ரு குறிப்பிட்ட கால வரலாற்றுப் பின்னணியில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், அந்தக் கால மனிதர்களின் வாழ்வியலையும் அடிப்படையாக வைத்து, கற்பனையும் சேர்த்து எழுதப்படும் வரலாற்று புதினங்கள் வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெறும். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பல வரலாற்று புதினங்களைத் தந்த கல்கி அவர்களின் நூல்கள் இன்றளவும் கூட பெரும்பான்மை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது.

சமகாலத்திலும் கூட வரலாற்றுப் புதினங்களுக்கு ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்த நூல் வீரயுக நாயகன் வேள்பாரி.

கிடைத்த வரலாற்று தரவுகளோடு, கற்பனையைக் கலந்து, சுவாரசியமான கதை களத்தோடும், அற்புதமான எழுத்து நடையோடும் சமீபத்தில் நான் வாசித்த நூல் சோழ வேங்கை கரிகாலன். இந்த நூலும் நிச்சயம் சுவையான வரலாற்று புதினங்களின் வரிசையில் இடம்பெறும் என்பது நிச்சயம்.

இந்த நூலின் ஆசிரியருக்கு இதுதான் முதல் நூல் என்பது வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியத்தை தரும். ஏனென்றால் முதல் நூலிலேயே தன்னுடைய முத்திரையை ஆசிரியர் அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.

இலக்கியங்களில், சங்கப் பாடல்களில் கிடைத்த தரவுகளை வைத்து, அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், அறநெறிகள், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாவற்றையும் மிக அழகான கதைகளம் கொண்ட வரலாற்று புதினத்தை ஆசிரியர் படைத்துள்ளார்.

சுடப்பட்டு உயிர் உய்ந்த
சோழன் மகனும்
பிடர்த்தலை பேரானை
பெற்று – கடைக்கால்
செயிறரு செங்கோல் செலீ
இயினான்; இல்லை
உயிர் உடையார் எய்தாவினை..

( பழமொழி நானூறு)

 

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே!

( புறநானூறு – வெண்ணிக் குயத்தியார்)

இப்படி பழமொழி நானூறு, பட்டினப்பாலை, பத்துப்பாட்டில் பொருணராற்றுப்படை , புறநானூறு முதலிய பாடல்களில் நிறைய இடங்களில் கரிகாலன் பற்றி சிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

சிறுவயதில் தன் தந்தையை இழந்து பகைவர்களின் சூழ்ச்சியால், ஒரு தீ விபத்தில் சிக்கி ஒரு கால் மட்டும் விபத்தில் கருகி கரிகாலன் என்று பெயர் பெற்றதாகவும் வரலாற்றில் படித்திருக்கிறோம்.

“சோழத்தை ஆண்டவன் சோழத்தின் ஆண்டவன்” என்று கரிகாலனின் பெருமை பேசும் இந்த நூல் இரு பாகங்களாக வந்துள்ளது.

முடியுடை மன்னன் என்றாலும், குடி மக்களிடம் எளிதில் பழகிய மன்னன் இளஞ்சேட்சென்னி. போர்கள் செய்து நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதை விட, அற நெறியில் ஆட்சியை செலுத்தி, மக்களை வளமோடு வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தன்னுடைய நாட்டில் அறத்திற்கு எதிராக எந்த குற்றம் இழைக்கப்பட்டாலும் தன் அரண்மனை வாயிலில் இருக்கும் ஆராய்ச்சி மணியை அடித்து குறைகளை மன்னனிடம் தெரிவிக்கலாம்.

இவை மட்டுமல்லாமல், மக்கள் அரசனை விரும்ப வேறொரு காரணமும் இருந்தது. விவசாயத்தால் வளம் பெறுவது சோழ நாடு என்பதை உணர்த்தும் வரிகள் சோழ நாடு சோறுடைத்து என்பதை அனைவரும் அறிவோம். அதனால் அந்த நெல்லை விளைவிக்கும் சோழ நாட்டின் வேளீர் குலத்தில் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து இருப்பதும் மன்னனை மக்கள் பேரன்பு செலுத்தக் காரணம்.அழுந்தூர் வேள் குடித்தலைவனின் மகள் இளவெயினியை தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்று நல்லறம் புரிந்து வரும் மன்னன்.

உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்று புலவர்களால் சிறப்பிக்கப்பட்ட சென்னி தன் மனைவிக்காக அழகாக உருவாக்கியதேர் தான் மயூரத்தேர். மேலும் பல பல தேர்களை வடிவமைப்பதிலும் தேர் போட்டிகளிலும் வல்லவன்.

இவன் போர்களை விரும்பாத மன்னன் என்றாலும் கூட, முடி சூட்டிய சில காலங்கள் போரிலே ஈடுபட வேண்டிய சூழ்நிலையும் வந்தது. வடநாட்டில் இருந்து மோரிய பேரரசன் காரவேலன் பெரும்படையோடு தென்னாடுகளை நோக்கி படையெடுத்து வருகையில், வேறு வழியின்றி தென் நாடுகளை காக்க, அவன் போர் புரியும் கட்டாயம் வந்தது. அதுதான் மோரியப் போர். அந்தப் போரிலே கார வேலனை வென்று, சோழத்தின் புகழை நாட்டினான்.

அந்தப் போருக்கு பிறகு தான் வேந்தனைச் சார்ந்திருக்காமல் தனது மக்கள் தனித்து வேர் விட்டு வளர, கோவில்களுக்கு இணையாக கல்விக்கூடங்களை ஏற்படுத்தினான். ஆண்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் பெண்களை இணையச் செய்து பணியாற்ற வழி வகை செய்தான். இந்த அற செயல்கள் எல்லாம் தான், சோழக் குடிகளின் மனதில் அவன் ஆழமாய் வேரூன்ற காரணம்.

நீண்ட காலம் அடிக்கப்படாத ஆராய்ச்சி மணி மாசாத்துவான் எனும் பெரும் வணிகனால் அடிக்கப்பட்டு, அந்த வணிகனைக் காக்க வம்பர் குலத்தை வேரோடு அழித்தான். பகையிலும், நெருப்பிலும் மிச்சம் வைக்க கூடாது. அந்த வம்பர் குலத்தின் ஒரு குருத்து மட்டும் ( இருங்கோ வேள்) வெஞ்சினம் கொண்டு, பழி தீர்க்க, சதிகள் தீட்டியபடி காத்திருந்தது. காவிரிப்புனல் கரை புரண்டு வருகையிலே, காவிரித் தாய்க்கு நடக்கும் வழிபாடாம் இந்திர விழாவில் சதியின் கைகள் இணைந்து நின்றது.

காதலில் கணிகையாய், வழிநடத்துவதில் ஆசிரியையாய், ஆலோசனை சொல்வதில் மந்திரியாய், வீரத்தில் படை தளபதியாய் இருக்கும் அவன் துணை இளவெயினி, தங்களை வேரோடு அழிக்க பின்னப்பட்டு வரும் சதிகளை உணர்கிறாள்.

ஓரிருமுறை சதிகளை வீழ்த்தினாலும், தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வுகிறது. பல நாட்டு மன்னர்களுக்கு இடையே நடக்கும் தேர் போட்டியில், சதியின் கோர நாக்குகள் தீண்ட பட்டு உயிர் துறக்கிறான் இளஞ்சேட்சென்னி.

சூல் தரித்து இருக்கும் அவள் தன்னை உயிரற்ற உடலாய் மாற்றி, தந்தையில்லா பிள்ளையாய் தன் சூல் வளர காரணமாக இருக்கும் அத்தனை எதிரிகளையும் தன் மகனைக் கொண்டு அழித்து ஒழிப்பேன் என்று சூளுரைத்து சபதம் ஏற்கிறாள்.

தன் கணவனின் இழப்பை எண்ணி வெடித்துக் கதறி அழக் கூட நேரமற்று, சதியின் வலைகளை துண்டிக்கத் தொடங்குகிறாள்.

வேந்தனற்ற நாட்டை வெற்றி கொள்வது எளிதென்று, எதிரிகள் எண்ணி மீண்டும் மீண்டும் சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவர்கள் நெஞ்சத்தின் நஞ்சை , உணவில் கலந்து சூல் கொண்ட அவளை அழிக்க சதி.. அந்தச் சதியை அவளின் மதி வெல்கிறது.

எதிர்பாராத் தாக்குதல் அரண்மனையில், அரனாய் வந்து காக்கின்றான் அண்ணன் இரும்பிடார் தலையார்.
மறைவாய் சென்று வாழ்ந்து மகவை பெற்றெடுத்து, வீரத்தின் தலைவனாய் வளர்த்தெடுத்த பின்பு தான் அரண்மனை திரும்ப வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

சோழ நாட்டிலேயே வசிப்பதாய், காட்சிகளை அரங்கேற்றி, தன் தாய் வீட்டுக்குச் சென்று வீரமகவைப் பெற்றெடுக்கிறாள். உலகையே பின்னால் ஆழப் போகும் வீரன் அவன் என சுற்றி இருப்பவர்கள் கட்டியம் கூறுகின்றனர்.வளவன் எனவும், மக்களுக்கு பெரு வளத்தான் எனவும் பெயரிடப்பட்டான்..எனினும் பின்னாளில் தன் பெயரை கரிகாலன் என்று வரலாற்றில் பதிய வைத்தான்.

சதியின் கரங்கள், நடக்கும் காட்சியை விரைவில் உணர்ந்து அங்கும் படர்கிறது. அங்கு இருந்து மீண்டும் அண்ணன் துணையோடு, நாலு குடும்பங்களோடு அஞ்ஞாத வாசம் பாண்டிய நாட்டில் துவங்குகிறது. அங்கு தாய், தமிழை போதிக்க, வீரத்தின் அரிச்சுவடியை மாமன் போதிக்க, வளவனின் இளம் பருவம் நிலவன், முகில், சுடரொளி என்ற நண்பர்களோடு இனிதாய் இருந்தது.

அங்கு பாண்டிய இளவளால் பாதிக்கப் பட்ட குடிக்கு இறும்பிடார் தலையார் உதவி செய்கிறார். எத்தனை மறைத்து வைத்தாலும் அவரின் வீரம் இன்னார் என்று பறை சாற்ற, பாண்டிய நாடு தாண்டி, சேர நாடு புகுகிறார்கள்.

சேர மண்தான் வீரத்தின் விளை நிலமாய் வளவனுக்கு இருக்கிறது. காந்தளூர் சாலையில் தான் வீரத்தின் விதைகள் விதைக்கப் படுகிறது. சேர இளவல் செங்குட்டுவன் உற்ற நண்பனாய் இணைகிறான்.

வர்மம், களரி என்று போர் கலைகளின் நுட்பங்கள் கற்று தேற்கிறான். ஈட்டி முனையை விட கூரிய இரு மான் விழிகளில் சிக்குகிறான். நாங்கூர் வேல் மகள் ஆதிரையின் அன்புக்கு பாத்திரம் ஆகுகிறான்.

எந்த உயிரையும் காப்பது தான் அறம் என்பதால் , வெறி கொண்டு மக்களைக் தாக்க வந்த இரு யானைகளை, ஈட்டியால் தாக்கி, கரிகளைச் சாய்த்த வளவன் என்றும், கரிகளுக்கு காலன் வளவன் என்றும் மக்களால் புகழப்படுகிறான்.

கரிகாலன் வளவன் என்று ஆன வரலாறு அங்கு உதயம் ஆகிறது. வளவன் கரிகாலனாக உருவான வரலாறு முதல் பாகத்தில் …

பகைவர்கள் எங்கு சென்றாலும் , கண்டுபிடித்து வர, இதுதான் வெளிப்பட தருணம் என்று தாயும் , மாமனும் நினைக்க , விதி பகைவர்கள் வாயில் வளவன் யார் என்ற உண்மை வெளிப்பட , பகைவர்களை அடியோடு அளிக்க வேண்டும் என்று உறுதி பூணுகிறான்.

தந்தையின் இழைப்பை எண்ணி கண்ணீர் விடக் கூட நேரமற்று, தன்னை அறிவில் சிறந்தவனாக, ஒப்பற்ற வீரனாய் வளர்த்த தாயின் தியாகத்தையும், தன் தாயின் நிழலாய் பயணித்து தங்களை காத்த மாமனின் பேரன்பையும் எண்ணி எண்ணிப் பார்த்து, பகைவர்களை வீழ்த்த வேங்கையாய் உருவெடுக்கிறான்.

மன்னனாய் முடிசூட்டி , வெண்ணிப் பறந்தலையில் எதிர்த்து நின்ற சேர, பாண்டிய பேரரசர்கள், 11 சிற்றரசர்கள் அனைவரையும் தோற்கடித்து , வரலாற்றில் அழியாத இடம் பெற்றதாய் இரண்டாம் பாகம் முடிகிறது.

கரிகாலன் வரலாற்றை மிக பிரமாண்டமாய் சொல்லி இருக்கும் ஒரு அற்புதமான வரலாற்று புதினம்.

இந்த நாவலில் சிறப்பு அம்சங்கள்

** பாத்திரப் படைப்பு : கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தி. சேர , பாண்டிய மன்னர்கள் இயல்பில் சிறந்தவர்கள்..ஏன் சதிகாரருடன் இணைகிறார்கள் என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வகையில் கதை யோட்டத்தைக் கொண்டு செல்வது.

பெண்மையின் மாண்பை சொன்னதோடு, பெண்மையின் பேராண்மையை ஆசிரியர் தன் எழுத்து வன்மையில் வெளிப்படுத்தும் விதம் அருமை. இளவெயினி எங்கோ இருந்து அரசை வழி நடத்தும் திறமை, பின்னால் நிகழப் போகும் நிகழ்வுகளை கணிக்கும் மதி நுட்பம் எல்லாம் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும்.

சங்ககால மலர்கள், போரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள், பாதுகாப்பு அரண் வகைகள், இசைக்கருவிகள், பல்வகை மரங்கள், பல்வேறு வியூகங்கள் , களரியின் வகைகள், வர்மம் , மக்களின் வாழ்வியல் முறைகள் என்று எல்லாவற்றையும் நுண்ணிய வகையில் எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.

சிறந்த கைதேர்ந்த வரலாற்று எழுத்து நடை ஆசிரியருக்கு வசப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழியின் சீரிய அம்சங்களை விவரிக்கும் காட்சிகள் மிகச்சிறப்பு.

உயிர்களை அழிக்கும் போர் அறம் அல்ல என்ற உணர்வுடன் வளரும் வளவன். உயிர்களை அழிப்பவனை அழித்து உயிர்களை காப்பதும் அறம் எனபது உணர்ந்து கரி காலனாக மாறிய தருணங்கள் எல்லாம் ஆசிரியர் எழுத்தில் மகுடம் தரிக்கும் இடங்கள்.

அருமையான வாசிப்பு அனுபவம் தந்ததோடு, நிறைய சங்க இலக்கிய நூல்களைத் தேடி வாசிக்க வைத்திருக்கும் இந்த நூல் உங்களுக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.


நூலாசிரியர் குறித்து

இந்நூலின் ஆசிரியர் சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாய் பணிபுரிகிறார். புத்தகங்கள் படிப்பதையும் ஆங்கிலத்தில் ப்ளாக் எழுதுவதையும் ஹாபியாக கொண்டுள்ளார். இவர் எழுதிய கவிதைகளும் கதைகளும் இணையதளங்களில் பிரசுரிக்கபட்டு வருவதுடன் போட்டிகளில் பரிசுகளையும் பெற்று வருகின்றன.

எண்ணற்ற நூல்களிலும், இலக்கியங்களிலும், இண்டர்நெட் பக்கங்களிலும் இரண்டாண்டுகள் ஆராய்ந்து, சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடுகள், அடையாளங்களைத் தொகுத்து அதனூடே கதையை நகர்த்தியுள்ளார். இதுவரையில் போர்களில் பயன்படுத்தப்படாத புதிய வியூகங்கள், யுத்திகளைப் பயன்படுத்தி இருப்பது பெருஞ்சிறப்பு.

நூல் தகவல்:

நூல் :  சோழ வேங்கை கரிகாலன்  (2 பாகங்கள்)

ஆசிரியர் : அசோக் குமார்

வகை :   வரலாற்று நாவல்

வெளியீடு :  விஜயா பதிப்பகம்

வெளியான ஆண்டு :    2022

பக்கங்கள் :  1012

விலை : ₹  1,400

Buy on Amazon: 

நன்றி : காணி நிலம்.

இந்த விமர்சனம் ‘காணி நிலம்’ சிற்றிதழில் (ஜனவரி- ஜூன் 2022 இதழ்) வெளியானது. விமர்சகரின் முறையான அனுமதிப் பெற்று ‘விமர்சனம்’ இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

எழுதியவர்:

1 thought on “சோழ வேங்கை கரிகாலன் -வரலாற்று நூல் -திறனாய்வுப் பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *