அவதேஸ்வரியை தமிழில் மொழியாக்கம் செய்த இறையடியானுக்கு சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது (2013) கிடைத்தது.

நமது உணர்வுகளின் மேன்மைக்காகவும், வாழும் சூழலின் மென்மைக்காகவும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவும் உறவு முறைகளில் வரைமுறைகள் வகுக்கப்பட்டன.

இது இன்றோ நேற்றோ உருவானதல்ல, மனிதக் குலம் தோன்றியது முதலே வாழ்வியலில் படிப்படியாக அனுபவ ரீதியாக மேம்படுத்தப்பட்டே இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைய அறிவு நடைமுறைக்குப் பொருந்தியோ பொருத்தப்பட்டோ தொடர்ந்து வரும் பட்சத்தில் அனுபவமாகிறது.அனுபவம் புவியியல் அடிப்படைகளை மட்டுமல்ல காலத்தையும் உள்ளடக்கியது.

இந்த அடிப்படைகளின் அஸ்திவாரத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் “அவதேஸ்வரி ” தற்போதைய கட்டுமானங்களை அதிர வைக்கிறது. ஆனால் நாம் நிகழ்காலம் என்பதை மறந்து விடக் கூடாது. இது முக்கியம்.

பண்டைய வட கர்நாடகாவில் உறவு முறையில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டு வருவதற்காகச் சொந்த அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமண உறவு நிகழ்த்தப்பட்டு வந்தது.

இது குறித்த ஹரப்பா – மொஹஞ்சதரோ ஆகிய இடங்களில் கிடைத்த தொல்லியியல் தரவுகளின் மேல் இந்நாவல் படு சுவாரசியமாக புனையப்பட்டுள்ளது.

அகழ்வாய்வில் கிடைத்த சுமார் நூறு குறியீடுகளை ஆசிரியர் இதற்குப் பயன்படுத்தியுள்ளார். வேதங்கள் ஒரே காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாய் உருவாக்கப்பட்டது அல்ல… காலம் காலமாய் பல வேதாந்திகள் அதில் வெட்டியும் ஒட்டியும் கற்பனையும் உண்மையும் கலந்து உருவாக்கி உருவேற்றி உள்ளனர் என்கிறார் புனேகர்.

இருப்பது நூறு சதம் பொய்யுமல்ல.. உண்மையுமல்ல .. , உங்கள் ஆழ்ந்த புரிதலால் இது மாறுபடலாம்.

கதை ஸ்ரீ ராமபிரான் பிறந்த அயோத்தி நாட்டில் நடக்கிறது. அவர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ..!

எகிப்து மன்னராட்சியிலிருந்த வழக்கத்தைப் போல அயோத்தியின் பேரரசர் புருகுதச்சர் தனது தங்கை நர்மதாவை (புருகுத்சானி) பெரியோர்களின் வற்புறுத்தல் வழக்கத்தின் பேரில் மண முடித்து கொள்கிறார். ஆனால் தங்கையிடம் அவருக்கு உறவு கொள்ள விருப்பமில்லை. எனினும் பாலியல் வேட்கை இமயம் அளவு .அதைத் தனித்துக் கொள்ளப் பல பெண்களை நாடுகிறார் . இது அரசிக்கு (தங்கைக்கு) பிடிக்கவில்லை.

பாலியல் உணர்ச்சி பொதுவானது. அது அவளுக்கும் உண்டு .ஆனால்.அரசரைப் போல் வாய்க்காலில் எல்லாம் அள்ளிக் குடித்து விட முடியாது. எனவே அவள் அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டு தன் விவேகத்தின் மூலம் அயோத்தி ஆட்சி அதிகாரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறாள். இந்த மடைமாற்றம் அவள் விரக தாகத்தை ஓரளவு தணிக்கிறது. தனக்காக எதையும் செய்யும் ஒரு நம்பிக்கையான குழுவையும் உருவாக்கி பேரரசை காக்கிறாள். மக்களும் கொண்டாடுகின்றனர்.

இடையே ஒரு போரின் போது காமத்தில் முயங்கிக் கிடந்த மன்னரைக் காசி அரசன் சிறை பிடிக்கிறாள். அதே சமயம் அவள் கணவன் புருகுதச்சனால் ஒரு பிரயோசனமும் இல்லை அரசிக்கு.., ஆனால், ஆட்சிக்கட்டிலுக்கு வாரிசு தேவை..!

தனது மதியூகத்தால் அந்நாள் வழக்கமான (மகாபாரதக் காலத்தில் கூட..,) “அந்நியக் /அயல் கருத்தரித்தல்”முறையை நாடுகிறாள். இது பல சிக்கலுக்கு வழிகோலுகிறது.இப்போது அதை நாம் அறிவியல் நிழலில் செயற்கை கருத்தரித்தல் என்கிறோம். கருத்தரித்தல் இயற்கையானது. செயற்கை என்ற ஒன்று அதில் கிடையாது. உடல் தொடர்பு இல்லாமல் அவ்வளவே.

குழந்தை இல்லாத கணவனின் விந்தும் மனைவியின் கருமுட்டையும் 98 சதவீதம் அளவிற்குச் செயற்கை முறை முயற்சியில் கருத்தரிப்பதில்லை. வேறு ஒருவரின் விந்துவோ அண்டமோ தான் ஒத்துப் போய் இணைகிறது., ஆனால் இதை எந்த கருத்தரித்தல் மையமும் சொல்லாது.. கோடி கோடியான வர்த்தகம் தான் காரணம்.

உங்களுக்குத் தெரியுமா செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சைக்குக் கடன் (லோன்) வசதி கூட கிடைக்கிறது. (தவணைக் கட்டவில்லையெனில் குழந்தையை சீஸ் செய்வார்களோ என்னவோ…)

இந்த அக்கப்போருக்கு ஒன்று சும்மா இருக்கலாம் .. இல்லையெனில் ஆதரவற்ற குழந்தைகளை வாரிசுகளாக்கிக் கொள்ளலாம். நமது மனமும் அகங்காரமும் தான் காரணம்.. எனக்குப்பட்டதைச் சொன்னேன்.இப்படி அல்லது இதுமாதியான யுக்தியில் அயோத்தியின் இளவரசன் “திரசதஸ்யு” பிறக்கிறான்.

அவன் மகாராணியைப் போல் மதியுகி அல்ல.., அவன் பிறப்பின் மூலம் பற்றி அறியும் போது கதை விறுவிறுப்பாகிறது. மேலும் அக்காலத்திய நீதி பரிபாலனை வியக்க வைக்கிறது . அரசனும் குடிமகனும் நீதி வளையத்தில் நிறுத்தப்படும் போது.., நம்ப முடியவில்லை.

இளவரசன் ரிக் வேத பிராமணனான வைஷ்ணவன் மூலம் படும் அவஸ்தை அதிகம். வைஷ்ணவன் தனது கோபம் மூடம் கொண்டு புனையும் கவிதைகள் பிற்கால வேத இடைச் சொருகலாக நெருடுகிறது.

பாகுபலி கட்டப்பா போல் “தார்க்சியன்” என்கிற வீரன் சிம்மாசனத்தின் காவலன். இது போன்ற ராஜவிசுவாசம் தான் ஒரு பேரரசின் அஸ்திவாரம். ஆனால் வரலாற்றில் இது ஒரு போதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

தொடர்புடைய பல கதைகள் நாவலின் புனைவைப் பலப்படுத்துகிறது.1001 இரவு அரபுக் கதை நடையில் நாவல் படு அமர்க்களமாய் நகர்கிறது.எந்தவொரு தீவிர வாசகனும் அவதேஸ்வரியை தவறவிடக் கூடாது.

“அயோத்யே”யின் மூலம் பெயர் “அவதபுரி” . இந்த வடமொழி / பிராகிருத மொழியிலிருந்து “அவத” எனக் கன்னடத்துக்கு வந்துள்ளது.

பண்டைய காலத்தில் முற்போக்குத்தனமும் வீரமும் தீரமும் கொண்டு மக்களின் பேரரசியாக திகழ்ந்த பெண் தான் “புருகுத்சனி-அவதேஸ்வரி “.

கன்னட நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சங்கர் மொகாஷி புனேகர் 1928-ம் ஆண்டு பிறந்தவர்.இவரது இன்னுமொரு முக்கிய படைப்பாகக் கருதப்படுவது ‘கங்காவா கங்காமாயி’.இந்நாவல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவதேஸ்வரி நாவல் 1988-ம் ஆண்டு கன்னடத்தின் சிறந்த நாவலுக்கான சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றது.


மஞ்சுநாத்

நூல் தகவல்:
நூல் :

அவதேஸ்வரி

பிரிவு : மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர்: சங்கர் மோகாசி புணேகர்
மொழிபெயர்ப்பு இறையடியான்
வெளியீடு: சாகித்திய அகாதெமி
வெளியான ஆண்டு :  –
பக்கங்கள் : 420
விலை : 220