கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர் ரவிசுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வெய்யிலின் முன்னுரைகள் மற்றும் நூலாசிரியரின் ‘என்னுரை’

 

பச்சை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கடக்க முடியாமல் நிற்கிறேன்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ, சதா நம் பொறிகளில் ஏதேதோ விழுந்த வண்ணம் இருக்கின்றன நல்லதும் கெட்டதுமாய். பல சமயம் நாமதற்கு பொறுப்பில்லை என்றாலும் அவை நம்மை எதிர்வினை செய்ய வைத்தபடியே இருக்கின்றன. இவைகளில் நல்லவை சீக்கிரம் மறந்து, அல்லாதவை நின்று நிலைத்து வதைக்கிற முரணை என்னவென்று சொல்வது. அதிலும் பூஞ்சையும் மென்மையுமாய் மனசுள்ளவர்களை, இந்த அல்லல் நினைவுகள் மறுபடி மறுபடி கிழித்து ரத்தம் ருசித்தபடி இருக்கின்றன பலசமயம். பொதுவாய் கலைமனம் மென்மையில் முகிழ்த்தது. பிறர் வாட சில செயல்கள் செய்யாதது. வன்மத்துக்கும் வன்முறைக்கும் எதிரானது. அப்படித்தானே இருக்க முடியும், வேண்டும்.

அது கையறு நிலையில் ஏதும் செய்ய இயலாமல் கைபிசைந்து நின்றபடி, ஒரு வலியின் ஓலத்தைக்காண நேர்ந்தால் ரணத்தில் ஊற்றிய வெந்நீராய் அரற்றுகிறது. அப்படி ஒரு கவிதை இத்தொகுப்பில் “கலாம்கள்” என்ற தலைப்பில் உள்ளது. அதை நான் இங்கு எழுதிக்காட்ட விரும்பவில்லை. நீங்கள் வாசிக்க வேண்டும். மனப்பிறழ்வு கொண்ட பெண் ஒருத்தியின் மார்புகள், பாலத்தின் அடியில் வைத்து குரூரமாய் கடிக்கப்படும் போது வாதை பீறிடும் அக்குரல் வந்து தாக்குகிறது. இதை காணாமல் கடந்திருக்கக் கூடாதா என்று கனத்து விசும்பி முடியும் இக்கவிதையில், ”சிக்னலாவது கருணையினை பச்சையாய் ஒளிர்ந்திருக்கலாம்” என்ற ஒரு கவித்துவ வரியினை கண்டதும் வலி மறந்து நான், சட்டென அங்கேயே நின்றுவிட்டேன் பின்னால் ஹாரன் சத்தங்கள் கேட்டாலும் கடக்க முடியாமல்.

இந்த காட்சி ஏன் கவியால் மறக்க முடியாததாகிறது. வாழ்வில் எத்தனையோ காட்சிகள் தினம் தினம் பொழுது முழுவதும் கண்ணுக்கு தட்டுப்பட்டபடி இருக்கிறது. எல்லா காட்சிகளும் அனுபவங்களும் கவிதையாகிவிடுவதில்லை . ஏதோ ஒரு சிலவே சேகரமாகி அதிலும் சிலவே படைப்பில் பதிவாகிறது. அது போல ஒன்று இங்கு கவிதையுருக்கொண்டு, இப்படி ஒன்றைச் சொல்லி இன்னொருவிதமாய் யாருக்கும் இப்படிச் செய்யாதீர்கள் என்று பூடகமாய் கெஞ்சுகிறது. அந்த தவிப்பால் தான் அந்த காட்சியும் ஓலமும் கவிதையாகிறது. பிரிவின் இந்தக் குரல் கேட்கும் வாசலின் வழியேதான் தேவசீமாவின் கவிதைகளுக்குள் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். மனிதாபிமானம் அருகி டாக்ஸிடெர்மிஸ்ட்டுகளால் பதப்படுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் இரட்சகர்களும் மீட்பர்களுமில்லா இப்பொழுதில் இந்த கரிசனம் தானே அத்யந்தத் தேவையாகிறது.

சக உயிர்கள் மீதான இந்த மா கருணையின் ஒற்றைச் சாகித்யமே வெவ்வேறு ராகங்களில் தொகுப்பெங்கும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அத்தற்கு வேறு வேறு ஏறு நிரல் இறங்கு நிரல். ஒன்று போலில்லை இன்னொன்று. சிலது ஒளடவம். சிலது ஷாடவம். சில சம்பூர்ணம். அந்த வித விதமான நாதத்தையெல்லாம் நீங்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

ஒரு கொடுக்கோ, விஷமோ கொடுத்து இருக்கக்கூடாதா இந்த பாழாய்ப் போன கடவுள், தொடுமுன் ஆயிரம் முறை யோசித்திருப்பான்களே என்ற ரீதியில் பேசுகிறது ஒரு கவிதை . நம் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கிற கடவுள்களையா நாம் கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த முறையீடுகளை எல்லாம் கேட்காத கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் தான் என்ன. “பரந்துகெடுக உலகியற்றியான் ” என்று நம் முப்பாட்டன் சொன்னதையே நமக்கும் சொல்லத் தோன்றுகிறது. மிகச்சொற்ப வரிகளில் பாலியல் வன்கொடுமையை எவ்வித பிரச்சார நெடியும் இன்றி உணர்த்தி மனசை கனமாக்கிவிடும் இக்கவிதை உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஒரு கவிதை . உயிர் பிசையும் வலியிலும் ரௌத்திரம் கொள்ளாது கழிவிரக்கத்தில் பேசும் இது போன்றே இன்னொரு கவிதை.

போராட்டக் களங்களில் ஏதேனும் ஒரு சொல்லையோ புழுவையோ எறிந்துவிட்டே வருகிறேன் அதுவோ, இதுவோ குடைந்தே தீரும் என்று அறச்சாபமிடுகிற இதை இத்தொகுப்பில் தேடிப்பாருங்கள்.

என்ன போராட்டம் அது. எங்கு நடக்கிறது. அகத்திலா புறத்திலா. ஒரு சராசரி இந்தியப்பெண் ஆக்ரோஷமாய் வாளெடுத்து அநீதியைக் கருவறுக்கவா முனைவாள். அப்படி முனைய வேண்டும்தான், ஆனால் நடக்காது. அது மூளையில் பூட்டிய ஆண்டாண்டு காலச் சங்கிலி. அதை அறுப்பது அத்தனை சுலபமில்லை. மரபணு காலங்காலமாய் அடக்கம் அடக்கம், பொறுமை பொறுமை, சகிப்பு சகிப்பு, கற்பு கற்பு என்றும் இதெல்லாம் உனக்கு மட்டும்தான் என்றும் பெண்ணுக்குக் கடத்தும் ஒழுக்க வாசகங்கள் அவை. எந்த போராட்டத்திலும் இப்படி மௌனமாய் எதையேனும் எறிந்துவிட்டு குடையும் என்று நம்பிக்கொண்டிராமல் விட, வேறென்னதான் செய்வாள் அவள். இதில் துலங்குவது சுத்த அக்மார்க்கான ஒரு இந்தியப் பெண் மனம். மடிப்பு மடிப்பான எத்தனை அர்த்தக் கோணங்களை கொண்டிருக்கிறது இந்த எளிய கவிதை.

பலவிதமான கவிதைகளை இவர் எழுதியிருந்தாலும் பெண் குரலில் இப்படி தனித்துவமாய் பேசும் ஒரு சில கவிதைகள் என்னைப் பாடாய்படுத்தி எடுத்துவிட்டன. நல்ல படைப்பு இப்படி எதையாவது செய்யத்தானே வேண்டும்.

அகம் சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளிலும் சோடையில்லை. உன்னுடன் உரையாடக் காரணங்களை துழாவிக் கெண்டிருக்கிறது விழியற்ற கரங்கள், தட்டுப்பட்டவுடன் முதல் சொல் எறிவேன், வாகாய் பிடித்து பாலம் கட்டத் துவங்கு.

நான் இதை வாசித்ததும் அந்த விழியற்ற கரங்கள் துழாவும் காட்சி என் மனக்கண்ணில் தோன்றியபடி இருந்தது. தட்டுப்பட்டதும் எனதொரு பருவத்தின் விளிம்பில் முதல் சொல் எறிந்தவளைப் பற்றி பாலம் கட்டத் துவங்கிற்று மனம். பாலத்தில் துவங்கி குடியிருப்பு, தெருக்களென கிளைத்து நகரமாகி நாடாகி தேசமென விரிந்தது மிதந்தபடியிருந்தது நெடு நேரம். இப்படி அவரவர் அனுபவங்களுக்கு தள்ளிவிடும் அசாத்திய கலைத் திறன் மிக்க எவகேட்டிவ் ரகக்கவிதைகளும் இதில்.

கவிதைக்குள் வழக்கமான படிமங்கள் தாண்டி வேறு துறைகள் சார்ந்த சேர்மானங்கள் சேர்ந்த இண்டிர்டிசிப்ளின் ப்யூஷன் போல அமைந்த “ஜியோமெதியில் கடவுள்”, அப்பா அம்மா வாழ்ந்த வாழ்வை பூடகமாய்ச் சொல்லும் “எல்லாவற்றையும் சொல்லும் உர்”, குடிக்கத் தண்ணீர் இல்லா தேசத்தில் திறந்துவிடப்பட்ட போதை வெள்ளத்தால் சிதிலமாகும் டாஸ்மாக் நோய்த்தொற்று பரவிய குடும்பத்தை பற்றிப் பேசும் “மதுக்குடி” கண்ணற்றவற்கு வண்ணத்தை விளக்கும் “லேசாய் சூடேறிய பீச் கனிகள்” இவை தவிர சில பகுதி அரூபக் கவிதைகள் போன்றவை என்னை வெகுவாய்க் கவர்ந்தன. இன்னும் சொல்லலாம்தான். ஆனால், முன்னுரை ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல.

ஒரு தொகுப்பை வாசித்து முடித்து சில நாட்கள் கடந்த பின் மறதியில் எல்லாம் வடிந்துவிடாமல் தங்குபவை கணிசமாய் இருந்தால் அது நல்ல தொகுப்பின் லட்சணம். இதை நான் அப்படிக்கொள்கிறேன். முதல் தொகுப்புக்கான எந்த சலுகையையும் கோராமல் தொடர்ந்து இன்னும் எழுதிக் கொண்டே இருங்கள் தேவசீமா என்று நாம் அவரைக் கேட்க, கேட்டுக்கும்படி வைத்திருப்பது இக்கவிதைத் தொகுப்பின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

ரவிசுப்பிரமணியன்

 


வைன் என்பது குறியீடுதான்

ப்போதும் கவிதைக்குள் புழங்கும் பொருள்கள், உயிரிகள், பொழுதுகள், நிறங்கள், வாசனைகள் குறித்து அதிகம் கவனம்கொள்வது வழக்கம். கவிஞரின் மொழியும் உணர்வெழுச்சியும் எங்கெல்லாம் பாய்கின்றன, ஊர்கின்றன, பதுங்குகின்றன, தடுமாறுகின்றன என்று ஆய்வதில் கூடுதலாகக் கவிதைகளை, கவிஞரைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியாக கவிஞர் தேவசீமாவின் கவிதைகளுக்குள் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது இச்சிறிய கட்டுரையின் நோக்கம்.

உப்பு – வைன் – விஷம் என்ற மூன்று பொருள்களைக் கொண்டு உருவாக்க வாய்ப்புள்ள அர்த்தங்களை; உணர்வுகளைக்கொண்டு கவிதை சமைக்கிறார் தேவசீமா. ‘சமைக்கிறார்’ என்ற சொல்லை மிகச் சுவாரஸ்யமாகவே இங்கு முன்வைக்கிறேன். சமையல் சாதனங்கள், சமையல் பொழுதுகள், உணவுப் பொருள்கள், பசி என இவரின் கவிதைகள் சமையலுக்கு, உணவுக்கு நெருக்கமான வகையில் அமைந்துள்ளன.

‘அவள் கவிதையும் கறியும் சமைப்பவள்’ என்ற வரியோடு ஒரு கவிதை தொடங்குகிறது.

உப்பு, தேநீர், சர்க்கரை, கருவாடு, தந்தூரி, தோசை, சூப், நாஷ்டா, அமதம், என ஏராளமான உணவுப்பொருள்கள் இவரது கவிதைகளுக்குள் நிறைந்து கிடக்கின்றன.

‘உயிரேற்றி ஒரு உணவு / சமைக்கிறான் ஒருவன்’
‘………………
கடவுளை கல் ஆக்கித் தருகிறது
இஞ்சி இடிக்கலாம்
தேத்தண்ணிக்கு’
‘அழுகிய மனப்பழத்தின் வாசனை’
‘புளிப்பும் துவர்ப்புமாய் ஒரு உறக்கம்’
‘கைகளே இல்லாதவனின் வயலின்
அடுப்பில் குதிக்கிறது
சாம்பாரில் சரி க மபா’

இப்படியாக ஏராளமான வரிகள் கொண்டு கவிதை சமைத்திருக்கிறார் தேவசீமா.

பிரிவின் வலியில் அரற்றும்போதுகூட

‘இளைப்பாறுதலாய்
எண்ணெய்க் கொப்பரையில் இறங்கலாம்’

என்று எழுதிச் செல்லும் இவரின் கவிதைகள் சுவாரஸ்யமாவனவை.

‘தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தம்
வெங்காயம் தூக்கலாய்
நன்றாய்த்தான் பொருந்துகிறது வைனுக்கு.’

கவிதைக்கும் சமையலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்ற போதிலும் இந்த அணுகுமுறையின் வழியே இவரது கவிதைகளை வாசிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது.

உப்பு – ஒயின் – விஷம்

தேவசீமாவின் மொத்தக் கவிதைகளும் இந்த மூன்று பொருள்களில்; சுவைகளில் மீண்டும் மீண்டும் மையம் கொண்டு அவற்றைப் படிமங்களாக முன்வைக்கின்றன. உப்பு: வாழ்வின், நம்பிக்கையின், காதலின், நட்பின், காமத்தின், அழுக்கின், குற்றத்தின், உழைப்பின், கண்ணீரின் சுவையாக முன்வைக்கப்படுகிறது. உப்பின் சாரம் குறைவதும் – மிகுவதும், இழுப்பதும் – மீட்பதும்தான் வாழ்க்கையாக கவிதையாக இருக்கிறது. வைன்: கனவின் நிறமாக; உப்பு சாரமிழக்கும் தருணங்களில் தஞ்சமடையும் சுவையாக முன்வைக்கப்படுகிறது. குருதிக்கும் வைனுக்குமிடையேயான நிறக்குழுப்பத்தை ருசித்தே தீர்க்க இயலும். வைன் சில நேரம் குருதிச் சுவையில், குருதி சில நேரம் வைன் சுவையில் … இவ்வலி மிகுந்த மயக்கத்தை கவிதைகளில் கடத்த முயல்கிறார் தேவசீமா. விஷம்: சுயக்கழிவிரக்கம், சுயவதை, தற்கொலை எண்ணம் எனத் தொகுப்பு முழுக்கவே பரவலாய் நீலம்பாய்ந்த வரிகளை வாசிக்க முடிகிறது. விடுதலைக்கான பானமாக, விஷம் தொடர்ச்சியாக இவரது கவிதைகளில் முன்வைக்கப்படுகிறது.

பெரும்பாலான கவிதைகளில் தன்னைத் தண்டித்துக்கொள்ள ஆர்ப்பரிக்கும் மனதை அவதானிக்க முடிகிறது. ‘கீறிக்கொண்டே இரு / ஆறிவிடக் கூடாது / விஷமிடு / புரையோடட்டும்’ என பிரிவு, இழப்பு, நினைவின் வாதை, கோபம், மீறலுக்கான துடிப்பு … என கனன்றபடியே இருக்கின்றன. ‘வலியின் முன் சுயமில்லை’ என முனகுகின்றன தேவசீமாவின் கவிதைகள். ‘துரோகங்கள் இழைக்கப்படுவதல்ல ஏற்றுக்கொள்ளப்படுவது’ என்கிற வரிகளின் உளவியல் கிலியூட்டத்தான் செய்கிறது.

‘தனிமைய மட்டுமே சொல்லுற
இரண்டு கண்ணு இருக்கு
எங்கிட்ட
அது அழும்போது
தொடைக்க வழியில்லாம
ஆத்து ஆத்து போவேன்
அழுதுட்டு அதுபாட்டுல
கேலியா விரக்தியோட
சிரிச்சிக்கிரும்
ஏப்பயாச்சும் கொஞ்சங் கோவமா
பாக்கும்’

என்று நீள்கிற கவிதை, அம்மனுக்கு ஒரு சோடி கண்மலர் வாங்கி சாத்துவதாக முடிகிறது. இந்தக் கவிதை எனக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருந்தது. மொத்தத் தொகுப்பிலும் இது தனிக்குரல். இதுபோன்ற கவிதைகளில் வெளிப்படும் வெள்ளந்தித்தன்மை கொண்டு உண்மையில் கவிதைகளில் நிறையவே காத்திரமான விஷயங்களைப் பேச முடியும். இம்மொழியில் இவர் இன்னும் நிறைய கவிதைகளை எழுத வேண்டும்.

சில பொழுது, கவிதை என்பது மொழியுடனான விளையாட்டு. சில பொழுது கவிதை என்பது மொழியுடனான போர். தேவசீமா இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

‘முதுகொடிய வேலை செய்த
ஒரு கை
லேசான அரிப்பிற்கு
தோசைக் கரண்டியினை
எடுத்து முதுகினை சொறிகிறது
தட்டில் விழுவது
தோசையா
அன்றி
முதுகா
உப்பேறி இருக்கிறது
இரவு’

இக்கவிதை பேசுவதுபோல நறுக்கென்று இன்னும் நிறைய பேச வேண்டும். இது இவரின் முதல் கவிதைத் தொகுப்பு. எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்க் கவிதையின் பெரும்பாதையில் முதல் எட்டை வைத்திருக்கிறீர்கள்.

இந்த பயணம் மிக சுவாரஸ்யமானது. வருக.

வெய்யில்
23.12.2019


என்னுரை

நான் என்பது பல படிமங்களால் ஆனது எனக்கொண்டால், என் பால்யம் முதல் இன்றுவரை வாசிப்பே என்னைப் போர்த்தி இருக்கிறது. எல்லோரையும் போல் பாலமித்ரா, அம்புலிமாமா, பூந்தளிர் தான் அரிச்சுவடி. அம்மாவும் அப்பாவும் வாசிப்பின் நேசர்களாய் உலவும் வீட்டில் புத்தகங்களுக்கா பஞ்சம். அம்மா ஜெயகாந்தன், லக்ஷமி, இந்துமதி, சிவசங்கரி என்றால் அப்பா பாரதி, பாரதிதாசன், சுஜாதா மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் நேசர். ஒரு பனிரெண்டு வயதிருக்கும், என் கையில் நல் நினைவுடன் வந்தமர்ந்த புத்தகம் ஜெயகாந்தனின் ‘குருபீடம்’. எதுவும் புரியவில்லை என்றாலும் தொடர்ந்து படிக்க சொன்னது.

நாம் எதற்கு உள்ளார்ந்து ஆசைப்படுகிறோமோ, அவற்றை நமக்கு கையளிப்பதே பிரபஞ்சத்தின் பணி. எதிர் வீட்டு மாமா தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் வேலை செய்தார். அவருக்கு பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும். அவர் மகன்கள் அதை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். அவர்கள் சித்தம் என் பாக்கியம் (உள்ளிருக்கும் சிறுமி குதித்து உடைகள் பறக்க ஒரு நடனம் ஆடுகிறாள்) நிறைய சிறுவர் புத்தகங்கள், சிறு வரலாற்று நூல்கள் இவற்றைத் தாண்டி ஒரு அற்புத புத்தகமாக நான் இன்றும் கருதும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னை அடைந்தது இப்படித்தான். மேலும் ஒரு சராசரியாக வாழ்ந்து இருக்க அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்த என்னை, புரட்டி போட்ட கேள்விகளின் விதைத் தொகுப்பென சொல்வேன் இந்நூலினை. நன்றி ராகுல சாங்கிருத்தியாயன், சிந்திக்க தூண்டியமைக்கு. எப்படி உலகம் ஆண்கள் கைக்கு போனது, அல்லது அவர்கள் அதனை எப்படி களவாடினார்கள். எப்படிக் காலம் காலமாய் பெண்களை இருண்மையில் தள்ளினார்கள். அவ்விருண்மையின் பூட்டுகளை பூட்டி சாவிகளை பெண்களின் கையினாலேயே பாதுகாத்து வரச் செய்தார்கள் என்பதெல்லாம் ஆணினத்தின் வெற்றி வரலாறு.

சரி இதனை விட்டு விட்டு வாசிப்புக்கு வருவோம். பின் கல்லூரிக் காலத்தில் காயிதேமில்லத் கல்லூரியில் இருந்து நடந்தே கன்னிமாரா நூலகத்திற்கு செல்வேன், என் தோழிகள் ரம்யா, கலை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், வாசிப்பு பிடிக்காத அவ்விருவரும் எனக்காக நான் கன்னிமாரா செல்லும் போதெல்லாம் கூட வருவார்கள். (அவர்களை ஒரு முறை இறுக அணைத்துக் கொள்கிறேன்).

பின் தந்தையின் மரணம், திருமணம் எனத்தொடர்ந்த காலங்களில் நான் என்றுமே வாசிப்பினைக் கைவிட்டதாக நினைவில்லை. வேலைக்குச் செல்லும் வரை நூலகத்தை வாசிப்பிற்கு நம்பிய நான் (இந்த இடத்தில் சென்னை பெரியார் நகர் நூலகத்தின் நூலகர் மணி ஓர்மைக்கு வருகிறார் – நீ படிக்காதது என்று இங்க ஏதாவது புக் இருக்கா என்ன? என்பார் சிரித்துக் கொண்டே)

பின் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கத் துவங்கினேன். எந்த புத்தகத் திருவிழாவையும் விட மாட்டேன். எந்த ஊருக்கு போனாலும் பஸ் ஸ்டாண்ட சுத்தி டாஸ்மாக் கடை இருக்கு, புத்தகக்கடை இருக்கா பாருங்க என்று கணவரிடம் அலுத்துக் கொள்வேன். அதற்கு புத்தகக்கடை இருந்தா டாஸ்மாக் கடை சீந்தப்படாமல் போய் இருக்கக்கூடும் பாப்பா என்பார் (அப்பாவி மனுசன்)

குடும்ப வாழ்வில், எவ்வித உறவுச் சிக்கல்களோ, அலுவலக நிர்வாகத்தில், பெரிய பிரச்சனைகளோ பெரும்பாலும் வராமல் காத்து விடுவேன். அப்படியும் மீறி வந்து விட்டால் என் பார்வை என்ன என்பதை மட்டும் பாராமல், எதிரில் இருப்பவரின் கோணம் என்ன, அவர் இப்பிரச்சனையினை உண்டாக்க காரணம் என்ன, அவர்கள் இவ்வாறு செயல்பட என்ன காரணம் என்பதைத் தெளிவாக, மனமுதிர்ச்சியுடன் யோசிக்க எனக்கு வாசிப்பே கற்றுத்தந்தது. எதிலிருந்தும் மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையினை அளித்து தொடர்ந்து இந்த வாழ்வினை நான் எதிர்கொள்ளக் காரணம் என் தொடர் வாசிப்பே.

பேசுவதில் விருப்பமற்ற நான் வாசகசாலை நிகழ்வுகளில் பேசத்துவங்கியது ஒரு விபத்தினைப் போலத்தான். முதலில் ஒரு கவிதைத் தொகுப்பு குறித்து பேசினேன், தொடங்கிய ஓட்டம் சீராகத் தொடர்கிறது. பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறேன். (கரும்பு தின்னக் கூலி).

சரி இவ்வளவு எழுதி இருக்கிறார்களே, படிக்கவே நேரம் போதாத நிலையில், நாம் வேறு எழுத வேண்டுமா என்ன? என்ற கேள்விக்கு பின்னால் ஒளிந்து கொண்ட என் சோம்பல் நண்பர்களால் அடி வெளுக்கப்பட்டு கொஞ்சம் தேட சிரமமான இடத்தில் ஒளிந்து கொண்டது. மூச்சு விடுதல் போன்ற இயல்பான என் வாசிப்பும், மனிதர்களையும், அவர் தம் பேராசைகளையும், பெருங்காமத்தையும், ஓயா சூழ்ச்சிகளையும் இன்னபிற கல்யாண குணங்களையும் உற்று நோக்கும் என் மனதும் எழுத என்னை தொடர்ச்சியாக ஊக்குவிக்கத் தொடங்கியதில் கவிதைகள் எழுதத் துவங்கினேன். இதோ ஒரு தொகுப்பினை உங்கள் முன் நிறுத்தி இருக்கிறேன், பெரிய சாலகங்கள் ஏதுமற்று. வாசித்து முடித்து விமர்சியுங்கள். கைகோர்த்து வரவிருக்கும் அடுத்த பிரதியினை சீர் செய்வோம், தொடர்ந்து வாசிப்போம், சக மனிதனை நேசித்துக் கொண்டாடுவோம்.

நன்றி

என்றென்றும் அன்புடன்

தேவசீமா


 

நூல் தகவல்:
நூல் : வைன் என்பது குறியீடல்ல
பிரிவு : கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: தேவசீமா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
வெளியான ஆண்டு : ஜனவரி 2020
பக்கங்கள் : 87
விலை : ₹ 100
தொடர்புக்கு: +91 9080909600

நூலாசிரியர் குறித்து:

தேவசீமா

குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *