டலிலேயே கருவாகி வளர்ந்தாலும் குழந்தை பிறக்கும் நேரத்தை எவராலும் சொல்லிவிட முடியுமா? அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து இறந்துபோகும் நேரத்தைத்தான் கணித்துவிட முடியுமா? பிரபஞ்சம் கடக்கும் விஞ்ஞானத்தால் கூட உயிர் குறித்த உன்னதத்தை விளக்க இயலாது. ஆனால் ஒரு கவிஞனின் கரங்களுக்கு எல்லாம் சாத்தியம் . அவ்வாறே , ஒரே சமயத்தில் பிறந்தும் இறந்தும் நிறையாய் வாழ்ந்தும் கொள்ளலாம் கதிர்பாரதியின் ‘உயர்திணைப் பறவை’யோடு.

இவர் தொகுத்த மெசியாவின் மூன்று மச்சங்களோடு ஏற்கனவே பரிட்சயப் பட்டிருந்தாலும் உயர்திணைப்பறவையோடு உயரப் பறக்க பிரயாசைக் கொண்டு சென்னை கண்காட்சியில் புத்தகத்தை தேடினேன். பறவை சற்று உயர்ந்து பறந்ததால் என் கரங்களில் தவழ கொஞ்சம் தாமதமானது. இருந்தும் அவருடன் பேசும் ஒரு நல்வாய்ப்பு கிட்டியது பெருமகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் புத்தகமும் நானும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்ள ஏங்கிக் கிடந்தோம். ஒருவழியாக நேற்றிறவு கடை வரிகள் வழிய கண்நிரப்பிக் கொண்டேன்.

226 பக்கங்களை கவித் தீயிட்டு நிரப்பியிருக்கிறார் பாரதி.ஆம் பாரதிதான்.முண்டாசில்லை, ஆனால் கனலுண்டு. சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்டுவதற்காய் பக்கங்கள் குறிக்கப்போய்  A4 தாள் தீர்ந்ததுதான் மிச்சம்.  விமர்சனம் படிக்கும் சாக்கில் வாசகர் உறங்கிவிடக்கூடாதெனும் நல்லெண்ணத்தில் விமர்சகர் உறையை சுருக்கிக் கொள்கிறேன்.

எண்களை தலைகீழாக வகுத்து சலிக்காமல் படிக்க வைக்கும் இவரின் கவிதைக்கான கருப்பொருட்கள் ஆட்கொள்ளாதது இவ்வுலகில் எதுவுமே இல்லை. சில கவிதைகள் பிரபஞ்சம் தாண்டி பயணப்படுகின்றன.
அநாதை மேகத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வரும் அம்மா, ஏர்வாடியில் தலைகோதும் அம்மா, ஒழுங்கையில் சுருட்டு குடிக்கும் அம்மா,பூனையை புலியாக்கும் அம்மா’ இன்னுமின்னும் இருக்கிறாள் ஏராளமான அம்மா கதிரின் சொற்களுக்குள்.

பிரம்மாண்டக் கடைகளுக்குள் புன்னகை மிளிர கொண்டையணிந்து ஒரே மாதிரி சேலையுடுத்தியப் பெண்களை நாம் பார்க்கும் கோணத்திலல்லாது ‘ அவளுக்கு அருளப்பட்ட பழைய முக்காலியோடு அவளடைந்த கணநேர நிம்மதியை’ பார்க்கிறார் இவர்.

ஒரு பறவையின் குரலை அதனிடமிருந்து தனித்துப் பிரித்து இறுதியில் ஊதாரி மைந்தனாக சித்தரிப்பதை இதுவரை நான் படித்ததில்லை. அதுபோல ஒரு சமையலறை தனியே புறப்பட்டு செல்கிறது. அது எதிர்பட்டவர்களையெல்லாம் அகோரப்பசியில் விழுங்கி தீர்த்து இறுதியில் தான் வசித்த வீட்டைக் கண்டதும் உள்ளே சென்று படுத்துக்கொள்கிறது. யார் இந்த சமையலறை என யூகிக்க தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

திலீபன், ஆனந்தன், கபிலன், செங்கதிர்செல்வன் (புனைப்பெயர்) என இவருடனும் பிள்ளைகளுடனும் ஒரு குவளை தேனீர் சுவைத்துக்கொண்டே கவிதைளில் பயணிக்கச்செய்கிறார்.

‘திலீபனின் குட்டிக் கடிகாரத்தில் சொட்டும் மணித்துளிகள் இவரின் கடிகாரத்தில் இடி மின்னலோடு மிதத்தூறலும்,
அப்பாவின் கடிகாரத்தில் அடைமழையாகவும்,
தாத்தாவின் கடிகாரம் ஈரம் வற்றி உலர்ந்து ஓய்ந்துவிட்டதாகவும்’

படித்த கணத்தில் என் மீது தூறலிட்டுக்கொண்டிருந்தது காலம்.

இக்கவிதையை அதன் நயம் குன்றாமல் வாசகருக்கு பகிர விளைகிறேன்.

‘முன்னிரவு மொட்டை மாடியில்
தனியாகப் படுத்திருந்த
மனதுக்கு துணையாக நான் படுத்திருந்தேன்.
நிலா முளைத்து ஊர்ந்து வளர்ந்து
உச்சிக்கு வந்த வேளையில்
மனதிடம் சொல்லாமல்
எழுந்து அறைக்கு வந்துவிட்டேன்.
கீழே குதித்துவிடாமல் காலை வரை
நிலவை மனம்
பிடித்துக்கொண்டிருந்தது’.

இதைவிட இயல்பாய் அழகாய் மொட்டைமாடி உறக்கத்தை கவிதையாக்குவது என்வரையில் சாத்தியமல்ல.

‘பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சிசிடிவி கேமராவையும் சுற்றி வருகிறது’

என்று சிசிடிவி சிவந்த கண்களில் அகப்படாத கவிதைகளை எழுதியிருக்கிறார்.

மரமாயிருக்கும் மரம் மரப்பொருளாகும்போது தன் சுயமிழந்து எதுவாகவோ அல்லது யாராகவோ மாறுகிறது எனப்பொருள் வரும் கவிதையில்,

‘பறவைகளை அட்டென்ஷனில் நிற்கச் சொல்லி சல்யூட்டை எதிர்பார்க்கிறது மரம்’

என்று முடியும் வார்த்தைகள் அபரிமிதமானது.

இதேபோல,

‘ஒரு மரம் ஆசைப்படுகிறது
எல்லோரோடும் பழக..
பறவையோடு அதன் அலகோடு
அது தரும் காயங்களோடு
மற்றும்
ஐம்பூதங்களோடு.
இல்லையேல்
மின்னலைத் தலையில் ஏன் தாங்கவேண்டும் பறவைக்கூடு போல.
மரம் ஒரு சுவாரஸ்யம்
அதனிடம் ஒருவன்
மனிதனாக வந்தான்
புத்தனாகச் சென்றான்’.

 போதிமரக் கிளையில் ஓரிலை இவரின் வீட்டில் விழுந்திருக்கக்கூடும்.

டைலர் ஒருவர் ஜாக்கெட் தைக்கும் லாவகத்தை அழகாக கவிதைக்குள் பிடித்து வந்து இறக்கியிருக்கிறார். அதில் ஒரு வரி இவ்வாறாக,

‘ பிரில்கள் உருவாக்கி பஃப் கைகள் தைப்பார்
பிறகு அவை
கைகள் அல்ல கை மலர்கள்’.

இனி பஃப் வைத்த ஜாக்கெட்டை பார்த்தால் ஒரு மலரை நினைத்துக்கொள்வோம்.

‘தனிமையில் சுற்றுகிற பூமிக்கு
தனியாக வந்தேன்..

என்று தொடங்கும் கவிதையில் ஒரு வரி,

‘நான் எல்லோரோடும்
தனியாக இருக்கிறேன்’ ..

எத்தனை உண்மையான சொற்கள் இவை.

ஒரே வானம்தான்.ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக்கும் வேறுவேறாக தெரிகிறது. இதை,

‘பறவையின் வானம்
பறக்கிறது.
கடலின் வானம்
மிதக்கிறது.
புல்லாங்குழலின் வானம்
இசைக்கிறது.
வானம்
எல்லோருக்கும் பொது.
அதோ
யாசகன் வானம்
அவன் கை திருவோடு’.

இறுதியாக அலர் மலர் கவிதையில்,

‘தலை உச்சியில்
நெருப்பு வைத்துக்கொண்டு
காலை
நிழலுக்குள் இளைப்பாற்றும்
மெழுகுவர்த்தி
உங்களிடம் இருக்கிறதுதானே’

என்று கேட்கிறார்.

‘படுக்கையில்
உடலைக் கிடத்தி நீவிவிடுகிறது மனம்.
‘மனம் உறங்கிவிட்டதா?’

என தலை உயர்த்திப் பார்க்கிறது உடல்’

நம் மனதை நீவிவிடும் கவிதைகளை படைத்துவிட்டு உடலை கிடத்தி ஆசுவாசமாக பெருமூச்சு விட்டெழுகிறது இவரது சொற்கள்..

இந்நூல் தனக்கான உயர்ந்த விருதாகிய வாசக அன்பைப் பிடித்திருந்தாலும் கதிரின் அளப்பரிய உழைப்பிற்கு விருந்தாக இந்நூலுக்கு சில விருதுகள் கிடைத்திருக்கின்றன. அவை,

1.எழுச்சித் தமிழர் கவிதை விருது
2.ஜி.ஆர்.தாமோதரன் அறக்கட்டளை விருது
3.கவன் கலை இலக்கிய விருது.

ஒவ்வொரு கவிதையை படிக்கும் போது வாசகரின் மனநிலையை சுவிட்ச் போல மாற்றி கொண்டேயிருக்கிறார் கதிர் பாரதி. இன்னுமின்னும் கவிதையியற்றி  மனதில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.


 – சாய்வைஷ்ணவி

நூல் தகவல்:
நூல்: உயர்திணைப் பறவை
பிரிவு : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: கதிர்பாரதி
வெளியீடு: இன்சொல் பதிப்பகம்
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்
பதிப்பு ஆண்டு: செப்டம்பர் 2020
பக்கங்கள் :  227
விலை : ₹ 260

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *