Let's Chat

ஓரியானா ஃபேலஸியின் “ பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம்” – ஒரு பார்வை


 

” பொல்லாதது உன்

பூமி தான் போராட்டம் தான்

வாழ்வடி… கொல்லாமலே

கொல்வாரடி குற்றங்கள்

சொல்வாரடி…

வராத துன்பம்

வாழ்விலே வந்தாலும்

நேரில் மோது.. பெறாத

வெற்றி இல்லையே

என்றே நீ வேதம் ஓது..

ஊமைக்கும் நாக்குகள்

வேண்டுமடி… உரிமைக்கு

போரிட தேவையடி…

தொடாமலே சுடும்

கனல் நீயே”..

கல்கி திரைப்படத்தில் இந்தப் பாடலை கேட்டிருப்போம். தனக்கு குழந்தை பிறக்கவே பிறக்காது அப்படின்னு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு பெண் பிறவாத தன்னுடைய குழந்தைக்காக எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலாக இது இருக்கும்.

அதுபோல தன்னோட வயிற்றில கருவாய் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு தாய் தன்னுடைய எண்ணங்களை , அனுபவங்களை கடிதமா சொல்லக்கூடிய ஒரு நூல்தான் பிறவாத ஒரு குழந்தைக்கு ஒரு கடிதம். இந்த நூலை எழுதியவங்க ஓரியானா பேலசி . இத்தாலிய பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இந்த நூல் முதல்ல இத்தாலி மொழியில் எழுதப்பட்டு பின்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 4 மில்லியனுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட சிறப்புக்குரிய ஒரு நூல். முஜிபுர் ரஹ்மான் பூட்டோ தலாய்லாமா யாசர் அராபத் இன்னும் பல நாட்டு தலைவர்களுடன் அவர் எடுத்த நேர்காணல்கள் அக்காலகட்டத்தில் ரொம்ப பரபரப்புடன் பேசப்பட்டதாம். இந்த நூலை தமிழில் திலகவதி ஐபிஎஸ் அவர்கள் மிகச்சிறப்பான எழுத்து நடையில் நமக்கு மொழியாக்கம் செய்து தந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே இணை சேர்ந்து வாழ்தல் அப்படிங்கறது மேற்கத்திய கலாச்சாரத்தில், மரபுகளை எதிர்க்கக்கூடிய முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு ஒரு பெண் அசந்தர்ப்பவசமாக கர்ப்பமாகிறாள். காரணமான காதலன் அவளை கண்டுகொள்ளாமல் , கவனித்துக் கொள்ளாமல் கண்காணாத இடத்திற்கு சென்று மறைகிறான். மேலும் தொலைபேசியில் அழைத்து அந்த கருவை கலைத்து விடுமாறு ஆலோசனை சொல்கிறான்.

அவை வேலை பார்க்கும் அலுவலகத்தின் முதலாளியும் இந்த நிலைமையில் அந்த கரு தேவையற்றது எனவும் அதை கலைக்கவும், அதற்கு தேவையான உதவியை செய்வதாகவும் சொல்கிறார். ” ஏதுமறியாத கருவை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்? ஒரு தாயாக இருக்கிறது என்கிறது ஒரு வியாபாரம் இல்லை அது கடமை கூட இல்லை .அது பல உரிமைகளில ஒன்னு. ‘ என்று சொல்லி தனது வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கு தத்துவங்களும், அந்தக் கரு எதிர்கொள்ள இருக்கும் எதிர்கால வாழ்வைப் பற்றியும் சொல்லியபடி அந்த கருவை சுமக்க ஆயத்தம் ஆகிறாள்.

தன் எண்ணங்களை எல்லாம் ஒரு கடிதம் போலவே சொல்லிக் கொண்டு வருகிறாள். இந்த உலகம் எவ்வளவு மோசமானது என்றும் பெண்ணாகப் பிறந்தால் உலகை எவ்விதமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஆணாகப் பிறந்தால் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கூறி பெற்றுக் கொள்வதற்கு முன்பே கருவில் அதை வளர்க்க ஆரம்பிக்கிறாள்.

இந்த உலகம் என்பது ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது . இங்கு கடவுளும் கூட ஆண்தான். இந்த உலகில் முதலில் படைக்கப்பட்ட உயிரும் ஆண்தான் என்றும், அவன் முதுகெலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் பெண். பெண் என்பவள் அவனுடைய இன்பத்திற்காகவும், தொல்லை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவள் என்ற சித்தாந்தம் தான் காலம் காலமாக இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் கரடுமுரடான கற்களாலும் ஆனது.. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறாள். வெறும் பயமுறுத்த செய்யாமல் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக உலகை எதிர்கொள்ள வேண்டும் என்று தன் கருவில் இருந்த குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தைரியமும் ஊட்டுகிறாள்.

ஒரு வேளை ஆண் குழந்தையாக இருந்தால், இதயத்திற்கும் மூளைக்கும் பாலியல் வேறுபாடு கிடையாது. இதயமும் மூளையும் கொண்ட ஒரு மனிதனாக நீ இருக்க வேண்டும். பெண் என்பதால் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிற ஒருவனாக நீ நிச்சயம் இருக்கக் கூடாது. அதாவது நீ உருவாக காரணமாக இருந்தவனை போல நீ இருக்கக் கூடாது என்று தொடர்ந்து அந்த குழந்தையிடம் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.

அந்தக் குழந்தை கருவாகி உயிராகி வளர்ந்து குழந்தையாக மாறுகிறதா? என்பதுதான் இந்த நூலின் இறுதிக்கட்டம். கடைசி பக்கங்களில் தாய்க்கும் அந்த குழந்தைக்குமான உரையாடல்கள் தான் இந்த நூலின் இதயம் என்று சொல்லலாம். ஒரு பெண் தன்னுடைய ஆழ் மனதிலே தோன்றும் வலி, புலம்பல் வேதனை, இது அத்தனையும் தாண்டி வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தான் எப்படியும் எந்த விலை கொடுத்தாவது என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்வேன் என்று வைராக்கியமாய் தன் கருவுடன் நடத்தும் உரையாடல்கள் தான் இந்த நூல். கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல்.


– பூங்கொடி 

 

நூல் தகவல்:
நூல்: பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம்
பிரிவு : கட்டுரை/ கடிதம் – மொழிபெயர்ப்பு
இத்தாலிய மூலம் : Lettera a un bambino mai nato
ஆசிரியர்: ஓரியானா ஃபேலஸி | Oriana Fallaci
தமிழில்: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
வெளியான ஆண்டு  2010
பக்கங்கள்: 144
விலை: ₹ 90

 

close
www.vimarsanam.in
பதிவுகள் குறித்து அறிய

We don’t spam! Read our privacy policy for more info.

Share >

Leave a Reply

Your email address will not be published.

மேலே செல்ல
%d bloggers like this: