விதை தொகுப்புக்கு கவிதையையே தலைப்பாக்குவது கூடுதல் பலம். தலைப்பில் இருந்தே ஆரம்பித்து விடும் கவிதைகளில் காதல், சமூகம், இயற்கை, சக மனிதர்கள், கல்வி, இயலாமை, வெறுமை, வஞ்சம்.. என்று பரந்து பட்டு விரியும் சிந்தனைகளின் வழியே ஒரு இளம் கவிஞரின் பார்வையில் இந்த உலகம் கவிதைக்குள் மிக நுட்பமாக சுழல்வதை உள்வாங்க முடிகிறது.

மொழி எத்தனை எத்தனை சத்தங்களால் ஆனதோ, அதே மாதிரி அத்தனை அத்தனை மௌனங்களாலும் ஆனது. நின்று நிதானித்து மெல்ல கவனித்து முன்னேறும் நீரோடைகளின் நிழலில் ஒரு ஸ்திரம் இருக்கும் தானே. அது தான்.. இந்த ‘மௌனம் ஒரு மொழியானால்.

சமூகம் சார்ந்த ஆதங்கம் உண்மையின் பக்கம் நிற்கும் எதிர் குரல், அதிகாரத்துக்கு எதிர்புறம் நிற்கும் எதிர்ப்பு மனநிலைஎன்று எல்லா திசைகளிலும் .தான் கற்றுணர்ந்த அறிவு கொண்டு தன் மனோநிலையை விசாலப்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்லதொரு சமூகத்தின் திறவுக்கான வழியாக தன் உற்று நோக்கலை கண்டடைந்திருக்க வேண்டும் கவிஞர். அது அடுத்தடுத்த கவிதைகளில் பிரதிபலிக்கின்றன.

“தனிமை எப்போதும் தனிமையாகவே இருந்து விடுவதில்லை. அதில் கவிதைகள் மெல்ல இணைந்து கொள்கின்றன” என்று அவரின் தன்னுரையில் அவரே கூறுகிறார். தனித்த பொழுதுகளையெல்லாம் கவிதைக்குள் அடைத்து தகித்த பொழுதுகளாக்கி இருக்கிறார். தொலைநோக்கு சிந்தனை ஒவ்வொரு பக்கத்திலும் சொற்சுவை மட்டுமல்ல, பொருள் சுவையும் கூட்டுகிறது.

நூலின் முதல் கவிதையே.. “பாரதி” என்ற தலைப்பில் தான். நம்புகிறேன் அது பாரதியை கற்றுணர்ந்த தவிப்பில் தான்.

“தலைப்பாகை தரித்த தமிழ் தலைவன் நீ” என்று ஆரம்பிக்கும் அந்த கவிதையில் தமிழை பாரதி எங்கணும் தூக்கி வளர்த்தான்… எங்கணும் நகர்த்தி பிடித்தான் என்று மிக அழகாக சொல்லிக் கொண்டே வந்து அந்த பக்க முடிவில் ஒரு நான்கு வரி இன்னும் சூடாய் அக்கினி குஞ்சை அணையாமல் எரிய விட்டிருப்பதை காண்கிறோம்.

“சில தூக்க மாத்திரைகளால்
நித்திரைக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய்
உன் பாடலின் கூவலில்
சோம்பல் முறித்தெழுந்தாள்”

என்று எழுதுகிறார்.

எத்தனை உண்மை. பாரதிக்கு முன் சில காலம் சென்றால்… வெறுமைதான் தமிழுக்குள் விளையாடி இருக்கும். வள்ளலாருக்கு பின் வெகுண்டெழுந்த சொற்களை பாரதிதான் பெருங்கவிதையாக்கினான் என்றால் பாரதி தான் எளிய மனிதனுக்கும் எழுதினான் என்றால் மாற்று கருத்தும் வரலாம். மறுப்பு கருத்தும் வரலாம். ஆனாலும்.. ஒத்த கருத்தை உள் வாங்கியபடி சொன்னால் நித்திரையில் கிடந்த தமிழை தட்டி எழுப்பி ஜுவாலையாக்கியது பாரதி என்ற பாரின் ரதி தானே.

நம்மை போன்றோருக்கு பாரதியே துணை.

“கனவு” என்ற தலைப்பில் ஒரு கவிதை.

அதில் தமிழை ஆழ் கடல் என்கிறார் கவிஞர். அது சிறகுகள் பல கொண்ட சித்திர வேலைப்பாடு என்கிறார் கூடவே.

திருக்குறள், தொகைநூல், காப்பியங்கள், திருவாசகம், கம்பராமாயணம் என்று திரும்பும் திசையெல்லாம் அதன் முகங்கள் தான் என்கிறார் இன்னும். பிரமிக்க செய்யும் சப்தங்களை தமிழ் கொண்ட ஒவ்வொரு இலக்கியத்திலும் கண்டுணர செய்யும் கவிஞரின் கனவுகள் மெல்ல தமிழின் நினைவுகளை நம்முள் நிரப்பி செல்கிறது.

அடுத்தொரு கவிதை “நாட்டியம்” என்று.

நாட்டியத்தில் என்னவெல்லாம் நடக்கும். பாவனை எப்படியெல்லாம் இருக்கும். ஒப்பனையின் சொரூபம் என்ன மாயம் செய்யும். கால்களின் கைகளின் கண்களின் கன்னங்களின் அபிநயங்கள் எப்படி எப்படி மானுட கோலமிடும் என்று சொல்லிக் கொண்டே வந்து இறுதியில், அதற்கு எடுத்த பயிற்சி காலங்கள் சத்தமின்றி சிரித்துக் கொண்டிருக்கும் என்கிறார். எள்ளல் தொனியில்… எஞ்சிய இறுதியில் இருந்து மீண்டும் சுழல ஆரம்பிக்கும் நாட்டியத்தின் மறு ஒளிபரப்பை அவரவர் விருப்பப்படி மேடையின்றியும் உணர முடிகிறது.

அடுத்தொரு கவிதையில் இளையோரின் படிப்பும் அதைத் தொட்டு அவர்களின் வேலை வாய்ப்பு பற்றிய சூழலையும் ஆதங்கத்தோடும் அதே சமயம் அற சீற்றத்தோடும் வெளிக்கொணர்கிறார்.

தலைப்பு… “வேடிக்கை பொருளானதோ”

இந்த கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த சில வரிகளை சொல்கிறேன்.

“இல்லாதவனுக்கு இல்லையெனும்
குறை தாண்டி குறையேதுமில்லை
இருப்பவனுக்கு இருப்பதெல்லாம் இருப்பாக்கிக் கொள்தலே
இலக்காகியிருக்கும்”

இளைஞர்களின் இன்றைய உலகத்தை அதன் நிதர்சனத்தை பரிதவிப்போடு பதைபதைப்போடு முன்னெடுத்து சொல்லவும் எழுதவும் காலம் கற்றுத் தந்திருக்கிறது இவருக்கு.

காலத்தை போல சிறந்த ஆசான் வேறுண்டோ.

“அனுசரித்து நடந்தேன் அடிமை என்றது
சுதாரித்து நடந்தேன் சுயநலம் என்றது
புரிந்து நடந்தேன் புத்திகெட்டவள் என்றது
பிரிந்து நடந்தேன் பிணைப்பற்ற பிறவி என்றது
விட்டுக் கொடுத்தேன் விவரமற்றவள் என்றது
பிடிவாதம் கொண்டேன் பெண்ணாயிவள் என்றது
பரிசுகளைக் குவித்தேன் பெருமை என்ன இதில் என்றது”

“அன்பு அடிமைத்தனமானால்” என்றொரு கவிதையில் தான் இவ்வரிகள்.

இந்த கவிதையில் படித்த பெண்ணுக்கே உண்டான சுற்றத்தினால் எழும் பேராபத்துகளை தடம் பிரித்துக் காட்டுகிறார்.

சுற்றம் செய்யும் கட்டுப்பாடுகளின் கோரங்களை சொல்லில் வடித்து முடியாது. அறிவாளியெல்லாம் எதிர் வீட்டில் இருந்தே வர வேண்டும். தன் வீட்டில் எப்படி அறிவாளி என்று தன் வீடே நம்ப மறுக்கும். விருதுகளைக் கொண்டு வேறன்ன செய்ய முடியும். வியாக்கியானங்களை வாங்கி நிரப்புவதை தாண்டி என்று ஒரு பெண் அதுவும் பேரன்பின் வடிவத்தில் இவ்வுலகை வெல்ல புறப்பட்ட ஒருத்திக்கு நேரும் துயரங்களை. இந்த வடிவம் தான் என்றில்லாமல் வந்து விழும் வன்முறையை சுற்றம் பார்க்கும் குற்றத்தில் இருந்து கண்டெடுக்கிறார். மீண்டும் மீண்டும் அடைபடும் கூண்டு கிளிகளின் விடுதலையை நிகழ்த்தியே ஆக வேண்டும் என தான் எழுதியும் இருக்கிறார்.

மனம் ததும்பும் சொற்களில்… கனம் கூடி நகர்ந்தேன். அடுத்து

“மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கூற்று .. இங்கே மாற்றம் ஒன்று நேராததே வருத்தம்” என்று மாற்றம் குறித்தான தன் வருத்தத்தை, அக்கறையை ஒரு கவிதையில் பதிகிறார் முத்துமீனாட்சி.

நீண்ட நெடிய அகல விரிந்த தேடல் இருந்தால் தான் மாற்றத்தின் வழி நின்று மற்றவைகளை யோசிக்க முடியும். மாற்று சிந்தனை மங்கைகளுக்கு தேவையான பரிணாம வலிமை. அதை தேடி நகரும் கவிஞரை பாராட்டத்தான் வேண்டும்.

“வலி வழியே” என்றொரு கவிதையில் இயல்பாக இருக்கும் பெண்ணுக்கு அந்த ஒரு நாளில் இருந்து எல்லாமே ஏதோ ஒரு நாளாக மாறுகிறது. இடுப்பு வலியோடு அவர்கள் ஒரு சிருஷ்டிக்கு தயாராவதை துக்கம் நிரம்பிய சொற்களானாலும், நம்பிக்கை கொண்டு வார்க்கிறார். வருங்காலம்.. பெண்ணின்றி எப்படி பிறக்கும் என்பது தான் இவ்வுலகின் பெண்களுக்கான உயரிய இடம். பெண்ணே ஆதி. பெண்ணே அந்தம். கால சிருஷ்டி பெண். காலத்துக்கும் அவளே முன்.

“உருமாற்றம்” என்ற கவிதையை இந்த தொகுப்பில் மிக முக்கியமான கவிதையாக பார்க்கிறேன்.

” என்னவாயிற்று இன்று” தான் ஆரம்பிக்கிறது கவிதை. கேள்விகளால் ஆனது தான் இங்கு எல்லாமும். அது கவிதைக்கும் சால பொருந்தும்.

உலக நடப்புகளைத் தொடர்ந்து மேற்படிப்பு பற்றிய முடிவெடுக்கும் உரிமை என்று பிடிக்காத உணவை வீசியெறிய முடிகின்றது என்பன சேர்ந்து திருமணம் தான் வாழ்வின் இலக்கு என்று யாரும் சொல்லாதது பற்றி காலை பத்து மணிக்கு எழுந்த போதும் தேனீர் கூட கிடைத்தது என்று இப்படி இதுவரை இருந்த கட்டுக்கோப்புகள்.. திரை மறைவுகள், வளையங்கள் என்று எல்லாம் கடந்த நிலையில்., அவளிடம் முக்கிய முடிவெடுக்கவும் ஆலோசிக்கவும் செய்கின்ற…

இப்படி அந்த வீட்டில் எல்லாமே தலைகீழாய் மாறி இருக்கிறது.

கரண்டி பிடித்த கையில் கியர் வண்டி கூட கிடைக்கிறதாம். வீட்டு படியைக் கூட தாண்ட கூடாதென சொல்பவர்கள் இன்று வங்கிக்கெல்லாம் அனுப்புவது… பற்றி வியந்து…

என்னடா நடக்குதுன்னு கண்ணாடியில் பார்க்கிறாள் இவள்.

இன்று இவள் ஆணாக உருமாறி இருக்கிறாள் என்று கவிதை முடிகிறது.

மிகவும் ரசித்தேன். அதே நேரம் இன்னமும் இங்கு ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்ற பாகுபாடு நிலவுவது குறித்தான யோசனையை மிக தீவிரமாக தூண்டி விட்டது..கவிதை.

ஒரு வீட்டில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் இடையே காட்டப்படும் வேறு வேறு நிலைகளை உள்வாங்குகையில் பெண்ணை எந்த இடத்தில் இந்த சமூகம் வைத்திருக்கிறது என்பதை இன்னும் ஆழமாய் தேவையாய் உணர முடிகிறது. விடுதலை என்ற பெயரில் ஒரு பக்கம் தறிகெட்டு திரியும் சில பெண்களையும் காண்கிறோம். ஒரு பக்கம் கட்டுப்பாடு என்று அடிமைப்பட்டுக் கிடக்கும் பல பெண்களையும் காண்கிறோம். சமநிலைக்கு பாலமாகி எள்ளல் தொனியில் முகத்தில் அறையும் இந்த கவிதை நிஜமாகவே பழமைவாத பத்தாம் பசலித்தன உள்ளங்களின் உருமாற்றத்தின் உன்னதத்தை வேண்டி தான் நிற்கிறது.

இன்றும் கூட பல ஊர்களில் ஆண் குழந்தயா..! அப்பாடா என்கிற மனம்., பெண் குழந்தயா..! அய்யோடா என்கிறது.

“உருமாற்றம்” இந்த தொகுப்பில் சிறந்த கவிதையாக எனக்கு படுகிறது. இந்த நூலின் நோக்கம் இந்த கவிதையின் வாயிலாக அடுத்த கட்டம் நகர்வதாக நம்புகிறேன்.

“விழுந்தேன் வருத்தமில்லை
இணைந்தேன் என் இயல்புமில்லை
களைந்தேன் கவலையில்லை
நகர்ந்தேன் நஷ்டமில்லை
அருவிகள்
வாழ்வின் அர்த்தங்கள்”

என்று ஒரு குறுங்கவிதை.

அடடா இதை நாம் எழுதாமல் போனோமே என்று தானாக சிரித்துக் கொண்டு நானாக யோசித்தேன். கவிதைகளை நாம் எழுதுகிறோம் என்று பல நேரம் எழுதினாலும்…சில கவிதைகள் தன்னை தானாகவே எழுதிக் கொள்ளும். அப்படி ஒரு கவிதை இது.

அருவி வாழ்ந்து தீர்வதற்கு உதாரணம். நல்ல வாழ்தல் அருவியாய் ஆவதால் உதாரணம்.

அடுத்து
“ஒரு தலைக்காதல்” என்றொரு கவிதையில் காதலின் ஸ்வரம் தன் துக்கத்தை மீட்டுகிறது.

காதல் எப்போதும் சிக்கலானது. அதில் தான் அதன் அழகு கூடு கட்டுகிறது. சொல்லவும் முடியாமல் சொல்லியும் முடியாமல் சொல்லில் தவிக்கும் காதலை ஒரு பத்தியில் இப்படி சொல்கிறார்.

“இதுவரை பார்வையே
பக்குவமாய் பதித்திடாத உனக்கும் எனக்கும்
என் சாயலில் ஆணும்
உன் சாயலில் பெண்ணுமென இரட்டைக் குழந்தைகள்.”

காதலில் ஒரு நிலை இணையை வம்பிழுத்தல். அது மிக ரகசியமான சொல்லாடலில் இங்கே நிகழ்கிறது. கவிதைகளில் பொதியும் ரகசியங்கள் அப்பட்டமானவை. அதில் தான் அதன் ரகசியம் கொண்டாடப்படுகிறது.

இரட்டைக் குழந்தைகள் மட்டுமா காதல். இரட்டைக் குடங்களும் கூட தான் காதல். ஒன்றில் நீரும் ஒன்றில் வெயிலும் நிரம்பி இருப்பது தான் காதலின் கணக்கு. இல்லையா.

“காதலிக்காதீர்” என்ற கவிதையில் வரும் அந்த அவன் செய்யும் மாயங்கள் காதலுக்கே உரிய காந்தங்கள். ஈர்க்கிறது.

சமுகத்துக்காக, சமத்துவத்துக்காக, சரித்திரத்துக்காக கவிதை எழுதிய முத்து மீனாட்சி அப்பாவுக்காகவும் ஒரு கவிதை எழுதி இருக்கிறார்.

எல்லார் வாழ்விலும் மனதுக்கு நெருக்கமான ஒரு சொல் அப்பா. அந்த ஒரு சொல் போதும் தான். ஆனாலும் அப்பப்பா என சொல்ல வைக்கிறது கவிதை.

அதில் ஒரு பத்தி மிக தன்னியல்பாக ஆசிரியரின் டவ்ன் டு எர்த் மனநிலையை முன்னெடுக்கிறது.

“காத்திருந்து நீ கையேந்திய
இந்த கருப்பு பிண்டத்தையும்
கற்பனையோடு அழகென்று வர்ணிக்கும் வினோதம் நீ”

என்று அப்பாவைப் பார்த்து சொல்வதாக இருக்கிறது. அப்பாவின் உயரத்தை உள்ளன்போடு உயர்த்தி பிடிக்கும் சொற்கள். மிக ஆதர்சமாய் ரசித்தேன். அப்பாக்களின் வழியே தான் இந்த வாழ்வும் சிறகும். மீனாட்சிக்கு அது கொடுப்பினையாகவும் மாறி இருக்கிறது. முத்து மீனாட்சிக்கு அவரின் அப்பா பெயர் தான் சிறகும் பொருத்தி இருக்கிறது.

அதில் வரும் “பிள்ளைத்தாய்” என்ற ஒரு சொல் முத்து மீனாட்சி என்ற இவரை மொத்த மீனாட்சியாக ஆக்கி விடுகிறது. தன் அப்பாவுக்கே தாயாகி விடும் மனம் கவிதை தாண்டியும் நெகிழ்த்துகிறது. வாழ்த்துவோம்.

இப்படி “மௌனம் ஒரு மொழியானால்” நூல் முழுக்க உறவும் சிறகும் மாறி மாறி படபடக்கும் பக்கங்களால் நிறைந்திருக்கிறது.

கவிதையின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த காலகட்டம் அதை மிக வேகமாக செய்து கொண்டிருக்கிறது. மீனாவின் கவிதைகளும் இனி இதிலிருந்து மாற வேண்டும். மாறும். இது முதல் தொகுப்பு. முதல் தொகுப்பு எப்போதும் முற்று பெறாது.

தமிழை பெண்ணாக்கி, தமிழை உயிராக்கி, தமிழை வாழ்வாக்கி வாழ்கிறார். தமிழே துணை என்பதுதான் இந்த நூலின் துணைப்பெயராக இருக்க முடியும். மௌனம் ஒரு மொழியானால் அதில் முத்து மீனாட்சி என்ற கவிஞர் ஒவ்வொரு பக்கமிருந்தும் புன்னகையோடு எட்டி பார்க்கலாம்.

அவர் தொடர்ந்து கவிதைகள் செய்து தமிழோடு உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிதைகளை கண்டடைந்தோரை காலம் கை விடாது.


கவிஜி

 

நூல் தகவல்:
நூல் :

மௌனம் ஒரு மொழியானால்

பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்:  முத்து மீனாட்சி
வெளியீடு: தளிர் பதிப்பகம்
விலை : 120
தொடர்புக்கு : 98650 60503

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *