நாவல்நூல் அலமாரி

கலுங்குப் பட்டாளம் – நாவல்


சக மனிதர்களின் பேராசையால் இயற்கையுடனான ஆழமான தொடர்பை இழந்த ஒரு மனிதன் என்னவானான் என்பது தான் கதை.

பூமியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும் முதன்மை ஆதாரமாக இருப்பது இயற்கையும், அது அள்ளித்தரும் வளங்களும்தான். மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையிலும் அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவும், நீரும், காற்றும் கிடைத்துக்கொண்டே இருப்பதன் காரணம் தொடர்ந்து இயற்கை வலிமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் , புதுப்பித்துக் கொண்டும் மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கிக் கொண்டே இருப்பதால் தான்.

இயற்கையின் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவு தான், ஏனெனில் இயற்கை வளங்களை எந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினையை ஒரு கலுங்கை கதைக்களமாகவும் அதில் அமர்ந்து பேசும் மூவரை கதாபாத்திரங்களாகவும் கொண்டு நிறைய பகடிகளோடு நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உரையாடல்களின் வழி நமக்குள் கடத்துகிறார்.

நாவல் முழுக்க நிறைய குறியீடுகள், ‘அலங்கார விளக்கைச் சுற்றிலும் புட்டான்கள் பறக்கின்றன‘ என்ற சிறுகதையில் செய்த முயற்சியை இந்த முறை நாவல் முழுக்கவே செய்திருக்கிறார். முதல் அத்தியாயத்தில் பட்டாளம், தானியேலாசான், சந்திரன் ஆகியோரின் உரையாடல்கள் குடித்து விட்டு உளறுகிறார்களோ அல்லது மனநிலைபிறழ்ந்தவர்களோ என்று எண்ணத் தோன்றியது.

அடுத்தடுத்த வாசிப்பின் போது உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை பகடி செய்திருக்கிறார் என்று புரிய வரும் போது வாசிப்பில் சுவாரசியம் கூடுகிறது.

நிறைய இடங்களில் பாத்திரங்களின் உரையாடல்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. உதாரணமாக கல்லூரி விரிவுரையாளர் என்று ஒருவரை பட்டாளத்திற்கு தானியேலாசான் அறிமுகப்படுத்தும் காட்சி. யாரந்த விரிவுரையாளர் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள், அதை உடைத்துவிட்டால் சுவாரசியம் போய்விடும்.

இந்தப் புதினத்தின் உன்னதமென்று சொன்னால் வறண்ட பாலையில் மழைச்சாரலை கொண்டு வரும் காற்றைப்போல பட்டாளம், சுலோக்சனாவின் காதல் கதை வரும் அத்தியாயம்.

குளத்தில் கரையும் இருவருக்குமான பொழுதுகளை நிலவு, நீர், நீச்சல் என ஒரு கனவுலகம் போல சித்தரித்திருக்கிறார். இவர்களின் காதலை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்க கூடாதாவென்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.

சுலோக்சனா மீது போலவே பட்டாளத்திற்கு இயற்கையின் மீதான காதலும்,

தானியேலாசான் இயற்கையை பலிக்கும் போதெல்லாம், இயற்கைய பேசப்படாது என்பது,

மரங்கள் அடர்ந்த சாலையைப் பார்த்து, “வானந்தெரியுதா பார்த்தியா, இந்த அழகுல ரெண்டு மடக்கு அள்ளிக் குடிலே” என்பது, குளத்தில் தவறி விழுந்த ஒற்றை விலாங்கு மீனிற்காக, மேலும் ஐந்தாறு விலாங்குகளை விலை குடுத்து வாங்கி குளத்தில் விடுவது என இயற்கை காதலனாக இதயம் நிறைக்கிறார்.

“காட்சிங்கறது கண்ணுல கண்டவனுக்கு மட்டுந்தான் சொந்தம். அத எப்படி சொன்னாலும் யாது மொழியில சொன்னாலும் காட்சிய முழுசா இன்னொருத்தனுக்கு கடத்த முடியாது” இப்படி ஒரு வாக்கியத்தை நாவலில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

ஆனால் அதற்கு முரணாக வலிய குளத்தையும், கலுங்கையும், ஹாஜியார் வயலையும், ராகவன் மனையையும், அதற்கு வரும் பாதையையும், பட்டாளம் சுலோக்சனா காதலையும், தவளைகள் தண்ணிப்பாம்பு, விலாங்கு, நடைப்பயிற்சி, மாயக்காரன் காட்டும் வித்தை என அனைத்தையும் வாசிக்கும் பொழுது காட்சிகளாக கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.

வலியகுளம் போன்ற எத்தனையோ நீர்நிலைகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்து தான் வளர்ச்சி என்ற பெயரில் கான்க்ரீட் கட்டிடங்களை உருவாக்கி வருகிறோம். ‘இந்த வலியகுளத்த கொஞ்சம் கொஞ்சமா மூடி மூடி கடைசியா மிஞ்சிக் கிடக்க இந்தக் குட்டையில எனக்கொரு வலியகுளமும் எனக்கே எனக்கான காட்சிகளும் கிடக்கு.’ எனும் பட்டாளத்தின் வார்த்தைகள், இது போன்று நினைவுகளில் நீர்நிலைகளை சுமந்து திரியும் அனைத்து மனிதர்களுக்குமானது.

என்னுரையில் நாவலாசிரியர் கூறியிருப்பது போல, நமக்குச் சில வாழ்வு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம், ஆனாலும் உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு உலகம் இருக்கிறது. நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வை தான் கலுங்குப் பட்டாளம் உங்கள் முன் வைக்கிறது.

புனைவிலக்கியத்தில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. என் வாசிப்பனுபவத்தில் இது போன்ற ஒரு புனைவு நூலை இதுவரை வாசித்ததில்லை. வாசகர்களுக்கும் இது ஒரு புதுமையான வாசிப்பனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்.

நூலாக வெளிவருவதற்கு முன்பே இக்கதையை வாசிக்கும் வாய்ப்பை கொடுத்தமைக்கு அன்பும் நன்றியும் தோழர்  மைதீன்!மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


நூல் தகவல்

நூல் : கலுங்குப் பட்டாளம்

வகை:   நாவல்

ஆசிரியர் :  மீரான் மைதீன்

வெளியீடு : புலம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

விலை: ₹ 130

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *