நூல் விமர்சனம்புனைவு

சொற்கள் விளையும் நிலம்


வாழ்க்கையில் நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சில சொற்கள் இறந்து விடுகின்றன. சில சொற்கள் நம்மை உயிர்ப்பிக்கின்றன.

வாழ்க்கையோடு பிணைக்கப் பட்டிருக்கும் சொற்களை உயிர்ப்பிக்கும் ஒரு மரபான கலை வடிவம் கவிதை. இந்த மரபு நமது வாழ்க்கை, நிலம், கலாச்சாரம், மொழி, பண்பாடு, அரசியல் இவற்றோடு தொடர்புடையது. இதில் மிக முக்கியமானது மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பு.

மொழிக்கும், மண்ணுக்குமான தொடர்பு என்பது ‘தொப்புள் கொடி ‘உறவு போன்றது. இந்த உறவு தான் நம்மை நம் மண்ணோடு (நம் நிலத்தோடு) இணைத்து வைத்திருக்கிறது.

சக்தி ஜோதியின் கவிதைகள் அவரது நிலம் சார்ந்தவை. அவரது நிலம் தான் அவரது சொற்களை அவருள் விதைக்கிறது. விளைந்த சொற்களை அறுவடையும் செய்கிறது. எனவே அவரது நிலமும், மொழியும் அவரிடமிருந்து பிரிக்கப் பட முடியாதவை.

அந்த நிலத்தில் விளையக்கூடிய தாவரங்களையும், தானியங்களையும், பயிர்களையும் போலவே சொற்களும் முளைத்து வருகின்றன.

அந்த நிலத்தை, அந்த மொழியை நான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு எளிய வாசகியாக சக்தி ஜோதியின் கவிதைகளுக்குள் நுழைந்து நான் பயணப்பட வேண்டும். அந்த வாசிப்பின் பயணம் இனிமையானது. எனது ஊரிலிருந்து அவரது ஊருக்கு சென்று வருவது போல..

சக்தி ஜோதியின் “கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்”. இது அவரது பனிரெண்டாவது கவிதை தொகுப்பு.

இந்த தொகுப்புக்கான விமர்சனம் என்பது இது ஒன்றைக் குறித்து மட்டுமல்ல. கடந்த பதினொரு தொகுப்புகளையும் வாசித்து விட்டு இந்த தொகுப்பை வாசிக்கும் போது அவை ஒன்றுக்கொன்று இணையான மொழியை ஒரு சங்கிலித் தொடர் போல், மொழியை எந்த ஒரு இடத்திலும் அதன் கண்ணி அறுந்து விடாமல் கவிதைகளாக நம் முன் விரிந்து கிடக்கின்றன.

அவருடைய நிலத்தின் பருவ மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அவரிடமிருந்து விளைந்த சொற்கள் அந்த நிலத்தின் தாவரங்களாகவும், செடி, கொடி, மரங்களாகவும், மலையாகவும், மண்ணாகவும், மலையிலிருந்து வீழும் அருவியாகவும், ஓடுகின்ற நதியாகவும், புல், பூண்டுகளாகவும், பறவைகளாகவும், அந்த நிலத்தின் மீதே விரிந்து கிடக்கும் வானமாகவும், அதில் மிதக்கும் மேகமாகவும் –இப்படியாக சொற்கள் அவருடைய மொழியில் விரிந்து கொண்டே போகிறது. பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் நகர்வது போல் அவரது மொழி நகர்ந்து செல்கிறது. வாசிப்பின் போது நாமும் அந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகளாக நகர ஆரம்பித்து விடுவோம். அந்த நகர்வுதான் அவரது மொழியின் மையப் புள்ளி.

பொதுவாகவே இவரது கவிதை நூல்களில் சங்கப் பாடல்களில் ஏதோ ஒரு வரி அல்லது ஒரு சொல் நுட்பமாக இழையோடிக் கொண்டிருக்கும். இவரது நூல் ஒன்றின் முன்னுரையில் தன்னை வெள்ளிவீதியாரின் வழித் தோன்றலாக முன்னிறுத்திக் கொள்கிறார். இதுவே இவரது கவிதைகளுக்கும் சான்றாய் அமைகிறது.

விளைச்சல் காணாத
வெற்று நிலத்தை
சீர் திருத்தி
நீர் பாய்ச்சி
விதை தேர்ந்து
நாற்று நட்டு
களை நீக்கி
இதோ
முதல் விளைச்சலை
எடுக்கப் போகிறாள்

தன் விரல்களை
விடவும் மென்மையாய்
இன்னொரு கருவியைக்
காணாமல்
ஒரு முள்ளங்கியை
தன் விரல்களால்
தோண்டியெடுத்தாள்

உலகின்
உயிர்கள் மொத்தமும்
அச் சிறு வெண்கிழங்காய்
திரண்டு
தன் கைகளில் தவழ்வதாக
உளம் நெகிழ
அவள்
கண்களில் திரண்டு வழிந்தது
வேறு கண்ணீர்

“புண் கணீர்” என்ற தலைப்பிட்ட இந்த கவிதை (பக் -10)

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண் கணீர் பூசல் தரும் “ என்ற திருவள்ளுவரின் திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

ஒரு நிலத்தை நேசிப்பது என்பது ஒட்டு மொத்த உயிர்களை நேசிப்பதற்கு சமம். ஒரு உழவன் தன் தேவைக்காக மட்டுமே நிலத்தில் பாடுபடுவதில்லை. மாறாக, உலகத்து உயிர்களின் தேவைக்காகவும் அவன் நிலத்தில் பாடு படுகிறான். எனவே தான் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற உயர்ந்த வார்த்தைகளையெல்லாம் நாம் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம்.

கவிஞரின் அன்பு தோய்ந்த விரல்கள் தேர்ந்த ஒரு மருத்துவச்சியின் மன நிலையை பிரதிபலிக்கிறது. அன்பின் சாரம் இங்கு கவிதையாய் நெய்யப் பட்டிருக்கிறது.

மொழி (பக் -26)

தெவிட்டாத காதலின் பரவசத்திலும்
திடுமென நிகழுமதன்
வலி மிகு பிரிவிலும்
சொற்களற்ற
துளி கண்ணீரே
அந்தந்த கணங்களின்
மெய்மைக்குச் சாட்சியாகிறது
எப்போதும்.

சொற்களுக்கும், கண்ணீருக்குமான இடைவெளியை குறைப்பது காதலும் பிரிவும் தான் என்று சுண்டக் காய்ச்சுவது இந்தக் கவிதையின் மெய்மைக்குச் சாட்சியாகி விடுகிறது.

பருவம் எனும் நினைவு ( பக் 27)

ஒரு பருவத்தில் துளிர்த்து
மறு பருவத்தில்
பூத்து நிறைந்து
வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்
இன்னுமொரு பூப்பிற்கான
ஈரத்தை
தனது வேரடி மண்ணில்
வெது வெதுப்பாக
தேக்கி வைத்திருக்கிற
தாவரத்தின் நினைவில்
உறங்குகிறது
துளிர்க்க காத்திருக்குமொரு
கனவு.

தாவரத்தின் நினைவில் உறங்கி பின் துளிர்க்க காத்திருக்குமொரு கனவாக தாவர பருவங்களை நினைவூட்டுவது ஒரு தாவரவியல் அறிஞரின் நுட்பத்தை போல் காட்சிகளின் நுட்பம் கவிதையாய் விளங்குகிறது.

தோற்றம் (பக் 35)

துறவி
தன்னைக் காண
வந்தவர்கள் பார்க்க
வசதியாக
முன்னிருந்த
வெற்றுப் பாத்திரத்தை
சற்றே தள்ளி வைக்கிறார்

இருப்பவர்கள்
தம்மிடம்
இல்லாததையும்
இல்லாதவர்கள்
தங்களிடம்
இருந்ததையும்
காண்கிறார்கள்
அச்சிறுஅசைவினில்.

வாழ்வின் ரகசியங்களாக அறியப் படுகின்ற மிகப் பெரும் தத்துவங்களை ஒரு சிறு அசைவில் வெளிப்படுத்திய விதம் அருமை.

இயற்கையின் ஒவ்வொரு அசைவும் இது போன்ற புதிர்களை நமக்கு முன் நிகழ்த்திக் காட்டுகிறது. நாம்தான் அவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

கனவென விரியும் காடு ( பக் 30, 31)

இப்பொழுது
சில மரங்களின் பெயர் தெரியும்
சில பூக்களின் வாசம் அறிவேன்
மேலும்
உடன் வருபவரிடம் பகிர்ந்து கொள்ள
அதையொட்டிய
சில கதைகளும் என்னிடமுள்ளன.

இந்த கவிதையில் அவர் கானகத்துள் செல்லும் காட்சிகளையும், கதைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

நாம் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்று வருவதைப் போல கானகம் அவருக்கு துல்லியமாக படிகிறது.

சக்தி ஜோதியின் இந்த கவிதையை வாசிக்கும் போது, இயற்கை என்பது அவருடைய வாழ்வின் ஒரு அங்கமல்ல. மாறாக, ஒட்டு மொத்த இயற்கையின் இயங்கியலை தன் வாழ்வோடு பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு மரபான கவி மொழியை தனது தனித்துவமான நடையில் ஒரு நவீன வாசிப்புக்கான இடத்தை நோக்கி இட்டுச் செல்வதையும் காண முடிகிறது.

அதே போல், நிறைய கவிதைகள் மனிதன் தன் தேவைக்காக இயற்கையின் வழித் தடங்களை மாற்றி அமைத்திருப்பது குறித்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பொருளில் கையாள்வதையும் காண முடிகிறது. இதற்கு சான்றாக, இவரது முந்தைய தொகுப்பான “வெள்ளிவீதி ” என்ற கவிதை தொகுதியில் “ஆதிவனம்” என்ற கவிதை இயற்கைக்கு எதிராக இயங்கக் கூடிய ஒட்டு மொத்த மனித சமூகத்தை யோசிக்க வைப்பதாக இருக்கிறது.

சக்தி ஜோதி இயற்கையை மட்டுமல்ல, அகவெளியில் மிதந்து கொண்டிருக்கிற பெண் மனங்களின் ஆழங்களையும், நுட்பங்களையும் கூட இயற்கையின் புரிதலோடு தனது மொழியின் வழியாக அறியத் தருகிறார்.

திடம்  (பக் 17)

அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம்
தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை.

World water day என்று சொல்லக்கூடிய உலக தண்ணீர் தினத்தில் ஆனந்த விகடன் இணைய இதழுக்காக இவர் எழுதிய ‘எங்கே என் மருதா நதி? ‘என்ற கட்டுரை ஒன்று தற்செயலாக என் கண்ணில் பட்டது. “என் வீட்டின் பின்னால் தான் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது மருதா நதி. ஆனால் பால்யத்தில் நான் உணர்ந்திருந்த மருதா நதியல்ல இப்போது பார்க்கிற இந்த நதி” என்று தொடங்கியிருக்கிறார்.

உண்மையாக, இந்த அடிப்படையில் பார்க்கும் போது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அய்யம்பாளையம் என்ற கிராமத்தில் அவரது வீட்டின் பின்னே ஓடிக் கொண்டிருக்கக் கூடிய அந்த மருதா நதியின் கைகளை பிடித்துக்கொண்டே தோழிகளுடன் ஓடிய இந்த பால்ய கால சினேகிதியை இயற்கையின் மகளாகவே பார்க்கிறேன்.

கவிஞர் சமயவேல் தன்னுடைய கவிதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“கடவுள், மதம், அரசியல், நாடு, மொழி, புரட்சி இப்படிப்பட்ட பெருவகை மயக்கங்களிலிருந்து மனிதன் விடுதலை அடைய வேண்டிய தருணம் இதுவெனத் தோன்றுகிறது.
அதே போல் குடும்பம், காதல், நட்பு போன்ற அகவெளி நுண் கலாச்சாரத் தளத்தில் ஒரு புதிய பரிமாணத்தை இளம் தலைமுறையினர் தொட்டு விட யத்தனிப்பதையும் அவதானிக்க முடிகிறது”என்று கூறுகிறார்.

மேலும், “கிராமத்தில் அடுக்கு பானைகளுக்குள் காலநிலைகள் பற்றிய கவலையேதுமில்லாமல் பத்திரமாக இருக்கும் விதைத் தானியங்கள், உளுந்து, பாசிப்பயறுகள் போல கலாச்சாரம் மற்றும் கலை இலக்கியப் பரப்பில் நாம் எதையாவது பத்திரப்படுத்தியிருக்கிறோமா?”என்றும் கேட்கிறார்.

இதற்கு சக்தி ஜோதியின் கவிதைகளையே விடையாக கொள்ள வேண்டும். கவிஞர் சக்தி ஜோதி தனது மொழியின் வழியாகவே இயற்கையை மீட்டெடுத்திருக்கிறார். அந்த இயற்கையின் மொழி கலை இலக்கிய பரப்பில் பத்திரமாகவே இருக்கிறது. நமது வாசிப்புக்காக காத்திருக்கிறது.

– கவிஞர் மஞ்சுளா

நூலாசிரியர் குறித்து:

சக்தி ஜோதி கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி மற்றும் சமூகப்பணியாளர் என்று பரவலாக இவர் அறியப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம] சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும்.

அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.

 

நூல் தகவல்:
நூல் :

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: சக்தி ஜோதி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : 2021
பக்கங்கள் : 80
விலை : 100
தொடர்புக்கு : 87545 07070

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

4 thoughts on “சொற்கள் விளையும் நிலம்

 • சொற்கள் விளையும் நிலம் – சக்தி ஜோதியின் கவிதைகள் அவரது நிலம் சார்ந்தவை. அவரது நிலம் தான் அவரது சொற்களை அவருள் விதைக்கிறது. விளைந்த சொற்களை அறுவடையும் செய்கிறது. எனவே அவரது நிலமும், மொழியும் அவரிடமிருந்து பிரிக்கப் பட முடியாதவை. – நூல் :
  கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

  பிரிவு : கவிதைகள்
  ஆசிரியர்: சக்தி ஜோதி
  வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
  வெளியான ஆண்டு : 2021
  பக்கங்கள் : 80
  விலை : ₹ 100
  தொடர்புக்கு : 87545 07070 – அருமையான புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் மஞ்சுளா கோபி

  Reply
  • மஞ்சுளா விமர்சனம்… கவிஞர் சக்தி ஜோதியின் சொற்கள் விளையும் நிலம் மிக நன்று. வாழ்த்துகள்!!!
   சொற்கள் நின்று பெய்யும் மழையாக
   மொழி கொடுக்கும் வெள்ளாமை
   சரியான பருவத்தில் தலை சாய்த்து
   உள்ளீடற்ற அற்புதங்களின்
   வாசனையை நுகரச் செய்தது.
   இலையில் அசையும் காற்றில்
   வானேகிய பறவைக் கூட்டங்களாய்
   வாழ்வின் திறப்புகளை விழிப்புணர்வு கொண்டு
   பரந்த நூல்வெளியில் இளம் இறகுகளாய்
   துளிர்க்கச் செய்யும்……. அதிர்வலைகள் எழும்பச்
   செய்யும் உங்கள் பேனா முனையின் வசீகரம் போற்றுதற் குரியது. தொடர்க!!!!!வாழ்த்துகள்!!!!

   Reply
 • வணக்கம் கவியே..
  உங்கள் எழுத்துக்களை படிக்கையில் உணர்ப்பூர்வமாக இருக்கிறது…சக்தி ஜோதி அவர்களின் ,அந்த வெண்கிழங்கு ஒரு பிரசவம் பார்ப்பது போல் அழாக சொல்லிருக்கிறார்…ஒரு தாவரத்தின் கனவு,இன்றைய பெண்களின் மன வலிமை…நிச்சயம் அவர்கள் வைரமே..
  நன்றி மஞ்சுளா அவர்களே..

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *