நூல் விமர்சனம்புனைவு

மூப்பர் -மறைக்கப்பட்ட வரலாற்றின் நிகழ் பிம்பம்!

டந்த மே மாதம் 22.ம் தேதியன்று (2018- ம் ஆண்டு) தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம். மறுநாள் மாலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியில் டிஜிட்டல் எமெர்ஜென்சியான இணையதள சேவையை அரசாங்கம் முடக்க, டேபிளில் இரண்டு நாட்களாக “என்னைப்படி என்னைப்படி” என சொல்லிக்கொண்டிருந்த, ஜெயன் மைக்கேல் எழுதிய “மூப்பர்” நாவலைக் கையில் எடுத்தேன்.

வழக்கமாக வேலைகளுக்கிடையில் இணையத்தில் மேயும் பழக்கத்துடன் நாம் இருப்பதால், இணைய முடக்கம் காரணமாக அந்த தொந்தரவு அந்த இரண்டு நாட்களும் இல்லாததால் ,கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு படித்து முடித்தேன். படித்து முடித்த பின்னரும், அப்பப்பா நமது முன்னோர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து வந்துள்ளனர் என மனது வெந்து குமுறியது. இதை எழுதும் நேரத்திலும் மனதில் அன்றைய காலகட்டம் தான் மனக்கண்ணில் வந்து போகிறது.

“தாய் மண்ணுக்கும் என்னை வளர்த்த உங்கள் எல்லோருக்கும் வணக்கம்” என ஆண்டாள் வங்கியின் சேர்மேனின் உ ரையாடலில் துவங்கிய நாவல் சில பக்கங்கள் படிக்கத்துவங்கியதுமே என்னை உள்ளிளுக்கத்துவங்கியது.

குமரியில் வயதில் மூத்தவர்களை மூப்பன் அல்லது மூப்பத்தி என அழைப்பார்கள். ஜெயன் மைக்கேல் எழுதியுள்ள மூப்பர் நாவலில் கடற்கரை கிராமமான பூம்பொழில் என்னும் பூந்தோப்பில் சாதிய கொடுமைக்கு எதிராகப்போராடி, தன்னுடைய ஊர் மக்களைக்காத்த மூப்பரைப்பற்றிய வரலாற்றைப்பதிவு செய்துள்ளார். திருவிதாங்கூர் மன்னராட்சிக்காலத்தில் அன்றைய நாஞ்சில் நாட்டில் முலைவரி, தலைவரி என பல்வேறு வரிகள் போட்டு மக்களை கொடுமைப்படுத்தியதையும், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மேலாடை அணியக்கூடாது என்று விதிக்கப்பட்ட சமூக சீர்கேடுகளையும் நாவலில் கூறியுள்ளார். தோள் சீலைப்போராட்டத்தை மையக்கருவாக கொண்டு இந்த நாவலைப்படைத்துள்ளார் ஜெயன் மைக்கேல்.

சென்னையில் உள்ள ஆண்டாள் வங்கியின் வைரவிழா ஆண்டு கூட்டத்தோடு கதை துவங்கி, கன்னியாகுமரிக்குப்பயணப்படும் கதை, பூந்தோப்பு, இனயந்துறை ஆகிய இரண்டு கிராமங்களையும் சுற்றிச்சுற்றி வந்து, பிளாஷ்பேக்கில் மூப்பரின் பெருமைகளையும் சொல்லி,இறுதியில் ஒரு நகர கட்டமைப்போடு நிறைவு செய்கிறது.

மூன்று தலைமுறைக்குப்பின்னர் மூப்பர் வம்சாவளியில் உருவாக்கப்படும் ஆண்டாள் வங்கி தழைக்கிறது. நாடெங்கும் கிளைகள் பரப்பி விட்டு அது தனது வேர்மண்ணைத்தேடி ஊருக்கு வருகிறது. ஆண்டாள் வங்கியின் மகன் ஜெய்-யிடம் அதற்கான செயல்திட்டம் ஒப்படைக்கப்படுகிறது. குமரியை வந்தடையும் ஜெய் தனது இலக்கை நிறைவேற்ற சொந்த பூமியைக்கண்டடைய எடுக்கு முயற்சி, நில வள வங்கி, அதற்காக கடன் வழங்குதல், வீடு கட்டுதல், நிலத்தை கண்டடைதல், நிலங்களை அபகரித்தல் என எல்லா வகையான நல்ல, கெட்ட முயற்சிகளையும் செய்து மூப்பரின் ஆலயத்தைக்கண்டு பிடிக்கிறான். பூமிபொழில் கிராமத்தை விட்டுச்சென்ற தலைமுறையினரைக்கண்டு பிடிக்கிறான்.

அன்றைய திருவிதாங்கூர் மன்னரை வீரத்துடன் எதிர்த்து நின்ற காட்சிகள், பாதாள சிறையில் அடைபட்டுக்கிடந்தது,12 வயது சிறுவன் வீரர்களை மாய்த்தது என மூப்பரின் வம்சா வழி வீரத்தை நாவலில் அழகாக பதிவு செய்துள்ளார்.

கன்னியாகுமரியின் வரலாறு, அது கேரளாவுடன் இணைந்திருந்தபோது நடைபெற்ற சம்பவங்கள், நாஞ்சில்நாட்டில் நெல் விளைவித்த அழகு, மன்னர்களுடன் இணைந்திருந்த உயர் குடியினர் சாதாரண மக்களுக்கு இழைத்த அநீதி என போகிற போகிற நாவலில் ஆங்காங்கே அள்ளித்தெளித்திருக்கிறார்.

புத்தகத்தை கையில் எடுத்த நிமிடம் முதல் கீழே வைக்க விடாத விறுவிறுப்பு, துப்பறியும் நாவலின் சாகத்தோடு தொடரும் கதையின் ஓட்டம், குமரியின் அழகு சொல்லும் கவிதை நடை, பாதி வளர்ந்த நிலா போன்ற வர்ணனைகள் அவ்வளவு அழகு.

“நாட்டின் அனைத்து செல்வங்களும் கஜானாவில் உள்ளது. நம் அமைச்சர்களையே நம்ப முடியாத நிலையில் இருக்கிறேன். ஒரு வேளை அவர்கள் எதுவும் தீய செயலில் இறங்கினால் கண்டிப்பாக முதலில் நம் கஜானாதான் கொள்ளை போகும். அப்படி நடைபெற்றால் நாட்டைக்காப்பாற்றுவது மிகவும் கடினம். அதனால் நம் நாட்டிலுள்ள செல்வங்களில் சில பூம்பொழியில் சேமித்து வைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று மன்னர் தளபதியிடம் கூறுகிறார்…

இந்த பகுதியைப்படித்ததும் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயில் பாதாள அறையில் தங்கம் , வைரம், வைடூரியம் என செல்வங்கள் குவித்து வைத்திருக்கும் காட்சி நினைவில் வந்து போகிறது. இன்னும் பி என எண் போட்டிருக்கும் திறக்கபடாத திருவனந்தபுரம் கோயில் அறையில் என்னவெல்லாம் இருக்குமோ ?என்ற கேள்வியும் வாசகர் மனதில் உதிக்கும். அன்று வரிக்கு மேல் வரி போட்டு மக்களை துன்புறுத்தினார்கள் என்று அறியும் அதே வேளையில் கோயில் அறைகளில் தங்கப்புதையல் எப்படி? எதற்கு? என்ற வினாவும் வாசகர் மனதில் தோன்றும்.

ஐயா வைகுண்டசாமியின் அவதார காலத்திற்கு முன்பே மூப்பர் பிறந்ததாக நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட சாமிக்கு அளிக்கப்பட்ட கொடுமைகள் போலவே மூப்பரும் இன்னலுக்கு ஆளாகிறார். வெளிச்சம் புகாத இருட்டறையில் சிறைபட்ட மூப்பர் ஐந்தாண்டுகள் கழித்து விடுதலையாகிறார். மன்னர் தவறிழைத்துவிட்டோம் என்பதை உணர்ந்து, உரிய மரியாதையுடன் ஊருக்கு மூப்பரை அனுப்பி வைக்கிறார்.

இன்றைக்கு “தோள்ச்சீலைப்போராட்டம்” என்பதன் வீரியத்தை இந்த நாவலில் உணர்ந்து கொள்ளலாம். மூப்பரின் மனைவி நாச்சியின் மேலாடையை அவிழ்க்க வரும் வீரர்களை துணிச்சலோடு எதிர்க்கிறாள் நாச்சி. போராடுகிறார். இருந்தும் படை வீரன் ஒருவன் அவளது தோள்ச்சீலையை இழுக்க அவன் சீலையை இழுத்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒரு முறை தன்னைத்தானே சுற்றி நிற்கிறாள் நாச்சி.

மார்பை கைகளால் மூடுகிறாள் நாச்சி.

அவளது கைகளை வெட்ட வருகிறான் வீரன். உடனே நாச்சி பாய்ந்து சென்று அருகில் நின்றவனின் வாளை பட்டென்று பறித்து,”என் மகன் உயிரை விட என் மானம் பெரிது. இப்பொழுது அது வெறும் சதை என் மகனுக்கு பால்கொடுத்த முலைகளை என் மகன் முன்னாலே பார்க்க வேண்டுமா உங்களுக்கு? பார்க்க வேண்டுமா? வாங்கிக்கொள், நீ பார்த்த இந்த வெறும் சதைகள் எனக்கு வேண்டாம் இனி, உன் தாயிடமும் மகளிடமும் சென்று கொடு!” என்று கண்கள் சிவக்க தலையை மேலும் கீழும் அசைத்தவாறு தன் இரு மார்பகத்தையும் அந்த வாளால் அறுத்து எறிந்தாள்.

நாச்சியின் மார்பகங்களிலிருந்து ரத்தம் தாரை தாரையாக ஓடியது.

இந்த காட்சியை நினைத்துப்பாருங்கள். எவ்வளவு வலி நிறைந்த காட்சி. மன்னராட்சியில் எப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் நம் முன்னோர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இப்போது நினைக்கும் போதும் நெஞ்சம் பதறுகிறதுதானே..!

இதே போல் கேரள மாநிலம் சேர்த்தலாவில் முலைவரி கேட்ட வீரர்களிடம் ஞங்கேலி என்ற பெண் தனது மார்பை அறுத்துக்கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது. அந்த இடம் முலச்சிப்பறம்பு என இப்போதும் அழைக்கப்படுகிறது.

ராகுல் என்ற கதாபாத்திரம் வழியாக கன்னியாகுமரி மாவட்ட திருமண நிச்சயதார்த்த சடங்குகளை விவரிக்கும் பாங்கு அழகு.

மூப்பர் விடுதலையாகும் நாளில் மன்னருக்கும் மூப்பருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், காட்சி அமைப்புகள் அன்றைய காலகட்டத்தை நமது கண்முன்னே கொண்டு நிறுத்துகிறது.

இயல்பாக சென்று கொண்டிருக்கும் கதையில் பஸ் கடத்தல், மக்களை ஏமாற்றுதல் உட்பட சில நம்ப முடியாத விஷயங்களுடன் கதையின் போக்கு செல்வதும் கதையோட்டத்தில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. நாவலாசிரியரியன் முதல் நாவல் என்பதால் இந்தச்சின்னக்குறைகளை பெரிது படுத்த வேண்டியது இல்லை.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட கதைக்களம் என்றாலும், வட்டார வழக்கு உத்தியைப்பயன்படுத்தாமல் எல்லோரும் படித்து புரிந்து கொள்ளும்படியாக இயல்பான உரைநடையிலேயே நாவல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு என்று கூறலாம்.

54 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் எந்த பகுதியுமே தேவையற்றது என கூறுவதற்கில்லை.

328 பக்கங்களில் நீண்ட நெடியதாகக்கொண்ட கதை முடிந்து விட்டது என நினைத்து கடைசி அத்தியாயத்தைப்படித்தால் அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் நடைமுறையை முகத்தில் அடித்தார்போல் கூறி நாவலை நிறைவு செய்கிறார் ஜெயன் மைக்கேல்.

ரோகிணி மணி கைவண்ணத்தில் உருவான அட்டைப்படம் நாவலின் சுருக்கத்தை வாசகர்களுக்கு உணர்த்தும் விதத்தில் உள்ளது. புத்தக வடிவமைப்பு படிக்க ஆவலைத்தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
நமது மண்ணின் வரலாற்றைத்தெரிந்து கொள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு இந்த நாவல்.
சுகந்தி சுப்ரமணியன் நினைவு திருப்பூர் இலக்கிய விருது (Tirupur literature award 2018)க்கு “மூப்பர்” நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரைச்சேர்ந்த நண்பர் ஜெயன் மைக்கேல் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.


திருவட்டாறு சிந்துகுமார்.

நூல் தகவல்:

நூல் : மூப்பர்

பிரிவு: நாவல்
ஆசிரியர்   : ஜெயன் மைக்கேல்
வெளியீடு  : டிஸ்கவரி புக் பேலஸ்,சென்னை-78
வெளியான ஆண்டு : 2018
விலை     : ₹300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *