தனித்த உயிரியாய் ஏதோவொன்றினைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் கவிமனம். அன்றாடம் நிகழ்ந்து கொண்டு இருப்பனவற்றில் எங்கேனும் தன் வாதைகளை, அபத்தங்களை வெளிக்காட்டிக்கொள்ள படும் கவித்துவப் பிரயத்தனங்களாகவே விஜய் மகேந்திரனின் கவிதைகள் புலப்படுகின்றன “நீண்ட நாட்களுக்கு முன்பே மறத்துப்போன யுவதியின் கையைப்போல”.
கதைகள் எனும் பெரும்பரப்பிலிருந்து கவிதை எனும் கச்சித வடிவத்திற்குள் தன்னைப் புகுத்திக்கொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. விஜய் மகேந்திரனோ தான் அதுவரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த வடிவத்தின் சாயலைத் தன் பரீட்சார்த்த முன்னெடுப்புகளால் புறமொதுக்கிவிட்டு தண்ணீரைப்போல தன்னை மற்றோர் வடிவத்திற்குள் பொருத்திக்கொள்கிறார். வடிவம் எதுவாயினும் நீர் நீராகத்தான் இருக்குமென்பதைப் போல. கதையோ, கவிதையோ அகத்தின் பாடுகளை, லேசாய் புன்முறுவல் பூக்கச் செய்யும் ஞாபகங்களை தான் தேர்ந்துகொண்ட மொழியில் கச்சிதமாகப் பொருத்தி கதையாளன் வேறு, கவிஞன் வேறு என்று தனித்தனியே தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் மாயவித்தை இவருக்குக் கைவந்துள்ளது .
ஒரு கதாசிரியனாக அடுக்கக வளாகத்திற்குள் தன் மனைவியோடு மகிழ்வாக இருப்பதை விடுத்து. வாசலில் பதினோரு மாதங்களுக்கு முந்தைய பால்பாக்கெட்டை வைத்துக்கொண்டு வாயிற்காப்போனுடன் கதையாடும் பைத்தியக்காரக் கடவுளைப்போல கவிதை எழுத வந்திருப்பது அவரது கவிதைகளைப் போலவே பெரும் வியப்பைத் தருகிறது.
– அதீதன்
நூல்: | இரவுக்காக காத்திருப்பவன் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | விஜய் மகேந்திரன் |
வெளியீடு: | கடல் பதிப்பகம் |
வெளியான ஆண்டு | 2021 |
பக்கங்கள் : | 64 |
விலை : | ₹ 80 |
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்''ஆகியனவும் வெளிவந்துள்ளது
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.