நூல் விமர்சனம்புனைவு

மஞ்சுளாவின் “ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்” -விமர்சனம்


நிழல் போல் கவிதை 15 வருடங்களாக தன்னைத் தொடர்கிறது என்றும் பள்ளிக் காலத்தில் தொடங்கிவிட்ட ., ஆனால் இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி அறுந்து கிடந்த கண்ணிகளை மீட்டெடுத்து ஐந்தாவது தொகுப்பாக கவிஞர் மஞ்சுளா இக்கவி நூலை தந்திருப்பது உண்மையிலேயே அவரின் தொடர்ந்த ஈரம் காயா தேடலை மினுமினுப்பை நமக்கு உணர்த்துவத்தோடு ஆச்சரியப் படவும் வைக்கிறது.

ஒளியின் தரிசனங்களைக் காண நுட்பமாக மாறும் மொழி அவருக்குள் அபயமளிக்கும்  போதி மரங்களாக இருப்பினும் அது அவரின் அடையாளமாக மாறி விட்ட ஒன்றும், எழுதுதல் ஒரு சிறந்த திகட்டா சூடு படுத்திய ஆயுதமாக மாறிவிட்ட ஒன்றாக இருப்பதும் (மகிழ்வையும் துயரத்தையும் கடத்த )….. கூடுதல் பலமாய் சிம்மாசனம் ஏறி  இருப்பதுவும்   இத் தொகுப்பில் கண்கூடு.

கவிதை மனம் ஒரு மிகப்பெரிய பரந்த ஆலமரம். அதன் கிளைகளில் கூடு கட்டும் பறவைகளாக இயற்கை,  இளமைக் காலம், வாழ்வியல் புதிர்கள், புதுமைகள்,சம காலப் போக்கு, அவதானிப்புகள் என பல விடயங்கள் இத் தொகுப்பில் வலம் வருகின்றன.

தனிமையும் ஒரு கவிதையும்.

இயல்பான தனிமையின் மதிய வேளையில் காற்றும் வெளிச்சமும் சப்தங்களும் அலைக் கழிக்கையில் களைப்பின் பிடியில் சிக்கும் இமைகள் பிறிதொரு நாள் அதை நினைந்து புத்தகத்தின் வரியை வாசிக்கையில் குயில் பாடுதலையும் வெயில் அசைதலையும் கவியாக்கிய விதம் பாராட்டக்குரியது.

“தனிமையில் என்னை இடப் பெயர்ச்சி

செய்வதை விட எதுவும் மேலானதல்ல “

நிறைய உக்தி படிமம் தொன்மம் குறியீடு இவற்றை பயன்படுத்தி கவி வடிப்பதில் திறன் கொண்ட இவர் தேநீர் கனவுகளில் சிறுமியின் பருவங்களின் நிலையை கூறுகையில்

தேநீர் குவளைக்குள் மெல்ல வளர்கிறது

யாரும் அறியா அவளின் சிறு பருவம்…..

என்கிறார்.

நகர நாகரீகம் அடுக்கு மாடி குடியிருப்பில் புறாக் கூண்டு போல் உள்ளது கண்டு புறாக்கள் குழம்புவது…. நல்ல கற்பனை…. நிஜமும் கூட.

புறாக் கூண்டுகளைப் போன்ற

நகர அடுக்கு மாடி குடியிருப்புகளைக்

கண்டு குழம்புகின்றன  கூண்டுக்குள் திரும்பும் புறாக்கள்.

அடுத்து நெய்தலின் பருவத்தில்

’மூளைக்குள் நெளியும் நினைவுப் புழுக்கள் தன் அதிகார மையத்தில் நுழைந்ததும்

படமெடுக்கும் பாம்புகளாகின்றன’  என அதிகார வர்க்கத்தின் தோலுரிக்கிறார்.

 

அகலிகைக் கல் எனும் கவிதையில் வெவ்வேறு சொற்களின் தன்மை கூறியவர்

ஆணின் எந்தச் சொல்லும் பெண்ணில் ஒரு கல்லாகிக் கிடக்கிறது…

.. அகலிகையின்சாபம் அறியாயோ நீ????

எனும் போது பெண்ணின் நிலை அறிந்து நாமும் நிலை குலைகிறோம்.

இயற்கையை துணைக்கழைத்து நிறைய படிமங்கள்.அதன் வாசனையில் கவி மலர்கள் அதிகம்.

குடும்ப தகராறை கதவுகள் பேசிக் கொள்ளும் வீட்டில் குழந்தைகள் வெளியேறுவதை கதவின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

மரம் நடுதலை பூந்தொட்டி வாங்க புறப்பட்டதை பூக்கள் உதிர்த்து கையசைத்து வாழ்த்துவதாக உருவகப் படுத்துதல்….. கோவலன் சிலம்பு விற்க ஊர் உள் நுழைகையில் செடிகள் வராதே வராதே என தலை அசைத்ததாக சிலப்பதிகாரம் கூறியதை நினைவுறுத்துகிறது.

குழந்தைப் பேறு வளைகாப்பில் பொன் வளையல் ஆனாலும் கண்ணாடி வளையல் ஆனாலும் சப்தத்தில் நெளிகிறது சிசு என்பதில்பொருளாதார நிலைப் படிமங்களைத் தாண்டி ஆன்ம உணர்வின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது.

சில கவிதைகள் அளவில் நீளம். சிறு கவிதைகளில் அழகியலும் வீரியமும் செம்மையாய் உள்ளன. (துப்பாக்கிகளை விட……, கடலைப் பருகியவள்….. , சின்னஞ் சிறு சிறுவர்களின் )

ஞாயிற்றுக் கிழமையின் தன்மை, துவங்கும் விடியல், புலர்வின் பொழுது, பயிருக்கும் உயிருக்கும் பேதமில்லா மழை பற்றிய கவிதைகள்….. வாழ்நிலை மாற்றங்கள் மன அமைப்பு காரணிகள் எவ்வாறு தகவமைத்து அக வெளியின் நுட்பங்களை அர்த்தப்படுத்துகின்றன என்பதை குறியீடுகளாலும் அருமையாய் புனைந்து இருக்கிறார்.

எசப்பாட்டு காதுகளில் பேதமில்லாமல் ஒலிக்கும் அருமை….. வயிறு நிரப்பும் கவளம்.

கண்திறப்பில் சிறு செடியாவது ஊன்று வேண்டுகோள்…… சமூக நோக்கு.

சில கவிதைகளில் ஒரே வார்த்தைப் பிரயோகம் அதிகம். தவிர்த்து இருந்தால் அதன் கனமும் வீரியமும் காத்திரமும் கூடி இருக்குமோ என்பது என் பார்வை. (மாயா……, துயருறும் எழுத்து….. மிக மிக நீள கவிதை ).

வெயில் பறவைகள், நினைவுப் பொதிகள், காலத்தின் இடுக்கு, வன மாளிகை, கனவுக்குடுவை என அருமையான சொல்லாடல்கள்.

அப் டேட் செய்து கொண்ட ஆடு….. வித்தியாச சிந்தனை.

சிலுவைப்பாடு……. தற்போதைய காட்சி.

மஞ்சள் வெயிலும் மாஸ்கியமும்…. தற்போதைய நிலை…

இயற்கையின் அழகைக் கூறிவிட்டு…. பூமி கொஞ்சம் சுழழ்கையில் நுண்கிருமி பரவுதலும் புதிய சொல் ஒன்றை மக்கள் பேசுதலும்  பிரபஞ்சமே மாஸ்க் அணிந்து கொள்வதை  இயற்கை மாறுபட்டால் என்ன ஆகும் என்பதை காட்சிப் படிமம் ஆக்கியிருப்பது வியந்து நோக்கதக்கது.

குடி மகன்கள் அரசின் வறுமையை விரட்டுவதாய் நையாண்டியோடு சிந்திக்கவும் வைக்கிறார் தெரு விளக்கு எனும் கவிதையில்.

குடி மகன்களின் வாடிக்கைப் பெருக்கி

அரசின் வறுமையை விரட்டுகின்றன.

நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் பொத்தல் குடைக்குள் விழும் சூரிய ஒளியில் நிகழும் நிகழ்வுகளை வரிசைபடுத்தி…. மாலை வேறு உடை தரித்து செல்லும் சூரியன் பொத்தல் குடை பிடித்து மறைவதாக அருமையாக காட்சிப் படுத்தி உள்ளார். ஒரு போதி மரத்தடியில் ஞானம் பெற்று செல்வதாக புனைந்துள்ளது வாழ்வியலின் தரிசனம்..

நினைவுகள் கவிதையில் நாய்களைப் போல் குரைக்கும் நினைவுகள்…. சில நேரம் விரைந்து ஓடுதலும், சமரசம் புரிதலும், நன்றியோடு இருத்தலும் குரைப்பு அதிகரிக்கையில் வாலை சுருட்டிய நாய் முறைத்துப் பார்த்தலும் என ஒப்புமை நோக்கோடு உவமை காட்டியிருப்பது இன்றைய மனித வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

சில கவிதைகள் வலுவான கீறலின் ஆழமாயும் உள்ளார்ந்த தன்மையை அடர்த்தியாய் எடுத்துரைப்பதாயும் ஒரு தன்மையில் இருந்து இன்னொரு நிலைக்குள் நுழைந்து கொள்ளும் தன்மையாய் இருப்பதால் புரிதல் என்பது நழுவி விடுவதாக உள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் கவிஞரின் மொழிவளமும் உயிர்ப்பும் சிந்தனை வளமும் கவிதைக்குள் தனி அடையாளங்களைப் புகுத்தி அங்கீகரிக்கப் படும் படைப்பாக நிரூபணம் ஆவது கவிஞரின் தொடர் தேடுதலையும் வாசிப்பின் உந்துதலையும், அனுபவங்களின் கடத்தலையும்,இயங்குதலின் போராட்டத்தையும் வலுவாய் முன் நிறுத்துகிறது. பாராட்டுக்கள்.

தேடலின் தத்துவார்த்த பார்வையில் மன அமைப்புகளை தகவமைத்து நுட்பமாக உலவ விட்டிருக்கும் கவிதைகளும், ஒரு பரப்பின் மெல்லிய தன்மையை இயற்கையோடு இயைந்து எழுதி இருப்பதும் மிக சிறப்பு.

மொழி கவிஞருக்கு கை வந்த கலையாகி விட்டது. அதன் துணை கொண்டு தீர்க்கப்படா சமூகம் முழுதும் பரவி உள்ள பொருளியல், சாதீய, அரசியல் ஊழல், ஆதிக்க சக்திகளின் வன்முறைகள், நிர்க்கத்தியான உழைப்பாளிகளின் உணர்வுகள், சக உயிரின் மீதான உறவுகளின் இணக்கங்கள் போன்ற சமூக சிந்தனைகளை விரித்து எளிமையான முடிச்சுக்களை செம்மைப்படுத்தி சூரியக் குஞ்சுகளை போதி மரங்களின் வேரில் பொரித்தெடுக்க வேண்டும் என்பது என் அவா.

குறுகிய கால அவகாசத்தில் அருமையான அட்டைப் படத்துடன் பதிப்பித்து மதுரையில் நூலை வெளியிட்டு பெருமை சேர்த்த வாசக சாலை நண்பர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்!!!

கவிஞர்  மலர் மகள்

நூல் தகவல்:
நூல் : ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: மஞ்சுளா
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்
வெளியான ஆண்டு : ஜனவரி 2021
விலை : ₹ 140
தொடர்புக்கு: 99426 33833 / 97904 43979

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *