தேவதாசி மரபு: சிந்துநதி தீர தந்திர சாதகமும்; பொட்டுக்கட்டலை விபச்சாரத்துக்கு ஆன்மிக முடிசூட்டல் ஆக்கிவிட்ட கோயில் கலாச்சாரமும்

தேவதாசிமுறை என்றால் என்ன? எவ்வாறது தோற்றம் பெற்றது? எங்கெங்கு எவ்வெவ்வாறு மாற்றம் பெற்றது? இக்கேள்விக்கான விடைகளை இனிக் காண்போம்:

“தமிழ்நாட்டுக் கோவில்களில் சமீபகாலம் வரை வாழ்ந்த தேவதாசி முறையும் தாய்தெய்வ வழிபாட்டுடன் தொடர்பு உடையதென்றேகருத வேண்டும். கடந்த சில தலைமுறைகளாக இனத்துவேஷம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதும், பொய்ப்பிரச்சாரம் மூலம் நிலை நிறுத்தப்படுவதுமான ஒரு கலாச்சாரத் திரிபினால் நாமே நமது மரபிலிருந்து அன்னியமாகிவிட்டோம். மூடநம்பிக்கை என்றும் இழிந்த பண்பாடு என்றும் ஒரு(சத்தான) பகுதியை விலக்கிவிட்டோம்.  அன்னியக்கலாச்சாரம் என்ற பொய்யான முத்திரைகுத்தி இன்னொரு சாரமான பகுதியை இங்கு ஆழ வேருன்றிய ஒன்றை நிராகரித்து விட்டோம். இதன் விளைவாக சூம்பிப்போன கலாச்சாரப் பிரக்ஞையுடன், அறிவார்த்த வறட்சியுடன் காணப்படுகிறோம். இதிலிருந்து நம்மை மீட்க இக்கலைகள்  குறித்த ஆய்வுகள் உதவும். ” – வெங்கட் சாமிநாதன் (‘சொல் புதிது’)

இது குலவழமை ஆக்கப்பட்ட பொட்டுக்கட்டும் தாசிமுறையை அரசு தடையிட்ட தருணத்தில் அதை எதிர்த்து அதற்கு வக்காலத்து வாங்கிவந்த சத்தியமூர்த்தியின் குரலே அல்லாமல் வேறென்னவாம்?

“ஆதிபூர்வ நிலையில், ‘வாமசாரம்” என்ற ஆத்மிகப்பயிற்சி சம்பந்தப்பட்டிருக்கலாம் வாமசாரம் என்பது, மனத்தின் விகாரங்களை வெளிப்பட வைத்து அது வெளிப்படும் போதே அதனைத் தெய்வீகத்துக்குச சமர்ப்பிப்பதாகும்”

“இந்த ரஸவாதம்,  ஆன்மார்த்திகள் இடையே ரகசியக்கல்வி முறையாக இந்தியாவில் காலம் காலமாக நீடித்துவந்திருக்கிறது. இவ்வகையில்  இதன் ஆத்மார்த்தம் பிரிந்துபட, கோவில் சார்ந்த விஷயமாகத் தொடர்ந்த மேலாதிக்க விபச்சார முறையே தேவதாசிமுறை”.

“இந்த வடிவில், சிந்துநதிப் பள்ளத்தாக்கின் பூர்விக ஆன்மவியல் கலாச்சாரம், இதைப் பயின்றிருக்கக் கூடும். ஆனால், பிந்திய காலங்களில் தெரியவந்துள்ள கண்டகிபுராணம் முதலியவை, இந்தப் பயிற்சி சாராத பச்சை விபச்சாரத்துக்கு ஆன்மிக முடிசூட்டும் கலாச்சார  மேலாதிக்கமாகும். இப்படி மாற்றப்பட்ட நிலையில் தேவதாசி தன்னிடம் வருகிறவனை (கண்டகி கண்டதைப் போல்) இறைவனாகக் காணவேண்டும்.”  – பிரமிள் (‘எதிர்முனை:1, ஜூலை 2010)

இந்தப்புள்ளியில்தான் பிரேமானந்தா, நித்தியானந்தா, சிவசங்கர் பாபாக்கள் கோபியர் கொஞ்சும் கோகுல கிருஷ்ணாவதார லீலைகள் குருஜீக்களின் அந்தப்புரமாகின்றன.

“தமிழகத்தில் தேவதாசிமுறை, மரபின் கட்டாயமாகவும் அவ்வப்போது வறுமையின் கட்டாயமாகவும்தான் தொடர்ந்திருக்கிறது. பொட்டுக்கட்டுதல் என்ற சம்பிரதாயமேதான் தேவதாசி உருவமேயன்றி, அது ஒரு குலத்தொழில்அல்ல. ‘கடவுளுக்கு

அர்ப்பணிக்கப்பட்டவள்’ என்று விதிப்பதற்காகவே, நெற்றியில் தங்கப்பொட்டு ஒன்று கட்டப்பட்டாலும், இப்படி விதிக்கப்பட்டவளின் கடமை கோயில் சார்ந்த தர்மவான்களின் காமத்தைத் தீர்ப்பதுதான். இந்தப் பழக்கம், சிந்துநதிப் பள்ளத்தாக்கின் பூர்வ

திராவிடர்களிடமே ஆரம்பித்திருக்கலாம் ( தர்மானந்த கோஸாம்பி முதலியோரின் கருத்து). இதன் மனோவியல் தன்னிடம் வருகிறவனை இறைவனாகத் தேவதாசி காணவேண்டும் என்பதுதான்.” –

“தமிழகத்தில், கோவில் கலாச்சாரம் என்ற பெயரில், பலாத்காரமாக மூளைச்சலவை மூலம் பெண்களுக்குப் பொட்டுக்கட்டுகிற இந்தக் கேவலத்துக்கும், கலையியலுக்கும் சம்பந்தமில்லை. இருப்பதாகக்   கூறுகிறவர்களின் ஒரே நோக்கம், கலாச்சாரப்போர்வையில் விபச்சாரத்தைப் புனருத்தாரணம் செய்கிற தர்மகைங்கர்யம் ஆகத்தான் இருக்க வேண்டும். இவர்கள், பிறருக்குப் பொட்டுக்கட்டுவதை விடுத்துத் தங்களுக்குத் தாங்களே பொட்டுக்கட்டிக் கொண்டு,’கோவில் கலாச்சாரம்’ பண்ணுவதுதான் நேர்மை.

பிறருக்குப் பொட்டுக்கட்டிவிடும் முறை, ஈவெ.ரா.வின் கடுமையான இயக்கத்தின் விளைவாகவே, தமிழகத்திலிருந்து களையப்பட்டது. இது களையப்படும் வரை இசை வேளாளர்களையும் செங்குந்த முதலிகளையும் தேவதாசி குலமாகக் கண்டுவந்தது கலாச்சார மேலாதிக்கம்.”

“இவர்களுடைய குலத்தொழில், இசையும், பரதமும். இதனாலேயே இவர்களின் மத்தியிலிருந்து பெண்கள் தேவதாசிகளாகஎடுக்கப்பட்டுள்ளனரேயன்றி, தேவதாசி முறைதான் இசையையும் பரதத்தையும் ஆண்டுவந்ததாகக் கூறுவது தவறு.” -பிரமிள்

இது சத்தியமூர்த்தி வகையறா வீட்டுப் பெண்களுக்கே பொட்டுக்கட்டி சத்தான கோயில் கலாச்சாரத்தை முன்னெடுக்க அன்று எதிரொலித்த முத்துலெட்சுமி ரெட்டி குரலின் இன்றைய தொடர்நீட்சியான பிரமிளின் குரல். மட்டுமல்லாமல் தேவதாசி முறையே இசை, பரதம் ஆகிய நுண்கலைகளை வளர்த்ததாகவும் இம்முறை போனதால் அவை மறைந்துவிட்டதாகவும் முன்வைத்த ‘இந்தியா டு டே கோவில்கலாச்சார மலருக்கும் வெசாவின் ‘சொல்புதிது’ கட்டுரைக்கும் ஆன பதிலுமாகும்.

“தென்னகத்தில், வாங்கிய கடனுக்காகக் கடனாளிக் குடும்பத்துப் பெண்ணை நிலக்கிழார்கள் அபகரிக்கும்முறை, ‘தேவதாசி’ முறையாக ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய இடஙகளில் இன்றும் நடைபெறுகிறது . அங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவு இயக்கத்தைப் போன்று கோயில் கலாச்சாரத்தைப் பகிஷ்கரிக்க எதுவும் நடந்ததில்லை என்பதே இதன் காரணம், அங்கெல்லாம், ஈவெ.ரா. தமிழகத்தில் செய்தபணி பரவவேண்டும் என்பது என் வேண்டுகோள்’ – பிரமிள் (‘வரலாற்றுச்சலனங்கள்’)

 

  • இரு சமயங்களில் பொட்டுக்கட்டும் தேவதாசிமரபு எவருக்குரித்தானது?

“பொட்டுக்கட்டும் தேவதாசிகள் மரபு வைணவத்திற்கு உரியதா?சைவத்திற்கு உரியதா?” – முத்துநாகு

கோயில்மதங்களான இரண்டிற்குமே அது உரித்தானதுதானே. அவர்கள் முலைமீது சூலக்குறியும் திருமண் குறியுமாய் இடப்பட்டனவே!

“சமயமுத்திரைகள் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோயிலால் உறுதி செய்யப்பட்டுவிட மேட்டிமையோர் குறிப்பாகப் புரோகித நிலஉரிமை உடையோர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவரது பணியாகி விடுகிறது. கோயில் வழிபாடு, திருவிழா போன்றநிகழ்வுகளில் நடனமாடுதல், பாடுதல், கோலமிடுதல், பூக்கட்டுதல் போன்றஇன்னபிற செயல்கள் அவர்களது அவலவாழ்வை மறைக்கும் புனிதத் திரைகளாக மட்டுமே அமைந்தன. ஒரு நிறுவனமாக உருப்பெற்று வளர்ந்த தேவரடியாள் முறை அடிமைமுறையின் மற்றொரு வடிவமே.”- ஆ.சிவசுப்பிரமணியன் (‘தமிழகத்தில் அடிமைமுறை’)

வெங்கட் சாமிநாதனைப் பொறுத்தவரை சனாதனக் கருத்தியல், கலாரசனை முறையியல்  என்பனவே அவருடையன.

  • வேதசகாயகுமார் காணத்தவறியபக்கங்கள்

வெங்கட் சாமிநாதன் 84-இல் எழுதிய ‘நமது கலை இலக்கியங்களின் அடித்தளம்’ கட்டுரை உரிய கலைச்சொற்கள் பெய்யப்பட்டும் சுருக்கப்பட்டும் ‘சொல் புதி’தில் வெளியானது. வெசாவின் ஏனைப்பிற கட்டுரைகளோடு உள்முரண்கள் அதில் உண்டு. வெசா எழுதியதுதானா என ஐயுறும் அளவிற்கு அது அமைந்துள்ளது. அதில் திருத்தங்களும் சுருக்கத்தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெசாவின் இயக்கம் உருவாக்கிய வினாக்களே தமிழில் நவவிமர்சனம் உருவாக வழிவகுத்ததென்றார்

ஜெயமோகன். வெசாவிற்குப் பின்பான 25 ஆண்டுத் தமிழ் விமர்சனத்தின் இயக்கமே அவருடனான விவாதமாக அமைந்தது என்றார் சகாயகுமார். வெசாவுடன் தருமு சிவராம் போன்ற ‘இளம் விமர்சகர்’களையும் அவரால் இனங்காண முடிகின்றது.

1970 – வாக்கில் ‘Thought’ -இல் வெசா எழுதிய, ‘Alienation in Tamil writing’ -இற்கான எதிர்வினையாகவே பிரமிள்1972 -இல் ‘Thought’ – இல் ‘Commercialism in Tamil writing -ங்கை முன்வைத்தார். அக்கட்டுரை முதலாகத்தான் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஊடுருவிய ‘ஜாதியத்தை’ அம்பலப்படுத்தும் அவருடைய எழுத்து தொடர்ந்து சனாதன வைதிகத்தையும்,  லௌகிகத்தையும் தோலுரிக்கலாயிற்று. இவற்றில் முன்னதான ‘வாள்போல் பகை’க்கு மௌனியும் ‘கேள்போல் பகை’க்கு வெசாவுமே போதுமான அவதார புருஷர்கள்.

‘வெசா படைப்புலகின்’ (?!)மீதான ஒரே எதிர்வினையாக சகாயகுமாரால் ‘ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்’ மீதான நிர்மலா நித்தியானந்தனின் எதிர்வினையை மட்டுமே  ஏற்கமுடிந்தது. ஆக அவருக்குங் கூட பிரமிள் தடைவிலக்கு (Taboo)ஆகிவிட்டார் போலும். “எனக்குக் கலையுணர்வு இருக்கிறது. கலையுணர்வு என்பது மனிதநேயமுள்ள இதயத்திலேயே இருக்கும் . ஆகவே எனக்குக் கலையுணர்வு இருக்கிறது” இதுவே  வெசா கட்டுரையின் சம்பாஷணைப் பிரபஞ்சமாக பிரமிளால்  முன்வைக்கப்பட்டது.  வெசாவின்  இக்கட்டுரைக்கான பிரமிளின் எதிர்வினையான ‘ இந்திய வைதிகமும் நாஸிகளும்’ கட்டுரையில் (‘லயம்’). ஆனால் இதுவும் கூட வே.ச.குமாரின் ‘வெசாவின் விமர்சனப் பயண’த்தில் தலைகீழாகவே சித்திரிக்கப்படுகின்றது.

வெசாவுடனான விவாதமாகவே அமைந்த கால்நூற்றண்டுத் தமிழ் விமர்சன இயக்கத்தில் வே.ச.குமாரின் தீட்சண்யம் ஏறெடுத்துப் பார்ப்பது ஒரே ஒரு எதிர்வினையை மட்டுமே. இங்கே நானவர்க்கு இன்னுமொரு எதிர்வினையை மட்டுமேனும் நினைவுறுத்தியாக வேண்டியுள்ளது.

‘கொல்லிப்பாவை”யில் ‘இரண்டு தலைமுறைகளுக்கு இடையில்’ என்ற பிரச்சினைத் தொடரில் வெசா மணிக்கொடிக்காரர்களை இழிவுறுத்தி – கல்கியை அவர்களுடன் ஒப்பிட்டு உயர்த்திப் பிடித்திருந்தார். இதற்கான  எதிர்வினையாகவே பிரமிள் ‘மதமரபும் வெகுஜன ரசனையும்’மை எழுதினார். என்றபோதிலும் அதிலவர் மணிக்கொடி இதழ்களைப்  பார்த்தவரின் விஷயபூர்வமான பதில் எனவும், உண்மையில் தம்மைவிட வெசாவுக்கு மணிக்கொடிக்காரர்கள் விஷயத்தில் ஆணித்தரமான பதில் சொல்லி இருப்பதாகப் பாராட்டியது என்னவோ வே.ச. குமாரைத்தான்.

“வெசா படைப்புகளினூடாகப் பயணம் செய்யும் இன்றைய இளம் வாசகனுக்கு அவர் படைப்புலகில் அவ்வப்போது அல்லது தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடும் இலக்கிய அரசியல், தனிநபர் மீதான வசைமொழிகள் போன்றவை மிகுந்த களைப்பூட்டக்கூடும். ஆனால் அவை இலக்கியத்திற்கான சூழல், படைப்பிற்கும் படைப்பாளிக்குமான தொடர்பு போன்ற சில தளங்களில்தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன. இவை விவாதத்திற்குத் தகுதியற்றவை என ஒதுக்கிவிட இயலாது விவாதத்திற்கான பொருளாகவே சாமிநாதன் இவற்றை முன்வைத்துள்ளார்.” -இது வேதசகாயகுமாரின் விமர்சனப் பயணம்.

“தம்முடன் பழகுகிறவர்களுக்கும், இதைவிட தம்மிடம் வந்து கெஞ்சுகிறவர்களுக்கும் இலக்கிய ஆசீர்வாதம் தரும் வெசா இவர்களுடன் எற்படும் உறவுகள் மாறுபட்டால் ‘பிடி சாபம்’ என்பார். பிறகு இந்த சூழலை உருவாக்கவே முந்தியதையும் பிந்தியதையும் தாம் செய்ததாகச் சாதிப்பார். இது இலக்கிய விமர்சனம் எதையும் பிரதிபலிக்கும் விஷயமல்ல. தகுதியற்றவர்களின் அதிகாரத்தைக் காட்டுகிற இந்திய பூசாரியத்தையே பிரதிபலிக்கின்றது.” – இது பிரமிளின் ‘விமர்சனாஸ்ரமம் வெளியீட்டியலை ஒரு மனோதர்மக்கருவியாக் கொண்டே தம் மதிப்பீட்டியக்கத்தைப்  பேணி நின்றவரே பிரேமிள்.

 

  • நாஞ்சிலின் திகம்பரக் கோலங்கள்

“வெசாவின் வாதங்களுக்குப் பதில் சொல்லும் ஆற்றல் இலாதவர் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம் சாதி. தமிழில் கலை இலக்கியத் துறையில் இயங்கி வந்த பலரும் அந்த ஆயுதத்தை வெசா மீது கூர் பார்த்திருக்கிறார்கள். என் செய? அவரோ ஒரு Die hard species. அத்தனை எளிதில் அநியாயத்தின், அதிகாரத்தின், அரசியல் நிர்ப்பந்தங்களின், கூர்த்த நகங்களுக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பவர் அல்ல.”

“ஐம்பதாண்டுக் காலமாய்ச் செயற்படுகிறவர் வெசா. காலம் அவர் பார்வையை, நேர்மையைச் சாயம் இழக்கச் செய்யவில்லை.”

“ஐம்பதாண்டுக் காலமாய் தர்மத்தின் பக்கமே நின்று அறச்சீற்றத்துடன் ஒலித்த அவரது வில்லின் நாண் ஓலி தளர்ந்து கேட்கிறது இன்று. அவருடன் போரிட்டவர்களும் ஒன்றில் மாண்டு போனார்கள், அன்றேல் தளர்ந்து போனார்கள்” – நாஞ்சில் நாடன்(‘திகம்பரம்’)

 

  • வெசாவின் பூணூல் நாணிற்தெறித்த அறப்போர் ஆவநாழிக் கணைகள்

நாஞ்சிலார் உச்சிமேற் கொண்டாடும் அரைநூற்றாண்டு அறப்போராளி எந்த தர்மத்தின் பக்கமே நின்றார்? வெசாவின் பார்வைக் கூர்மை, நெறி பிறழா நேர்மை பற்றி எல்லாம் அவருக்காக மட்டுமே கநாசுவின் வாலெனப்பட்ட அவரின் பிரதான சீடர் தஞ்சை ப்ரகாஷ் நடாத்திய இதழில் வெசாவின் தர்மாவேசக் குரலைக் கேட்போமே:

“மற்ற கலாச்சார ,அரசியல், இலக்கியப் பெருந்தலைகள் வாய்திறக்கப் பயந்து கொண்டிருக்கும் 80 க்கள் 90 களில் சோவும் எஸ்•வி•சேகரும் மாத்திரமே துணிந்து கேலி செய்தவர்கள். எஸ்•வி• சேகர் சாக்கியார் கூத்துவில் வரும் சாக்கிய மரபில் வருபவர். தன்னைக் கேலிப்பொருள் ஆக்கிக்கொண்டு தன் எதிரில் வீற்றிருக்கும் ராஜகுடும்பத்தையே கேலி செய்யும் மரபு அது”- வெங்கட் சாமிநாதன்(‘வெசாஎ’ :2•)

“வெசாவுக்கும் சோவுக்கும் இடையே பரஸ்பர முதுகு சொறிதல் உண்டு. இவருக்கு அவர் ஜீனியஸ். அவருக்கு இவர் ஜீனியஸ்” -பிரேமிள்

2004 ‘அமுதசுரபி ‘தீபாவளிமலரில் கூட வெசா சோவைப்பற்றி்  50 பக்கக் கட்டுரை எழுதியுள்ளார். நடைபாதைக் கைரேகை ஜோஸ்யர் பிரபலங்களுடன் போஸ்கொடுத்து மாட்டிவைத்திருப்பது போல் சோ பெருமகனாரின் சுந்தரத் திருவுரு ‘பலான பலான’ பெருந்தலகளுடன்  இருக்கும் பேரால்பமே ஆக.

“யாத்ரா: 24 – இல்  நானும் வெசாவும் அவசரகால நிலைமையின் போது எதுமே செய்யவில்லை என்பதையே வலியுறுத்தியுள்ளார். நான் உண்மையில் ‘மேல் நோக்கிய பயணம்’ எழுதியதன் மூலம் ஒரு ‘under grount’ எழுத்தியக்கத்துக்கு அடிகோலியவன்.

ஆனால் வெசா என்ன பண்ணினார். ஒண்ணும் பண்ணாமல் இருந்தால் கூடப் பாதகமில்லை. அது பற்றி விசாரித்த போது அவர் சொன்னது இது: ‘அரசாங்கம் இப்போதுதான் சரியாக வேலை செய்கிறது எனக்கு ‘flat’-க்கு மனுப்போட்டு 10 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த எமர்ஜன்ஸியினால் தான் எனக்கு இப்போ ‘flat’ கிடைத்தே இருக்கிறது. எமர்ஜன்ஸி ரொம்ப நல்ல விஷயம்’ என வெசாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்துவார் பிரமிள் (‘விமர்சன ஊழல்கள்’)

“வர்ணாஸ்ரமம், இனவாதம், வகுப்புவாதம், கட்சியம் முதலிய வெறிகளுக்கு் வசப்படுகிறவர்கள்  தகுதியில்லாதவர்கள்: இருந்தும் வர்ண,இன, வகுப்பு,கட்சி அடிப்படையில் ‘நானே பஸ்ட்’ என்ற மனோபாவத்தைக் கொண்டவர்கள். இத்தகைய மனோபாவம் கொண்டவர்களுக்குச் சரித்திரஉணர்வு,  உள்ளதை உள்ளபடி காணும் பாரபட்சமின்மை, கலைப்பொருளில் திளைக்கும் உணர்வுநுட்பம் எதுவும் இராது. ஏனெனில் ‘நானே பஸ்ட் ‘. இந்த அடிப்படையில் வெசா, ஞானக்கூத்தன், தமிழவன், ஜெயமோகன் போன்ற யாவரும் ஒரே வர்ணம், ஒரே வகுப்பு, ஒரேகட்சி. இவர்களுள் ‘நானே பஸ்ட்’ என்ற திமிர் எவருக்கு மிக மூர்க்கமாக  முறுக்கியபடி நிற்கிறதோ அவரை இவரது ஆள்களே வழிபட வேண்டும், முகாலோபனம் பண்ண வேண்டும் ‘நானே பஸ்ட்’ என்ற மனப்பிரமையைப் பேணிக் கொண்டிருப்பவர்களால் வாளாயிருப்போரையும், பின்வாங்கிப் போகிறவர்களையும்  பெயரிலி (anonymous)ஆக இருக்க விரும்புபவர்களையும்  அணுவளவு கூடப் புரிந்துகொள்ள முடியாது. மிகத் தீவிரமாக, ஆழ்ந்த நுட்பமான செறிவான பணிவுடன் செயல்படுகிறவர்களின் லட்சணம் இது என்று புரியாது “என்பார் பிரேமிள்.


வே.மு.பொதியவெற்பன்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *