கோவையைச் சார்ந்த மலர்விழி அவர்களின் முதல் நூல் இது. கவிதை நூல்.  “தங்கப்பதக்கங்களோடு கணிப்பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று, பின் பத்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றியிருக்கிறார். புத்தக வாசிப்பில் தீராத வேட்கை கொண்ட இவரிடத்தில், இப்படைப்பு துளிர் விட்டதில் வியப்பொன்றுமில்லை. மலர்விழிக்கு வாழ்த்துகள் !.” எனச் சென்னை SDNB வைஷ்ணவ கல்லூரி, உதவிப் பேராசிரியர் பெ.உமாமகேஸ்வரி இவரை அறிமுகப்படுத்தி வாழ்த்தியிருக்கிறார் இந்த நூலில்.

“தமிழ்க் கவிதைத் தளத்தில் பெண் கவிஞர்களின் குரல் 1980-க்குப் பிறகு உரத்து ஒலிக்கத் தொடங்கியது; அதற்குக் காரணம் புதுக்கவிதை. புதுக்கவிதை என்ற புதிய வாகனம் பெண் கவிஞர்கள் பயணிக்க உகந்ததாக இருந்தது. புதுக்கவிதை வடிவம் பெண்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக இருந்தது.அந்த வழியில் சமகாலத்தில் நிறையப் பெண் கவிஞர்கள் வளர்ந்துகொண்டே வருவது பெருமைக்குரியது. இன்று அதிகரித்துவரும் பெண் கவிஞர்களின் எழுத்துக்கள் மொழிக்காடு செழிக்க உரமாகின்றன…” என்று ஆரம்பித்து ஓர் அழகிய அணிந்துரையை இந்த நூலுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அளித்திருக்கிறார்.

நிறையப் பெண்கள் எழுத வருவதும், நிறைவாகப் பல பெண்கள் எழுதுவதும் நம்மைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. சென்ற நூற்றாண்டில் கிடைக்காத கல்வி வாய்ப்பு, நம் வீட்டுப்பெண்களுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்திருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்பு கை நிறையச் சம்பளத்தையும், தனித்து எதையும் சமாளிக்கும் வல்லமையையும், எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் நமது பெண் குழந்தைகளுக்கும், நமது தங்கைகளுக்கும், நமது தோழிகளுக்கும் அளித்திருக்கிறது. வாழ்க்கையைப் புரிந்த கொண்ட அவர்கள், படைப்புகள் அளிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். எதையும் எதிர்கொண்டு நேர்வழியில் அணுகுகிறார்கள். இலக்கியத்திலும் தனித்துவமாய் தடம் பதிக்கிறார்கள்.ஆங்கிலம் போன்ற அயல்மொழிகளில் கூடப் புகுந்து விளையாடுகிறார்கள். புதியதைத் தேடிக்கொண்டு வந்து தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கிறார்கள். சமூக ஊடகங்களும் மிகப்பெரிய வாய்ப்பாகப் பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. முக நூலில் ஆண்களின் கவிதைகளை விடப் பெண்களின் கவிதைகள் பெரும் அளவில் பதிவாகின்றன. எவரும் பேசத்துணியாத கருத்துக்களை எடுத்துக்கொண்டு கூடத் தனக்குச் சரியெனப் பட்டதை ஒளிவு மறைவின்றி பதிவதும், அதனைக் குறித்து ஆரோக்கியமாக விவாதிப்பதுமான ஓர் அணுகுமுறையும், இருட்டுக்குள் தோன்றும் வெளிச்சமாய் இன்றைய சமூக ஊடகங்களில் காண முடிகிறது.

அந்த வகையில், தகவல் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுக்காலம் பணியாற்றியவர் மலர்விழி. இவரின் முதல் நூலான ‘விடாது துரத்தும் காதல்’ ஒரு கதை சொல்லும் பாணியில் அமைந்த கவிதைத் தொகுப்பு. தனித்தனிக் கவிதைகளாக, பல்வேறு தலைப்புகளில் எழுதிப் பின்பு ஒரு பொதுத்தலைப்பின் கீழ் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வருவதுதான் வழக்கமான பாணி. ஆனால் இவர் ஒரு குறு நாவலைக் கவிதையாகச் சொல்வது போல, கவிதையால் கதை சொல்லும் நூலாக இந்தக் கவிதை நூலைப் படைத்துள்ளார்.

குறு நாவலில் கதாநாயகன் அறிமுகப்படுத்தப்படுவது போல, இந்தக் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையில் நாயகன் ‘பார்த்திபன் ‘அறிமுகப்படுத்தப்படுகிறான்.

”சொல்லும் சொல்லில் துறு துறு எனவும்
செய்யும் செயலில் விறுவிறு எனவும்
வேகம் காட்டும் வித்தகன் அவன்!!
கண்ணியம் காக்கும் மரபுடனும்
கற்பனை பொங்கும் திறனுடனும்
நகைச்சுவை கூட்டும் மொழியுடனும்
புன்னகை ராஜ்யம் ஆளும் மன்னன் அவன்…”

என்று பார்த்திபன் அறிமுகப்படுத்தப்படுவதோடு ‘சாலையோரத் தேநீர்க் கடையில் அமர்ந்து ‘ அவன் பெண்கள் வருவதைப் போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பதிவு செய்கின்றார் கவிஞர்.

கவிதை நாயகி இரண்டாவது கவிதையில் அறிமுகப்படுத்தப்படுகிறாள். அடுக்கி வைக்கப்பட்ட சொற்கள் எப்போதும் கவிதை ஆகிவிடுவதில்லை. உணர்வுகளும் அதனை ஒட்டி எழுதப்படும் உவமைகளும்தான் கவிதையாக, வாசிப்பவனுக்கு ஒரு கவிதையைக் காட்டுகிறது. முதல் கவிதைப் புத்தகத்திலேயே மலர்விழிக்கு அந்த எழுத்து கைவசமாகி இருப்பது வாசிக்கும்போது நமக்குப் புரிகிறது.

“இருட்டுப்பிரபஞ்சம்
அடர்ந்த வனம்
இரவின் கருப்பில்
புல்வெளி மடியில்
இளைப்பாறுகிறது ஒரு இறகு !!
அவ்விறகின் விரிசல் வெளிகளில்
வழி தேடுகிறது
ஒரு பால் நிலவின்
பாலைவன வெளிச்சம்!!
இறகாய் அவள் !!
வெளிச்சமாய் அவள் காதல் !!”

என்று கவிதையைத் தொடங்குகிறார்.

அவளின் பண்பு குறித்துப்பேசும்போது

“அழுக்குப் போர்வையின் சுமை
தரும் கதகதப்பில்
சுருங்கிக் கிடக்கும் கிழவனுக்கு
தேநீர் தருகிறாள்…
அங்கே நோய் பட்ட நாய்க்கு
உள்ளங்கையில் வைத்து
ரொட்டி தருகிறாள்…”

என்று விவரித்து மனித நேயமும் மிருக நேயமும் உள்ளவள் அவள் என்பதை உணர்த்துகிறாள். காதல் குறித்துப் பேசும் இக்கவிதைப் புத்தகத்தில் பசித்துக்கிடக்கும் கிழவனையும், நாயையும் இணைத்து அப்பசியை ஆற்றுபவள் ‘அவள் ‘எனச்சொல்வது நன்று.

அவனையும் அவளையும் சொல்லி விட்ட கவிஞர் ‘அவர்கள்’ எனத்தலைப்பிட்டு இருவருக்குமான ஒற்றுமை, வேற்றுமைகளைக் கவித்துவமாகச்சொல்லிச் செல்கிறார்.

‘நில்லாத வழிப்போக்கனே…
கொஞ்சம் உன் காசை
அள்ளி விரைத்து விட்டுப்போ
என கோபப்பட்டு
மேகத்திடம் மழை கேட்கிறாள் அவள் !!
தள்ளாடும் கிழவனை
தாங்கிப் பிடித்து
அவன் சட்டைப்பையில்
தன் காசை வைத்து
கருணை மழை பொழிகிறான் !! “

பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல், பின்பு அது காதலாக மலர்வதைப் பற்றி எல்லாம் சொல்லிச்செல்கிறார்.

“அன்றாடம் அதே இடத்தில்
அவளுக்காகக் காத்திருந்து
நிழற்குடையின் நண்பனான அவன் !!
அவனைக் கடந்து போகும்
அந்த இரண்டு வினாடிகளுக்காக
தினம் கல்லூரிக்கு
நடந்து சென்றாள் அவள் !!”

என்று தனது கவிதையையே ஒரு நாடகத்தின் வசனங்கள் போல நகர்த்திச்செல்கின்றார் கவிஞர்.

காதல் கவிதைத் தொகுப்பு என்பதாலோ என்னவோ மொழியை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். ‘அவனின் காதல்’ எனச்சொல்லும் தலைப்பில்

“சிரபுஞ்சி தோழிகளை
கொஞ்சம் விட்டுவிட்டு
சஹாராவாகிக் கிடக்கும் எனக்கு
கொஞ்சம் சாரல் தெளித்து விட்டுப் போ
முகிலே ”
எனப் பார்த்திபன் சொல்வதாகக் கவித்துவமாகப் பதிவு செய்கிறார். அதனைப் போலவே ‘அவளின் காதல் ‘ எனச்சொல்லும் தலைப்பில்

” மகிழ்வா நெகிழ்வா ?
நிஜமா கனவா?
தொடருமா முடியுமா?
அறிய முடியாமல்
விட்டில் பூச்சியாய்
வெளிச்சம் நோக்கிப் பறக்கிறேன் !!
விழி பாய்கிறது ஒளி…
இமைகளை குடையாய்
பிடித்துக்கொண்டு
கண்களுக்குள் நிற்கிறாய் நீ !! ”

என்று சொல்லும் பகுதியெல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

பார்த்திபனும் அவளும் காதலிக்கும் செய்தி,அவளின் பெற்றோர்களுக்குத் தெரிகிறது. பார்த்திபன் தன் பெற்றோர் உடன் வந்து பெண் கேட்கிறான்.பெண்ணைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும், வீட்டில் இருக்கும் வயதானவர்கள்,சாதி-மத சிந்தனைகளில் ஊறிப்போய்க் கிடப்பவர்கள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. அப்படித்தான் அவளின் அம்மாச்சி

“ஆரவாரமான அன்னை
அமைதியான தந்தை
என்றாலும் உன்னைத் தரச்சொல்லி
நான் கேக்க வேண்டியது
உன் அம்மாச்சியிடம்தான் ”

என்று பார்த்திபன் சொல்கிறான். அதனைப் போலவே பெண் வந்து கேட்கும் பார்த்திபனும் அவனது பெற்றோரும் அவமானப்படுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவளின் அம்மாச்சி சதி செய்து காதலர்களைப் பிரிக்கிறார். பெண் தூரத் தேசத்தில் வேலைக்கு அனுப்பப்படுகிறாள். என்றாலும், காதலை மறக்காமல் இருக்கின்றாள்.

“அம்மாச்சியின் ஊர்க்குருவி அல்ல நான்
உன்னைப் பற்றிக் கொண்ட உடும்பு ”

எனக் காதலன் நினைவாகவே இருக்கிறாள். அவன் துயர் உற்று அலைகின்றான். சில ஆண்டுகள் கழித்து காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள். நிறைவில் குழந்தைகளோடு இருக்கும் அவளின் பெயர் ‘நிலா பார்த்திபன் ‘ என்று சொல்வதோடு இந்தக் கவிதை நூல் முடிவடைகிறது.

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”

என்று வாழ்ந்த தமிழ்ச்சமூகம்தானே… இன்றைக்குக் காதலித்தார்கள் என்பதற்காகச் சிலர் ஆணவக் கொலை செய்யும் கொடுமையையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

காதல் என்பது இயற்கை. மனிதன் செயற்கையாகப் படைத்துக்கொண்ட சாதியால், மதத்தால் காலந்தோறும் இயற்கையான காதலைச் சாகடித்துக் கொண்டிருக்கிறான். செத்துப்போகப் போகும் சாதியை எப்படியாவது உயிர்ப்பித்துவிட வேண்டும் என்று சில சனாதனவாதிகள் சாதி வெறி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காதல் சில ஆண்டுகளாகச் சாதியைச் சத்தமின்றி சாகடித்துக்கொண்டு வருகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் இல்லாத வீடுகளே என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் நாட்டின் பல கிராமங்கள் கூட இன்றைக்கு மாறிக் கொண்டு இருக்கின்றன. மத மறுப்புத் திருமணங்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அதற்குக் காரணம் பெண்களின் துணிச்சலும், கல்வி,வேலை வாய்ப்பும். தன் துணையைத் தான் தேடிக்கொள்ள வேண்டும் என்னும் தன்னம்பிக்கையும் இணைந்து புதியதோர் உலகத்திற்கான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. அப்படித் துணிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய கவிதை வடிவிலான கவிதைத் தொகுப்பு இந்த நூல்.

 “எழுத எழுத மலர்விழியின் கவிதைகள் இன்னும் சிறக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தொகுப்பு திகழ்கிறது. சமூகத்திற்கான கவிதைகளைப் புனைய வரும்பொழுது இவர் எழுத்தாற்றல் இன்னும் செம்மையும் சிறப்பும் பெறும் என்பதற்கான அறிகுறிகளை இத்தொகுப்பில் காண்கிறேன்.” என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. மொழி ஆளுமை கை கூடி இருப்பதும், கவித்துவம் மிகச்சிறப்பாக இடம் பெற்றிருப்பதும் இக்கவிதைத் தொகுப்பின் சிறப்பு. எனினும், இன்னும் கொஞ்சம் வேகமாக சமூக அவலங்களைப் பற்றிய கவிதைகளைப் படைப்பதும், தொடர்ச்சியாகப் படைப்புலகில் இயங்குவதும் இருப்பின் இவர் மிகக் கவனிக்கத்தக்க ஓர் எழுத்தாளராக எதிர்காலத்தில் தமிழ் எழுத்து உலகில் திகழக்கூடும். அதற்கான விதையை முதல் கவிதைத் தொகுப்பிலேயே காட்டியிருக்கிறார். வாழ்த்துகள் கவிதை நூல் ஆசிரியர் மலர்விழி அவர்களுக்கு..!


 

நூல் தகவல்:

நூல் : விடாமல் துரத்தும் காதல்!!

வகை :  கவிதைகள்

ஆசிரியர் :  மலர்விழி

வெளியீடு :   எழிலினி பதிப்பகம்

ஆண்டு :  முதல் பதிப்பு 2021

பக்கங்கள் :  82

விலை :  ₹  120

தொடர்புக்கு : 984069657450

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *