சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

பட்டாம்பூச்சி – சிறுவர் பாடல்கள் – ஒரு பார்வை


ல்லரசன் ஒரு நல்ல கவிஞர். விதை நெல் மூலம் கவிதைப் பயணத்தைத் தொடர்ந்தவர் வாக்குமூலம், முகங்கள்,  திசைகள், தழும்புகள்  என்னும் தொகுப்புகளையும் தந்துள்ளார்.  பொதுவாக கவிதை எழுதி வந்தவர் சிறுவர்களுக்காக எழுதிய ஒரு பாடல் தொகுப்பு ‘பட்டாம் பூச்சி’.  சிறுவர்களுக்கு பாடல் எழுதுவது ஒரு கலை.  இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கு எல்லாருக்கும் சிறுவர்களுக்கு எழுத த் தோன்றுவதில்லை.   எழுதவும் வாய்ப்பதில்லை.  நல்லரசனுக்கு நன்றாக வாய்த்துள்ளது. சிறுவர்களுக்காக எழுதப் பட்ட ‘ பட்டாம் பூச்சி’யைச் சிறுவர்களுக்கே சமர்ப்பித்துள்ளார்.

உலகில் எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு செம்மொழி தமிழுக்கு உண்டு. தமிழுக்கு சிறப்புகள் பல இருந்தாலும் மொழிகளில் எல்லாம் மூத்தது என்பது முக்கிய சிறப்பு. ஆய்வுகள் தமிழே மூத்த மொழி என்றே தெரிவிக்கின்றன. தமிழ் ‘ மூத்த மொழி’ என்பதை நயமாகக் கூறியுள்ளார்.

ஆதியில் தோன்றிய மூத்த மொழி

அருந் தமிழாகப் பூத்த மொழி 

எனத் தொடங்கி தமிழ் மொழியின் சிறப்புகளை எழுதியுள்ளார்.  சிறுவர்களின் மனத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பதிவுச் செய்ய முயன்றுள்ளார்.  திருக்குறளை’யும் தினமும் ஓத வேண்டும் என்கிறார். இரண்டு வரி குறளின் பெருமையை இரண்டு இரண்டு வரிகளால் எழுதியுள்ளார்.

உலகில் உன்னதமான தொழில் ‘ உழவுத் தொழில் ‘. முதன்மையானத் தொழில். உழவுத் தொழில் இன்று நசிந்து வருகிறது. உணவு உற்பத்தியும் குறைந்து வருகிறது.

உழவுத் தொழிலே உயிராகும்

உழுதால் நன்றாய்ப் பயிராகும்

என உழவுத் தொழிலின் மேன்மையைச் சிறுவர்களுக்கு உணர்த்தியுள்ளார். உழவு உயிர் என்று உயர்த்திக் காட்டியுள்ளார்.

மனித வாழ்வில் பல பருவங்கள் உண்டு.  பருவங்களில் எல்லாம் ‘ பள்ளிப் பருவம் ‘ அவசியமானது.  சிறுவர்கள் சந்திக்க வேண்டியது. பருவத்தில் பயிர் செய் என்பது போல பள்ளிப் பருவத்தில் கற்றேயாக வேண்டும்.

பள்ளிப் பருவம் என்பது

பழம் எடுத்து உண்பது

என்கிறார். பள்ளிப் பருவத்தில் பாலகர்கள்  என்ன பின்பற்ற வேண்டும், எதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று மென்மையாக அறிவுறுத்தியுள்ளார். ‘ காலையில் எழுந்திடு ‘ என்பதும் கல்வித் தொடர்பானது. சிறுவர்களுக்கான அறிவுரை.’ ‘ அச்சம் கொள்ளாதே ‘ என்னும் ஒரு பாடலில் நம்பிக்கை ஊட்டியுமுள்ளார்.

கற்க கற்க தீராது

கற்ற பின்னே மாறாது

என ‘ கல்வி ‘  பயன் குறித்தும் தெரிவித்துள்ளார். ‘ ஆனா ஆவன்னா ‘ என்னும் பாடல் சிறுவர்களுக்கு பயனுள்ள பாடலாகும். உயிர் எழுத்துகளை முதல் எழுத்தாக வைத்து எழுதியுள்ளார். தொகுப்பில் வித்தியாசமான பாடல். ‘ அறிவியல் நம்பு ‘ என்றும் அறிவுறுத்தியுள்ளார். ‘ பள்ளிக் கூடம் ‘ உயர வைக்கும் என்றும் ஒரு பாடல் உள்ளது.

இலக்கியத்தில் ஒரு மூதாட்டி ஒளவைப் பாட்டி. ஆத்திச் சூடியையும் பாடியவர்.  கொன்றை வேந்தன் பாடிய ஒளவையைப் பாடி பெருமை சேர்த்துள்ளார்.  தமிழின் சிறப்பு ‘ ழ’. ழவை உச்சரிப்பதே அழகு. பழம், வேழம், கிழம், முழம் என ழவை உள்ளடக்கிய சொற்கள் தமிழுக்கு பலம். வளம். ழ என்னும் தலைப்பில் ஒரு பயிற்சிப் பாடலைத் தந்துள்ளார்.

பட்டாம் பூச்சி,  பூனைக் குட்டி, நாய்க் குட்டி,  அணில்,  தவளை, முயல் குட்டி, ஓணான், ஆட்டுக்குட்டி, எறும்பு,  அழகு மயில், ஆமை, வாத்து, குரங்கு, சிட்டு, வண்ணக் கிளி, யானை, காகம், ஆலா , சேவல் என உயிரினங்கள் குறித்தெல்லாம் பாடலாக எழுதி சிறுவர்களுக்குத் தெரிவித்துள்ளார். உயிரினங்களின் இயல்புகளையும் கூறியுள்ளார்.

அம்மா, பாப்பா என சில ‘ உறவுகள் ‘  பற்றியும் பாடலாக்கியுள்ளார். உறவே நமக்குத் துணையாகும் என்கிறார்.

தேன் கூடு, நிலா, மரம்,  வெள்ளி அருவி, தென்னை மரம் , ஆலமரம், பனை மரம், புயல் , கோடை மழை, மின்னல் , காடு , மருத நிலம், கடல், மலைகள்  என இயற்கையையும் பாடியுள்ளார். ‘இயற்கை ‘க் குறித்தும் ஒரு பாடல் எழுதப் பட்டுள்ளது. ‘ மரம் ‘ என்னும் பாடலில்

மரத்தை வெட்டக் கூடாது

மழைநீர் எங்கும் ஓடாது 

என்பது நல்ல அறிவுரை. மரத்தின் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளார்.  மரம் குறித்து மனிதர்களுக்கு படைப்புகள் மூலம் அறிவுறுத்தியும் கேட்க வில்லை.  சிறுவர்களாவது சிந்தித்து செயல் பட வேண்டும். ‘ மரக் கன்று நடு ‘ என்றும் இளம் கன்றுகளுக்குக் கூறியுள்ளார்.

‘திசைகள் ‘ ஒரு நல்ல பாடல். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகள் குறித்து சிறுவர்கள் அறியச் செய்துள்ளார். இவ்வாறான அறிவூட்டல்கள் சிறுவர்களுக்கு அவசியம்.  மேலும்

எல்லாத் திசையும் சென்றுவிடு

இலக்கு வைத்து வென்று விடு

என இலக்குடன் வாழ வேண்டும் என்கிறார்.   உலகம் தட்டையானது என ஒரு காலத்தில் கூறப் பட்டது. ‘உலகம் உருண்டை’ தான் என்பது கண்டு பிடிக்கப் பட்டு நிரூபிக்கப்பட்டது. கவிஞரும் ‘உலகம் உருண்டை’ என சிறுவர்களுக்கு உரைத்துள்ளார். தற்போது இருக்கும் தமிழர்களுக்கே ‘தமிழ் மாதங்கள்’ தெரியாது.  கவிஞர் தமிழ் மாதங்களையும் பாடல் வழி கற்றுத் தந்துள்ளார்.  ‘நாட்கள் ஏழையும்’ நன்றாக கூறியுள்ளார். ‘எண்கள் பத்தை’ யும் பனிரெண்டு வரிகளில் பாடலாக்கி பாடமுமாக்கியுள்ளார்.

எல்லா ஊரிலும் தேர் இருந்தாலும் திருவாரூர் தேருக்கு என்று பெயர் உண்டு் .  தேரோட்டத்தைச் சிறுவர்கள் பார்க்க வாய்ப்பில்லை. கவிஞர் சிறுவர்களுக்காக ‘தேர்’ பாடல் மூலம் தேரோட்டிக் காட்டியுள்ளார்.  தேர் திருவிழா என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான விசயம் ‘பொம்மை’ வாங்குவது. சிறுவர்களுக்கும் பொம்மைக்கும் எப்போதும் ஒரு தொடர்பு உண்டு. தேரைத் தொடர்ந்து பொம்மையையும் எழுதியுள்ளார்.

‘ரயில் வண்டி’ சிறுவர்களுக்கு பிடித்தமானது.  ரயில் வண்டியைக் கண்டு டாட்டா காட்டாத சிறுவர்கள் அரிது.

வெள்ளைக் காரன் விட்டது

ஊரையெல்லாம் தொட்டது

என  ரயில் வண்டியின் வரலாறையும் கூறியுள்ளார்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு. சேமிப்பது சிறந்த பண்பு.  சேமிப்பது சம்பளத்திற்கு சமம்.  கவிஞரும் ‘சேமிப்பாய்த் தம்பி’  என செல்லமாக அறிவுரைத்துள்ளார் . எறும்பு கூட சேமிக்கிறது என்கிறார்.

‘கோட்டைகள்’ வரலாற்றுச் சின்னங்களாகும். மன்னர் காலத்து கோட்டைகள் பல அழிந்து போயின. சிலவே அழியும் நிலையில் சாட்சிகளாக நிற்கின்றன. கோட்டைகளையும் பாடல் மூலம் சிறுவர்களுக்கு காட்சிப் படுத்தியுள்ளார்.

‘கோமாளிகள்’ சர்க்கஸிலும் இருப்பர். கூத்திலும் இருப்பர். இவர்கள் வேலை மக்களை சிரிக்க வைப்பது. கோமாளிகளுக்காகவே ஒரு கூட்டம் வரும்.

கோமாளிகள் சிரிப்பிலே

குறைந்து போகும் நோய்களே

என கோமாளிகள் குறித்து எழுதியுள்ளார்.

காலம் மாற மாற பழைய பொருள்கள் வழக்கொளிந்து வருகின்றன. பயன்பாட்டிலும் இல்லாத ஒன்று. அவ்வாறானவைகளில் ஒன்று ‘மரப்பாச்சி’. மரப்பாச்சி பொம்மை குறித்து ஒரு சித்திரத்தை உருவாக்கி சிறுவர் மனதில் பதியச் செய்துள்ளார்.

ஒரு பட்டாம் பூச்சியில் ஒரு நூறு பாடல்கள் உள்ளன. சிறுவர்களின் மீதான அக்கறையுடன் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. சிறுவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய  விசயங்களை, தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை ,  அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எளிமையாக, அருமையாக பாடல்கள் வடிவில் கவிஞர் நல்லரசன் தந்துள்ளார்.  காலத்தால் கரைந்து போன , காணாமல் போன  பொருள்கள் குறித்தெல்லாம் தெரிவித்துள்ளார்.  சிறுவர்களுக்கு சரியான வயதில் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். கவிஞர் நல்லரசன் சரியாகச் செய்துள்ளார். ஒரு கவிஞராக இருந்து கொண்டு  சிறுவர்களுக்கு பாடல் எழுதுவது எளிதானதல்ல. கவிமொழியைக் கைவிட்டு குழந்தைகளுக்கான மொழியில் சந்தத்துடன் தர வேண்டும். பாடும் மொழியிலும் இருக்க வேண்டும். கேட்கும் படியும் இருக்க வேண்டும். அவ்வாறு பாடல் அமையும் போதே சிறுவர்கள் மனதில் பதியும். கவிஞர் நல்லரசன் பாடல்கள் மேற்கூறிய வகையில் அமைந்துள்ளது  பாராட்டுக்குரியது. வளரும் சிறுவர்கள் வெற்று மூளையுடன் வளரக் கூடாது என்று கவிஞர் எண்ணியதன் விளைவாகவே பட்டாம் பூச்சி உள்ளது. பட்டாம் பூச்சி என்னும் தலைப்பே தொகுப்புக்குள் பிரவேசிக்கச் செய்கிறது.  அழ. வள்ளியப்பா தொடங்கி ஒரு பெரும் கவிஞர்  பட்டியலே குழந்தைக் கவிஞர்கள் உள்ளனர்.  கவிஞர் நல்லரசனையும் பட்டாம் பூச்சி ஒரு குழந்தைக் கவிஞராக அடையாளப் படுத்தியுள்ளது.

 

பொன்.குமார், சேலம்.

 

நூல் தகவல்:

நூல் :    பட்டாம்பூச்சி – சிறுவர் பாடல்கள்

பிரிவு : சிறார் இலக்கியம்

ஆசிரியர்  :    கவிஞர். நல்லரசன்

வெளியான ஆண்டு   :    2018

விலை  :     ரூ.120/-

வெளியீடு :     பாவை பதிப்பகம், 214 நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம்

கடலூர்-1 –

தொடர்புக்கு :  97905 19966, 9080493121

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *