விமர்சனம் - விமர்சகர்கள்

ஞானக்கூத்தன்: ஆரியக்கூத்தும், ஆசனவாய்ப் பேச்சும்! – பாகம் : 2

2. எதிர்வினைகளும் அதிரடிக்கவிதைகளும்

தலித் கவிதைமொழி:

“தலித் இலக்கியம் வெற்றி அடையாமற் போனதுக்கு அவர்கள் மொழியே காரணம். வழக்குமொழியில் இருந்து மொழியைச் செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லது”- ஞானக்கூத்தன்

முதல்வரியிலேயே தீர்ப்புரைத்தே தீர்த்துக்கட்டிவிட்டே (தலித் இலக்கியம் வெற்றி அடையாமலா போயிற்று?) அப்புறம் அது கடைத்தேற வழிமுறை குறித்து அருள்வாக்களிக்கிறார். செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லதென. இதன் பொருள்தான் என்ன? எனிலது தலித்மக்கள் வழக்கை மட்டுமல்லாமல் அனைத்து வட்டார இனவரைவியலையுமே கேள்விக்குள்ளாக்காதா? செந்தரப்படுத்தல் என்பதே பண்டித ஆதிக்க மனோபாவ வெளிப்பாடு தானே? அல்லாமலும் அவர்கள் மொழியைத் தீர்மானிக்க இவருக்கேது அருகதை? மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

“தலித்தியக்கவிதை, அடித்தளமக்களின் பிரச்சினைகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உணர்வுகளையும், பழகுமொழியையும் மிகச் சாதுர்யமாகக் கலைவயப்படுத்த வேண்டும்”-மாற்றாக “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே’ என்று தொல்காப்பியரின் காலத்திலிருது வந்த உயர்மேட்டிமைத்தனம் மற்றும், மவுனம், மவுடீகம், சுத்தம், புனிதம்
எனும் கருத்தாடல்களை உடைத்துக் மறைமுகமாகப் பாய்ந்து வருவது கவிதைமொழி”.

“தலித் உணர்வுடையை கவிதைகள். அடையாளங்கள் குத்தலும், இடித்துரைத்தலும் வலுவும் ஒளிவுமறைவற்ற பழகுதமிழும், உயர்ந்தோர் மொழிக்கு அதிர்ச்சி தரலாம், ஆனால் இது தமிழுக்கு வலு சேர்க்கிறது. கவிதைமொழியின் புதிய பரிமாணம் இது:

“ஆத்தாவோட/ கருப்பையிலே தானே நாம இருந்தோம்/ இந்த அரசியல் நாய்ங்க/ பீக்கொடல்ல இருந்து பொறந்துட்டானுங்க போல/ ஒரே கப்புடா சாமீ. வயித்துக்கு/ இன்னா துன்றானுங்க அவனுக்குத்தான் புத்தி இல்ல நாக்கு விபசாரம் பண்ற நாயங் கெட்ட மயிர்ங்க.”- பறைஞன் தி.சு.நடராசன் (‘கவிதையெனும் மொழி’)

வழக்குமொழியிலிருந்து செந்தரப்படுத்தலே மொழிக்கு நல்லதெனுங் கூத்தனார் தரப்புக்கு மாற்றுத்தரப்பாக உயர் மேட்டிமைத்தனக் கருத்தாடல்களை உடைத்தே படைக்கும் தலித் கவிதைமொழியின் ஒளிவுமறைவற்ற பழகுதமிழ் உயர்ந்தோர் மொழிக்கு அதிர்ச்சி ஊட்டுவதால் அது தமிழுக்கு வலுச்சேர்க்கிறதென திசுந தரப்பு தெள்ளத்தெளிவாக்குகின்றது.

இத்துடன் ம.மதிவண்ணன் கவிதைகளை குறித்த திசுந மதிப்பீடு இத்தொடர்பில் மேலுங் கவனிக்கத் தக்கதே. தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின் வேர்களைச் சினத்தோடு அசைத்துப் பார்ப்பவை,வரலாற்றுப் பின்புலத்திலிருந்து வருவன என விதந்தோதி முன்னிறுத்துவார்.:

” ஆக்கினைக்குரிய வினையாய் அவசர அவசரமாய்/ உன் ஸ்மிருதிகளும் சட்டங்களும்/ அதை வெளியிடுவதை வரையறுக்கும் இவ்வளவு கலவரத்தையும் ஒரு நொடியில் சாதிக்க வல்லதாயிருந்த/ உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன் விட்ட குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிக்கின்றேன்./ என் அசலான கவிதைக்கான / கச்சாப் பொருட்களை”- .மதிவண்ணன்

இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள் பாலித்தல், உபதேசம், அபயம், ஆக்கினை, ஸ்மிருதி முதலிய பிராமணத்துவச் சொற்கள் ஒரு பக்கம்; இதற்கு முரணாக வெளிப்படுகிற சொற்கள் எவை? குணமும், மணமும் என்ற வழமையான தொடரோடு ‘குசு’ என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்”- தி.சு.நடராசன்

தலித் கவிதைகள் பற்றிய ஆரியக்கூத்தன் காரியக்கூத்தான பர்ப்பனக்குசும்பே இது. இதைப்போல விக்ரமாதித்திய நம்பியும் தமக்கே உரித்தான வெள்ளாளக்குசும்புடன் தலித் கவிதைகளை ‘சந்தை இரைச்சல்’ எனப் பேசிநிற்பார்.

ஞானக்கூத்தன் தேவையில்லாமல் ஒரு சொல்லைக்கூடத் தம் கவிதையில் பயன்படுத்தமாட்டார் எனும் பெருந்தேவி கூற்று அவரது கவிதைக்கூற்று முன்மொழிபு அத்தனைக்குமான பெருந்தேவியார் வழிமொழிதல் என்பதாகத்தானே ஆதல் கூடுமே அல்லாமல் வேறென்னவாம்?


இரண்டு எதிர்வினை அதிரடிக்கவிதைகள்:

“எனக்கும் தமிழ்தான் மூச்சு/
பிறர்மேல் அதை விடாமலிருக்கச்/
சாத்தியமில்லை எனக்கு/
விரும்புவதுல்லை நான்.
நாற்றமெடுக்கும் குசுவைப்/
பிறர்மேல் தாராளமாய் விடும்நீ/
மூச்சை மட்டும் விடாமலிருப்பதில்
ஒளிந்துள்ள/
அக்ரஹார ஆச்சாரம்/
விளங்காததாலும்”

என ஞானகூத்த ஊமைக்குசும்பின் உள்ளார்ந்த மௌனங்களை உடைத்தெரியும் மதிவண்ணன்,

“திண்ணியத்தில் மட்டுமல்ல/
தினந்தோறும்
தின்று கொண்டிருக்கிறது/
பீயை என் ஜனம்/
தெரிந்து பாதி/ தெரியாமல் பாதி”

– எனும் போதது சொல்லாமல் சொல்லியே சொல்லிச் செல்வது எத்தனையோ? ‘நமக்கிடையிலான தொலைவு’)”

ஞானக்கூத்தனின் ‘மநுவின் கப்பல்’ கவிதையும் அதற்கான என்னுடைய எதிர்வினை அதிரடிக் கவிதையையும் ஒருசேர இங்கே பகிர்கின்றேன்.

“நாள் வாரம் திங்கள் ஆண்டென
நெடுங்காலம் தண்ணீரில்
கிடந்தாலும் ஒரு சிறிதும்
சிதைவடையாத மரங்கள் கங்கையின்
முகத்துவாரக் காடுகளில் மட்டுமே
வளர்கிறதாமே. அந்த
மரங்களைக் கொண்டுதான்
நூறு துடுப்புகளால் கடக்கப்படும்
உமது கப்பல், மநுவே, செய்யப்பட்டதா?
உமது கப்பலைக் கடலில்
செலுத்துவது யார்?/
உமது கப்பலைச் செய்த
ரிபுக்களும், தவஸ்தர்களும்
ஆள் அமர்த்திக் கொடுத்தார்களா?

தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம்
பவளம் முத்து எனப்படும் செல்வங்களைக்/
கொள்ளாமல் மநுவே நீர் ஏன்
உமது தோள்களில்
மா, பலா, தென்னை, தாழம்,
உதும்பரா, கதீரா/
ஆல், வேம்பு, நாவல், பிரண்டை,
பூசணி, கொய்யா, புடலை,
வழுதுணை, வெண்டை
மற்றும் புஷ்பிக்கும்/
தாவரங்களின் விதைகளை
எடுத்துக் கொண்டீர்?/
விதைகளின் வடிவில் ஒரு தேசத்தைக்
கப்பலில் எடுத்துச் சென்றீரா?

மநுவே உமது கப்பலின்
செலவு இனிதாகுக./
எம்மிடம் உமக்குக் கோபம் இல்லையே?
மழைகளே,புயல்க
இடிகளே, மின்னல்களே/
மநுவின் கப்பலைத் தாக்காதீர்கள்.
சிறிய தோணிகளைப்
பற்றிக் கொள்ளுங்கள்/
அவற்றைக் கடலின்
உப்புநீரால் நிரப்புங்கள்.

கடலே! க!டலின் அலைகளே!
மநுவின் கப்பலைப் போகவிடுங்கள்.
மநுவின் கப்பல் ஒரு பூமியைத்தேடி
நெடிய பயணமாய்ப் போகிறது.

இந்திரா! வருணா! மித்ரா! அரியமான்
மநுவின் கப்பலை வாழ்த்தி
வாழ்த்தி அனுப்புங்கள்/
மநுவின் கோணிகள்
பத்திரமாய்ப் போகட்டும்./
காற்றே கடலில் இவற்றைத்
தூற்றி விடாதே/
ஞாயிறே அவற்றை வறுத்து விடாதே.
கடலில் மநுவின் கப்பல்
கூப்பிய கைபோல/
மெல்லப் போகிறது பாருங்கள்;
மநுவின் கப்பலில் ஏறிய காக்கையே!
மறுகரையில்,
புரளும் உனது கண்களால்
பூமி தெரிகிறதா பார்.”

– ஞானக்கூத்தன் (‘தளம்’, ஜன- மார்ச் 2014)

 

தொழுத கையுள்ளும்..

“எல்லா மொழிகளும் நன்று
அதில் தமிழும் ஒன்று”
எனில் ஞானக்கூத்த!
எல்லாக் கவிதையும் நன்று
அதில் உமதும் ஒன்று.

“எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனாலதைப் பிறர்மேல் விடமாட்டேன்”
எனில் ஆரியக்கூத்த!
எமக்கது உயிர்மூச்சு
உமக்கது பெருமூச்சு!

கையாள மாட்டா
கையாலாகா நபுஞ்சகத்தால்
எம்தமிழ் மௌனிக்கு
‘விருத்தி அடையா மொழி’யெனில்
உமக்கோ ‘முதிரா மொழி’!

உம்மிருவோர்க்கும்
உயிர்நிலையே பூணூல்!
சாதியினும் மேலாய்
பிராமண ‘மதம்பிடித்த’ பீடித்த
உன்மத்தப் பித்தமே உமக்கெலாம்!

எனினும் கூத்த எம்மிடையே
உம் அபானவாயுவின்
அற்புத சுகந்த பரிமளம்
பாரித்துரைக்கவும்
சற்சூத்திரத் ‘தமிழவன்மார்’ தாமும்
இங்குண்டே!

“தமிழை எங்கே நிறுத்தலாம்”
எனில் ஆகாதே கூத்த உம்மால்
வெட்டவெளி வியாபகமே அது!

‘மனுக்கால வெள்ளம்
போச்’சென்றார் ‘பிச்சு’
‘மகாபாரத ஊழிவெள்ள மனுக்கப்பலை’ மீட்டெடுக்கும்
உம் ‘ஆரியக்கூத்து’!

‘மகா பத்திரமாகவே போய்ச்சேரட்டும்
மனுவின் கோணிகள். காற்றே
அவற்றைத் தூற்றித் தொலைக்காதே’
கடலன்னை மடியும் பதைபதைத்தது.
கூப்பிய கைகளாய்ப் போகும்
கப்பலின் காக்கையும் கரைந்ததது:
“கருப்புக்கொடிகளே
கண்ணுக்கு எட்டுந் தூரம்வரை’ என

ஏற்ற பாலைவனம் எது சொல்?,
அல்லால்
திரிசங்காய் நிறுத்திடத்
திராணியேனும் உண்டா?
எங்கே நிறுத்த மனுவின் கப்பலை?

பொதிகைச்சித்தர் (‘தளம்’)

 


“திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தில் ஊடுருவிவிட்டனர்’- இது ஞானக்கூத்தன்

புதுக்கவிதையைத் துலுக்கன்கள் கைப்பற்றி விட்டான்கள்’ – இது சுஜாதா.

‘காலவழுவமைதியை ஓர் அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக்குரலில் படிக்க வேண்டும்”- இதுவும் சுஜாதா

‘வரிசையில் இருங்கள் வரிசையில்
இருங்கள் / வரிசை என்பது முக்கியம்’
என்னும் கவிதை வரிசையைக் காப்பாற்றுதலென வர்ணதர்மத்தையே காப்பாற்ற
முயல்கின்றதென்னும் பாலா கருப்பசாமி ஞானக்கூத்தன் பிராமணராகத்தான் தம் கவிதைகளை எழுதுகின்றார் என்பார். [(‘நடுச்சாலைப் புதர்கள்’ – ‘,அகழி’ இணையம் (akazhionline)]

ஆம் இவர்கள் இப்படித்தான் இலக்கியம்ன்னா ஏகபோகமா ஆபுத்திரன்களுக்குன்னே
சற்சூத்திர வேந்தன்களால் பட்டா போட்டு விடப்பட்ட. சர்வமானிய ‘ அகரமானிய ஏரியா’வா என்ன?

சுஜாதா ‘ ,’எங்கள மாதிரி சுவத்து மேல நின்னுக்கிட்டெ ஒன்னுக்கடிக்க முடியுமானு ‘ பெண்களப்பாத்துக் கேட்டாக்க ஞாகூ ‘பெண்ணைப் பெண்ணாகவே பார்ப்பது தவறு, பொருளாகவும் பார்க்கலாம்’ங்காரு! தலித்மக்களையும் பெண்களையும் சக உயிரிகளாகக்ககூட உணரொணா இவர்களையுங் கூட இலக்கியத்தின் பிதாமகன்களென இன்னோரன்னர் குசுக்களின் பரிமள சுகந்தம் பாரித்துரைக்கவும் இங்கே சற்சூத்திர சிகாமணிகள்?

இடிமின்னல் புயல் ஏதும் தாக்காமல் மநுவின் கப்பலை வாழ்த்தி வழியனுப்பி வைக்கணுமாம். சிறியதோணிகளைப் பற்றி அவற்றைக் கடலுப்பு நீரால் நிரப்பிட வேண்டுமாம்.விதைகளின் வடிவத்தில் மநுவின் கப்பல் தேசத்தைக் கடத்துமாம்! இக்கவிதையின் உபமொழியான மௌனங்களை உங்கள் வாசிப்பிற்குச் சுட்டிக்காட்டி விட்டுவைக்கின்றேன்.

“ஞானக்கூத்தனிடமோ மனிதாயமும் இல்லை. இலக்கியமுங் கிடையாது.” “ஞானக்கூத்தனிடம் ஜீவன் இல்லை. ‘பிராமணன் தின்றெரிந்த எச்சல் இலைக்காக நாய்கள் கடிபடுகின்றன’ என்று எழுதுகிற அளவுக்கு மூர்க்கம் நிரம்பிய பிராமண வெறியும் தொழுநோயாளிகளைக் கிண்டல் பண்ணி எழுதுகிற அளவுக்கு மடமை நிரம்பிய மானுடத்துரோகமும் அவரது கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன.”- பிரமிள் (‘வெயிலும் நிழலும்:)


வே.மு.பொதியவெற்பன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *