மனித மனம் அவன் வாழும் வாழ்வைப் போலவே பிரதிபலிக்கக் கூடியது.
எந்திரங்களோடு மனித குலம் வாழப் பழகிய நூறாண்டுகளில் அவனுள் நிகழ்ந்த மாற்றங்களும் அளவிட முடியாதவை.
புரியாத புதிர்கள்…. விடையில்லாத கேள்விகள்…. எதிர்பாராத தருணங்கள் —- திடீரென நிகழும் திருப்பு முனைகள் இவை யாவுமே மனிதனை அகமும் புறமுமாய் புடம் போட்டு, வாழும் சமூகத்திற்கான அனைத்து எதிர்பார்ப்புகளோடும், உலகத்தோடும் ஒட்டி வாழக்கூடிய உடலாலும் மனதாலும் திறன் மிக்க மனிதனாகவும் வார்த்து எடுக்கிறது. இதனிடையே தன்னுள்ளே முரண்படும் தன்னையும் புற உலகில் தன்னை விலக்கி, எதிர்ப்படும் முரண்களையும் சில ஒத்திசைவுகளையும் கண்டு மனிதன் தன்னையும் பிறரையும் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.
இந்த முரண்களையும்… ஒத்திசைவுகளையும் ஒரு கவியானவன் தனது மொழியின் வழியாக தேர்வு செய்து வாழ்வின் புதிர்களை அவிழ்க்கத் தொடங்கும் போதுதான் கவிதைகள் வழியாக கவியானவன் வாழ்வின் புதிய தரிசனங்களை கண்டு கொள்கிறான். மேலும், கவிதைகளை வாசிக்கும் ஒரு வாசகனும், அந்த மொழியின் வழியாகவே அவனுடைய அனுபவம் சார்ந்து வாழ்வின் வேறொரு தரிசனத்தை கண்டடைகிறான்.
‘கல்வெட்டு பேசுகிறது’ ஆசிரியர் சொர்ண பாரதியின் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ கவிதை நுாலை கையில் எடுத்த போது முதல் வாசிப்பில் கனத்த மொழி, தொடர் வாசிப்பின் வழி ஒரு மழைக்கால வாடைக் காற்றாக என்னை அணைத்துக் கொண்டது.
மௌனம் கலைத்து சலனமுறும் அக்குளத்திலிருந்து வெளியேறுகிறது எல்லாச் சுமைகளையும் சுமந்த அந்நத்தை”
‘செயலற்று’ என்ற தலைப்பில் தொடங்கும் இக்கவிதை கிளர்த்தும் மன உணர்வுகள் ஒரு நத்தையைப் போல் மனக் குளத்திலும் விழுந்து மௌனம் கலைத்து வெளியேறுகிறது.
சில காத்திருப்புகள்… சில புறக்கணிப்புகள்.. புறந்தள்ளப்படும் நிஜங்கள்… பாசாங்குகள் இவையாவுமே சுமைகளாய் அழுந்த… அழுந்த மனித மனம் ஒரு நத்தையாகிப் போய்விடுவது இக்கவிதையில் குறியீட்டு வடிவமாக வெளிப்பட்டுள்ளது.
பொதுவாக, உரையாடல் என்பது மனிதர்களுக்கு இயல்பாக வரும்பட்சத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் விதத்திலும் சிரமங்கள் இல்லை. ஆனால், மொழியின் உச்சமான கவிதையில் வாசகனை சென்றடையக் கூடிய சொற்கள் கவியின் பிரஞ்ஞையில் எவ்விதம் நிழலாடுகிறது என்பதை புரிந்து கொள்வது சிரமம்.
கவிதையில் புனைவாகவும், பூடகமாகவும் நடனமிடும் சொற்கள் சற்றே விலகி எதார்த்த நடைக்கு வரும்போது வாசகன் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாகாமல் வாசிக்கலாம். அது கவிதையாக சற்றே உருத்திரண்டு கொள்வது என்பது வாசிப்பவரின் உளம் பற்றி நிற்கிறது.
‘கடாட்சம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை; இதில் யதார்த்தம் என்ற பெயரில் திறந்த நடைபயிலும் மொழி நமக்கு கவிதை வரிகளாக வாசிக்கக் கிடைக்கின்றன.
பத்து காசு தருவார் அப்பா தினமும் வாங்கித் திங்க வெல்லம், பொட்டுக்கடலை, இல்லையின்னா மரவள்ளி, சக்கரவள்ளி, பள்ளி வரைக்கும் தாளும் எனக்கும் ஜெகதீசனுக்கும் …….. பள்ளில மொத மார்க் வாங்கி எச் எம் கிட்ட நின்னப்ப ஆறு வருஷம் கழிச்சு உன்ன டாக்டரா பாக்கணுன்டான்னாரு பியுசில ரெக்காடு நோட்டு வாங்க காசில்லாம புத்தகத்தெல்லாம் கடையில போட்டுபுட்டு கூட்ஸ் ஷெட்ல கரியள்ளப் போயிட்டேன் முந்தாநேத்து புத்தகம் வாங்க காசு கேட்டதுக்கு அப்பன் அடிச்சிட்டான்னு அழுத முனுசாமி மகனுக்கு புத்தகம் வாங்கிக் குடுத்தப்ப அவன் மொகத்துல பாத்த சிரிப்பு நானே பட்டம் வாங்கின மாதிரி இருந்துச்சு.
மொழியின் மேதாவித் தனங்களை அடியோடு கைவிட்ட இந்தக் கவிதையில் மீண்டும் திரும்ப முடியாத வாழ்வின் ஏதோ ஒரு கணத்தை வாசகன் மனதில் அழுந்தப் பதித்துவிட்டு போகிறார் . கவிதையின் இறுதி வரிகள் அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை மொட்டவிழித்து விடுகிறது.
புன்னகை (பக்.51) உன் மர்மப் புன்னகையின் / பொருள் புரியாமலேயே / பல நூற்றாண்டுகளைக் கடந்து வியக்கிறேன்.
புன்னகை பொருள் புரியாமலும், மர்மம் நிறைந்ததாகவும் இருக்குமென்றால், அதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? என்று ஒரு கேள்வியும் தவிர்க்க இயலாமல் வாசகனின் மனதில் எழும்பும் விதமாக வரிகள் இருக்கின்றன.
டாவின்சியின் தூரிகைத் துளிகளில் பிறந்தவளே பேசும் பொற்சித்திரமே நகலெடுத்து விற்றாலும் களவு போய் மீண்டாலும் எப்படி இன்னும் இளமை மாறாப் புன்னகையுடன் மயக்குகிறாய் என்னை மோனலிசா.
என்று கூறும் போது அந்தக் கவிதையின் இந்த ஐந்தாறு வரிகளுக்குள்ளாகவே, மோனாலிசாவின் புன்னகையை நம் முன் பேசும் பொற்சித்திரங்களாகவே கவிதை மொழியில் உருவாக்கிவிடுகிறார்.
அருங்காட்சியகச் சிறையில் பூட்டி வைத்தாலும் மோனாலிசாவின் புன்னகையை கவிதை மொழியில் மீட்டு, அதை வாசகரிடம் விட்டு விடுவதும் ஆகச் சிறப்புத் தான்.
புனைவு, பூடகம், படிமம், உத்தி என்று எந்தக் குறிக்கீடும் இன்றி கடந்து போகிறது. வரவேற்பு’, ‘மனக்கூடு’ என்று தலைப்பிட்ட கவிதைகள்.
சில சம்பவங்கள் மனதில் நிழலாடும் போதும் மொழி அவனுள் தனக்குள் தானே பேசிக் கொள்ளும் போதும் கவிஞன் வேறு ஒன்றும் செய்வதறியாமல் ஒரு கவிதையாவது எழுதி விட முடிகிறது. வரவேற்பு (பக்.57) என்ற கவிதை அப்படியானதொரு உரையாடலை கவிமொழியாக கவிஞருக்குள் நிகழ்த்தியிருக்க வேண்டும்.
இரண்டாயிரமாண்டு கவிதை மரபில் இலக்கண, இலக்கிய வரையறைகளுக்குட்பட்டு தொடர்ந்து வந்த கவிதை மொழி, இன்றைய சமூக, பொருளாதார அரசியல் போன்ற புறச் சூழல்களில் மனித மனம் கடந்து வந்த அளவற்ற பாதைகளுக்கேற்ப இலக்கணக் கட்டறுத்து தன்னை வெவ்வேறு வடிவங்களாகவும், வெவ்வேறு உத்திகளாகவும், வெவ்வேறு மொழி வெளிப்பாடுகளாகவும் வரையறுத்துக் கொள்கிறது.
சமூகச் சூழல் காரணமாக நெருக்கடிகளுக்கு உள்ளாகும் ஒரு மனம், வாழ்வின் சுயங்களை தொலைத்து, பின் ஏதோ ஒரு தருணத்தில் தன் சுயம் தேடி அலைகிறது. இதில் மொழியைக் கைப்பற்றும் திறன் உள்ள கவிமனம் கொண்ட இலக்கிய ஆர்வலர்களால் மட்டுமே இலக்கிய உலகில் தனக்கான வெளியை சுயமாகக் கட்டமைக்க முடிகிறது. மொழி வழியே விரியும் உலகம் படைப்பாளிக்கு மட்டுமே உரியதல்ல. ஒரு கவிதை மொழி வாசகனை அடைந்து, அவன் வாசிக்கத் துவங்குகையில் புற உலகின் சப்தங்கள் அவனுள் ஒடுங்கி விடுகின்றன.
புற உலகில் அவன் கண்களால் கண்ட உலகம் இப்போது, அக உலகில் வேறொன்றாக பரிணமிக்கிறது. கவிதையின் பாடு பொருள் எத்தன்மையதாக இருப்பினும், மொழியின் பன்முகத் தன்மையை உள்வாங்கி படிப்பவரால் மட்டுமே, மொழியின் அக, புற அடையாளங்களை எளிதில் கண்டுணர முடியும்.
கவிதை வரிகளில் எளிமை, எதார்த்தம் என்று கூறி எழுதி வருபவர்கள் மொழியை அமைதிப்படுத்தி விடுகின்றனர். ஆனால், கவிதை மொழியின் கூர்மை, வாசிப்பின் வழியே கட்டறுந்து உள்ளத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. மொழி எப்போதும் அமைதி கொள்ளாது என்பதை வாசகன் உணர வேண்டும்.
‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ (பக்.95) என்ற தலைப்பிட்ட ஒரு கவிதையில் ‘எந்திரங்களோடு பயணிப்பது யாவர்க்கும் சாத்தியமல்ல’ என்று தொடங்கி, எந்திரங்களின் பயன்பாடுகளையும், அசைவுகளையும், அதன் உறுதியான கட்டளைகளையும் கூறிவிட்டு, பிறகு கருணை சுரக்கும் விழிகளாக ஸ்கேனரையும், அதன் பரி– கசிப்பையும் வார்த்தைகளாக மாற்றி உறவாடிக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத தருணத்தில் ரிமோட் தொலைந்து போக எந்திரம் செயலற்றுப் போகிறது. அதன் விளைவுகள் எப்படியாயினும், எந்திரங்கள் மிக அன்பானவை அவற்றோடு பயணிக்கவும் வாழவும் பிடிக்கிறது என்று கூறி முடிக்கிறார்.
மனிதன் இப்போது வரை எந்திரங்களோடு பயணித்தும் வாழந்தும் வருபவன் தான். ஆனால், மனித வாழ்க்கை வெறும் அறிவின் நீட்சியில் இயந்திர கதியில் செயல்பட்டு விடுமானால் என்ன செய்வது? இயந்திரமயமான மனித வாழ்வை உணர்வுகளின் செயல்பாட்டில் சற்றே ஆசுவாசப்படுத்தும் இலக்கிய வடிவங்கள் இது பற்றி நிறைய எழுத வேண்டும்.
கவிஞர் சொர்ணபாரதியின் இந்த தொகுப்பு வெறும் நினைவுச் சரடுகளாக மட்டும் அல்லாமல் வாழ்க்கையின் மீதும் சக தோழமைகளின் மீதும் நட்பும் காதலும் கொண்ட இவரது மனம் போலவே இவரது கவிதைகளும் கோடைக்காலத்து மழைச்சாரலாய் நம் மனதையும் நனைத்துப் போகிறது.
– கவிஞர் மஞ்சுளா.
நூல் பின் அட்டையிலிருந்து:
அழகான காட்சிச் சித்திரங்களாகவே பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. எனவே, பெயரிடப்பட்டோ அல்லாமலோ பாத்திரங்கள் உருப்பெற்று உயிர் பெற்றிருக்கிறார்கள். சில பாத்திரங்கள் மீதான அபிப்பிராயத்தை கவிதைகள் ஏற்படுத்தி விடுகின்றன. நுட்பமான மனவெளியின் பெரும்பரப்பின் பல்வேறு இடங்களைத் தொட்டுச் செல்லும் கவிதைகளாக அவைகள் அமைந்திருக்கின்றன. சமூகச் சூழல், சுயம்சார் பொருளாதார அவஸ்தைகள், அவற்றின் மூலம் எதிர் கொண்ட இன்னல்கள், வாய்க்கும் போது அந்த நினைவுகளோடு சக மனித நேயத்தோடும், கடப்பாட்டோடும் செயலுறும் தன்மையென பல நல்ல செய்திகளை உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பாக "எந்திரங்களோடு பயணிப்பவன்” அமைந்திருக்கிறது.
- தமிழ்மணவாளன்
முப்பது வருடங்களுக்கும் மேலாக நவீன தமிழ் இலக்கிய உலகில் உத்வேகத்தோடு இயங்கிவரும் தோழர் சொர்ணபாரதி கனிவான மனிதர். சமூகப்பார்வையும், அக்கறையும், கொண்டவர். 'நான்தான் கவி; நானே கவி' என்று தன்னை அடிக்கோடிட்டுக் காட்டிக் கொள்ளும் பகீரதப்பிரயத்தனங்களோ, 'நவீனத் தமிழ்க் கவிஞர்கள் பற்றிய வரலாறுகளில், பட்டியல்களில் தன் பெயர் இடம் பெறவில்லையே' என்ற புலம்பல்களோ தோழர் சொர்ணபாரதியிடம் என்றுமே கிடையாது! கவிதை எழுதக்கிடைத்ததே அரும்பெரும் கொடுப்பினையாக ஆரவாரமற்று, தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிறார். இவருடைய கவிதைகளில் மிக எளிமையான மொழியில் / கவிதைக் கட்டமைப்பில் எழுதப்பட்டவையும் உண்டு, அடர்செறிவான மொழியில் பூடகமும், இருண்மையுமாக எழுதப்பட்டவைகளும் - உண்டு! தமிழ்க்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துவருபவர் என்ற வகையில் நவீன தமிழ்க்கவிதைப் போக்குகள், தேக்கங்கள், அரசியல்கள் எல்லாமே அறிந்தவர்.
- லதாராமகிருஷ்ணன்
நூல் : |
எந்திரங்களோடு பயணிப்பவன் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | சொர்ணபாரதி |
வெளியீடு: | அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,
41, கல்யானசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை -600011. |
வெளியான ஆண்டு : | அக்டோபர் 2015 |
பக்கங்கள் : | 112 |
விலை : | ₹ 90 |
தொடர்புக்கு : | 9444641986 |
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.