ல்லாச் சிந்தனைகளையும்  மனிதம் குறித்தானதாக  உள்ளம் ஏற்றுக் கொள்ள வாழ்வே மனிதம் தாங்கியதாக அமைய வேண்டும். எழுதப்படுகிற இலக்கியப் பிரதிக்கும் , எழும் இலக்கியப் பிரதிக்குமான வேறுபாட்டை ஒரு நல்ல வாசகனால் அறிந்திட முடியும் . வாசகர் காலந்தோறும் தனக்குப் பிடித்தமான ,

தன்னை உணர்கிற ஒரு படைப்பை அறியவே மேலும் மேலும் வாசிக்கிற பயணத்தைத் தொடர்கிறார்.

தன்னை உணர்தலென்பது தன்னை உணர்வது மட்டுமல்ல ,தன் மக்கள் சார்ந்து, தன் மக்கள் வாழ்வியல் சார்ந்து சிந்திப்பதும்தான். அப்படிச் சிந்திக்கிற  வாசகரே பெருந்தேடலோடு வாசிக்கிறார். அப்படித் தேடலோடு வாசிக்கிற ஒருவர்  அதில் முழுமை அடைவதில்லை. இன்னும்   ஏதோ  ஒன்று கூறப்படாமல் இருப்பதை   உணர்வதையும், அந்த இடத்தை தனது மனம் கண்டறிவதையும் தன்னைத் தானே உணரும் கலையால் ஒரு படைப்புலகத்தைத் தேடிக் கண்டுணர்ந்து படைப்பாளியாகிறார்.

மற்றவர்கள் ஏற்கனவே உணர்ந்த கலையை தனது கண்ணோட்டத்தில் தேடுவதும், புதிய கலைப்படைப்பை உருவாக்குதுமே கலையின் வளர்ச்சியாகிறது.

இப்படியான தளத்தில் இயங்கி வரக் கூடிய கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதையைச் செயல்படுத்தும் செயற்பாட்டாளராகவும் ,கவித்துவ கண்டறிவாளராகவும் தனது தொகுப்புகளின்  வழியே நமக்கான படைப்பாளியாகிறார்.

” கூடு திரும்புதல் எளிதன்று. ” என்கிற தொகுப்பின் பெயரிலேயே சிந்திக்கச் சிந்திக்க பெருகும் கருத்துகள் நம்மையும் தேடலுக்கான பயணத்தைத் தூண்டுகின்றன.  கூடு திரும்புதல் ஏன் எளிதற்றுப் போகிறது? அப்படித் திரும்ப இயலாத இடத்திற்கு நம்மை நகர்த்துவது யார்?  அதற்கான அரசியல் ,பொருளாதார காரணங்கள் என்ன? அதற்கான சூட்சமக்காரர்களின் திட்டமிடல் என்ன? கூடு திரும்புதல் அவசியம் தானா? கூடு என்ற ஒன்று அவசியம் தானா? யார் யாருடைய கூட்டை அபகரித்துள்ளார்கள் …

இழந்த கூடுகளை மீட்க என்ன செய்ய வேண்டும்? இப்படி பல வினாக்களை உருவாக்கலாம். வினாக்களுக்குள் உள் வினாக்களையும் உருவாக்கலாம்.

இயல்பாக நிகழ்கிற எளிய செயலொன்றின் வழியே ,தன் கற்பனையை புகுத்துவதின் வழியே எளிய செயலை ,பிரமிப்பிற்கான செயலாக்குவதே கவிதையின் செயலாகிறது. குழந்தையின் இயல்பான செயலுக்குள்  கவிதையைக் கண்டறிகிறார்.

 

நடைபாதையில் கிடந்த

சிறு மலரொன்றை

மிதபடக் கூடாதென

கையிலெடுத்துப் போன

குழந்தையிடத்தில்

தன் வாசனை முழுவதையும்

பரவவிட்டது

மலர்.

மலரின் வாசனை குழந்தை நமக்களித்த பரிசு. குழந்தையாக ஒரு  உதிர்ந்த மலரை கையிலெடுக்கவோ அதனை உணரவோ நமக்கு மனமும் நேரமும் அமைந்தால் மலரும் அழகு. வாசனையும் நம்மைச் சேரும்.

ஏராளமான சொற்களைச் செலவளிப்பதோ,  எல்லோராலும் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிற சொற்களையோ தானும் பயன்படுத்துகிற ஒரு கவிதை தற்காலிமாக கொண்டாடப்படுகிற, ஏதேனும் ஒரு காரணத்திற்காக கொண்டாடப்படுகிற கவிதையாக, அல்லது கவிதையைப் போலவே பாசாங்கிற விதமாகவே அமையும் . கூற வேண்டிய கருத்தைச் சுருக்கமாக, கவித்துவமாக, சிந்திக்கத்தக்கதாக , சிந்தனையிலிருந்து செயல்பாட்டிற்கு நகர்த்தக் கூடியதாக தொகுப்பில் ஒரு கவிதை…

 

சான்றளிக்கும் அதிகாரியின்

அறைக்குள் பறக்கின்றன

வெட்டுக்கிளிகள்

இக்கவிதைக்குள் ,கூறப்பட வேண்டிய அரசியல் ,தெளிவாக, போதுமான வரிகளுக்குள் கூறப்பட்டிருப்பது, கவிதைக்கு அழகு சுருங்கக் கூறலை நிறைவாக்குகிறது.

நோக்கும் பார்வையே பிரம்மாண்டங்களைக் கட்டமைக்கிறது. அழகியலில் மிளிர்ந்த இன்னுமொரு சிறுகவிதை .

 

வான் பார்வையில்

ஒரு

பிரம்மாண்ட   நீர்த்துளி

நீள அகலத்தில்

அசைவதைப் போலிருக்கிறது

கடல்.

இனி நீர்த்துளிக்குள் கடலைத் தேடும் கலையை வாசகரும் உணர்வார். அப்படி உணர்த்துவதுதான் வாழ்வைக் கண்டறியும் கலையாகிறது. மனதை அமைதியாக்குகிறது.

பல நேரங்களில் காரணம் தேடுகிற ஒரு சிக்கலான பிரச்சனைக்கு எளிதான காரணத்தைக் ஒரு கவிதை  கண்டறிகிறது. அது அல்லாமலும் இருக்கலாம்.

 

 

நெடுநாள்

பயன்பாட்டிலில்லாததும்

ஒரு காரணம்

 

உன் நேயத்தில்

துருவேறியதற்கு.

பயன்பாட்டில் இல்லையென்றாலும் ,துருவேறாமல் இருந்தால்தானே உண்மையான நேயம்? காலத்தால் மறக்கப்படுகிறோம் என்றால் பிரதியீடாக வேறொன்று ஆக்ரமித்திருக்கலாம். இதையெல்லாம் வாசிக்கிறவர்கள் சிந்திக்க வேண்டும்.

காட்சியைக் காண்பதும், கடப்பதும்  சாதாரண மனது. காட்சிக்குள் பயணிக்க  காலங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒரு இலை உதிரும் போது தவம் கலையுமா என்றால் கலையலாம்தான். யாருமற்றவர்களின் உலகத்தில் வாழ்கிறவர்கள்   எல்லாவற்றையும் தானாக்குகிறார்கள். தனக்குள் உரையாடுகிறார்கள். உரையாடலை உணர்கிறார்கள்.

கவிஞரின் உரையாடலைப் பார்ப்போம்.

 

இலைகளை உரையாடவிட்டு

கேட்டுக் கொண்டிருக்கிறேன்

மரத்தடியில்.

நிழலுக்கு ஒதுங்காமல் இலைகளோடு உரையாடும் இக் கவிதை மரங்களின் அசைவைப் பார்க்கிற போதெல்லாம் நினைவிற்கு வரும்.

இத்தொகுப்பின் தலைப்பிலான இந்தக் கவிதை பெரும் மனச்சலனத்தையும் ,இயலாமையின் வெளிப்பாட்டினையும், இவ்வுலகத்தின் கொடுங்கரங்கள் விரிந்துள்ளதையும் பேசு பொருட்களாக்குகின்றன.

கூடு திரும்புதல் எளிதன்று

 

பெருங்காற்றின் நெளிவுகளில்

கதிர்வீச்சுப் பொழிவுகளில்

கரும்புகையின் படலமதில்

இலை மண்டிய கிளை நடுவில்

முட்களிடை கீறிவிடும் பூத்தெருவில்

தூறவிடும் ஓலமதில்

ஊரடங்கும் மெல்லிருட்டில்

கொள்ளிகளின் வெப்பத்தில்

கொழுந்துகளின் ஸ்பரிசத்தில்

சேதமிலா பயணமதில்

இரை தேடி

சிறகைச் சுமந்து

கூடு திரும்புதல்

அத்தனை எளிதன்று.

எளிதில்லா வாழ்வைத்தான் உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்களாலும், உற்சாகங்களாலும் வாழ்வைக் கண்டறிய வேண்டியதாக உள்ளது.

ஒரு சிறு பாராட்டு, எவ்வாறெல்லாம் ஆழ்மனதைத் தூண்டும்? குறிப்பாக குழந்தைகளுக்கான மனதை என்ன செய்யுமென ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் தர வேண்டிய பெரும் பயிற்சியை மூன்றே வரிகளில் தருகிறார். கவிஞரின் முன்னுரையில் அவரே குறிப்பிட்டிருக்கிற  ” கல்வியில் ஒரு விழி..கவிதையில் ஒரு விழி…அறிவுப் பாதையில் வெளிச்சமே என் வழி..” என்ற வாக்கு மூலத்தை குறுங்கவிதையாக்கி உள்ளார்.

 

நனி நன்று

என்றெழுதப்பட்ட

விடைத்தாளை

கட்டியணைத்தவாறு

உறங்குகிறது

குழந்தை.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியவர்களுக்கான மனதையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறார்.

நிகழ்வை இன்னொரு பார்வையில் காண்பதின் வழியே ,சமூகத்தின் சூழலை வெளிப்படுத்தும் அறிவாயுதமே கவிதை.  இந்த விதிமுறைக்கு பொருத்தமான கவிதை .

 

சகதியில் சிக்கியது

மணல் லாரி

பழிவாங்கியது ஆறு

ஆற்றின் பழி வாங்கல் அவசியமாகவும் தேவையுமாக இருக்கிறது. இதைத்தான் சமூக மனம் விரும்பவும் செய்கிறது. இந்தத் தொகுப்பின் முத்திரைக் கவிதையாக நான் குறிப்பிடுவது ‘உதைபடக் காத்திருத்தல்’ தலைப்பிட்ட கவிதையே.

தொகுப்பை முழுமையாக உள் வாங்கிய பின் தொகுப்பு உணர்த்தும் கருத்துகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

  •  கவிஞரின்  சொற்கள் சிறந்த அனுபவ கவிதைகளாகி உள்ளன.
  •  சமூகத்தை எவை சூழ்ந்துள்ளன என்ற புரிதலைத் தருகிறது.
  • மெல்லிய இழையாக மனிதம் தொகுப்பு முழுமையாக பயணிக்கிறது.
  • தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டுமென கருதும் கவிதைகள்.
  • சாளர முகிலில் நனையும் மனம்
  • அணிலாவது எளிதல்ல
  • உதைபடக் காத்திருத்தல்
  • நதியைத் திறந்து பார்த்தல்

வேறொரு வாசிப்பாளராக ,வாசகர் தனக்குப் பிடித்த வேறு கவிதைகளும் தொகுப்பில் இருக்கக் கூடும்.

கவிதையால் பாதை தெளியும்.

கவிதையால் தெளியும் பாதை கூட்டைக் கண்டறியும்..

  • க.அம்சப்ரியா
நூல் தகவல்:

நூல் : கூடு திரும்புதல் எளிதன்று

பிரிவு :  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்: தங்கம் மூர்த்தி

பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு :  பிப்ரவரி 2021

பக்கங்கள்: 120

விலை :  ₹ 120

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *