1.தமிழவன், ஆல்பர்ட் வாசிப்பில்..

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலாசிரியர் மூவர்:

1.சுப்பிரமணிய தேசிகர் (‘பிரயோக விவேகம்’),
2. வைத்தியநாத தேசிகர் (‘இலக்கண விளக்கம்’),
3. சாமிநாத தேசிகர் (‘ இலக்கணக் கொத்து’)

இம்மூவருமே வடமொழியைப் பின்பற்றியே தமிழில் இலக்கிய இலக்கணங்கள் எழுந்தன என வலியுறுத்துபவர்களாக விளங்கினர். இம்மூவரில் சாமிநாததேசிகர் “அய்ந்தெழுத்தான் ஒருபாடையென்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே/ ஆகையால் யானும் அதுவே அறிக” எனப்பேசி நின்றவர். அவருடைய வம்சாவழி வாரிசாய் இருபதாம் நூற்றாண்டில்,’ யானும் அதுவே அறிக’ என அவதரித்தவர்தாம் ஞானக்கூத்தனார். பிராமணமே தம் மதம், இந்துக்கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரம் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்.

எப்போதுமே ஞானக்கூத்தன் பொத்தாம் பொதுவாக எதையுமே சாராம்சப்படுத்தி ஊத்திமூடிவிடுவதே அவர் சமத்காரத் தந்திரோபாயமாகும்: “எல்லா மொழியும் நன்று/ மன்னிக்க வேண்டும் நண்பா/ அதில் தமிழும் ஓன்று” “எனக்கும் தமிழ்தான் மூச்சு/ ஆனால்/ அடுத்தவர் மேல் விடமாட்டேன்”

இதற்கு நம் சற்சூத்திர இலக்கியப் பிதாமகன்கள் பாரித்துரைத்து கூத்தனாரை உச்சிமேற் கொண்டாடி நிற்பதுதான் விபரீதமுரண்நகையே!: ” எனக்கும் தமிழ்தான் மூச்சு என்கிற
போது அன்றைய அரசியல் சூழல்களும் தமிழ் பற்றிய பேச்சுகளும் நினைவில் வரவேண்டும். ஒருகோஷம் இங்கு வருகிறது. இது அன்று நடந்த யதார்த்தம். இந்த யதார்த்தம் ஒரு
விஷயத்தைச் சொல்கிறது. அதாவது ஒரு பார்வையும்(Observation), அதோடு கவியின் ‘தான்’ சார்ந்த ஒரு மதிப்பீடும் Value statement இந்த வரிகளில் வருகின்றன. இதன் அடிப்படை ஒரு
சமூகஅக்கறையாகும்.”

“இதுதான் ஞானக்கூத்தனின் ஆரம்பக் கட்டம். இக்கவிதையில் நுட்பமாக நோக்கினால், ஓர் அமைப்பு (Structure) தெரியும். நேராக ஒன்றைச் சொல்வதும், எதிர்பாராத ஒரு தாக்குதலின் உக்கிரத்துடன் இறுதிவரியோ, வார்த்தையோ வந்து ஒரு திருகலான ஒரு தீர்வைக் கொடுப்பதும் இவ்வமைப்பின் பாணி”. – தமிழவன் (‘படைப்பும் படைப்பாளியும்’)

“பண்டைத்தமிழ்க் கலாச்சாரம் வரலாறு மொழி குறித்த நம் அதிகப்படியான அக்கறை ஓர் அபத்தமான மதிப்பீடாக ஓர் இருபது முப்பது வருட.ங்களாக வளர்க்கப்பட்டு வருவதும், அவற்றின் பெயரால் மனிதர்கள் புறக்கணிக்கப்படுவதும், இளைஞர்களின் இலட்சியங்கள் விகாரப்பட்டுப் போவதும் நம்காலத்தில் தொடர்ந்துவரும் விபரீதம். பொதுச்சாலையில்
சகமனிதன் நடந்துவர வழிவிலகித் தராதவனும் கூடத் தமிழுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறான். தமிழ்தான் எங்கள் மூச்சு என்று உயிரைக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். தமிழ்தான் எங்கள் மூச்சு என்று குறுக்கிடுபவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச உடன்பாட்டை நினைவுறுத்துகிறார் ஞானக்கூத்தன்.”- எஸ். ஆல்பர்ட் (‘ புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும்’)

இவற்றில் தமிழவன் வாசிப்பின் பிரதி வக்ரோக்தி எனும் வடமொழித் த்வனிக்கோட்பாட்டின் ஊடாகத் தன் பொருள்கோளியலை முன்னெடுக்க முயல்கின்றது . மாறிவரும் வாழ்க்கை, யதார்த்தம், அமைப்புகள் அவற்றை மாற்றிக்கொண்டுவரும் மனிதர் பலசக்திகள் இந்த யதார்த்தத்தைச் சுட்டி நாம் பேசப் பயன்படும் மொழியும் மாறுவது புதுக்கவிதையில் பதிவாகிறது ; இயல்பாக. அத்துடன் மாறிவரும் உண்மை – செத்துப்போன மதிப்பீடுகள்- புதிய மதிப்பீடுகளுக்கு இடையில்நேரும் மோதல் முரண்பாடு – புதுக்கவிதையில் பேசுவதைப் பார்க்கிறோம் என்பதாக இயல்வதாகின்றது ஆல்பர்ட்டின் வாசிப்பின் பிரதி.

இவ்விருவரில் தமிழவனுக்கு வாய்த்துள்ள மேட்டிமை மனோபாவமோ, திராவிட இயக்க ஒவ்வாமையோ ஆல்பர்ட்டுக்குக் கிடையாது. மாற்றுத்தரப்புகளை அடுத்துக்காண்போம்.

 

2.பாரதிதாசன் உயிர்மூச்சும் ஞானக்கூத்தன் பெருமூச்சும்
அ.மார்க்ஸ் வாசிப்பில்

நவீனத்துவம் தமிழில் இருவேறு செல்நெறிகளுக்கூடாக .உள்வாங்கப்பட்டது.,1. சிற்றிதழ்ச் சூழல்சார் சனாதன, மேட்டிமை மனோபாவம், 2. அறிவொளி மரபுசார் நவீனத்துவம். அறிவொளிமரபுசார் திராவிட இயக்கமே ‘ எழுத்து’மரபுக்கு எதிர்த்தலைக் காரணி என்றால் ‘வானம்பாடி’ மரபுக்கு எழுத்துமரபே எதிர்த்தலைக்காரணி எனலாம். இத்தொடர்பில் சிற்றிதழ்மரபு திராவிட இயக்க ஒவ்வாமை, சனாதன பீடிப்பு, பாரதிதாசனை ஏற்காமை, பேச்சுப்பண்பாட்டு எதிர்ப்பு ஆகிய அம்சங்களை அகப்படுத்தியதாகவே அமைந்தியன்றது. இது எழுத்துக் காலச்சூழலில். அடுத்து மணிக்கொடிக்காலச்சூழலில் பாரதிதாசனுக்கும் மணிக்கொடியாளர்க்குமான தொடர்பும் ஊடாடட்டங்களும் குறித்த விரிவான நூலையே புதிய திறப்பாக ய.மணிகண்டன் முன்வைத்துள்ளார்.

அவற்றால் தமிழவன் தரப்புகள் தகர்ந்துள்ளன. இத்தொடர்பில் இதற்குமேல் பேச இங்கே இடமில்லை. அடுத்துவருவதே ‘கசடதபற’ காலச்சூழல். இத்தொடர்பில் கனல்மைந்தன் பார்வை இங்கே நோக்கத்தக்கது: “பொதுவாக இக்கவிஞர்கள் (‘கசடதபற’ குழுவினர்) செய்யுள்யாப்பை, அதை வலியுறுத்தும் புலவர்களை, அவர்கள் சார்ந்த இயக்கங்களை, அவ்வியக்கத்தின் தலைவர்களின் நடைமுறைகளை விமர்சிப்பதன் மூலம் தமது பழைமை மறுப்பைக் காட்டுகின்றனர். கசடதபற கவிஞர்களின் இந்த உள்ளடக்கத்தை அதிகமாகக் கையாண்டவர் ஞானக்கூத்தன். அவரது கவிதைகளில் இவ்வுள்ளடக்கத்தைக் காணலாம்.”- சு. அரங்கராசன் (‘தமிழ்ப்புதுக்கவிதை- ஒரு திறனாய்வு’) இத்தொடர்பில் தமிழவன், ஆல்பர்ட் தரப்புகளின் மறுபக்கத்தை இனிக் காண்போம்:

” இன்றளவுங்கூட எழுத்தறிவில்லாத அன்றைய நிலையில் திராவிட இயக்கம் முன்னிலைப்படுத்திய பேச்சுக்கலாச்சாரத்தையுங் கூட வானம்பாடி மற்றும் கவியரங்கமரபின் பின்புலமாகப் பாத்தல் தகும். சமூகப்படிநிலையில் இடைநிலைச் சாதிகளாக விளங்கியவர்கள் பெருமளவில் பங்குகொண்ட இயக்கமாகத் திராவிட இயக்கம் விளங்கியதையும் நாம் மறந்துவிடலாகாது. பொதுவுடைமை இயக்கத்தின் அடிநிலைத் தொண்டர்களாகவும் கூட இவர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே விளங்கினர். வானம்பாடி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் மக்கள் சார்புத்தன்மையையும்; சிற்றிதழ்கள் சார்ந்த மரபினர் மக்கள் திரளிடமிருந்து விலகிநின்ற மேட்டிமைத் தன்மையையும் இந்தப் பின்னணியில் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.”

“முற்றிலும் அரசியலற்றுப் போயிருப்புதும், வெகுமக்களிடமிருந்து விலகிநிற்றலும் இம்மரபின்(‘எழுத்து’) தொடரும் பண்பாக உள்ளது. இம்மரபின் தொடக்ககால முன்னோடிகளின் உயர்சாதிப் பின்புலம், திராவிட இயக்க எதிர்ப்பு, பேச்சுக்கலாச்சார எதிர்ப்பு, (எ- டு: ஞானக்கூத்தன்) சமஸ்கிருத அழகியல்மரபு மீதான காதல் முதலியன இங்கே நினைவுகூரத்தக்கன”- அ.மார்க்ஸ் (‘அதிகாரத்தை நோக்கிஉண்மைகளைப் பேசுவோம்’)

இந்தவகையில் ஞானக்கூத்தனின் ‘பரிசில் வாழ்க்கை’, ‘காலவழுவமைதி’ ஆகியவை எண்ணத்தக்கன. இத்தகு கவிதைகளின் ஊற்றுக்கண் எனத் தமிழவன் ‘எனக்கும் தமிழ்தன்
மூச்சு’ கவிதையையே சுட்டிக்காட்டுவார். அந்த ஊற்றுக்கண்ணின் நதிமூலம் காண்போம்:

“”செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” – எனக் கும்மி கொட்டுவார் பாரதி.

“வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரம்
செய்கின்ற தமிழ் எங்கள்மூச்சாம்’ எனச் சங்கு முழக்குவார் பாரதிதாசன்.

இத்தொடர்பில் பாரதியும் பாரதிதாசனும் தம் சுயம் அழித்து மொழியினூடாக, நாட்டுப்பற்றினூடாக அடையாளங்கொள்வதென அடையாளப்படுத்தும் அ.மார்க்ஸ், ” ஓர் ஆதிக்கச்சாதிக்காரன் தனது சுயத்தை ‘நானை’ அதற்கு அர்ப்பணிப்பதன் மூலமாக அவன் கடவுள்,மதம், நாடு, மொழி, இனம் போன்ற அடையாளங்களின் ஊடாக நானைச் சிதறடித்துக்கொண்டு அவற்றில் கரைந்து போவதில் உயர்வு பெறுகிறான்.”- (‘ யாதுமாகி’: 7 – மார்ச் 2001)

‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற பாரதிதாசன் வரிகளை நச்சுக்கடுப்புடன் நக்கலடிக்கும், ஆரியக்கூத்தான எதிர்வினையே ‘ எனக்கும் தமிழ்தான் மூச்சு’. பாரதிதாசனுக்குத் தமிழ் உயிர்மூச்செனில் ஞானக்கூத்தனுக்கு அது பெருமூச்சே எனலாம்.

 

3. சிவதாணு நிகழ்த்திய செவ்வியில்: ‘நுணலுந் தன் வாயால் கெடும்’

செவ்வி எனப்படும் பேட்டி என்னும் பண்பாட்டுக் கருவியின் சிறப்பு, அதனைத் திறம்படக் கையாளும் முறைமை பற்றியும் சிறப்பாகப் பிரமிள் முன்வைத்துள்ளார்.

“உண்மையில் பேட்டியின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும் தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தைப் பிரச்சனையாளன் (பேட்டி கொடுப்பவர்) இடமிருந்து
வரவழைத்து அவன் சம்பந்தப்பட்ட பொதுவாழ்வின் தெரிவுகளின் மீது உபயோகிக்க லேண்டும்-”

“பிரச்சினையாளன் பேசவிரும்பாத விஷயங்களைக்கூடப் பேசவைக்கிற ஒரு பேட்டியாளன் மூலம் இவ்வளவும் நிறைவேறி ஒரு கலாச்சாரநிலை உருப்பெறவும் வளரவும் முடியும்.”- பிரமிள் (‘கொல்லிப்பாவை’)

ஆனால் இங்கே அவை ‘தல ஒன்னையக்ண்டுக்னேன்’ என்பது போலவும் அவர்கள் இழைத்த இரண்டகங்களைக் ‘கண்டுக்காம’ப் போமாறுமே நடந்தேறும். அவரை இவர் இப்டீல்லாங் கவர்பண்ணுனா; இவர்க்கு அவரும் ‘கவர் பண்ணுவாரு! ( இந்தக்கவர் கையூட்டே)

ஞானக்கூத்தனுடனான செவ்விகளில் குறிப்பிட்ட ஒரே கவிதை குறித்து முன்னுக்குப்பின் முரணான வெவ்வேறு பதில்களை அளிப்பார். அவர்களும் ‘கண்டுக்காமலே’ நழுவிவிடுவர்.
ஆனால் அவருடன் சிவதாணு நிகழ்த்திய செவ்வியில் தமது குறுக்கீடுகள் மூலம் ஞாகூவின் ஒப்புதல் வாக்குமூலத்தையே வெளிக்கொணரவைத்ததே சிவதாணுவின் சாதனையாகும். கூத்தனாரிடம் ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு ‘கவிதையை முன்னிறுத்தி மூச்சு என்றால் என்ன என்று கேட்கிறார் சிவதாணு.

“மூச்சு என்பது வெறும் காற்றை உள்ளிழுத்து வெளியில்விட்டு ஜீவித்திருப்பதல்ல; உயிர் வாழ்தலின் அடிப்படை நிர்ப்பந்தங்களுக்கும் மேலாக ஓர் ஆதாரநிலை மனிதனிடத்தில் இருக்கிறது. இது பாதிக்கப்பட்டால் அவன் உயிர்விடவும் தயங்கமாட்டான். தமிழ் அப்படிப்பட்டது என்று சிலர் (அதாவது பாரதிதாசன்) சொல்லும் போது அதன் மீது மற்றவர்களுக்கு (பார்ப்பனர்க்கு) உரிய உரிமையை மறுப்பதாகும். சங்க இலக்கிய காலத்திலேயே புறநானூற்றின் ஒருபாட்டில் தமிழ் பொதுவானதல்ல என்று சொல்லி ஒரு மன்னன் கோபப்பட்டிருக்கிறான் (எந்தப் பாடலில்? எத்தகைய சூழமைவில்?). தமிழ் எப்போது எல்லாருக்கும் பொதுவாகிறதோ (ஏம்ல ‘சூத்திரர் பிரம்மவித்தைக்கு அருகராகார்’,’ பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமையின்’ இப்டீல்லாம் எல்லாத்துக்கும் பொதுவாக ஆக்கப்படாம மறைச்சுவைக்கப்பட்டது எல்லாம் ஒம்ம ‘மறை’ தாம்ல?)
அப்போதுதான் அது பெருமொழியாகும். அதனால் ஒரு பிரிவினர் (தமிழர்) அப்படிச் சொல்லும் போது ,அது அப்படி அல்ல என்று சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது.” – ஞானக்கூத்தன். இப்படியாகத்தானே கூத்தனார் மடிப்பூனை வெளிப்பாய்ந்தது.

“தவளையின் கூச்சல் போல் தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன் என்று எழுதியிருந்தீர்கள். எந்த இடத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்?”- சிவதாணு

“நேரடியாகக் கம்பன் சொல்லவில்லை. கிஷ்கிந்தா காண்டத்தில் சிறு மாணவர்கள் சத்தமாகப் படிப்பதைத் தவளைக்கூச்சலுக்கு ஒப்பிட்டார். மாணவர்கள் படித்தது தமிழ்தானே? சட்டசபையில் கூச்சல், குழப்பம் என்று சொல்கிறார்களே. அப்போ அங்கு போடப்படும் கூச்சல், தமிழ்க்கூச்சல் தானே?”- ஞானக்கூத்தன் (‘இனிய உதயம்’)

இத்தொடர்பில் தம்முடனான நீண்ட செவ்வியில் கால. சுப்ரமணியம்மின் வினாவிற்கான பிரமிளின் விடையையும் இங்கு காண்போம்: “தவளைகளின் கூச்சல் கேட்டு தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்/ ஆயிரம் வருசம் போச்சு, போயிற்றா தவளைக்கூச்சல்’ என்று, அதுவும் தவளைகளின் கூச்சலாகத் தாம் கருதும் மொழியிலேயே சந்தஸ்காரர் (ஞாகூ) அன்றொருநாள் எழுதியவர். இத்தகைய பிதற்றல்களுக்காக, எனது மதிப்பீட்டின் முன் நிர்மூலநிலை பெற்றவர்.”

“மீண்டும்’சுபமங்களா’ பேட்டியில் மேற்படி தவளைக்கூச்சல்” “சரி, கம்பன் அப்படிச் சொல்லியிருந்தால், அதன் பொருள் என்ன? இங்கேதான் மொழிஅறிவு தேவை என்பதும், இதுபற்றிய அறிவிலித்தனமே சந்தஸ்காருக்கு உள்ள அத்திவாரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். கம்பன் கண்ட தவளைகள், தங்கள் ஞானசூன்யத்தை மறைத்து வெறும் மந்திரங்களை ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கும் பூசாரிகளைக் குறிக்கிறது என்கிறேன் நான்.”

“தமிழ்மொழி பற்றிய கருத்து இதில் இல்லை. தமிழ்மொழியைப் பற்றிக் கம்பராமாயணத்தின் ஆரம்பத்திலேயே உன்னதமாகப்பேசும் கம்பனிடத்தில், தமிழ்மொழியைத் தவளைக்கூச்சல் என்று கருதும் உட்கிடையை எதிர்பார்ப்பது அறிவீனம் – மேற்கொண்டு ‘ஆயிரம் வருசம் போச்சு, போயிற்றா தவளைக்கூச்சல்?’ என்ற கேள்வி, கோமாளித்தனத்தின் எல்லையைத் தொடுகிற ஒரு நிர்மூடனின் மொழித்துவேஷத்தையே வெளிப்படுத்துகிறது”- பிரமிள் (‘மீறல்:4 – பிரமிள் சிறப்பிதழ்’ 1993)

என்னைப் பொறுத்தவரையில் இந்த தவளைக்கூச்சல் விவகாரங் கூட கூத்தனாரின் இன்னொரு கவிதையால் ஏற்பட்ட நச்சுக்கடுப்பு நமைச்சலின் பெறுபேறே என்பேன். ‘தெற்கோதுந் தேவாரந் திருவாய் நன்மொழியான தேனிருக்கக் கற்கோயில் உள்ளே கால்வைத்தது எவ்வாறு சகஸ்திரநாமம்?.. செக்காடும் இரைச்சலென வேத பாராயணம் ஏன்?”. இக்கவிதையில் ‘செக்காடும் இரைச்சலென வேத பாராயணம் ஏன்’ எனும் அந்த வரிகளே கூத்தனார்க்கு வாய்த்த குருதிக் கொதிப்பின் நதிமூலமே. பல்கலைக்கழகம் ஒன்றில் ஞானக்கூத்தன் கவிதைகளைப் பாடமாக வைக்க அவரிடம் கேட்டபோது அதற்கவர் விதித்த முன்நிபந்தனை பாரதிதாசன் பாடல்களைப் பாடமாக வைக்கக் கூடாது என்பதாகச் செந்தலை கவுதமன் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

“உண்மையில் வேதம் ஓதுவதைத்தான் தவளைகளின் தபதபப்புடன் ஒப்பிடுவார்கள்.

‘ஊருடன் பார்ப்பார் கூடி
உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து
நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல
கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ?
பாய்ச்சலூர் கிராமத்தாரே ’
– உத்தரநல்லூர் நங்கை “பாய்ச்சலூர் பதிகம்”.

கால.சுப்ரமணியம்

4. காலவழுக்கலவையாய்க் கூத்தன்.

நம் மடாதிபதிகளின் விசித்திரக் கோலத்தைக் காலவழுத் தோற்றமாய் பகடியாடுவார் புதுமைப்பித்தன். ஞானக்கூத்தன் வக்ரோத்திக் கவித்துவமாக உச்சிமேற் கொண்டாடி நிற்போர் அத்தகு கவிதைகள் எதன் நிமித்தமாக அதனைப் புனரமைக்க எத்தனிப்பவை எனப் பொருட்படுத்துவதே இல்லை.அவை சனாதனத்தைப் புனரைமைக்கு முகமாக இலக்கிய நவீனத்துவத்துடன் இணங்கப்படுத்தக் கூடியனவே. இருபதாம் நூற்றாண்டின் வேதவித்தான காலவழுக் கலவையாகவே அவர் எஞ்சிநின்றார். “பிராமணன் என்கிற முறையில் நான் செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் செய்கிறேன். அதற்கும் மற்றதற்கும் (அதாகப்பட்டது லௌகீகம்) சம்பந்தமில்லை. பிராமணம் என்பது இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் மாதிரி இந்தியா முழுவதும் பரவி இருக்கின்ற ஒரு மதம். அது ஜாதி அல்ல”- ஞானக்கூத்தன் (‘தீராநதி’- மார்ச் 2007). இப்படி அருள்வாக்கு அருளும் ஓருயிரியை காலவழுக் கலவை என்னாமல் வேறு என்னென்பீர்கள்? இது எத்துணை அபத்தம்? இஸ்லாத்தையோ, கிறித்துவத்தையோ பிறசமயிகள் தழுவ நினைத்தால் அதற்கான சடங்குகள், நிபந்தனையுடன் அவர்களை அரவணைக்கும். ஆனால் கூத்தனாரின் பிராமணமதம் அதற்கு இடந்தருமா?

சிவதாணு விட்டபாடில்லை. அடுத்த கேள்வியை எழுப்புகின்றார்: “திராவிடக்கட்சிகளைக் கிண்டல் செய்து நீங்கள் எழுதியிருக்கும் கவிதைகள் பற்றி…” (‘கால வழுவமைதி’, ‘பரிசில் வாழ்க்கை’) :

“என்னுடைய காலத்தில் நான் பார்த்த மேடைகளில் தோன்றியவர்கள் என் கவிதையின் பாத்திரங்கள் என்பது முக்கியம் அல்ல”- ஞானக்கூத்தன். அவருடைய’ மஹ்ஹான் காந்தி
மஹ்ஹான்’ கவிதையைக் காந்தியவாதிகளைக் கேலிசெய்வதாக யாரும் கூறவராத போது திராவிட இயக்கம் சார்பாக மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏனெனக் கேள்வி
எழுப்புகின்றார்.( ‘இனிய உதயம்’- பிப். 2006). தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘சுபமங்களா’ நேர்காணலில் வேறு பதில்கள். இப்படி ஒரே கேள்விக்கு வெவ்வேறு பேட்டியில்
வெவ்வேறு வியாக்கியானங்கள். :

“சற்றுக்கூர்ந்து பார்த்தால் இனத்தின் கீழ்த்தட்டு மக்கள் எழுச்சியுறுவதை இக்கவிதை தெளிவாக்குவதைப் பார்க்கலாம். இந்தக் கவிதைகளைக் கொண்டு நான் திராவிட அல்லது
தமிழ் இன எதிர்ப்புச் செய்கிறேன் என்று கருதுவது சரியல்ல.”

மாற்றுத்தரப்பைக் காண்போம்: “காலவழுவமைதி என்கின்ற கவிதையைத் தொகுப்பில் சிறந்த கவிதையாக நான் சொல்வேன். இந்தக் கவிதையை ஒலிபெருக்கி அலறும் பொதுக்கூட்ட இரைச்ச பின்னணியில் ஓர் அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக்குரலில் படிக்கலாம், படிக்க வேண்டும்.” -சுஜாதா (‘கணையாழி ‘),
இது 1991 இன் ஞாகூ நூல் இறுதிப் பதிப்பிலும் இணைக்கப்பட்டுளதென அம்பலப்படுத்துகின்றார், மதிவாணன் பாலசுந்தரம் (‘ அடிவானம் நோக்கிச் சில அடிகள்’).

இத்தொடர்பில் ஆமாம் அவர்களைத் தான் அப்படி விமர்சித்தேன் என நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திராணி கூத்தனாருக்கு ஏனில்லை? இதுதான் பாபர் மசூதி இடிப்பு வரை, தம் செயல்களுக்குத் தாமே தார்மிகப் பொறுப்பேற்க மாட்டால் பின்வாங்கி மழுமாறும் சங்கிகளுக்கே உரித்தான கோழைத்தனம் எனலாம். இப்படியாகத்தானே தமிழவன்,
ஆல்பர்ட் வகையறாவின் கூத்தன் குசுக்களின் நறுமணம் பற்றிய அமைப்பியல் மற்றும் நுண்மத்தீர்வு (Precision) உள்கட்டுமான வாசிப்பின் பிரதிகளின் கதி ‘அதோகதி’ யாகிப்
போயின.

“ஒரு பக்கம் செம்மொழின்னு சொன்னாலும் சிரமப்பட்ட மொழியா இருந்தது. இலக்கியம்ன்னு வரும்போது தமிழ் ஒரு முதிராதமொழி; புதிய விஷயங்கள அதுல சொல்ல முடியாது. புதுக்கவிதை அதை நவீனப்படுத்தியிருக்கு.”- ஞானக்கூத்தன் (‘காலச்சுவடு’)

“கலை வெளியீட்டுக்குத் தமிழ்மொழி இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதத் தொடங்கிய போது இருந்ததைப் போலவே
விருத்தியடையாமல் தமிழ் இருக்கிறது. எல்லாவற்றையும், ,’ in and through Words ‘ – இல் சொல்லியாக வேண்டியிருக்கு. என் மூளை எழுதியிருக்கின்ற சில அபூத ”impression’களை ‘express’ செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்போதுள்ள தமிழ் வெளியீட்டுக்குச் சரியான. அளவில் துணைபுரிய முடிவதில்லை”- மௌனி(‘கணையாழி’) ஞாகூ உடனான பேட்டியை எடுத்தவர் குவளைக்கண்ணன். மௌனி உடனான நேர்காணல் நிகழ்த்தியவர் துர்வாஸ ஜே.வி.நாதன். மௌனிக்கும் கூத்தனுக்குந்தான் எவ்வளவு அகமலம்?

“இவர்கள் (மௌனி, கூத்தன்) ஆதாரம் என்ன? தாங்கள் எழுதுகிற மொழியின் மீதே துவேஷம் – தாங்கள் பயில முடியாதமொழி தங்களுக்கு அத்துபடி என்ற பம்மாத்து – இந்த அடிமட்டப்
பாமர நிலையில் கூட பிறப்பின் அடிப்படையில் தாங்கள் ஒஸ்தி – நாம் தமிழரரல்லர் என்ற பிரமை. விவகத்தின் தீட்சண்யத்தோடு பழைமையைப் பார்த்தால், அதில் கூட இத்தகைய தவளைகளுக்கு ஒஸ்தியான இடம் கிடைக்காது. இத்தகைையவர்களின் இயக்கங்களை இவற்றுக்கு உரிய சாக்கடைகளுக்குத் திருப்பிவிடுவதுததான், இந்தியாவின் ஞானார்த்தக் கலாச்சாரத்தைப் பேணுகிற ஒரே மார்க்கமாகும்.”- பிரமிள்( ‘பேட்டிகளும் உரையாடல்களும்’)


வே.மு.பொதியவெற்பன்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *