1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

நூறு புராணங்களின் வாசல் – குறுங்கதைத் தொகுப்பு


ஆசிரியர் குறித்து : இலக்கிய வீதியின் அன்னம் மற்றும் மேலும் அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த விமர்சகர் விருது பெற்ற முபீன் சாதிகா புதுக் கல்லூரியில் முனைவர் பட்டத்தினை நிறைவு செய்ய உள்ளார். குறியியல் குறித்து ஒரு நூலினை மொழிபெயர்ப்பு செய்துவரும் இவர் “அன்பின் ஆறாமொழி”, “உளம் எனும் குமிழி” கவிதைத் தொகுப்புகளை தந்துள்ளார். உறையும் மாயக் கிணறு எனும் தலைப்பில் இவரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. முபீன் சாதிகா கட்டுரைகள் என ஒரு தொகுப்பை காவ்யா பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது. ஓவியர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


“மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

  மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர

  நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து

  குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி

முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீசி.”

திருமுருகாற்றுபடையின் 230வது பாடலில் ஆண்டலைக் கொடியொடு எனப் பாடமாயின் ஆண்மகனின் தலையொடு புள்ளின் உடம்பு என பொருள்அமைந்திருக்கும் என நக்கீரர் உரை கூறுவதாக சாமி. சிவஞானம் அவர்கள் திருமுருகாற்றுப்படை உரை குறித்த நூலில் குறிப்பிடுகிறார். அதாவது ஒரு விசித்திரமான உருவ அமைப்புடையதாக உள்ளதை நாம் அறிய முடிகிறது. கிட்டத்தட்ட சங்க காலத்திலேயே வித்தியாசமான உருமாற்றத்தினை எழுதிப் பார்த்துள்ளார்கள் என்றே நாம் பொருள் கொள்ளலாம். சரி இந்தப் பாடல் இங்கே எதற்கு என்றால் அப்படியான விசித்திரமான புராணிக, அறிவியல் புனைவுகளை இத்தொகுப்பெங்கும் விரவியுள்ள குறுங்கதைகள் உணரச் செய்யும். அதற்கான சிறு ஒப்பீட்டு விளக்கம் அவ்வளவே.

பஞ்சதந்திரக் கதைகளை, அம்புலிமாமா, விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளை வாசித்தறியாத இன்றைய தலைமுறைகளுக்கு இத்தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஒவ்வொரு கதைகளையும் வாசிக்க அடுத்து அடுத்து என எதிர்பார்ப்புகளைத் தூண்டும் அற்புதமான ஃபான்டஸி (Fantasy) குறுங்கதைகள். அறிவியல் புதிர்களோடு எழுதப்பட்டிருப்பதால் புதியதொரு வாசிப்பு அனுபவத்தினைத் தருகின்றன.

குறுங்கதைகளின் வேர் : 

ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், நஸ்ஸுருதீன் முல்லாக் கதைகள் போன்றவை தோற்றுவாயாக உள்ளன. 1930 களில் அமெரிக்கன் சார்ட் சார்ட் ஸ்டோரி என்ற குறுங்கதைகள் காஸ்மோபாலிடன் இதழ்வழி சேகரிக்கப்பட்டிருக்கிறது. இவை பின்னாளில் வெரி சார்ட் ஸ்டோரி என அதே இதழ்வழி Somerset maugham என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது. 1986ல் இலங்கை யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த செம்பியன் செல்வன் என்பவர் குறுங்கதை நூறு என்ற தொகுப்பினை வெளிட்டுள்ளார். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் குறுங்கதைகளை தொகுத்துள்ளார். குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் போன்றவை ஒரு பக்கக் கதை, அரைப்பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை என்றெல்லாம் வெளியிட்டுள்ளனர். சமகாலத்தில் ஆகஸ்ட் 2021 இதழில் 21 குறுங்கதைகள் என காலச்சுவடு இதழ் தனது வரலாற்றினையும் பதிவு செய்துள்ளது. இப்படியாக பதிவுசெய்யப்பட்ட வரலாற்று நிகழ்வில் முபீன் சாதிகா தோழரின் நூறு புராணங்களின் வாசல் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

நானும் குறுங்கதைகளும் : 

2004ல் எனது நண்பன் சரோகராஜ் தனது நோட்டில் எழுதி வைத்திருந்த மஞ்சள் வண்ணக் கைக்குட்டை என்ற குறுங்கதையே காமிக்ஸ்களையும், சிறுகதைகளையும் வாசித்து வந்த எனக்குள் ஒரு புதிய ரசனையினை, ஆர்வத்தினை ஏற்படுத்தின. அதில் அவரது தோழி விட்டுச்சென்ற மஞ்சள் வண்ணக் கைக்குட்டை மஞ்சள் வண்ண வண்ணத்துப்பூச்சியாக பறந்து செல்வதை கூறியிருப்பார். அக்கதையை வாசித்த ஆர்வத்தில் நானும் எழுதிப் பார்க்கலாமே என நகைச்சுவையுடன் முடியும்படியான இரண்டு குறுங்கதைகளை எழுதிப்பார்த்தேன் (குறுங்கதை வடிவம் என்பது தெரியாமலே). அதிக வாசிப்பும், கற்பனை வளமும், அதிகப்படியான உழைப்பினையும், மெனக்கெடலும் வேண்டியதால் அந்த இரண்டோடு நிறுத்திவிட்டேன். முபீன் சாதிகா தோழர் முகநூலில் தொடராக சித்திரத்தோடு தினசரி பதிவேற்றி வந்த குறுங்கதைகள் மீண்டும் அந்த அற்புத உலகத்தினை வாசிக்க உந்தியது. அவைகள் இப்போது முழுத்தொகுப்பாகி புதியதொரு பேசுபொருளினை ஏற்படுத்தியுள்ளன.

தொன்மக் கதையாடலும் விஞ்ஞானப் புதிரும் :

ஒரு பெண் என்றோ, விலங்கு என்றோ, மூலக்கூறு என்றோ, துல்லியமாகவோ, பொதுவாகவோ, மறைமுகமாகவோ, முன்பே இருப்பதாகவோ, மக்கள் திரளில் தனித்து ஒரு வடிவமாகப் பிரிக்கப்பட்டதாகவோ, பிரித்தறிய முடியாத வகையில் இருப்பதாகும் என்பார் டெல்யூஜ். அப்படியாக இந்தக் கதைகளுக்குள் வகிபாகங்களைக் கொண்டிருக்கும் தொன்மங்களையும், எதார்த்தங்களையும், விஞ்ஞானத்தின் வெடிப்புகளையும் பிரித்தறிய முடியாதபடி கதையோட்டமும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அணுவின் ஒவ்வொரு மூலக்கூறுகளும் அதனதன் விளைவுகளுக்கு உட்பட்டு இணைந்தும் பிரிந்தும் புதிய மூலக்கூறுகளை உபவிளைவுகளை நிகழ்த்துவதை ஒத்திருக்கின்றன.

ஃப்ரான்ஸ் காஃப்காவின் கிரிக்கோர் சாம்சா கரப்பான் பூச்சியாக உருமாறிய கதை நிகழ்வுக்குப் பின் உருமாறுதல் எழுத்தில் விலங்கியல் தத்துவப் புனைவுகளுக்கான முன்மாதிரி கட்டமைக்கப்பட்டதாக முபீன் சாதிகா கோணங்கியின் தொன்மக் கதையாடல் சார்ந்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அப்படியான நிறைய உருமாற்றங்கள் இத்தொகுப்பின் கதைகளுக்குள் அர்த்தப் பொதிவுகளோடும், விஞ்ஞானத் தெளிவுகளோடும் தொல் மனதின் புராணிக நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு இணைத்து எழுதிப் பார்த்துள்ளார் என்றே சொல்லலாம்.

அவனும் அவளும், பொம்மை, கிரிக்கோர் சாம்சாவுடன் உரையாடல், பாம்பின் கால், தேள், பறவை, கடவுளான கலிவர், பெண் எந்திரம் என்ற குறுங்கதைகள் இவற்றிற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளன.

காலப்பயணம் : 

டைம்லூப் எனும் காலப்பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றாக நிச்சயம் மாறலாம். இதற்கு ஒளி என்ற குறுங்கதை சிறந்த உதாரணம். கடந்தகாலத்தினை ரசித்து அசைபோடவும் எதிர்காலத்தை நோக்கிய பயணப்பாட்டில் மன சஞ்சலங்களையும் ஏற்படுத்துகிறது. அதனாலேயே அந்த ஒளி நிரம்பிய பானையை கிணற்றுக்குள் போட்டு உடைத்து விடுகிறான். கிணற்றில் தண்ணீர் அள்ளியவர்களுக்கு தெரியும் வாளி பட்டு தண்ணீரில் உள்ள ஒளி தெறிப்பதை. இந்த நிகழ்வே இக்கதையின் தோற்றுவாயாக இருக்கலாம். காலப்பயணம் ஒரு விந்தையான அறிவியல் புனைவெழுத்துதான்.

அரசியல் பேசுகிறதா? 

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகள் விதை நீக்கம் செய்யப்பட்ட அழகிய போன்சாய் மரங்களைப் போன்றது. முபீன் சாதிகாவின் குறுங்கதைகள் அரசியல் பேசுகிறதா? இல்லையா? எனப் பார்த்தால் பல்வேறு நுண்ணரசியலினைப் பேசுகின்றன. மதுப்பிரியர்களினால் பெண்களின் வாழ்வியலை எத்தகைய கொடூரத்தினை செய்யத் துணிகிறது. ஒரு மாதமே ஆன தன் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிக் கொல்லும் சூழலின் அரசியலை குழந்தை என்ற குறுங்கதை பேசுகிறது. இதை தனது ஐந்து வயதில் பார்த்த நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். அறிவுஜீவிகளை கொன்று புதைக்கும் மிக மோசமான அரசியலை தலை எனும் குறுங்கதை பேசுகிறது. நிறம் என்ற குறுங்கதை நிறவாதத்தினை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பெண் எந்திரம் குறுங்கதை ஆண் முதன்மைச் சமூகத்தினை ஒழித்து பெண் வழிச் சமூக மீட்டுருவாக்கத்தினை அறிவியல் உத்திகளோடு பேசும் குறுங்கதையாக மிளிர்கிறது.

முருகன் எனும் நாயகன் எதிர்கால விஞ்ஞானம் : 

ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆண்டாளின் பாசுரம் திருமாலை தன் நாயகனாக பிம்பக் கட்டமைப்புச் செய்து ஒரு மிகப்பெரும் நாயகனாக உருவாக்குதலை சூடிக்கொடுத்த சுடர் கொடி செய்திருப்பதைப் போலவே கதைகளுக்குள் முருகன் நாயகனாக வலம் வருகிறார். கிட்டத்தட்ட ஏழு குறுங்கதைகளில் முருகன் நேரடியாக வருகிறார். சிவனின் மூன்றாவது கண்ணாண நெற்றிக் கண்வழி பிறக்கும் ஒளியில் சரவணப் பொய்கையில் முருகன் அவதரிக்கும் புராணக் கதை ஒரு மீமெய்க் கதைதான். அறிவியல் கண்டுபிடிப்பின் தோற்றுவாயில் இப்படியான கதையாடல்கள் சில முடிவுகளை தந்திருக்கின்றன.

கைப்பேசி பயன்பாடு இல்லாத அன்றைய நாளில் எதிர்காலத்தில் இப்படியான ஒரு கருவி வரும் எனக் கூறிய தந்தை பெரியார் ஒரு தீர்க்கதரிசிதான். முபீன் சாதிகாவும் அப்படியான ஒரு தீர்க்கதரிசியாக நம்முன் நிற்கிறார். இதற்கு இவரது 3333 எனும் குறுங்கதை சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில் பிள்ளைப்பேறு இப்படியான கட்டமைப்புகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. டாலி எனும் ஆட்டின் குளோனிங் பிறப்பு நம் கண்முன்னால் அறிவியல் ஏற்படுத்திய வாரலாறாக உள்ளது. சமீபத்தில் பன்றியின் உறுப்பில் ஒன்று மனிதருக்கு மாற்று உறுப்பாக பொருத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள் என்பதனையும் நாம் மனதில் நிறுத்திக் கொள்ளலாம்.

3333 கதையில் நாயகி 75சதவீதம் செயற்கை முறையும், 25 சதவீதம் இயற்கை முறையும் கொண்டு குழந்தையை உருவாக்கித் தரும் நிலையத்திற்கு செல்கிறாள். நூறு சதவீதம் இயற்கை முறையிலான குழந்தைக்கு இடமில்லாத அங்கே 100சதவீத குழந்தை வேண்டி முருகனை வேண்டி மனமுருகுகிறாள். முருகன் அருளால் இயற்கை முறையிலான குழந்தையை பெற்று விடுகிறாள். இது அந்த உலகத்தின் சட்ட விதிகளுக்குப் புறம்பானதாகி விடுவதால் பூமிக்கு அனுப்பப்படுகிறாள். அக்குழந்தையை முருகனின் காலடியில் வைக்கிறாள்.

எத்தகைய வளர்ச்சி பெற்ற சமூகத்திற்குள் நாம் சென்றாலும் இறை நம்பிக்கை என்பதும் கூடவே பயணிக்கும். அது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. அறுவடை செய்யும் முதல் கதிரை சூரியன் முன் காணிக்கை இடுவதைப் போன்ற தொல்மனதின் பிரதிபலிப்புத்தான் இக்கதை.

முடிவாக: 

நாம் இப்போது விரைவானதும் எந்திரத்தனமானதுமான உலகில் வாழ்ந்து வருகிறோம். நின்று நிதானித்து என்ன ஏதென வினவ முடியாதபடிக்கு நேரமற்றுச் சுருங்கி நிற்கும் வாழ்வு. அத்தகைய வாழ்வில் ஒரு நாவலையோ சிறுகதையையோ வாசிப்பதே நேரவிரயம் எனக் கருதும் பொருளியல் உலகில், தமிழ் இலக்கியச் சூழலில் இக்குறுங்கதைகள் புதிய ஒளியினைப் பாய்ச்சுகின்றன. அடுத்த தலைமுறையினருக்கான புதிய அனுபவத்தினை வழங்கும் இக்கதைகள் கைப்பேசிக்குள் பதிந்து பகிர்ந்து விவாதிக்க, பரவலாக்கம் செய்ய இலைமறை காயாக அரசியல் பேச ஒரு அதியற்புதமான வடிவமாக நூறு புராணங்களின் வாசல் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.


– சுகன்யா ஞானசூரி

துணை நின்றவை: 

  1. திருமுருகாற்றுப்படை உரை – சாமி. சிவஞானம்; தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
  2. செம்மொழித்தமிழ் – ம.வே.பசுபதி; தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
  3. முபீன் சாதிகா கட்டுரைகள்- காவ்யா பதிப்பகம்
  4. noolagam.org இணையம்

விமர்சனம் இணையதளத்தில் இந்நூலைப் பெற
நூல் தகவல்:

நூல் :  நூறு புராணங்களின் வாசல்

வகை :  குறுங்கதைகள்

ஆசிரியர் :  முபீன் சாதிகா

வெளியீடு :   நன்னூல் பதிப்பகம்

ஆண்டு :   டிசம்பர் 2021

பக்கங்கள் :  128

விலை:  ₹  130

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “நூறு புராணங்களின் வாசல் – குறுங்கதைத் தொகுப்பு

  • நூறு புராணங்களின் வாசல் – குறுங்கதைத் தொகுப்பு – பஞ்சதந்திரக் கதைகளை, அம்புலிமாமா, விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளை வாசித்தறியாத இன்றைய தலைமுறைகளுக்கு இத்தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஒவ்வொரு கதைகளையும் வாசிக்க அடுத்து அடுத்து என எதிர்பார்ப்புகளைத் தூண்டும் அற்புதமான ஃபான்டஸி (Fantasy) குறுங்கதைகள். அறிவியல் புதிர்களோடு எழுதப்பட்டிருப்பதால் புதியதொரு வாசிப்பு அனுபவத்தினைத் தருகின்றன. – அருமையான மதிப்புரை. வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் முபீன் சாதிகா – நன்றி சுகன்யா ஞானசூரி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *