திருப்பூர் புத்தகத் திருவிழாவில் (2022)  வாங்கியே ஆகவேண்டும் என மனதில் நிர்ணயித்துக் கொண்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று.

“தனக்கான இடம்…”
இதைத் தேடித்தான் பலரின் வாழ்க்கை நிற்காமல் இயங்கியபடியே இருக்கிறது.அதை மிகச் சரியாகப் புரிந்து தேடலில் தொலைந்து போகாமல் தன்னை, தன் இடத்தை கண்டெடுத்தவர்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில் நாமும் நின்று விடக்கூடாது என்ற பயமும் நிச்சயம் இருந்திருக்கும்.

முதலில் இப்படி ஒரு நூலை.. இல்லை.. இல்லை.‌‌. பாடத்தை எங்களுக்குக் கற்றுக்கொடுத்த இந்நூலின் ஆசிரியர் மாடசாமி ஐயாவுக்கு நன்றி !

எது வகுப்பறை…? என்ற கேள்வி தொடங்கும் போதே ஆசிரியப்பணியில் இணையும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற என் போன்ற இளம் ஆசிரியர்களிடம் “சக்திக்கு மீறி நகர்த்த இன்னும் பெரும் பொறுப்பு இருக்கிறது” என்ற உண்மையைத் தலையில் குட்டி தெளிவித்திருக்கிறது.

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உறவு வெறும் சம்பளத்தோடு நின்றுவிடுகிறதா…?? இல்லை, அதைத் தகர்க்க நாம் புது முயற்சிகள் எடுக்கிறோமா…?எத்தனையோ கேள்வி அம்புகள் எய்தி எய்தி புத்தகம் முழுக்க திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமென யாருக்கும் தெரியாது. ஆதிமூலத்தைப் போல நிர்வாகத் திறனோடு கூடிய குடும்ப பாரம் சுமக்கும் பிள்ளைகள் எத்தனையோ..?

பர்கத் அலி பாத்திமாவைப் போல திடீரென தன் இருப்பை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் வேண்டிக் காத்திருக்கும் பிள்ளைகள் எத்தனையோ..?

ஒற்றைப் பாராட்டுக்காக ஏங்கி திறமைகளை டைரிகளில் ஒளித்து வைத்திருக்கும் வாசுகிகள் எத்தனையோ..?

ஒற்றை தவற்றுக்காக தன் அடையாளமே மாறிப்போய் அவப்பெயர் சுமந்து நிற்கும் ராஜவேல் எத்தனையோ..?

மண்டையைப் போட்டுக் கிண்டி எடுத்து அங்கங்கே அப்பிக் கிடந்த பிள்ளைகள் பற்றிய தனிப்பட்ட நினைவுகளைக் கழுவி ஊற்றி சுத்தம் செய்து விட்டேன். ஒரே ரோஜாச் செடி தினமும் சொல்லி வைத்தாற்போல ஒரே அளவில் அதே அழகில் பூக்களைக் கொடுப்பதில்லை. இனி தினந்தோறும் வகுப்பறையில் தினம் பூக்கும் மலராகத்தான் மாணவர்களைப் பார்க்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டுவிட்டேன்.

வசவு சொல் பேசாமல் இருப்பது, மனதைக் காயம் படுத்தாமல் புன்னகைத்தபடி கடப்பது இவைகளை எல்லாம் எப்போதோ நல்ல ஆசிரியர் பட்டியலில் சேர்த்துவிட்டபின்.., புன்னகை முகமூடியைத் தேடி காலம் பயணிக்கிறது.

"ஒரு ஆசிரியர் காயப்படுத்தாமல் இருந்தால் மட்டும் போதுமா..? காயத்தைக் கண்டுபிடித்து மருந்து போட வேண்டாமா..?"

"கல்வி திணிப்பதிலும், .வசப்படுத்துவதிலும் அல்ல ..! பங்கேற்க வைப்பதிலும், உருவாக்குவதிலும் இருக்கிறது."

இப்படி எத்தனையோ குட்டிக் குட்டி விஷயங்கள்,  கண்டும் காணாமல் கடந்து போன விஷயங்கள் என நூல் முழுதும் பொதிந்து கிடக்கிறது.

வெறும் syllabus முடித்து, கரைத்து‌ குடிக்க வைத்து…, 100 போடும் வரை அடைகாத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கும் இந்தக் காலத்தில் மாற்றத்தை எங்கிருந்து துவங்குவது..?

ஆனால்,  பாடத்திட்டம் மட்டும் போதும் என்ற போக்கு பள்ளி, பெற்றோர், மாணவர் என எல்லோர் மனதிலும் நிலைத்துவிட்ட இக்காலத்தில் அதைச் சீர்செய்யச் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறதே… அதை எவ்வாறு எதிர்கொள்வது…?

எனக்குரிய இடம் எங்கே…? என்று மாணவனைத் தேட வைத்து, கண்டுகொள்ள வைத்து, அதற்குள் தனக்கான இடத்தை தான் தேடிக்கொள்ளும் வாய்ப்பை கொடுப்பதாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆசிரியரும் தன் வகுப்பறை போக்கை மாற்றப் பிரயத்தனம் எடுக்கும் போது அதுவே வழக்கமாகிப் போக வாய்ப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலின் வரிசையில் இந்நூல் நிச்சயம் இருக்க வேண்டும்.

நன்றி ச.மாடசாமி ஐயா..!


நூல் தகவல்:

நூல் :எனக்குரிய இடம் எங்கே?

வகை :    சிறார் நூல் | கட்டுரைகள்

ஆசிரியர் :  ச.மாடசாமி

வெளியீடு :    சூரியன் பதிப்பகம் (2016)

மறு வெளியீடு :  பாரதி புத்தகாலயம் (2018)

பக்கங்கள் :  128

விலை:  ₹  120

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *