1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

“மொழிவழி ஒன்றாகவும் வாழ்வியல்வழி வேறாகவும் ஆன தமிழர்களின் கதை” – ஏதிலி நாவலை முன்வைத்து.


ஆசிரியர் குறித்து: இவர் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர். இவர் தற்சமயம் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்வர்தோ காலியானோவின் “தினங்களின் குழந்தைகள்” ஜாக் லண்டனின் “இரும்புக் குதிகால்” ஆகிய நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். “தாமஸ் சங்கரா வாழ்வும் சிந்தனையும்” தமிழாக்கத்திற்கு வாசகசாலை விருது பெற்றுள்ளார்.


“கருத்து ஒரு செங்கல் போன்றது. காரணகாரிய நீதிமன்றக் கட்டிடத்தையும் அதன்மூலம் கட்டலாம். சன்னல் வழியே அதை எரியவும் செய்யலாம் – டெல்யூஜ் (முபீன் சாதிகா கட்டுரைகள் பக்கம்:116)

இதில் செங்கல் என்ற ஒரு சொல் தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வதியும் அகதிகள் முகாமின் கட்டட அமைப்பை நினைவுகூறச் செய்துவிட்டது. ஒற்றை வரியில் அடுக்கப்பட்ட செங்கல் சுவர்கள் அடுத்த வீட்டின் ஒலிகளை எளிதாக கடத்தும் வல்லமையுள்ளவை. இந்த ஒற்றை வரிச் செங்கல் சுவர் வருவதற்கு முன்பு சேவைகளும், தறப்பால்களுமே சுவர் எனும் மாயத் தோற்றம் கொண்ட மறைவிடங்களாக இருந்தன. இத்தகைய கட்டிட அமைப்பு அரசின் புலனாய்வாளர்களின் காதுகளுக்கு ஒளிவுமறைவின்றி செய்திகளை கடத்த வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் கடந்துதான் இந்த ஏதிலி நிலத்தில் தங்கள் வாழ்வை எல்லாத் துயரங்களையும் மறைத்து சாமானிய வாழ்வு வாழ்வதாக தங்களைத் தாங்களே சமாதானம் செய்தபடி வாழும் மக்களின் துயரங்களை பேசுகிறது ஏதிலி நாவல். அது பேச வந்த காலத்திற்கும் கால்பதித்த காலத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி தொக்கி நிற்கிறது. அந்த வெளியைக் கடந்தும் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றைப் பேசாமல் போன மெளனிகளை நினைத்து வருந்தும் அதேவேளை அங்கிருந்தே அவர்கள் வாழ்வை எழுதக் கிளம்பிய புதியவர்களை அணைத்து உரையாட வேண்டிய வெளி இப்போது சாத்தியமாகியிருக்கிறது இல்லையா?

முகாமும் முகாம் சார்ந்த வாழ்வும்:

ஏதிலிகள் இல்லா உலகமாக இந்த உலகம் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் நாளுக்கு நாள் அகதிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. 2009 க்கு முன்புவரை ஈழ அகதிகளே அதிக எண்ணிக்கையிலானவர்களாக இருந்தனர். இப்போது சிரியா, ஆப்கானிஸ்தான் அகதிகளை விடவும் அதிகப்படியான அகதிகளை உருவாக்கியிருக்கிறது ரஷ்யா-உக்ரைன் யுத்தம். முப்பத்தைந்து இலட்சம் அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். அகதிகளின் உருவாக்கத்தின் பின்னுள்ள அரசியல் அதிகாரப் போட்டிகள், ஏகாதிபத்திய நோக்கம் பேராசைகள் மற்றும் விடுதலை எனும் லட்சியம் போன்றவை காரணியாகின்றன. அகதிகளை உருவாக்கும் ஏகாதிபத்திய வியாபாரிகள் அதற்கென்றே ஒரு நாளினையும் உருவாக்கி நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் வாழ்த்துகளையும் தத்துவங்களையும் உதிர்த்துவிட்டு உறங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் வாதைகளை, வாழ்வியலை, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை, மனவலிகளை யாரும் பேசாமலே ஸ்க்ரோல் செய்துவிட்டு செல்வார்கள்.

“விழும் குண்டுகளுக்கு ஆயுதம் தூக்கியவன் தூக்காதவன் என்று ஏதாவது தெரியுமா என்ன? வெடித்தால் தின்பதற்கு அது சதை கேட்கும் அவ்வளவுதான்” (ஏதிலி பக்:44) என்ற இந்த வரிகளை நீங்கள் உற்றுக் கவனித்தால் போர் நிலத்தில் இருந்து அகதிகள் எவ்வாறு எதனால் உருவாகிறார்கள் என்பது விளங்கும். அப்படியாக ஈழப்போராட்டத்தால் தமிழகத்துக்கு அகதியாக வந்த அ.சி.விஜிதரன் தன் மக்களின் வாழ்வை, அந்த மக்கள் சமூகம் இங்குள்ள மக்கள் சமூகத்தோடு (ஒரே மொழி பேசுவோராக இருந்தாலும்) ஒன்றாக முடியாத வாழ்வியல் முரண்களையும், முகாம்களுக்குள் உள்ள மக்களின் பிரச்சினைப்பாடுகளையும், முகாமும் முகாம் சார்ந்த வாழ்வுமாக புதிய நிலத்தில் ஏதிலி எனும் புதினம் தன் பாடுகளை முன்வைக்கிறது. முடிவுகளை வாசிப்பவர் கைகளிலேயே தந்துவிடுகிறது.

“எழுத்து என்பது ஒரு விளையாட்டைப் போல் திறந்து கொண்டு அதன் விதிகளை மீறி நகர்ந்து இறுதியில் அந்த விதிகளை விட்டுச் செல்கிறது” என்ற மைக்கேல் பூக்கோவின் வரிகளைப்போல் திறந்த வெளிச்சிறையான தமிழக முகாம்களுக்குள் மக்களுக்குக்கு விதிக்கப்பட்ட வாழ்வின் விதிகளை தன் எழுத்துக்களால் சொல்லிச் செல்லும் பிரதியாளன் இது தன் கதை இல்லை என்றே துவங்கினாலும் இறுதியில் தன் கதையாகவே முடிக்கும் இடத்தில் விதி விடப்படுகிறது. மூவேந்தர்களால் நிலமிழந்த பாரிமகளிர் பாடலில் இருந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல்வரை குறிப்பால் உணர்த்துகிறது விதியாடல்.
சிறப்பு முகாம்களின் அவலங்களையும் ஏதிலி பேசத் தவறவில்லை. வதை முகாம்களுக்கு இணையானது. உளவியல் ரீதியாக பலரையும் தற்கொலைக்குத் தூண்டுமிடம். மனப்பிறழ்வுகளையும் உருவாக்கும்.‌

முரண்களைப் பேசும் பிரதி:

ஏதிலியின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு விடயங்களைப் பேசிச்செல்கிறது. அது முகாம்களுக்குள் உள்ள மக்களுக்கிடையேயான முரண்களையும் பேசுகிறது. முகாம் மக்களுக்கும் வெளி மக்களுக்குமான முரண்களையும் பேசுகிறது. தங்களை ஒரு கங்காணியாக எண்ணிக்கொண்டு அதிகாரம் செலுத்தும் முகாம் தலைவர்களின் மக்களை மந்தைகளாக நினைக்கும் போக்கும். வணிகர் சங்கத் தலைவர் ஒருவரின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கிண்டல் செய்தமைக்காக முகாம் இளைஞர்களையும், அவர்களின் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் காவல்துறையினரின் செயல்பாடுகள் இவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகிறது. முரண்களைப் பேசும் இப்பிரதி நிலங்களின் அரசியலையும் பேசுகிறது.

பெண் பாத்திரங்கள்:

களவு கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட மலர் துபாய்க்கு வேலைக்குப் போன இடத்தில் சமையல் எரிவாயு வெடி விபத்தில் இறந்து போவதும், மலரின் பூதவுடல் சென்னை விமானநிலையத்தில் படாதபாடு பட்டதையும், முகாமுக்கு கொண்டுவரப்பட்ட மலரின் உடலுக்கருகில் சகோதரியிடம் வளரும் இரு பெண் குழந்தைகள், கடிதங்கள் வழியாக தங்கள் வாழ்வின் துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்திரா – சுசி. எதையும் நம்பும் வெள்ளந்தியான சுபா, ஐ.நா மன்றத்தில் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரும் பிரேணணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென முகாமில் நடைபெற்ற உண்ணாவிரதப் பந்தலில் அரசியல் நாடகீயத்தை புட்டுப்புட்டு வைத்த அரசியல் பொருளாதாரம் படித்த சாரு. அகதி முகாம் பெண்கள் ஆரோக்கியம் சார்பாக ஆய்வு செய்ய வந்த மலையாளப் பெண் மினு என பெண்களின் பாத்திரங்கள் சாத்தியமிக்கவையாக உள்ளன. அதிலும் அந்த கேரளப் பெண் மினு ஒரு மாடு நல்லா இருக்கணும்னா 350 சதுர அடி நிலம் வேண்டும். எப்படி 10*10 சதுர அடியில் இவ்வளவு நெருக்கமாக கொட்டப்பட்ட குப்பைகளும் அதில் உலவும் பன்றிகளும் ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதை விவரிக்கும் இடத்தில் பிரதியாளன் “வி” யும் விதிர்விதிர்துத்தான் போயுள்ளார்.

மதம் எனும் அபின்:

“மனிதன் ஒரு மதம்சார் மிருகம்” என்பார் இத்தாலிய எழுத்தாளர் உம்பர்த் எகோ. கார்ல் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்றவர். நாத்திகவாதியென விழிக்கப்படும் தந்தை பெரியார் மதம் மனிதர்களை முட்டாள்களாகவே வைத்திருக்கும் என்றார். விஞ்ஞானப் பூர்வமாக சிந்தித்ததின் விளைவால் கலிலியோவை மதம் கல்லால் அடித்துக் கொன்றது முதல் இன்றளவும் மதம் பல்வேறு இன்னல்களை மனிதர்கள் மீது நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அதுவொரு மிருகத்தனமான செயல்தான். படிக்க வழியின்றி இடைநிற்றல் செய்யும் மாணவர்கள் மிகுதியாக உள்ள முகாமில் பல இலட்சங்களில் கோபுரம் எழுப்பிக் கோயில் கட்டுவது ஒருபக்கமென்றால் பெரிய குருசு வைத்து விண்ணைத்தொடும் தேவாலயங்களையும் எழுப்புவோரும் உள்ளனர். எதற்காக இத்தகைய பிரம்மாண்டங்கள் என்று இதுவரை யாரும் கேள்வி கேட்டதும் இல்லை. இவற்றின் பின்னால் செயல்படும் அரசியலையும் பிரதி பேசுகிறது. பிரதியாளன் ஒரு இடதுசாரி என்பது வெளிப்படும் இடம் இங்குதான் தெரிகிறது. பிரதியாளனின் கனவுக்குள் ஆறுமுக நாவலர் ரொம்பவே தொந்தரவு செய்துவிட்டார்.

தொண்டு நிறுவனம்:

ஈழ ஏதியர் முகாமுக்குள் கடந்த பத்தாண்டுகளில் பல தொண்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தினாலும் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தும் தொண்டு நிறுவனம் ஒன்றுண்டு. அது 2009 இறுதி யுத்தத்திற்கு பிறகு முகாம் மக்களை மீளவும் இலங்கைக்கு திரும்பச் சொல்லும் விதமாக சில பேராசியர்களைக் கொண்டு கூட்டம் கூட்டி மூளைச்சலவை செய்து நாடுதிரும்பச் செய்கிறது. இதற்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதிகளை பெறுவதற்கான வேலைத்திட்டத்தில் இவற்றை ஒன்றாக்கிய மாபெரும் துரோகிகளாகவே தெரிகிறார்கள். பிரதியாளனின் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை என்பது இல்லாமல் இல்லை.

முடிவுரை:

“தகித்த பூமியில் தனித்தனியாக நின்ற பனைமரங்களால் நிழல்களைத் தரவே முடியவில்லை” (ஏதிலி பக்: 45) பிரதியாளன் ஏதிலியாக தமிழகம் வருவதற்கான முன்தயாரிப்பில் சொல்லப்படும் இந்த வரிகள் ஒரு குறியீட்டுப் படிமமாக உள்ளன. தனித்தனியே பிரிந்து ஒன்றையொன்று அடித்துக் கொன்ற நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது. அதன் விளைவு விடுதலை எனும் நிழலை இறுதிவரை எமக்குத் தரவேயில்லை என்பதையே சொல்கிறது. இங்கும் அப்படியான ஒரு முடிவற்ற பயணமாக இந்த அகதி வாழ்வு தொடர்கிறது. தமிழக ஈழ இலக்கியங்களில் தலித், மலையக இலக்கியம்போல் தமிழகம்வாழ் அகதிகள் இலக்கியமும் ஒரு புதிய வகையான வடிவம் எடுக்கிறது. இதுகுறித்து பேசவேண்டிய அவசியமும் இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது.

“என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்;
அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு
அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம் அவர்கள்
துயரங்களை நான் அறிவேன் ” (விடுதலைப் பயணம் 2:7)

ஆம் நானும் அவர்களில் ஒருவன் (நாடிலி) என்பதையும் இங்கு சொல்லிவிடுகிறேன்.


துணை நின்றவை:

1. முபீன் சாதிகா கட்டுரைகள் காவ்யா பதிப்பகம்
2. பழைய ஏற்பாடு
3. குடியரசு – பெரியார் உரைகள்.

 

நூல் தகவல்:

நூல் : ஏதிலி

வகை :  நாவல்

ஆசிரியர் :  அ. சி. விஜிதரன்

வெளியீடு :   சிந்தன் புக்ஸ்

ஆண்டு :  2019

பக்கங்கள் :  305

விலை:  ₹  250

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *