பாம்படத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணிப் பெண்ணை குளத்துக்குள் காலால் அமுக்கிக் கொலை செய்யும் ஒருவன்.சாகும் தருவாயில் அவனது கால் கட்டை விரலைக் கடித்து வாய்க்குள் வைத்திருக்கும் மங்கம்மா. பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் வருவது இந்தக்காட்சி தான். இதைப் படமாக்கிக் கொள்வதற்காக உதவி இயக்குநரிடம் பணம் கொடுத்து அனுப்பிய பொழுது, பணத்தை வாங்க கி.இராஜநாராயணன் அவர்கள் மறுத்து , அவருக்கு உணவு உபசரித்து அனுப்பிவைத்தார் என்பது ருசிகரமான தகவல். கொலையைப் பார்க்கும் நாயக்கர் ஊரைக்கூட்ட, பஞ்சாயத்தில் கொலையாளிக்குக் கழுவேற்றம் தண்டனையாக விதிக்கப்படுகின்றது.

கடைசிவரை ஒன்றுமே சொல்லாமல் சாதித்து இறந்து போனாலும் கழுவன் சாதனை என்ற வார்த்தையை உருவாக்கிச் செல்கிறான்.
பெரிய கம்மல் போட்டிருந்ததாலேயே மங்கம்மா கம்மாடச்சி ஆகின்றாள். ஒரு கம்பில் சொருகி உயிருடன் கழுவில் ஏற்றியவனைக் கொத்தித்தின்று ஊர் குளத்தில் தண்ணீர் அருந்தும் பறவைகளால் பரப்பப்படும் தொற்று நோயைத் தடுக்க, கழுவனைத் தெய்வமாக்கி ,பொங்கல் வைத்து மஞ்சள் வேப்பிலையைக் கிருமி நாசினியாய் உபயோகப்படுத்தி நோயைத்தடுக்கும் மக்களின் விவரம் வியப்பு.

துலுக்க இராஜாவிற்கு பயந்து சென்னாதேவியுடன் அரவதேசம்(தமிழ்நாடு) நோக்கிப் பயணிக்கும் தெலுங்கு பேசும் மக்கள்.ஒரு காட்டை கிராமமாக்கச் சதுர பகுதியை வடிவமைத்துத் தீ மூட்டுவதும், அதைத் தொடர்ந்து விலங்குகளை கையாள செய்யும் முயற்சிகளும் , காட்டுப்பசு கிடைப்பதனால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி கோபல்ல கிராம மக்களுடன் சேர்ந்து நம்மை பயணிக்க வைக்கின்றது.

மண்ணின் வளமையைச் சரியாகக் கணிக்கும் மன்னு தின்னி ரெங்கநாயக்கர், சிகையை அலங்கரிக்கும் பச்சை வெண்ணெய் நரசய்யா, ஆடுகளின் வலியைக் குறைக்கும் காயடி கொண்டய்யா, கெட்டது செய்ய நினைத்து நல்லது செய்த பயிருழவு பங்காரு நாயக்கர்,கிணற்றுத் தண்ணீரில் பிறந்த ஜலரங்கன், பட்டுத்துணி போர்த்தி வைத்தியம் பார்க்கும் வைத்தி மஞ்சையா, பகடிகளால் நம் மனதில் இடம்பிடிக்கும் அக்கையா, கல்யாணத்திற்கான கங்கணம் கட்டியிருந்தாலும் மக்களுக்காகப் புலியைக் குத்திக்கொள்ளும் புலிகுத்தி சுப்பன்னா, என்று அணிவகுக்கும் கிராம மக்கள் சுவாரசியமானவர்கள் என்பதைவிட நம் மனதில் இடம் பிடிப்பவர்கள்.

கேசம் வளர பயன்படுத்தப்படும் முயல் இரத்தம், ஆபரணமாகப் பயன்படுத்தப்படும் காயவைத்த சடைப்பூரானின் கருப்பு மஞ்சள் வளையங்கள், கொழுத்த சாரைப்பாம்பில் எடுக்கப்படும் பாம்பு நெய், புனுகுப்பூனையிலிருந்து எடுக்கப்படும் வாசனைப்புனுகு விலங்குகளுக்கும் கிராம மக்களுக்குமான நெருக்கத்திற்கு உதாரணம்.மனைவியின் கர்ப்பகாலத்தில் சவரம் செய்யாமல் இருப்பது, இரண்டு மனைவிகள் இல்லாதவர்களை ஏளனமாகப் பார்ப்பது, பருத்தியிலிருந்து விதை பிரிக்க வந்த முப்பது பெண்கள் தொழிற்சாலைக்கான விதையை வித்திட்டது போன்ற பழக்கங்கள் ஆச்சரியம்.

சஞ்சீவினி மலையின் மூலிகைகள் விழுந்த குருமலை, இடக்கையால் பாக்குப்போட்டதற்காக சாலை அமைத்துக் கொடுத்த ராணி மங்கம்மா,ஏணி நாற்காலி வைத்து முடியைப்பராமரித்த துளசி,136 வயது மங்கத்தாயாரு அம்மாள் கதாபாத்திரங்களை உண்மையா என்று கேள்வி கேட்க முடியவில்லை.இரட்டை மாடுகள் பூட்டி உழவு செய்வதற்கான நுட்பம், காட்டு ஆமணக்கு, வேப்பங் கொட்டையிலிருந்து எண்ணெய் தயாரிப்பு, கொள்ளையர்களைக் கையாள்வதற்கான வழிகள் வியக்க வைக்கின்றது. கோபல்ல கிராமம் கோவில்பட்டி மக்களாய் கம்மவார்கள் மாறிய கதை என்பது உங்களையும் என்னையும் சேர்த்து சிலருக்கு மட்டுமே தெரியும்.

அபிநயா ஸ்ரீகாந்த்

நூல் தகவல்:

நூல் : கோபல்ல கிராமம்

பிரிவு :  நாவல்

ஆசிரியர் :  கி.ராஜநாராயணன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :    

முதற்பதிப்பு  ஜூலை 1976  (அறுசுவை, வாசகர் வட்டம்)

மறுபிரசுரம் :  டிசம்பர் 2006

பக்கங்கள்: 200

விலை :  ₹ 240

Buy on Amazon