புத்தகத்தின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல. பல இடங்கள்ல இந்த புத்தகம் தேடியும் கிடைக்கல. ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கிய புத்தகம் இது. இந்த புத்தகம் வகுப்பறை உறவுகள் அதாவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவுப்பாலம் பற்றி நிறைய விசயங்கள் இதுல எழுதிருக்காரு.

எல்லா ஆசிரியர்களும் சிறந்த ஆசிரியராக, எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியரா இருக்கனும்னு தான் நினைப்பாங்க. ஆனா ஏதோ ஒரு சூழ்நிலைகளால அந்த லட்சியத்துல இருந்து அவங்களையே அறியாம விலகிடுறாங்க. அது அவங்கமேல இருக்க தவறுகள் இல்ல. ஒரு குழந்தையையே நம்மளால கட்டுப்படுத்த முடியாத போது 100 குழந்தைகளை தினமும் சமாளிக்கிற ஆசிரியர்கள் எப்பவுமே பெருமைக்கு உரியவர்கள் தான்.

சராசரி ஆசிரியரைப் போல நடத்தும் அய்யப்பராஜீக்கு சக ஆசிரியரான சந்திரன் ஒரு கதை சொல்லி ஆசிரியர் பணியைப் பற்றியும் வகுப்பறை சுதந்திரத்தைப் பற்றியும் புரிய வைக்கிறார். அங்கிருந்து ஆரம்பிக்கிறது இக்கதை.

“உயிரோட்டமான வகுப்பறைன்னு சொல்றிங்களே! ‘வகுப்பறையின் உயிர்’ னு எதைச் சொல்றீங்க? ஆசிரியரின் திறமையையா? என்று அய்யப்பராஜ் சந்திரனிடம் கேட்கிறார்.

“இல்லை! மாணவரின் பங்கேற்பை! இளம் மூளைகள் சிந்திக்காமல், சிந்திப்பதைப் பேசாமல், பேசி விவாதிக்காமல் உயிர் தோன்றாது”

சந்திரனின் பதிலில் அய்யப்பராஜீக்கு புதிய வெளிச்சம்!

“பத்துவருசத்தை விரயமா கழிச்சுட்டேன்!

“பத்து வருசமா கோட்டை விட்டதை பத்து நாள்ல மீட்கலாம். ரொம்ப சுலபம்”

“அப்ப நாளையில் இருந்தே நான் புது வகுப்பறையைத் தொடங்கலாமா? ஆனா எங்கிருந்து தொடங்குவது?”

“இதுக்கு டைம் டேபிள் எல்லாம் இல்ல. மாணவர்களோட சேர்ந்து கூட்டு முயற்சியா வகுப்பறையைத் தொடங்குங்க! எங்கிருந்தாவது தொடங்குங்க. பிறகு ஒழுங்குபடுத்திக்கலாம்”

“மாணவர்களின் பார்க்காத முகத்தை பார்க்கனும்னு சொன்னிங்களே! எந்த அர்த்தத்தில்?”

“வகுப்பறையை நீங்கள் ஒருவரே முழுக்க ஆக்கிரமித்து பாடம் நடத்தி வந்தால், மாணவர்களின் ஒரே முகத்தைத்தான் பார்ப்பீங்க. புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கி மாணவர்களை பங்கேற்கச் செய்யுங்க. இதுவரை நீங்கள் பார்க்காத முகங்களைப் பார்ப்பீங்க.”

இதற்குப் பிறகு அவர் எடுக்கும் புது புது முயற்சிகளால் மாணவர்களின் புது புது முகங்களையும் திறமைகளையும் காண்கிறார். நாடகம், கடிதம் எழுதுதல், பிரச்சனைகளைக் கையாளுதல் மற்றும் விளையாட்டுனு பல்வேறு விசயங்களில் அவர் எடுக்கும் வித்தியாசமான நடவடிக்கைகளால் கதை ரொம்ப சுவாரசியமாக நகர்கிறது.

இன்னும் இந்த புத்தகத்தைப் பற்றிப் பேச எனக்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. பக்கங்கள் நகர்ந்ததே தெரியவில்லை. நிச்சயம் ஒவ்வொரு ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகமாக இருக்கிறது.

இக்கதையில் வரும் அய்யப்பராஜீனைப் போன்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இருந்தால் நிச்சயம் ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமைகளுடனும் தங்களுக்கான அடையாளங்களுடனும் மிளிர்வார்கள்.

நன்றி !

மனோன்மணி முருகேசன்

 

நூல் தகவல்:
நூல் : எனக்குரிய இடம் எங்கே?
பிரிவு : கட்டுரைகள் | சிறார் நூல்
ஆசிரியர் ச.மாடசாமி
வெளியீடு: சூரியன் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2016
பக்கங்கள் 128
விலை : ₹ 100