அ.விமர்சனக்களம்

‘தமிழில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு படைப்பு விமர்சன மொழியாடி புனைவுக்குள்  பொதிந்து கிடக்கும்  வரலாறுகளை வெளிக்கொணர்ந்து,  பல்வேறு கோணத்தில் பல்வேறு விமர்சனப்பிரதிகளை உருவாக்கும் விமர்சனக்களம்தான் இல்லை”- க.பஞ்சாங்கம் (‘பின் காலனியம் சமூகம் – இலக்கியம் – அரசியல்)

இத்தொடர்பில் பஞ்சாங்கம் விமர்சனக்களம் என அதற்கான வெளியீட்டுக்குரிய இதழ்கள் குறித்தே சொல்ல வருகின்றார் என்றால் அது ஏற்புடையதாக இல்லை.

‘சிற்றேடு’ இத்தொடர்பில் கணிசமான களனமைத்துள்ளது. அதைத்தவிர ‘பன்முகம்’ அதன் தொடர் நீட்சியாய்,  ‘புதுப்புனல்’ ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. பின்னர் புதுப்புனல்
கல்வித்துறைக் கட்டுரை வெளியீடுகளாகவே  நீர்த்துப் போயிற்று. பிரவீன்  பஃறுளியின் ‘ இடைவெளி”, அறிவுமணி, இராமர் சுப்புவின் ‘பிறழ்’, ‘களரி’ ஹரிகிருஷ்ணனின் ‘மணல்வீடு’, மனோன்மணியின்  ‘புதுஎழுத்து’ ஆகியனவும்’ இத்தொடர்பில் என் பார்வைக்கு எட்டிய  மட்டில் குறிப்பிடத்தக்கனவே.  இவைதவிர எனக்கு இவ்வாறு முன்வைக்கக்  களனமைத்த வகையில் ‘உயிர் எழுத்து’ம் ‘சௌந்தர சுகனு’ம் ‘ குறிக்கத்தக்கனவே!

இத்தொடர்பில் வெளியான ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல்கள் எனும் வகையில் ஜமாலனின், ‘மொழியும் நிலமும்’, ‘மௌனியின் இலக்கியாண்மை’, ‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்களு’ம்; என் ‘வானத்தின்மீது மயிலாடக் கண்டேனு’ம் குறிப்பிடத்தக்கன.

“இந்திரா பார்த்தசாரதியின் ‘ ‘குருதிப்புனல்’, ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ போன்ற நாவல்களின் பொய்மையை, புனைவென்ற பெயரில் நிகழ்த்திக்காட்டும் அரசியலை வாசித்து வெளிப்படுத்துகிறார். ஜெயமோகபீட பிம்பங்களையும், அதற்கு அர்ச்சனை செய்து அமளிதுமளி செய்யும் ஆசானின் ஆஸ்தான எழுத்தாளர்களையும் விட்டுவைக்கவில்லை”

“இன்று பரவிவரும் கலாச்சாரதேசியம் என்கிற இந்துத்துவ பாசிசத்தின் தமிழக இலக்கிய முகவர்களை அவர்களது மேடையிலேயே அம்மணமாக்கி ராஜாவின் உள்ளே இருப்பது விடமேறிய விதூஷகக் கோமாளி என்பதைக்கிழித்துப் போட்டுள்ளார்.”

“சுயமோக ஜெயமோகன்கள் உருவாக்கும் போலியான இந்துமரபு மற்றும் மோடி குறித்த கார்பரேட் பிம்பங்களை இதில் அலசி உலர்த்திக் காயப்போட்டுள்ளார்.  கலாச்சாரத்தில் நிகழும் இந்துத்துவ நுண் பாசிச அலகுகளை வெளிப்படுத்தியுள்ளார்” – ஐமாலன். (என் நூலின் முன்றில்.)

ஆ. புனைவுகள் கதையாடலாய்வு

கடவுச்சொற்கள்: (Key words)

சொன்மை,பொருண்மை, ஒப்புமை, திரும்பவரல், பிரதியின்பம், குறிப்பான்,முரணாக்கம், மிகை, மின்சுற்று மறிப்பு, துழாவுதல்.
புனைவுகளின்மீதான விமர்சனங்கள் அழுத்தமாக இல்லை என்கிறார் யுவா.

கோட்பாடுகள் குறித்த விமர்சனம் கடன்வாங்கல்தானா என ஆதங்கப்படுகின்றார் முன்னாள் செம்மொழி நடுவண் ஆய்வு நிறுவன நெறியாளர் பேரா.கந்தசாமி.
மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

தொல்காப்பியப் பொருளதிகாரம் திராவிட இலக்கிய இயலின் – ஆய்வுச் சித்தாந்தத்தின் மூலக்கருவாகும் எனத் தம் தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்’ கட்டுரையில் வலியுறுத்துவார் அய்யப்பபணிக்கர்.

“தொல்காப்பியப் பொருளதிகாரம் மனோதத்துவ உண்மைகளின்  அடிப்படையில் எழுந்த ஓர் அற்புதமான சம்பிரதாயக்கலை”- ஏ.வி.சுப்பிரமணிய ஐயர்.

‘தொல்காப்பியமும் மனஅலசலும்’ கட்டுரையையும் தொல்காப்பிய மீதான பயன்பாட்டு மனஅலசல் ஆய்வுகளையும்; சிவகாமியின் “ஆனந்தாயி’, சுராவின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ புனைவுகள்மீதான பயன்பாட்டு மனஅலசல் ஆய்வுகளையும் தம், ‘ப்ராய்டு லெக்கானியப் பார்வையில் சமூக அரசியல் பிரதிகள், கதைகள், கவிதைகள், பாடல்கள்’ எனும் அபூர்வ ஆய்வுநூலில் சிறப்பாக ஆய்ந்துள்ளார் க.செல்லப்பாண்டியன்.

” தொல்காப்பிய வழியில் நாவல் விமர்சனம் செய்யுமுகமாகத் தமிழவன்  சில அடிப்படைக்
கருத்தாக்கங்கங்களை முன்வைத்துள்ளார். அவற்றை  நேரடியாகவோ; அவற்றின் தொனி உணர்வுடன் புதிதாக மாற்றியோ-நாவல் அல்லது கவிதை விமர்சனத்தில் கையாளலாமெனப் பரிந்துரைக்கின்றார்” -‘சிற்றேடு (‘ஏப்-சூன்’ 2015).

“வெறும் உரையாசிரிய மரபுக்குள் முடக்கப்பட்டு விடாமல் தொல்காப்பியத்தின் பிரதியியல் (texual) தளம் அதற்கு வெளியில் உள்ள உறவுகளுடன்(extra texual) சிந்தனை உறவு கொள்ளக்கூடியதாய் ஆய்வு இனி மாற வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார் “- ‘சிற்றேடு'(‘சன-மார்ச்’ 2016)

தொல்காப்பிய வழி புனைகதை விமர்சனம் செய்யுமுகமாகத்  தமிழவன் முன்மொழிந்துள்ள அடிப்படைகள் ஆறனுள் சொன்மை பொருண்மை நோக்கிலான ஒரு புதிய விமர்சன முறையியலை நான் வகுத்துக்கொள்கிறேன். ஏலவே சிற்றேட்டில் இம்முறைமை நோக்கிலான விமர்சனங்களைச்  சிவசுவும், சண்முக விமல் குமாரும் மேற்கொண்டுள்ளனர்.

“ரமேஷ் பிரதனின் ‘ஐந்தவித்தான்’  நாவல் பற்றிய ஒரு புதியமுறைக் கதையாடலாய்வை நிகழ்த்த முயன்றிருக்கின்றார். சிவசு அவர்களின் பிரதியின் குறிப்பான் அடிப்படையிலான ஆய்வாக இதை நிகழ்த்த முனைந்துள்ளார்.

தொல்காப்பியம் முன்வைக்கும் பிரதிச் செயல்பாடுகளாக அதன் எழுத்து, சொல், பொருள் இலக்கண முறையியலைக் கொண்டு விவரிக்கிறார். குறிப்பாகப் பூஃக்கோவின் ‘ஒப்புமை’, டெல்யுஸின் ‘திரும்பவரல்’, பார்த்தின் ‘பிரதியின்பம்’   போன்ற  கருத்தாக்கங்ளைச் சுட்டிக்காட்டி  அந்நாவலை ஆய்வு செய்துள்ளார். இந்நாவலின் பல குறியீட்டுத்தளங்களை வெளிப்படுத்திக் குறுக்குமறுக்காக நாவலை வாசித்துக் காட்டியுள்ளார்” ஜமாலன்.  (என் ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்.. ‘ நூல் முன்றிலில்.)

“ரமேஷ் பிரேதனின் ‘ஐந்தவித்தான்’ நூல் குறித்த இவர்  (பொதியவெற்பன்) கட்டுரை ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை. தமிழில்  ஆய்வுக்கட்டுரை எழுத விரும்பும் மாணவர்கள் ஒரு படைப்பை எவ்வாறுஅணுகவேண்டும் என்று சுட்டும். தவறாது படிக்க வேண்டிய கட்டுரை. கதையாடலாய்வு இரண்டுகட்டுரைகளுமே எனக்கு நெருக்கத்தைஏற்படுத்திய கட்டுரைகள்.” –  சரவணன் மாணிக்கவாசகம்.

டேவிட் லாட்ஜ் தம்  ‘Modes of modern writing’ நூலில் வகுத்தளிப்பதிலிருந்து நோயல் ஜோசப் இருதயராஜ் எடுத்துரைக்கும் முரணாக்கம் (Condradction) , மிகை(Excess), மின்சுற்று மறிப்பு(Short Circut), தீவிர ஒழுங்கின்மை (Randomness)  [இதனைத் துழாவுந்தன்மை என்பார் க.பூரணச்சந்திரன்] ஆகிய4 உத்திகள் ‘ஐந்தவித்தானு’க்கூடாகப் பயின்று வருவதனை இனங்கண்டு எடுத்துரைத்துள்ளேன்.

“மேற்கு – கிழக்கு என்பது பல்வேறு தளங்களில் இணைந்தும், முரணியும், முழுமைகளிலும் உறுப்புகளிலும் அதன் குணங்களைக் காட்டியும் காட்டாமலும் செயல்படும் ஒரு நாடக அரங்காய்த் திறனாய்வைப் படம்பிடிக்க முயல்வதே இப்போதைக்கு நம் குறி. அதன் மூலம் இரு கலாச்சாரங்கள் பற்றிய தெளிவு நமக்குக் கிடைக்கின்றது.” -தமிழவன் (‘தமிழவன் கட்டுரைகள்)

“ஜப்பானில் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியால் நியூஜெர்ஸியில் மழை வரவழைக்க முடியும்  என்கின்றது பட்டாம்பூச்சித்தத்துவம் (Butterfly Theory). அப்படி இருக்கையில் மேற்கத்தியச்சிந்தனை, கிழக்கத்தியச் சிந்தனை என்றெல்லாம் பேதம்பிரித்து ஒதுக்குவது மனிதகுலத்துக்கு நியாயம் செய்வதாகாது அல்லவா?”.- எம்.ஜி.சுரேஷ்  (‘பின்நவீனத்துவம்’).

இ.சிறுகதை – குறுங்கதை கதையாடலாய்வு

கடவுச்சொற்கள்(Key Words)

இலக்கியபீட உருவாக்க அரசியல் (Literary Canonization Politics) ,  பகடியாடல் (Parading), குறைநிரப்பி (Supplement), குறி நிரப்புதல் (Sign becoming supplement), இயங்கிக் கொண்டேயிருக்கும் குறியின் குறிநிரப்பும் தன்மை (Moving of the supplementarity of the sign),  உறைபுள்ளி(Still Point), இடப்பெயர்ச்சி (Displacement), மீள்வரலியல் (Recursionism), அகராதிப்பொருள்(Donotion), குறியீட்டுப்பொருள்(connotation), ஆகுபெயரன்(Metonomy)

உரைநடை: புனைகதை, அல் புனைவு (Non-Fiction): தகவற் கட்டுரை(Article), கட்டுரை(Essay),புனைகதை(Fiction): சிறுகதை, புதினம்(நாவல்) சிறுகதை: குறுங்கதை(Micro Short-Story), சிறுகதை, நெடுங்கதை(Novella)

“சிறுகதைத்தொகுதியைப் பற்றிய குறிப்பிடும் படியான விமர்சனங்கள் கடந்த ஆண்டுகளில்  வெளியாகவே இல்லை. இதனால் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விட்டன.” – எஸ்.ராமகிருஷ்ணன (‘இதுவரை, இன்று, இது)

இதனை எதிர்கொள்ளுமுகமாக:
“இதற்கான காரணமும் நவீனகாலனித்துவ வலைப்பின்னலில்தான் அமைந்து கிடக்கிறது. நமக்கான சுயஇயக்கம்  கொண்டுவிடாமல் அது கண்காணித்துக் கொள்கிறது. அதன் கண்காணிப்பில் நம்முடைய  தலைவிதி இதுதான்”-க.பஞ்சாங்கம் (‘பின்காலனியம் சமூகம் -இலக்கியம், அரசியல்’ – தொர்:-ந.இரத்தின குமார்)

இவையிரண்டுமே பகுதி உண்மைகளே!  சரிவர இல்லை எனும் போது அதனைப் போதுமான அளவில் இல்லை எனக் கொள்ளலாந்தான், எனினும் சரியாக வாய்த்துள்ளனவற்றை அதேமூச்சில்  எடுத்துரைப்பதே விமர்சகன் பணியாம். புதிதாக வரக்கூடிய படைப்புகளை அவற்றின் பாய்ச்சல் நேரத்திலேயே இனங்கண்டு எடுத்துரைப்பவனே விமர்சகன் எனவாங்குரைப்பார்  கா.சிவத்தம்பி. மட்டுமல்லாமல் இதுதான் தலைவிதி எனவிதிக்கப் பட்டனவற்றை அப்படியே  ஏற்றமையயாமல் மாற்றி எழுதிச் செல்வதே எம்மனோர் பாடாகும்.

“தமிழில் பின்நவீனப்பிரதிகளைப் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். நாகார்ஜூணன், தமிழவன் போன்றோரின் பிரதிகள் முன்மாதிரி ஆனவை அல்ல. தமிழில் வெற்றிகரமான பின்நவீனயதார்த்தக் கதைகளை எழுதியவர்களாக ரமேஷ்:பிரேம், பா.வெங்கடேசன், எச்.முஜீப் ரகுமான் ஆகியோரைக் குறிப்பிடலாம்.”- எம்.ஜி.சுரேஷ் (‘பின்நவீனத்துவம்’)

இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் ‘சுவரிடுக்கில் ஆல்’, தீயரும்பு’ இருசிறு கதைத்தொகுதிகள் குறித்தும், தமிழவனின் ’35 வயது நடனக்கான எழுத்தாளர்’ ‘குறுங்கதைத் தொகுதி குறித்துமான விரிவான கதையாடாலாய்வை என் ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேனி’ல் முன்வைத்துள்ளேன். அதில் தமிழவனின் பின்நவீன யதார்த்தக் கதைகளையும் இனங்கண்டு எடுத்துரைத்துள்ளேன்.

“ஞானதிரவியத்தின் புனைவுவெளியில் நிகழும் பல காட்சிகளை எடுத்துக்காட்டி, மதுவருந்தி ஆணாதிக்கத்தைக் கலாய்க்கும் பெண்கள்,  சிறுதெய்வ பெருங்கடவுள் முரணை முன்வைத்த எழுதப்பட்ட இன்றைய  இந்துத்துவப் பெருமதப்பரவலாக்க அரசியலைப் பேசும் கதைகள், ஆகமவிதிகளை மீறும் பாத்திரங்கள் எனக் கதையின் பல கூறுகளையும் அதன் நுண்தளங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.”-

” தமிழவனின் சமீபத்திய ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற நூலில் உள்ள கதைகள் குறித்த மிக விரிவான கதையாடல் ஆய்வொன்றைச் செய்துள்ளார். பல கதைளைச் சிறப்பான கதையாடல் ஆய்விற்கும் உட்படுத்தியுள்ளார். சிலகதைகளை உள்ளீடற்ற வெற்றுக் குறிப்பான்களாகக் கொண்டு  அவற்றை மாற்றி வாசித்துக் காட்டியுள்ளார்”

” ஒரே நேரத்தில் கூடுதல் பொருள் சேர்ப்பதாகவும், மற்றொரு  பொருளைப் பதிலீடு செய்வதாகவும் பொருள் தரக்கூடிய. ஒரு கருத்தாக்கம் ‘Supplement’.குறைநிரப்பி என்பது ரூசோ சொன்ன குறையை நிரப்புவது என்ற பொருளெனவும், கூடுதலாகப் பதிலீட்டையும் சேர்க்கிறார் தெரிதா. அதைப் பயன்படுத்திப் பொதி தமிழவனின் நடனக்காரி சிறுகதையை ஆராய்ந்துள்ளார்.”

“உரையாடல், உபமொழி, உறைபுள்ளி  இம்முக்கூறுகளும் கலந்த மயக்கமாகவே இத்தொகுப்பின் பனுவலாக்கம் ஊடாடிக் கிடக்கின்றது என்று சரியாக வாசித்துக்காட்டி
அதன்கதையியல் புள்ளிகளைத் தொட்டுக்காட்டியுள்ளார். தமிழவன்  முன்வைக்கும் கோட்பாட்டுக் கருத்தாங்கங்களைப் பயன்படுத்தி அவரது கதைகளை ஆராய்ந்திருப்பது வித்தியாசமான ஒரு   வாசிப்பை நவில்கிறது.” – ஜமாலன்

படைப்போ,உரையோ,செவ்வியோ எதுவான போதிலும் கோணங்கியின் மொழி ஒன்றேதான். அது ஒருதனியே! சில குளோனிங் குஞ்சுகளும் அதைப் பாவலாப்பண்ணிப் பொல்லாச்சிறகு விரித்தாடுவதுமுண்டு.  இந்த மொழியை அவர் எங்கிருந்து கண்டடைந்தார்? இதோ அவர் வாக்குமூலமே:

ஆர்.இராசேந்திர சோழனின் ‘இச்சை’, ‘பரிணாமச் சுவடுகளி’ல் இருந்து மொழியின் பித்தமாகக் கரைந்து எதிர்காலப் புனைவின் மொழியைக் கண்டடைந்தேன்”- கோணங்கி (‘அரூ’ செவ்வியில்).

“எட்டுக்கதைகள்” தொகுப்பில் பெரும்பாலான கதைகள் நேரடியான மொழியில் இருக்கும் போது ‘பரிணாமச் சுவடுகள்’,  இச்சை’; ஆகிய இரண்டு கதைகள் மட்டும் கனவு விவரிப்பிலும்  சற்று  இருண்மையான மொழியிலும் சொல்லப்பட்டதேன்?”- வெய்யில்

“அவை இரண்டோடு ‘நிலச்சரிவு’ எனும் கதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த மூன்றும் சிறுகதை வடிவில் கனவில் வந்த காட்சிகள். நான் செய்ததெல்லாம் அந்த கனவுக் காட்சிகளை எழுத்து வடிவமாக்கியது தான்” .- இராசேந்திர சோழன்.

இராசேந்திர சோழன் கதைகள் குறித்த ஒரு விரிவான கதையாடலாய்வையும் அவருடைய மலர்க்காக முன்வைத்துள்ளேன். ‘மணல்வீட்டி’லும் அது வெளியாகியுள்ளது.

1- அரசியல் இயக்கப் பகடியங்கதக் கதைகள்,
2- காமத்திளைப்புப் பாலியல் கதைகள்,
3- நவீன-பின் நவீன யதார்த்தக்கதைகள் எனப் பகுத்தாய்ந்துள்ளேன்.

‘இச்சை’, ‘ நிலச்சரிவு, ‘பரிணாமச் சுவடுகள்’ இம்மூன்றையும் வாசிக்கையில் இவை மூன்றுமே ஒட்டுமொத்தக் கதைகளில் இருந்தும் வேறுபட்டனவாய் எனக்குப்பட்டன. அதற்கப்புறம் பின்னுரையை வாசிக்கும் போதுதான் உண்மை பிடிபடலாயிற்று:

“சிதிலமடைந்த உருவத்தோடல்ல முழுமையான உருவ அமைதியோடு பூரணத்துவம் உள்ள சிலகதைகளே  எனக்குக் கனவாய் வந்திருக்கிறது. தொகுப்பில் உள்ள’ பரிணாமச் சுவடுகள்,  இச்சை, நிலச்சரிவு  ஆகிய மூன்றுமே எனக்கு முழுக்கனவுகள். அவற்றை அப்படியே எழுத்துவடிவில் பதிவு செய்ததே என்பணி”

ஆக இம்முக்கதைகளுமே அவருடைய கனாக்களை அவர் மொழிபெயர்த்தனவே. நிலச்சரிவில் நிறைய விசித்திர நிகழ்வுகள் காணக்கிடக்கின்றன. கனாமொழி அதர்க்கம், நனவோடை உத்தி, தொடர்பறு எழுத்து என அமைந்தியல்கின்றது.

ஃப்ராய்டின் கனவுப்படிமச்  செயல்முறைகளில் ஒன்றே இடப்பெயர்ச்சியாகும்.

“இடப்பெயர்ச்சி என்பது குறித்தல் ஒரு படிமத்திலிருந்து அதற்கு நெருங்கிய இன்னொன்றிற்கு இடம் பெயர்வதைக் குறிக்கின்றது” க.பூரணச்சந்திரன் (‘அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும்)

இராசேந்திரசோழன் கனாமொழியே கோணங்கி மொழிக்கும் ஆதிமூலமானது. நடுநாட்டு வட்டார வழக்கில் கண்மணிக்கும் ஆதிமூலம் ஆனதும் அவர் படைப்புகளே! சு.வேணுகோபால் போலும் வெவ்வேறு ஆளுமைகளுக்கும் இந்த. மகா கலைஞனே முன்னத்திப் பொன்னேருழவனாம்.

ஈ. என் கையில் காற்புள்ளியே!

” எழுத்தாளனுக்குப் பார்க்கத் தெரிய வில்லை”- இது வண்ணதாசன் எழுத்துரு குன்னங்குளம் டொமினிக் கூற்று. துல்லியந் துலங்கப் பார்க்கத் தெரிந்த எழுத்தாளனிடமிருந்தே விதவிதமான புனைவுவெளிகள் வியாபிக்கும். அவற்றை பார்க்கத் தெரிந்த வாசிப்பின் பிரதிகளில் இருந்துதான் விமர்சனமும் படைப்பூக்கத்துடன் வியாபிக்கும்.

“படைப்புக்குள் இருக்கும் தர்க்கமும் கருத்தும்  விஞ்ஞானத் தன்மையும் படைப்பிற்கு வெளியில் விவாதமாய்த் தர்க்கமாய் வழிந்துவந்து கருத்தாய் மாறும் போது, விமர்சனம் படைப்பை உருவாக்குகிறது. அது போலப் படைப்பும் விமர்சனத்தை உருவாக்குகிறது”-  தமிழவன்.(‘திராவிடம், தமிழ்த்தேசம், கதையாடல்’)

படைப்பும் விமர்சனமும் இருதலைத் தாக்குரவு (பரஸ்பரப்பாதிப்பு) வாய்ந்தனவே. புனைவுக்கும் அல்புனைவுக்குமான அத்துக்கள் தகருமாறு, கலைஇலக்கிய விமர்சனங்களைக் கூட, விமர்சனஇலக்கியக் கலையாகக் கையாளவல்லதே என்கைவண்ணம்.

கோட்பாடுகளின் தன்னிலையாகப் பிரதிகளை அணுகமுற்படாமல், அதனதன் உள்ளார்ந்த வாசிப்பிற்கு ஊடாக, அவ்வப் பனுவலின் உள்ளீட்டையும், பனுவற் சூழமைவு தலைப்பிரியாமல் கண்டையக் கூடியதே என் ஆய்வுச்செல்நெறி.

அறிவுத்தேட்டத்தின் அங்காந்த வேணவாவோடு எங்கணுமே ‘பசித்திருக்கிறேன்.’ எந்தவொரு தத்துவழிபாட்டுக்கும் ஆளான தன்னிலை ஆகிவிடாமல் விட்டுவிடுதலையான ஒட்டுறவுடனேயே’ ‘தனித்திருக்கிறேன்’. தேட்டத்தால் ஈட்டிய ஞானத்தையும், எதிர்கொள்ள நேரும் புதுப்புதுச் சிந்தனைப் பள்ளிகளையும் இடையறாமல் வினாக்கண் கொண்டு வினாவிய வண்ணமே ‘விழித்திருக்கிறேன்’. ஆக இவ்வாறெலாம்’ பசித்திருந்து தனித்திருந்தே விழித்திருப்பதே’ என் மெய்காண்முறையாகும்.

தகுதிக்கண் இனங்கண்டு போற்றும் மற்றைமை பேணலும், மிகுதிக்கண் மேற்சென்றிடிக்கும் நட்புடைமையும் ஆக ஒற்றுமையாலும் போராட்டத்தாலும் ஆன கைகுலுக்கிக் கைகலக்கும் முரணியக்கமே என் வாழ்க்கைப்பாடு.

“நம்கண்முன்னே நகரும் நிகழ்காலம் உயிரூட்டம் உள்ளதாக இருக்கிறது.  நம் கவனம் முழுவதையும் வசப்படுத்துகிறது. நிகழ்காலத்தின் முன்பக்கமான கடந்தகாலம், நிகழ்காலத்தின் அழுத்தத்தால் நினைவுகளில் இருந்து நழுவிப்போகிறது. நவீனதமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான திஜா, குபரா, நபி, எம்விவி போன்றோர் படைப்புகள் குறித்த பேச்சும் விவாதங்களும் ஒடுங்கிப்போனதே இதற்குதாரணம்.

வே.மு.பொதியவெற்பன் கட்டுரைகள் ஒடுங்கிப்போன நினைவுகளை  உயிர்ப்பித்து மீண்டும் ஒரு விவாதத்துக்கு மேடையேற்றுகின்றன. இக்கட்டுரைகளின் உள்ளடக்கம் ஒருவிதத்தில் இலக்கிய விமர்சனம்; ஒருவிதத்தில் இலக்கிய ஆளுமைகளின் வரலாறு; ஒருவிதத்தில் விவாதங்களின் தோற்றமும் தொடர்ச்சியும். கட்டுரைகளின் எந்த இடத்திலும் முற்றுப்புள்ளி வைத்து விவாதம் நின்றுவிடவில்லை மீண்டும் நகர்வதற்கான பெரியவெளியைக் காட்டி விவாதம் சற்றே ஓய்வெடுக்கிறது”-‘அருவிப்பேச்சு’ (டிச•2008)
 ( என்’சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’  நூலுக்கு அருவி ஆய்வு மையத்தின் சுடர்ஆய்வுப் பரிசு வழங்கு ஆய்வுரை.)


-வே.மு.பொதியவெற்பன்

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *