்று வீசும் கரிசல் வெளி……”

காற்று வாக்கில் லேசாக அள்ளித் தெளிக்கும் கவிதை மொழி யாருக்கு இப்படி வாய்க்கும்? தேவதச்சனின் நினைவுகள் துழாவும் இடங்களில் எல்லாம் கவிதை அவருக்காகவே காத்து கிடந்ததைப் போல் தன் மொழியை அவரிடம் விட்டுச் செல்கிறது.

“கடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்
அதைத் தொடும் பொழுதும்
தூக்கும் பொழுதும்
செல்ல மகளைப் போல்
கூட வந்ததா
தண்ணீரில்
வான்வெளி என நீ நுழைகையில்
அது
குதித்து கும்மாளமிட்டதைக் கேட்டாயா
பஸ்ஸில்
போலீஸ்காரர் நடுவே
கைவிலங்கிட்டு அமர்ந்திருக்கும்
இளங் கைதியின்
கண்கள்
வருடிக்கொண்டிருக்கின்றன
மூடிய பானையை
மூடாத தண்ணீரை “

ஒரு கவி மனதின் அகம் நுட்பமானது. மூடிய பானைக்குள் இருக்கும் மூடாத தண்ணீரை அறிந்து கொள்ள புறக் கண்கள் தேவையில்லை அல்லவா?

நடை

புற்களுக்கு மேலே நடக்காதீர்கள்
என்கிறது
அறிவிப்பு பலகை
சரி
இனிமேல்
புற்கள் கூடவே
நடக்கத் துவங்குவேன் நான்.

இது எவ்வாறு சாத்தியம்? என்று யோசிக்கிறேன். புறவெளியின் அசாத்தியங்களை தன் அக வெளியில் சாத்தியமாக்குபவனே கவிஞன். அதற்கான நுட்பங்களை மொழியின் வழியாகவே அவன் அறியக்கூடும். அந்த அறிதலோடும் புரிதலோடும் தேவதச்சனின் மொழி ஒவ்வொரு கவிதையிலும் நுட்பமாக வெளிப்படும் தன்மையிலானது. அவன் புல்லாகவும் மாறக்கூடுமென்றால் யார் தடுப்பது? மொழி என்ற மந்திரக் கோலை கையில் எடுத்துக்கொண்டவன் கவிஞன் ஆகிறான்.ஆகத்தானே வேண்டும்.?

மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது

வாழ்க்கையை புத்தகமாக்குபவன் படைப்பாளி. அந்த புத்தகத்தை திறந்து வெவ்வேறு கோணங்களில் ரசிக்கத் தெரிந்தவனும் ஏதோ ஒரு விதத்தில் படைப்பாளி ஆகிறான். இயற்கையின் கூறுகளை தன் வயப்படுத்தி தனது மொழியில் படைப்பவன் வேறொரு தளத்தில் பயணிக்கிறான்.

யாரோ

சட்டையை துவைக்கும் போது
அதில் யாருமில்லை
கொடியில் காய்ந்தபடி தொங்கும் போதும்
காய்ந்தபின் மடித்து வைக்கும் போதும்
அதில் யாருமில்லை
சாலையில்
மெல்லிய துணி என
கிழிந்து
காற்றில் புரளும் போதும்
அதில் யாருமில்லை -ஆனால்
ஆலை எந்திரங்களில்
நூல் என ஓடும் போதும்
சாயப்பட்டறை தண்ணீரில்
மூழ்கி கிடக்கும் போதும்
அதற்கு முன்
கரிசல் காட்டு நள்ளிரவில்
பருத்தி சுளை என
அசைந்து கொண்டிருக்கும் போதும்
அதில் யாரோ இருக்கிறார்கள்
யாரோ இருக்கிறார்கள்……

மனித வாழ்வின் சில ரகசியங்கள் இங்கே குறியீட்டு மொழிகளாக கவிதைகளில் உருமாறித் தெரிகின்றன. சராசரி மனிதர்கள் வாழ்வின் அசாதாரண பொழுதுகளை கூட சராசரித் தனமான அல்லது மொன்னைத் தனமான ஒரு பார்வையுடன் வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள். ஒரு கவிஞனால் அவ்வாறு கடந்து விட முடிவதில்லை. அவன் வாழ்வின் ரகசியங்களை தன் குறியீட்டு மொழிகளாக உற்பத்தி செய்கிறான்.

என் நூற்றாண்டு

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
படிவங்கள் நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் ட்ரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமலிருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாவது நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

நமது முகத்தில் கண்கள் எதற்காக இருக்கின்றன? எதற்காகவெல்லாம் இருந்து எதை எதையோ கண்டு ரசிக்கிறது.

அது அதன் பொழுதில் இருந்து பின் மறைந்தும் விடுகிறது. கண்கள் பெரும் மாயம் செய்பவை. அதனோடு வாழ்வது சுலபம். ஆனாலும் பெரும் பாவனையுடன் அலையும் நமது கண்களுக்கு பின்னே இயங்குவது மனம் இல்லையா? அந்த மனத்தை புற நிகழ்வுகளின் முன்னே கொண்டு வந்து நிறுத்த நாம் பழகியிருக்கவில்லை. அல்லது ஏதும் தெரியாதது போல் விலகியிருக்கலாம். தேவதச்சனின் நூற்றாண்டுகளைப் போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் நாமும் இல்லாமலிருக்கலாம். மனம் சுமையற்றுப் போக சும்மா இருத்தல் சுகமே. ஆனால் சில வரட்டு தத்துவங்கள் வாழ்வை கேலி செய்பவையாக உள்ளன. வெறும் தத்துவ புரட்டுக்கள் கவிஞனிடம் எடுபடாது. என் நூற்றாண்டு என்ற கவிதையில் காட்சிகளை நகர்த்துவதன் மூலம் சமூகத்தின் கூட்டு நனவிலி மனத்தை திறந்து விடுகிறார். இந்த நுட்பம் தேவதச்சனின் பல கவிதைகளில் சங்கிலித் தொடர் போல் வெகு நுட்பத்துடன் இழைந்தோடுவதை கவனிக்க முடிக்கிறது.

சாய்வாக
நான் எறிந்த
ஓட்டுச்சில்
நடனமாடுகிறது தண்ணீரில்
அந்தச் சின்ன வினாடியில்
என்னோடு சேர்ந்து
எல்லா காடுகளும்
அதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
தண்ணீரே! தண்ணீரே!
உன்னைத்
தொட்டுத் தொட்டுப் பறக்கும்
கல்பூச்சியின்
கல்லைத்தான்
உன்னால் பிடிக்க முடியும். அது
உன் மேல் தூவிய
எழுத்துக்களை
என்ன செய்ய முடியும் உன்னால்
என்ன செய்ய முடியும்

மொழியின் விநோதங்களை அனுபவமாக்கும் திறன்தான் கவிஞனனின் அனுபவமாகவும் அறியப்படுகிறது. அந்த அனுபவமே நுட்பமாகி மொழியின் வழி கவிதையாகிறது. தண்ணீரைத் தொட்டு பறக்கும் கல்பூச்சி தேவதச்சனின் வினோத அனுபவம். உன் மேல் தூவிய எழுத்துக்களை என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியின் வழியே தன் அனுபவத்தை உலக அனுபவமாக மாற்றும் போது தான் ஒரு விந்தை கவிதையில் நிகழ்ந்து விடுகிறது.

தேவதச்சனின் கவிதைகளில் விளக்க முடியாத ஒரு பேருணர்வைக் கண்டுணர முடியும். ஒரு துளியிலிருந்து கடலாக விரியக்கூடிய காட்சி அனுபவங்களையும் விளக்க முடியாத மன நுண்மைகளையும் அவரது கவிதைகளை திரும்ப திரும்ப வாசிப்பதன் வழியே பெற முடியும்.

தேவதச்சன் தன் கவிதைக்குள் தன்னையே ஒரு துளியாக்கி கொள்கிறார். அதுவே கவிதையில் தன்னை கடலாக விரித்துக் கொள்கிறது.

இறுதியாக, தேவதச்சனின் ஒரு கவிதை -இது விமர்சகர்களின் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் விழட்டும்.

ஒரு கவிதையை
விமர்சிப்பது
என்பது
கடலில்
ஒரு ஆமை
சாப்பிட்டு கொண்டிருப்பதைப் போல
மேலும்
ஒரு ஆமையை
கடல்
சாப்பிடுவதைப்போல

கவிதை வாசகர்களாகிய அல்லது விமர்சகர்களாகிய நாமும் கவிதை மீதான தீராத காதலுடன் அல்லது வேறு வேறு விவாதங்களுடன் கடலைப் போலவும் ஆமையை போலவும் மாறித்தான் ஆக வேண்டும்.


  • மஞ்சுளா

 

Devathachan Painting Courtesy : Hindutamil .in

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *