பயணம் என்றாலே நம் அனைவருக்கும் உற்சாகம் எங்கிருந்தோ தொத்திக் கொண்டு விடும். நம் உயிரின் ஆவலாக பயணமே நம்மை என்றும் புதுப்பித்தபடி உள்ளது என்பதை உள்ளூர் போன்ற நமது சிறு சிறு பயண அனுபவங்களே நமக்கு உணர்த்தி விடுவதை நாம் கண்டு வருகிறோம். மனித வாழ்வில் ஒரே இடத்தில பிறந்தது முதல் இறப்பு வரை ஒரு மனிதனின் வாழ்வு முடிந்து விடுமெனில் அத்தகைய வாழ்வு எந்தவொரு அனுபவச்செழுமையும் பயனும் இல்லாத வாழ்வாகவே முடிந்து விடும். மனித மனமும் அறிவும் கிழடு தட்டிப் போகாமல் இளமையும் புதுமையும் என்றும் நீடித்திருக்க பயணங்களின் வழியேதான் மனித வாழ்வு முழுமையும் அர்த்தமும் பெறுகிறது.
கூட்டை விட்டு வெளியே பறக்கும் குஞ்சுகள் போல் வாழ்வு பரவசம் கொள்ள நாமும் தூர தூர பயணங்களுக்கு சென்று வர வேண்டும் என்ற அவசியத்தை இங்கிலாந்தில 100 நாட்கள் என்ற இந்த நூல் உணர்த்துகிறது. நூலாசிரியர் அகிலா அவர்கள் தனக்கு கிடைத்த நல்வாய்ப்பை மிகச் சரியாக புரிந்து கொண்டு தனது அனுபவங்களை இருபத்திரண்டு அத்தியாயங்களில் கட்டுரைகளாக வடித்துத் தந்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் கடக்கும்போது நான் எனது சிறு வயதில் முதன் முதலாக படித்த பயணக்கட்டுரை நினைவுக்கு வந்து போகிறது. அமரர் “இதயம் பேசுகிறது” மணியன் அவர்களின் அலாஸ்கா பயணக்கட்டுரைதான் அது. அன்று அலாஸ்காவின் பனி என்னுள்ளும் இறங்கியது. இன்று இங்கிலாந்தின் குளிர் என் தோல் மீது உரசுகிறது.
நாம் அறியாத தூர தேசங்களின் பயணங்களை யாரோ ஒருவர் நமக்கு அனுபவமாக்கித் தரும் போது நாமும் அந்த நிலத்தின் தட்பவெப்ப நிலை, மனிதர்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், அந்தந்த நாடுகளின் கல்வி, கலை,கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் அந்தந்த நாடுகளின் வரலாறு, அரசியல், இயற்கை வளம் போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
பூமத்திய ரேகையின் மறுபக்கம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்து மனிதர்கள் நம்மிலிருந்து வேறுபட்ட தட்பவெப்ப நிலையில் வாழ்பவர்கள் .அந்த குளிர் நிறைந்த நிலப் பகுதிகளில் நாம் பயணம் மேற்கொள்ளும்போது நமது பயண ஏற்பாடுகளை எப்படிச் செய்து கொள்ள வேண்டும் என்பது கூட அவரது அனுபவங்களின் வாயிலாகவே அறிந்து கொள்ள முடிகிறது.
இங்கிலாந்தில் 16 வயது ஆகும் வரை குழந்தைகளுக்கான மருத்துவம் இலவசமாக தரப்படுகிறது என்பதும். குழந்தைகளின் மீதான சிறு வன்முறை கூட அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நடைமுறையாக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் DEVELOPMENTAL PROGRESS என்ற முறையில் வீட்டிற்கே வந்து சார்ட் போட்டு குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை கவனித்துக் கொள்கிறார்கள் என்பது அந்த அரசுகள் குறைவான மக்கள் தொகை கொண்ட தன் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கையாகவே இதை அறிந்துகொள்ள முடிகிறது.
இங்கிலாந்தின் குளிர்கால உடைகள், உணவுமுறைகள் பற்றிய விளக்கங்கள் தெளிவாக நூலில் உள்ளன.ஒவ்வொரு சீசனுக்கும் வேறுவேறு உடைகளை அவர்கள் அணிகிறார்கள்.பிரிட்டனில் நிலப்பகுதிகள் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ளன.ஹில்ஸ் எனப்படும் குன்றுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. இங்கிலாந்து மக்களின் பழக்கவழக்கங்கள் சொல்லபட்டிருகின்றன.
YORK, NATIONAL MUSEUM OF SCOTLAND போன்ற பல புகழ்பெற்ற இடங்களின் புகைப்படங்கள் கண்ணை நிறைக்கின்றன.
உலகில் நாடுகள் சார்ந்து ஆங்கிலம் வேறுபடுவதும், அதன் உச்சரிப்பு முறைகளும் வெவ்வேறானவை என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். மொழிகள் பற்றிய புரிதலுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது.
தனது பயணத்தில் பல இலக்கிய சந்திப்புகளையும் குறிப்பாக இல்க்லே இலக்கியத் திருவிழாவில் தான் பங்கேற்று வந்ததையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
பெண் இலக்கியம் அங்கு தனித்துவமிக்கது என்று குறிப்பிடும் போது அது குறுகிய பரப்பில் இல்லாமல் பெண்ணின் பார்வையில் அல்லது பெண்ணெழுத்து என்பது உலகின் பெருவெளியை அடையாளம் காட்டும் எழுத்தாய் இருப்பதை சொல்லும்போது பாலியல் அடையாளங்களைத் தாண்டியிருப்பதும் புரிகிறது.
இங்கிலாந்தின் அரசியலமைப்பு, மக்கள், தேர்தல்,இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு, சட்டங்கள், குடியேற்றம் போன்ற பல முக்கிய அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் தவறாமல் குறிப்பிட்டிருப்பதும் மேலும் அவரது பயணத்தில் இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையோடு அரசியலையும் கூர்ந்து கவனித்து தனது நூலில் பதிவேற்றம் செய்திருப்பதும் அவரது பயண இலக்குகளில் மிகவும் பயனுள்ள தகவல்களாக உள்ளது.
நூலின் பின் அத்தியாயங்களில் ஸ்காட்லாந்து பயண அனுபவங்களும் விரிவாக உள்ளன. பயணங்களில் மிகவும் முக்கியமானது உணவு. நமது நாட்டு உணவுப் பழக்க வழக்கங்கள் அங்கு முற்றிலும் மாறுபடும் போது கவனிக்க வேண்டிய பல விஷயங்களையும் நூலாசிரியர் தனது அனுபவங்களோடு சுவையாகச் சொல்லிச் செல்கிறார்.
இந்த நூலை வாசிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு நாளும் நிறுத்தி வாசித்து முடித்தேன். நூலாசிரியரின் பயண அனுபவங்களில் நானும் கைகோர்த்துச் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. இங்கிலாந்தில் 100 நாட்கள் என்ற இந்த பயண நூல் ஒரு ஆவணம் போல் பாதுகாத்து வைக்க வேண்டிய அளவில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
நூலாசிரியர் அகிலா அவர்களின் உழைப்பும் முயற்சியும் பாராட்டத்தக்கது.
நூல் : இங்கிலாந்தில் 100 நாட்கள்
வகை: பயண இலக்கியம்
ஆசிரியர் : அகிலா
வெளியீடு : எழிலினி பதிப்பகம்
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு - 2020
விலை: ₹ 300
நூலைப் பெற : https://www.emeraldpublishers.com/
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.