புனைவுவிமர்சனங்கள் - Reviews

ஜாக் லண்டன்னின் “கானகத்தின் குரல்” ஒர் அலசல்


வ்வுலக வாழ்வின் மிகக் கொடூரமான அத்தியாயத்தைக் கடக்கிற வேளையில், மனித உறவுகள், மென்மை தருணங்கள்,அன்பின் சிக்கல்கள்,அறத்தின் குரல்கள் என எல்லாமே தத்தம் அர்த்தங்களை இழக்கத் துவங்கியதாக தோன்றுகிறது. வாழ்வின் நிலையாமையை வேறெப்போதும் இல்லாத வகையில், இப்பெருந்தொற்றுக் காலத்தில் மனிதகுலம் புரிந்து கொண்டிருக்கிறது. இந்த சின்னஞ்சிறு வாழ்வில் எல்லா உயிரினங்களும் இருப்பிற்கான போராட்டத்தை தான் நிகழ்த்துகின்றன. நிலையாமைக்கும், இருப்பிற்குமான ஊசலாட்டத்தில், இருப்பின் பக்கம் அதிகம் சாய்ந்து விட துடிப்பதன் புரிதல்களை,  தங்களைச் சுற்றிக்குவிந்திருக்கும் ஊடகக் குப்பைகளில் இருந்து தேடி எடுக்கிறோம் ஒவ்வொருவரும். கடந்த ஓராண்டாக இயல்பற்ற பல உளச்சிக்கல்களுக்கு ஆளான பின்னர், சமீபத்தில் ” ஜாக் லண்டன்” (1876-1916)அவர்களின் ” கானகத்தின் குரல்”வாசிக்க நேர்ந்தது. பெ.தூரன் அவர்களின் மொழிபெயர்ப்பு.

கானகம் தான் மனித உயிரின் ஆதிக் குடியிருப்பு. இருப்புக்கான தேடலில் மனிதனின் அறிவு விரிவடையத் துவங்கிய போது கானகம் சுருங்கத் துவங்கியது. நாகரிகம் வளர வளர அழிப்பின் விகிதம் பலமடங்கு அதிகரித்தது. புவி வெப்பமயமாதலின் கவலைகள் நம்மை சூழும் வேளையில், கானகத்தின் குரல் கனடாவின் வடமேற்கு கோடியில் உள்ள அலாஸ்காவின் அருகில் அமைந்திருக்கும் யூக்கான் பிரதேசத்தை நோக்கி செல்கிறது. அங்கு கிடைப்பதாக சொல்லப்படும் தங்கத் துகள்களை நோக்கி மனிதர்கள் உறைபனியைப் பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து பயணிக்கிறார்கள். எவ்வாறாவது தங்கத்தை சேகரித்து பெரும் பணம் சம்பாதித்து விட மாட்டோமா என்கிற ஆவல் துரத்த, அங்கேயே மாதக்கணக்கில் தங்குகிறார்கள். அவ்வாறு அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கடிதங்களை எடுத்துச் செல்ல பழக்கப்படுத்தப்பட்ட நாய்களை வண்டியில் பூட்டி பயன்படுத்துகிறார்கள். கடுங்குளிரில் பயணிக்க உறுதியான உடல் அமைப்புள்ள நல்ல நாய்களை தேடிக் கண்டுபிடித்து, பல நேரங்களில் திருடுகிறார்கள். ஒரு நீதிபதியின் மாளிகையில் செல்ல நாயாக இருந்த “பக்” சந்தர்ப்பவசத்தால் திருடப்பட்டு,பல மைல்தூரம் பயணிக்க நேர்கிறது. தன் வாழ்நாளில் சந்தித்திராத கடும் வன்முறையை சந்தித்து, அதிர்ச்சியால், பட்டினியால் புதிய வாழ்வை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்கிறது.

கதை முழுவதும் “பக்” கினது அனுபவங்கள் நம்மை வாழ்வின் நிதர்சனத்தை உணரச் செய்கின்றன. கடுமையான சூழலில், புதிய புதிய சவால்களை எதிர் கொள்ளும் போதும், சற்றும் தளராமல், அன்பிற்கு கட்டுப்படுவதும், அறத்தின் பால் நிற்பதும், எஜமானருக்கு இறுதி வரை விசுவாசமாய் இருப்பதும் என “பக்” மானுடருக்கு கற்றுத் தரும் பாடங்கள் அநேகம். புதியதாக ஒரு குழுவில் இணையும் போது எதிர்கொள்ள நேரிடும் எதிர்ப்புகள், சீண்டல்கள் பல நேரங்களில் மன உறுதியைக் குலைத்துப் போடுவதாக அமைந்து விடும். அவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தான் நாம் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். “பக்” அதை மிக லாகவமாக செய்கிறது. புதிய எஜமானர்களிடம் செல்லும் போதும் எளிதில் அவர்களுடன் இணைந்து கொள்கிறது. ஒரு முறை உறை பனிக்கட்டியின் கீழ்ப்பகுதி உருகி இளகுவதை உணர்ந்த “பக்” அப்பாதையில் பயணிப்பது ஆபத்து என்பதை உணர்ந்து வண்டியை இழுக்க மறுக்கிறது. அதற்காக எஜமானரின் சாட்டையடியையும், தடியால் அடிப்பதையும் தாங்கிக் கொள்கிறது. நம் வாழ்வில் கூட பல நேரங்களில் சூழலின் அபாயத்தினை, உண்மை நிலையை எடுத்துரைக்கும் போது, அதன் கசப்பையும் மேலோட்டமான விளைவுகளையும் பார்த்து எவரும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக சொன்னவர் மீதே கடும் விமர்சனங்களும் வசைகளும் வந்து குவியும். நாம் கொண்ட கொள்கையில் நேர்மையாக, சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தால் தான் உறுதியுடன் அவற்றைக் கடக்க முடியும்.

தூய்மையான அன்பு தான் ஒட்டுமொத்த உயிரினத்தின் அடிப்படைத் தேவை. இப்புவியை இயங்குவிக்கும் கருவி அன்பு தான். தூய அன்பு பரிமாறப்படும் போதெல்லாம் புவியின் இருள் குறைந்து புதிய வெளிச்சங்கள் தோன்றுகின்றன. ஜான் தார்ன் டன் எனும் புதிய எஜமானரிடம் “பக்” புதிய வாழ்வைத் துவக்குகிறது. அன்பின் ருசியை உணருகிறது. நாவலில் இவ்வாறு அக்காட்சி விவரிக்கப்படுகிறது.

“இவ்வாறு பக் மிகக் கூர்ந்து அவனைக் கவனிப்பதால், தார்ன் டன் தானாகவே பல சமயங்களில் தன் தலையைத் திருப்பி அதை நோக்குவான். அவ்வளவு நெருங்கிய தொடர்பு பக்குக்கும் அவனுக்கும் ஏற்பட்டிருந்தது. அவன் நோக்கும் போது பக்கின் அன்புள்ளம் அதன் கண்களில் வெளிப்பட்டு பிரகாசித்தது போலவே, அவனுடைய உள்ளமும் அவனுடைய கண்களில் வெளியாயிற்று”.

தார்ன் டன் மீதான பேரன்பால் அவனைத் தாக்கிய பார்ட்டன் என்பவனைக் கடுமையாகத் தாக்குகிறது “பக்”. வெள்ளத்தில் தவறி வீழ்ந்த தார்ன்டனை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றுகிறது. ஒரு வெற்றுப் பேச்சின் விளைவாக தார்ன் டன் “பக்” கின் திறன் மீது ஒரு பந்தயத்தில் ஈடுபடுகிறான். இந்த நாவலின் ஜீவனான பகுதி அது. வாசகரை பரபரக்க வைப்பதும் அதுவே. அன்பின் பிணைப்பு தான் எத்தனை உறுதியானது. வலிமையானது. நாடி நரம்பெல்லாம் எஜமான விசுவாசம் ஊடுருவி இருக்கும் உயிராக “பக்” நம் கண்முன் பிரம்மாண்டமாக உருவாகிறது. அப்பந்தயத்தில் “பக்” வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்பது முக்கியமல்ல. என்னளவில் நாவல் அந்த முயற்சியின் விவரிப்பிலேயே நிறைவடைந்து விடுகிறது.

ஒரு நல்ல படைப்பு வாசகரை அதன் போக்கிலேயே அழைத்துச் செல்ல வேண்டும். வாசகர் அப்படைப்பின் ஊடே சில காலம் வாழ வேண்டும். முப்பரிமாணத்தில் அதனுள் புகுந்து மீள வேண்டும். “கானகத்தின் குரல்” அது மட்டுமின்றி, நம்மின் ஆன்மாவை தீண்டுகிறது. அறத்தின்பால் நம்மை நாமே பரிசீலிக்க பணிக்கிறது.”பக்” எனும் அற்புதமான உயிரின் வழியாக “ஜாக்லண்டன்” பல ஆண்டுகள் ஆன பின்பும் நம்முடன் உரையாடுகிறார். வாழ்வை நோக்கி, நம்மை நோக்கி சில கேள்விகளை எழுப்ப வைக்கிறார்.  இந்த வாசிப்பு மிகவும் அருமையாக நிறைவேறியதற்கு “பெ.தூரன்” அவர்களின் கச்சிதமான மொழிபெயர்ப்பு மிக முக்கிய காரணம். எந்த இடத்திலும் இன்றைய சூழலுக்கு பொருந்தாத சொற்களை நான் கடக்கவில்லை. காலம் கடந்து நிலைக்கும் ஆக்கம்.

வாழ்வின் அர்த்தத்தை தேட விழையும் வாசகர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல்.


ரஞ்சனி பாசு

நூல் தகவல்:
நூல்: கானகத்தின் குரல்
மூலம்:  The Call of the Wild
பிரிவு : மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர்: ஜாக் லண்டன்
தமிழில்: பெரியசாமி தூரன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு  2016
பக்கங்கள்: 127
விலை:  ₹ 110
மின்னூல் பதிப்பு:

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *