சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

பெனியும் நந்துவையும் போல் நீங்கள் எப்போது படிக்கத் துவங்குவீர்கள்?


புத்தக வாசிப்பு என்பது சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் பொதுவானது. இன்று பெரியவர்களாக இருக்கும் அநேகர் சிறுவயதில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள் எனில், அந்தப் பழக்கம் பெரியவர்கள் ஆன பின்பும் வாசிப்பின் ஆர்வத்தை வளர்த்திருக்கும். ஆனால், சிறுவயதில் வகுப்பறையையும் பாடப் புத்தகங்களையும் தாண்டி விருப்பமான கதைகள், கட்டுரைகள்,கவிதைகள், நாடகங்கள் என பரந்து விரிந்திருப்பின், வயது ஏற ஏற அவர்கள் எதோ ஒரு வகையில் தங்கள் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.எனவே சிறுவர்களை புத்தகம் படிக்கத் தூண்டும் விதத்தில் இன்று எராளமான சிறுவர் இலக்கியங்கள் வளர்ந்து கொண்டிருகின்றன.

எஸ்.ரா என்று அன்போடு அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறார் நாவல் வரிசையில் இடம் பெற்றுள்ள “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். இந்த நூலின் அட்டைப் படமே அதற்குச் சான்று. நூலக அறையில் சிறுவர்கள் ஏணியின் மீது ஏறி புத்தக அடுக்குகளில் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை தேடுவது போல் அட்டைப் படம் அழகாக அமைந்துள்ளது.

நந்து என்ற ஒரு சிறுவன் அவன் அம்மாவின் அறிவுறுத்தலின் படி அவர்கள் பகுதியில் உள்ள டேனியல் மெமோரியல் நூலகத்திற்கு அவன் அம்மாவோடு வருகிறான். முதலில் அவனுக்கு புத்தகம் படிக்க விருப்பமில்லாமல் இருக்கிறது. வீடியோ கேம்ஸ் மட்டுமே அவனது ஒரே விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் நூலகத்திற்குள் வந்த போது தன்னையொத்த இன்னொரு சிறுவனும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். முதன்முதலாக நூலக அடுக்கில் உள்ள புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கிறான். புத்தகதிற்குள் நுழைவது எப்படி? என்று யோசித்தபடியே ,அவன் படிக்கும் போது அந்த மாய உலகம் அவனை அப்படியே இழுத்துக் கொள்கிறது.

அந்த நூலகத்தில் அவனுடன் படித்துக் கொண்டிருந்த பெனி என்ற இன்னொரு சிறுவனும் இணைந்து அந்த நூலகத்தின் புத்தக அடுக்குகளுக்குள் நுழைந்து அங்கே உள்ள சிவப்பு மூக்கு கோமாளி படம் போட்ட புத்தகத்தின் அருகே நிற்கிறார்கள். அந்தக் கோமாளியின் தொப்பியைத் தொட்டு அமுக்கினால் புத்தகம் திறந்து கொள்ளும் என்று’ பெனி கூறுகிறான்.

விசித்திரமான இந்த விந்தை உலகத்துக்குள் நண்பர்கள் இருவரும் தொடர்ந்து பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு , அந்த விந்தை உலகத்தில் காத்திருக்கும் அதிசயங்கள் அவர்களை மேலும் மேலும் புத்தகம் பற்றியும், கதைகள் பற்றியும் அந்த புத்தகங்களை எழுதியவர், பராமரிப்பவர் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டுகிறது.

புத்தகங்களை பராமரிக்கும் முதலுதவி மையத்தில் டாக்டர் நந்துவிடம் , ஒவ்வொரு நாளும் உலகத்தில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வெளியே வீசப்பட்டு ,புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு மோசமான நோய். குழந்தைகளை கவனிக்கிற மாதிரி நாம் புத்தகங்களை கவனிக்கணும். எல்லா புத்தகங்களுக்கும் உயிர் இருக்கு. இந்த உலகிலே எங்கே எந்தப் புத்தகம் அடிபட்டாலும் ,தூக்கி எறியப்பட்டாலும் அது தானே இந்த நூலகத்துக்கு வந்து சேர்ந்துவிடும். இங்கே அவுங்களுக்கு சிகிச்சை கொடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். அப்படி நாங்கள் காப்பாற்றி வைத்திருக்கிற புத்தகங்கள் எவ்வளவு தெரியுமா? மூன்று கோடி”

“ ஆச்சரியமா இருக்கு டாக்டர். இதை எல்லாம் யார் செய்றது?”

சாகரடீஸ். அவர்தான் இந்த மாய நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் . ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நாங்க யாருமே சாக்ரடீசை பார்த்தது கிடையாது.

எஸ்.ரா வின் கதையுலகத்தில் பயணிக்கும் சிறுவர்கள் மனதில் கண்டிப்பாக மிகப்பெரிய மனமாற்றத்தை  இது போன்ற வரிகள் ஏற்படுத்தும்.

இதில் வரக்கூடிய குட்டிக் கதைகள் யாவும் மிகவும் சுவாரஸ்யமானவை. கழுதை புலியைக் கொன்று விடுவது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. உண்மையில், கழுதை புலியைக் கொன்று விடுகிறது. எப்படி?

நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று கதைக்குள் சாத்தியமாகிறது. இந்தக் கற்பனைதான் நமக்கு மாற்றுலகத்தை உருவாக்கித் தருகிறது. பழைய மனிதர்களின் தேய்ந்து போன பழைய சிந்தனைகளை மாற்றி புதிய உலகத்தை அவர்கள் முன்னே கொண்டு வருகிறது. கதைக்குள் வாழக் கூடிய மிருகங்கள் வழியாக மனிதர்கள் தங்களது புதிய உலகை ,புதிய வாழ்க்கையை கண்டுபிடிக்கிறார்கள். பேசாத மிருகங்கள் யாவுமே மனிதர்களுக்காக பேசுகின்றன. அவை நம் முன் மிகப்பெரிய கதாபாத்திரங்களாக உலா வருகின்றன. நாமும் நமது குழந்தைகளுக்காக அவர்கள் விரும்பும் அந்த விசித்திர உலகத்திற்கு சென்று புதிய உலகத்தை தேடிக் கண்டடையலாம்.


மஞ்சுளா

நூல் தகவல்:
நூல்: சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
பிரிவு : சிறார் நாவல்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
வெளியான ஆண்டு  முதல் பதிப்பு : 2014 (உயிர்மை பதிப்பகம்)

மறுபதிப்பு : 2019 ( தேசாந்திரி பதிப்பகம்)

பக்கங்கள்: 56
விலை:  ₹ 70
Buy on Amazon

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

2 thoughts on “பெனியும் நந்துவையும் போல் நீங்கள் எப்போது படிக்கத் துவங்குவீர்கள்?

  • சிறப்பான அறிமுகம்.குழந்தைகள் மட்டுமல்ல வளர்ந்த பிறகும் தன்னுள் இருக்கும் குழந்தையைக் காப்பாற்றி வருபவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்

    Reply
  • சாக்ரட்டீஸு ன் நூலகத்தில் உலா வந்த அனுபவத்தை தரும் வாசிப்பனுபவம். அருமையான பார்வை

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *