சோழ வேங்கை கரிகாலன். இதன் ஆசிரியர் சேலத்தைச் சேர்ந்தவர். சுங்கத்துறையில் பணிபுரிபவர்.. எழுதுவதிலெல்லாம் ஆங்கிலம் இருப்பினும் தமிழ் மீதுள்ள தீராத ஆர்வத்தால் முதல் முயற்சியாய் இந்நாவலைப் படைத்துள்ளார். இது இவரது முதல் புதினம்.. படிக்கும்போது அப்படித்தோன்றவில்லை. தேர்ந்த எழுத்தாளர்களுக்கு நிகராக எழுதியுள்ளார். இத்தனை அழகான தமிழ் சொல்லாடல்களுடன் இரண்டு பாகங்களாய், 90 அத்தியாயங்களுடன் நிறைகுடமாய் மிளிர்கிறது. கரிகாலன் கட்டிய அணைக்கு நிகரான வலிமையுள்ள கதைக்களத்தை அசாத்திய துணிச்சலுடன் இவர் படைத்துள்ளார். பழந்தமிழ் நூல்களில் ஆங்காங்கே கிடைத்த மிகக்குறைவான தரவுகளை இருகரையாகக்கொண்டு தனது புனைவாற்றை அதனூடே வெள்ளமாய் பாய்ந்தோடச் செய்திருக்கிறார். எழுதப்பட்ட வரலாற்றினுள்ளே எழுதப்படாத ஓர் வரலாற்றை மிக நுட்பமாகப் புனைந்து, வரலாற்றை கிஞ்சிற்றும் திரிக்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டதுபோல் மழையின் ஓர் துளியிலிருந்து கடலின் முகவரி தேடும் முயற்சியே ஆயினும் தேடி அடைந்த கடலெங்கிலும் தேன் துளிகளை நிரப்பியிருக்கிறார். மாமன்னனின் வேர் தேடிக் கண்டெடுத்தவர் அதனைத் தனது கற்பனையால் வனமாய் பெருக்கி, தமிழின் மணத்தை ஊட்டி, வாசிப்போர் இதயத்தினுள் பசுமையை விதைத்திருக்கிறார்.

வரலாற்றுக்கதைகளுக்கு ஓர் வரையறை உண்டு நான் படித்தவரையில்.. ஒன்று நிகழ்ந்த வரலாற்றை அப்படியே ஆவணப்படுத்துதல்,  மற்றொன்று முழுவதுமே கற்பனையாகக் காட்சிப்படுத்துதல். இது மிகவும் இலகுவானது. கற்பனைச் சிறகை எந்த எல்லை தாண்டியும் விரிக்கலாம்.. அது மிகு புனைவாயிருப்பினும் தர்க்கத்திற்கு இடமில்லை. இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய கரிகாலனெனும் மாமன்னன் வரலாற்றையும், பெயரையும் இக்கால கட்டத்தில் கல்லணையும் சில கல்வெட்டுகள் மட்டுமே தாங்கி நிற்கிறது.

கரிகாலன் மறைந்து வாழ்ந்ததும், சிறுவயதிலேயே வெண்ணிப்பறந்தலையில் சிற்றரசர்களின் கூட்டுப்படையை வென்றதையும் சேரமான் வடக்கிருந்து உயிர் துறந்ததும் தரவுகளாய், வரலாற்றின் மிச்சங்களாய் இருக்கின்றன. இதெப்படி சாத்தியமாயிருக்கும்? மறைந்து வாழ்ந்த கரிகாலன் எப்படி வளர்க்கப்பட்டிருப்பான்? அச்சிறுவயதில் இத்தனை பேரை வீழ்த்த வேண்டுமெனில் எத்தகைய வீரம் எவர் மூலம் ஊட்டப்பட்டிருக்கும்? எப்படியெல்லாம் போர் நடந்திருக்கக்கூடும்? என்ற கேள்வியில் விரியும் கற்பனை தொடுவானின் எல்லை வரை நீண்டிருக்கிறது ஆசிரியரின் கைவண்ணத்தில்… கதை சொல்லலின் நவீன வடிவத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.. ஆசிரியர் எடுத்துவைக்கும் முதல் அடியே இமயத்தின் சிகரத்தை நோக்கி உள்ளதால், இந்த முதல் முயற்சியை விமர்சிக்காமல் ஒரு மதிப்புரையாகவே கூறவிழைகிறேன்.

இனி கதைக்குள்…

“சோழத்தை ஆண்டவன்.. சோழத்தின் ஆண்டவன்” என ஆசிரியரால் புகழப்பட்ட இந்த கரிகாலன் கதையைப் படிக்கத்துவங்கும்போது எனக்கு ஏற்பட்ட முதல் திருப்தியே இக்கதைக்கு கரிகாலன் தான் நாயகன் என்பதே.. கரிகாலன் கதையை எத்தனையோ பிற நாவல்களில் வாசித்திருந்தாலும் அதில் கரிகாலன் பாத்திரம் இத்தனை அழகாகப் படைக்கப்பட்டிருக்காது. வேறு ஏதாவது கற்பனைப்பாத்திரமே கதையின் நாயகனாக நாவலெங்கும் எழுதப்பட்டிருக்கும்.. கரிகாலன் அரியணை ஏற அவர்களே பெரும்பங்கை அளித்திருப்பர்.

இதில் அப்படியில்லாதது பெரும் மகிழ்ச்சியே.. இரண்டுமே புனைவெனினும் இதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பம்சங்கள் பல உள்ளன. முதலில் சொல்வதென்றால் ஆசிரியர் எழுதிய அழகு தமிழின் நடை.. பிற நூலோடு சிறிதும் ஒட்டாதது. ஒரு விஷயத்தையோ, ஒரு சம்பவத்தையோ, ஓர் இடத்தையோ, ஓர் பொருளையோ கூறும்போது அதன் அத்தனை சிறப்பம்சங்களையும் தொகுப்பது. இந்திரவிழா என்றால் இப்படித்தான் நடந்திருக்கும் இதைத்தாண்டி வேறெதையும் யோசிக்க வைக்காத காட்சியமைப்பு.  தேரின் சிறப்பம்சங்கள், பூ, பழ, வகைகள், உணவு வகைகள், வாள் அம்பு வகைகள், இசைக்கருவிகள் என ஏராள தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்தறியாத ஒருசில தமிழ் வார்த்தைகளையும் இதில் காண முடிகிறது. சங்ககால மக்களின் மாண்பு, அறம் சார்ந்த வாழ்வியல், வழிபாடு, பழக்கவழக்கங்கள் மன்னருக்கும் மக்களுக்குமான பிணைப்பு என அக்காலத்தின் தொன்மங்களைக் காலம் கடந்து பின்னோக்கிக் சென்று அப்படியே எடுத்து வழங்கியிருக்கிறார் சுவைமிகு தமிழில் நாம் படிக்க..

தேரை வடிவமைப்பதில் சிறந்த, வணிகர்களின் இடர் களைய வம்பர்களை வீழ்த்திய வீரம் மிக்க, போர்க்கலையில் சிறந்த ஆனால் போரை விரும்பாத, தன்நாட்டுக் குடிகளுக்காக எதையும் செய்யும் சோழ அரசன் இளஞ்சேட்சென்னி.. படிக்க ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே ஒரு மாபெரும் மனிதனாய் சிம்மாசனமிட்டு அமர்கிறான் சென்னி.. ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்குமான இடைவெளி அரியணையில் அமரும் உயரமொன்றே எனக் குடிமக்களின் வாழ்வில் சகமனிதனாக வலம் வருபவன். அவனை மணந்த வேளாண் குடி இளவரசி இளவெயினி.. அழகும், மதிநுட்பமும் ஒருங்கே அமைந்த பச்சை விழியாள். அரசனைப்போலவே மக்கள் நலனே உயிரெனக்கொண்ட தாய் போன்றவள்.

வம்பர்களின் தலைவன் இளங்கோவேளின் மரணத்திற்கு வஞ்சினம் உரைத்த அவனுடன் பிறந்த இருங்கோவேள் மற்றும் சில சிற்றரசர்களின் சதியால் இளஞ்சேட்சென்னி கொல்லப்பட, அரசியையும் கருவிலிருக்கும் மகவையும் அழிக்கச் செய்யப்படுகின்ற சதியிலிருந்து மீண்டு, மறைந்து வாழ்ந்து குழந்தையை வீரனாக வளர்த்தெடுக்கும் தாய்.. அவளுக்குத் துணையாய் அண்ணன் இரும்பிடார்..

கதையின் இக்களத்தை ஆசிரியர் மனம் மயக்கும் தமிழ் கொண்டு, தத்துவங்களின் துணை கொண்டு, தரவுகளின் வழி பயணித்து நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மிகச்சவாலானது.. அசாத்தியமானது.. ஒவ்வோர் வரியையும் பார்த்துப்பார்த்துச் செய்யும் சிலைபோலே பிரம்மாண்டமாய் வடித்துள்ளார். இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் கதையின் நகர்வு.. ஒவ்வோர் சம்பவத்தையும் கண்முன் காண்பதுபோல் அத்துணை பிரம்மாண்டம்.. இந்திரவிழாவின் அழகு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புகார் நகர வீதிகள், முக்கியமாக இளஞ்சேட்சென்னி, இளவெயினியின் உளம் உருகவைக்கும் காதல், அழகிய கவிதையாய் எல்லைதாண்டா காமம், கண்கலங்கவைக்கும் சென்னி மரணம், கலங்கிய சிந்தையை வெளிப்படுத்தாது அரசியாய் உருக்கொள்ளும் இளவெயினி.. இப்படிச் சொல்ல வார்த்தைகள் போதாது ஆசிரியரின் உழைப்பை.. கரிகாலனை மட்டுமல்ல இக்கதையையே தாங்கி நிற்கும் வேரென்றால் அது இளவெயினியும் இரும்பிடாரும்தான்.. சென்னிக்குப்பிறகு இளவெயினியை அழிக்க வந்த ஒற்றர்கள் இலக்கை அடையும் கடைசி நிமிடத்தில் ‘இளா’ என்றழைத்தபடி இரும்பிடார் புயலென வரவும், ‘அண்ணா’ எனக் கண்ணீருடன் இளவெயினி அவன் மார்பில் சாயும் தருணம் படிக்கும் நொடியில் எவரையும் புல்லரிக்கவைக்கும். எதிரிகளின் எண்ணவோட்டத்தை அவர்களுக்கு முன்னரே கணித்து அதற்கான வியூகங்களை இளவெயினி வகுப்பதும், அதன் செயலாக்கத்தில் இரும்பிடார் துணை நிற்பதும் என ஆச்சரியமாகப் படிக்கும் போது இவர்கள் இருவரை மீறி கரிகாலனை எப்படி தனித்துவமாக ஜொலிக்க வைக்கப்போகிறார் ஆசிரியர் எனத் திகைக்கையில், ஒரு சாதாரண குடிமகனாக வளர்ந்து, அமைதியாய் அனைத்து கலைகளையும் கற்கும் கரிகாலன், தானே சோழ அரசன் என உண்மை உணர்ந்து எரிமலையாய் கொந்தளிக்கும் தருணத்தை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல் இதயத்துடிப்பே நின்றுவிடும் அளவுக்கு இளவெயினியின் மகப்பேற்றின் போது நடக்கும் சம்பவங்களின் விறுவிறுப்பைச் சமீபத்தில் எதிலும் படிக்கவில்லை.

எந்தக்கதையிலும் ஆசிரியரின் தனிச்சிறப்பு என‌ ஏதாவது இருக்கும். இதில் இளவெயினியை முதன்முதலில் அறிமுகப்படுத்தும் போது “மணிக்குலை மலரின் தண்டை ஒத்த கைகள் வெளிப்பட” எனவும் இறுதியில் “மணிக்குலை மலரின் தண்டை ஒத்த கைகள் தளர்ந்து சரிந்தன” எனவும் முடித்திருப்பது படித்தோர் பெரும்பாலும் கவனித்திராத ஒரு ஸ்பெஷாலிட்டி.. போர்க்களத்தில் கரிகாலனுக்கு ஆதிரையும், ஆதிரைக்கு கரிகாலனும் எழுதும் காதல் கடிதங்கள் படிப்போர் மனதை, வாளையும் வேலையும் சற்று அப்புறப்படுத்தி, காதலில் திளைக்கச்செய்யும்.. இதுபோல் நிறைய உண்டு..

இவர்களைத்தவிர இக்கதையின் கதாபாத்திரங்கள் சோழ அமைச்சர் திகழ் செம்மான், இளஞ்சேட்சென்னியின் இரு கரங்களாக வானவன், பரஞ்சுடர், இளவெயினியின் தந்தை சங்கருள்நாதன், தோழி நன்முகை, பாண்டிய இளவரசன் நம்பி, இளவரசி பரிநிதா, சேர மன்னர், அவர் மனைவி நல்லினி, மகன் குட்டுவன், கரிகாலன் நண்பர்கள் நிலவன், சுடரொளி, இளம்பரிதி, முகில், அறிவிற்சிறந்த கரிகாலன் மனம் கவர்ந்த ஆதிரா, அழகும் வீரமும் பொருந்திய பரஞ்சுடர் மகள் பனிமுகில் எனப் பலரும் மனதிற்கு நெருக்கமாகிறார்கள்.

அதேபோல கதையில் கொட்டிக்கிடக்கும் தத்துவங்கள் இக்கால வாழ்க்கைக்கும் பொருந்தும்.. இக்கதைக்கு மிகப்பெரிய பலமும் சிறு பலவீனமும் அதுதான். அது பல இடங்களில் பேரமிர்தமாக இனிக்கச்செய்தது.. ஒருசில இடங்களில் திகட்டவும் செய்தது.. ஒருசிலருக்குக் கதையின் விறுவிறுப்பை மட்டுப்படுத்துவதாய் தோன்றும்.

இதுபோக எதிர்பாரா திடீர் தாக்குதல்கள், சண்டைகள், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சிறியதும் பெரியதுமாகப் பல விறுவிறுப்பான போர்க்காட்சிகள்.. கடைசி முப்பது பாகங்களுக்கும் மேல் உள்ளதனைத்தும் போர்க்காட்சிகளே.. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சகாப்தம். வார்த்தைகளால் விவரிக்க இயலாத பிரம்மாண்ட உழைப்பு.. ஒரு வாக்கியம் படிப்போரை ஒருநொடி யோசிக்க வைத்து மனதுக்குள் வியூகங்கள் வகுக்கப்பட்டு, அதன் பின் அடுத்த வாக்கியம் படிக்க வைக்கும் நேர்த்தி மிகச் சிறப்பு.. ஒவ்வொரு நாளும் நடக்கும் போரை இஞ்ச் பை இஞ்ச்சாக நம் மனதுக்குள் நகர்த்தியிருப்பார் ஆசிரியர். வில் வாள் வகைகள், போர்க்கருவிகள், வியூகங்கள், மயிர்க்கூச்செறிய வைக்கும் சண்டைக்காட்சிகள், சிற்றரசர்கள் வீழ்ச்சி, கரிகாலன் யானைகளை வீழ்த்தும் காட்சி, இளவெயினியின் முன் கணிப்பு, முன்னேற்பாடு, கண்ணீரை வரவழைக்கும் மனதைக்கொள்ளை கொண்ட முக்கியமானவர்களின் மரணங்கள் என அனைத்திலும் பிரம்மாண்டம்.. போரை விரும்பாதவர்களையும் வாளேந்தவும் வியூகங்களை வகுக்கவும் வைக்கும். இதில் எதைச் சொல்வது எதை விடுப்பதெனத் தெரியவில்லை.

இதில் மிக முக்கியமான ஒன்று இக்கதையில் பெண்களின் பங்கு.. அது உண்மையில் போற்றத்தக்கது. பல வரலாற்றுப் புதினங்களில் உள்ளதுபோல பக்கம் பக்கமாகப் பெண்களை வர்ணித்தல், காதலுக்காகவே கதாபாத்திரங்களை அமைத்தல் என துளிகூட இல்லை.. இதில் வரும் பெண்கள் அனைவருமே மிக உயரிய பண்புடனும், மதிநுட்பத்துடனும், எல்லையில்லா வீரத்துடன் மட்டுமன்றி மிக முக்கியமான கதாபாத்திரங்களாகவே வளைய வருவர். அந்தப்புரத்தைத்தாண்டி வெளியே அனுமதி மறுக்கப்பட்ட ஓர் காலகட்டத்தில் அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் தகுதி உள்ளவர்களாகப் பெண்களை உயர்த்தியிருப்பது பெருமிதம் கொள்ளவே வைக்கிறது. அங்கங்களை வர்ணிப்பதைவிட அன்பையும் ஆற்றலையுமே பெரிதாக வர்ணித்தது வேறெங்கிலும் படிக்காத ஓர் மனநிறைவு.. இப்படி வேறுபாடுகளையும் புத்தகத்தின் மேன்மையையும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எழுதினால் அது சோழவேங்கை கரிகாலனின் மூன்றாம் பாகமாகக்கூட அமைந்துவிட வாய்ப்புள்ளது. ஏனெனில் அத்தனை விஷயங்களும், உழைப்பும் இந்த புத்தகத்தில் காணக்கிடைக்கிறது.. கரிகாலன் வீரம் வாகைப்பறந்தலையில் தொடரும் எனக் கதை முடிந்துள்ளது. புரிந்தோர் கையில் கிட்டினால் கரிகாலன் நிச்சயம் பொக்கிஷமாவான். விறுவிறுப்பையும், சுறுசுறுப்பையும், வர்ணனைகளையும், மிகு புனைவுகளையும் எதிர்பார்ப்போர்க்கு வெறும் விஷயமாவான்.

கதையைப் படித்து முடித்தவுடன் விவரிக்க இயலா மனதின் உணர்வுகள்.. வார்த்தைகளாய் விரிகின்றன.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி கரிகாலன் கருக்கொள்ளும் முன்னே புகாருக்குள் நுழைந்தவள், அவனைப் பெற்றவரின் காதலுக்குள் மெய் மறந்து நின்றவள், அவனோடு சேர்ந்து தமிழைப் பயின்றவள், அவன் கருவாகி, உருவாகி, கருணையின் வடிவாகி, வீரத்தின் விளைநிலமாகி, ஆதிரையின் மனம் கவர்ந்தவனாகி, தன்னை அறிந்து ஆர்ப்பரிக்கும் கடலாய் கொந்தளித்துப் பொங்கி எழுந்தவனைச் சட்டெனப் பிரிந்தேன். அறம், காதல், வீரம், வஞ்சகம், மரணம், வெற்றி என அத்தனை உணர்வுகளையும் என்னுள் கடத்தி, இனி இவனுடன் பயணிக்க இயலாது என்ற வெறுமையோடு சொல்லவொண்ணா பேரமைதியில் நிறுத்தி விட்டான் இந்த கரிகாலன். பன்மடங்கு எகிறிய இதயத்துடிப்பு அமைதியற்று கலங்கி நிற்கிறது. படித்து முடித்துப் பல மாதங்களாகியும் இன்னும் புகார் நகரவீதிகளில் உலவுகிறது உள்ளம்.. இனி வாகைப்பறந்தலையில் கரிகாலனின் மற்றொரு பரிமாணத்தைக்காண ஆவல்.

இக்கதையின் ஆசிரியர் வாகையில் வாகை சூட வாழ்த்துகள் !


நூலாசிரியர் குறித்து

இந்நூலின் ஆசிரியர் சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாய் பணிபுரிகிறார். புத்தகங்கள் படிப்பதையும் ஆங்கிலத்தில் ப்ளாக் எழுதுவதையும் ஹாபியாக கொண்டுள்ளார். இவர் எழுதிய கவிதைகளும் கதைகளும் இணையதளங்களில் பிரசுரிக்கபட்டு வருவதுடன் போட்டிகளில் பரிசுகளையும் பெற்று வருகின்றன.

எண்ணற்ற நூல்களிலும், இலக்கியங்களிலும், இண்டர்நெட் பக்கங்களிலும் இரண்டாண்டுகள் ஆராய்ந்து, சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடுகள், அடையாளங்களைத் தொகுத்து அதனூடே கதையை நகர்த்தியுள்ளார். இதுவரையில் போர்களில் பயன்படுத்தப்படாத புதிய வியூகங்கள், யுத்திகளைப் பயன்படுத்தி இருப்பது பெருஞ்சிறப்பு.

நூல் தகவல்:

நூல் :  சோழ வேங்கை கரிகாலன்  (2 பாகங்கள்)

ஆசிரியர் : அசோக் குமார்

வகை :   வரலாற்று நாவல்

வெளியீடு :  விஜயா பதிப்பகம்

வெளியான ஆண்டு :    2022

பக்கங்கள் :  1012

விலை : ₹  1,400

Buy on Amazon: 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *