பெறுமதியற்று தரையில் சிதறி வீழ்ந்து கிடந்த மஞ்சாடிகளை, பவுணை எடைபார்ப்பதற்காகப் பத்திரப்படுத்தி வைக்கிறோம். அவ்வாறே பெண்களின் பதின்ம வயதில் ஏற்படும் உணர்வுகளை பல இடங்களில் ஒன்றாக இணைக்கும்  அபூர்வமான அனுபவங்களைச் சேர்த்தே இதில் வரும் கதைகளை 5 சிங்கள பெண் எழுத்தாளர்கள் புனைந்திருப்பதாக மொழிபெயர்ப்பாளர் எம். ரிஷான் ஷெரீப்  வாசிப்பாளர் முன் கொண்டுவருகிறார்.

இங்கே ஒவ்வெரு பெண்களின் உள்புறத் தோற்றத்தினையும், அதனால் ஏற்படும் மனக் குமுறல்களையும், அவர்களது பாலிய மற்றும் வறுமை காரணமாக எதிர்கொள்ளும் சிரமங்களையும் நிறையவே பார்க்கலாம்.

பலதரப்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ள எம். ரிஷான் ஷெரீப்  அவர்கள், அயல் பெண்களின் கதைகள்  என்ற இந் நூலில் கூட தனது ஆற்றலைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு எனது நல் வாழ்த்துக்கள்..

இங்கே ஒன்பது சிறுகதைகளை மிகவும் அற்புதமான முறையில் பதிப்பித்துள்ள வம்சி புக்ஸ்க்கும் எனது வாழ்த்துக்கள்.

 

  1.  நிழல் பெண்கள்
  2.  நட்சத்திரப் போராளி
  3.  பின் தொடர்தல்
  4.  பொட்டு
  5.  அந்திம காலத்தின் இறுதி நேசம்
  6.  மரணம்
  7. அரசியலைப் பதக்கம்
  8. எழுதல்
  9. குறுந்தகவல்

இன்றைய யதார்த்த உலகில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளையே இந்த ஆசிரியர்கள் கதைகளாக நகர்த்துகிறார்கள். உண்மையில் பல நூறு மைல்களுக்கப்பால் இருக்கும் பிற தேசத்து எழுத்துக்களையும், எழுத்தாளனையும் நேசித்தும், பாராட்டியும் கொண்டாடும் நாங்கள், ஏன்? பக்கத்திலேயே இவ்வளவு நேர்த்தியாகவும் அதிகம் அலட்டிக் கொள்ளாத, வரிகளை நாம் வாசிக்க மறந்து விடுகின்றோம். என எண்ணத் தோன்றும் விதத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் அதே குப்பைகள்தான் மக்கள் மனதில் மீ்ண்டும் மீண்டும் புரண்டோடுகின்றன, என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகவே இக் கதைகள் அமைந்துள்ளமை, ஒரு குளத்தில் பல்லாயிரம் தாமரைச் செடிகள் இருந்தும் அதில் ஒரே ஒரு தாமரைமட்டுமே தண்ணீருக்குவெளியே தனது தலையைக் காட்டுவதுபோல் இடம்பெறுவது மிகவும் பாராட்டத்தக்கது.

சிங்கள எழுத்தாளர்கள் எழுதியதால், நிட்சயமாக இலங்கைத் தமிழ் மக்களைத் தாக்கியே எழுதப்பட்டிருக்கும் என்ற உணர்வை உடைத்தெறிந்துள்ளமை இங்கே வாசிக்கக் கூடியதாக உள்ளது. இனம் தான் மொழியால் வேறுபடலாம் ஆனால் மக்களின் உணர்வுகள், அன்றாடப் பிரச்சனைகள், எண்ணங்கள், அதன் தாக்கங்கள், குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், சாதி, சமய முரண்பாடுகள் அனைத்துமே (பெரும்பாலும்) ஒரே நெடுஞ்சாலையில் பிரயாணம் செல்வது போலத்தான் இங்கேயும் காணப்படுவது உண்மையின் வெளிச்சமாக இருக்கின்றன.

எல்லா கதைகளுமே மிக சிறப்பாக, வாசித்த பின்பும் அப்படியே மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே. அதில் என்னைக் கவர்ந்த 2 கதைகளும் சிந்திக்க வைத்தன.

எழுதல்

அமெரிக்காவில் படித்த தனது பாலிய நண்பனின் மகனைத் திருமணம் செய்துவைக்க தனது பொற்றோர்கள் தீர்மானித்தபோது, சிறுவயதிலேயே அவரை நன்றாகத் தெரியும், நல்ல பழக்க வழக்கங்கள் உடைய ப்ரியான் என்றுமே தனது எண்ணங்களில் அடிக்கடி வருவார். தனது வருங்கால வாழ்க்கை என்னும் மனக்கோட்டையில் சிறகடித்துப்பறந்த நினைவுகள் இறுதில் எப்படி மாறுகின்றது, அதுமட்டுமல்ல மைக்குப்பி தனது இறுதி முடிவை வலு யதார்த்தமாக, மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டது, இன்றைய காலகட்டத்தில் பழிக்குப்பழி என்ற தலைமுறையை மாற்றி அமைத்து எடுத்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.

அடுத்த குறுந்தகவல்  நேரடியான ஒரு போர்க்கால அனுபவத்தையே இங்கு கதை  யாகத் தந்துள்ளார் ஆசிரியர். பாவப்பட்ட மக்களுகாக மனம் இரங்கும் ஆத்மாக்கள் ஒவ்வெரு காலகட்டத்திலும் யாரோ ஒருவரால் பார்க்கப்பட்டு அதனை மறு உள்ளங்களில் ஏற்றுவதற்கு, அந்தக் கண்களினூடாக தனது செய்திகளை அனுப்பும் ஒரு உன்னதமான படைப்பு. புஷ்பத்தின் சப்பாத்துக்களை அனுப்பிவிட்டீர்களாஎன்ற இறுதி வரிகள் என் கண்களைக் கலங்க வைத்துவிட்டன நண்பர்களே. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். 

பின் தொடர்தல் என்ற கதை, ஒரு வயதுக்கு வந்த இளம் பெண்ணின் இதயத் தவிப்பைப் படம் பிடித்துக் காட்டுகிறது என்றே சொல்லலாம். இங்கே முழுக்க முழுக்க ரயில்பிரயாணத்தின் போது அவள் தான் நினைத்ததுபோல், தன்னை அவன் தொட்டுக் கதைக்க மாட்டானா என அவளது மன ஏக்கத்தை சித்தரிக்கும் படைப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சில ஆண்களுக்கும் பெண்ணுகளுக்கும் இயல்பாக ஏற்படக்கூடிய மனத் தவிப்பைப் பயணத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

பொட்டு என்ற தலைப்பில் வரும் சிறு கதைக்கு இறுதிப் பார்வைஎன ஆசிரியர் வைத்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. அவ்வளவு அருமையான கதை. இலங்கை அரசு தமிழ் மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கிய போதும் ஒரு சில சிங்கள மக்கள் தமிழ்ப் போராளிகளுக்கு உதவினார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டான சம்பவம்.

அந்திமக் காலத்தின் இறுதி நேசம்  வயது முதிர்ந்த ஒரு பேராசிரியருக்கும், ஒரு இளம் பெண்ணுக்குமான அன்பு கலந்த நிகழ்ச்சியே. என்னோடு யாராவது அன்பாகக் கதைக்க மாட்டார்களா? எனக்கு மன ஆறுதல் தர எதாவது ஒரு அன்பு உள்ளம் கிடைக்காதா?  என ஏக்கத்துடன் இருக்கும் சந்திரன் கருனாரத்தினம் இன்னுமொரு தடவை அந்த முதியவரைப் பார்க்கத் துடிக்கும் இளம் பெண், இருவருக்கும் இடையிலான உறவை வைத்து எழுதப்பட்ட அற்புதமான படைப்பு.

மரணம்

தான் செய்யாத குற்றத்திற்காக, மற்றவர்கள் தன்னைத் தீர விசாரிக்காமல், குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டபோது, இதற்கு ஒரே வழி தற்கொலைதான் என முடிவெடுத்த ஒரு பாடசாலை மாணவியைப் பற்றிய சம்பவத்தையே ஆசிரியர் தத்துரூபவமாக வாசிப்பாளர்கள் முன் வைக்கிறார்.

அரசியலைப் பதக்கம்

27 வயது நிரம்பிய ஒரு இளம் ஆண்மகனுக்கு, மூளை வளர்ச்சி வெறும் ஐந்தே வயதுடைய உணர்வுகள் தான் உண்டு. இதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவம்  தான் இந்தச்சிறு படைப்பு. வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள், கஷ்டங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. எந்த ஒரு காலகட்டத்திலும் அவன் தன்னை அதிலிருந்து விடுவிக்கவே முயற்சிக்கிறான். ஆனால் அவை மீண்டும் மீண்டும் அவனையே சுற்றுகிறது. அவன் இறக்கும் போது கூட அதனை மற்றவர்களிடம் விட்டுச் செல்கிறான் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இன்றைய யதார்த்த உலகில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளையே மையமாக வைத்து படைக்கப்பட்ட மிக அருமையான இந்த அயல் பெண்களின் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.


பொன் விஜி

– சுவிஸ்

நூல் தகவல்:
நூல்: அயல் பெண்களின் கதைகள்
பிரிவு : சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்:  தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு: வம்சி புக்ஸ்
வெளியான ஆண்டு  2020
பக்கங்கள்: ₹ 160
 விலை : 176
நூலைப் பெற :  +91 9445870995