ரு கவிதை தொகுப்பு வழியாக அறியப்படும் ஒரு கவிஞர் அவர் எழுதிய கவிதைகளின் வழியாகவே மேலும் அறியப்பட வேண்டியவராக இருக்கிறார். சமூகத்திலிருந்தும், பொதுவெளியிலிருந்தும் , இயற்கையிடமிருந்தும், மேலும் தான் சார்ந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்தும் மற்றும் கவிஞரைச் சார்ந்த அல்லது சாராத அக, புற வய காரணிகளிலிருந்தும் கிடைப்பவையே கவிதைகளுக்கான மூலப் பொருள்கள்.

இப்போதெல்லாம் இந்த மூலப்பொருள்கள் காண்பவரை ஈர்த்துக் கொள்ளும் வண்ணம் தன்னை விளைபொருளாக்கி கொள்கிறது. இன்னவென்று அறிய முடியாத தனி மனித மன அலைவுகளின் அதிர்வுகள் கவிதைகளின் அலைவரிசையாகி அதனதன் வடிவத்தை தேர்ந்து கொள்கின்றன.

ஒரு உரையாடலின் வழியே நிகழ்த்த முடியாத உயிரின் கொந்தளிப்புகள் யாவும் இயற்கையின் அரவணைப்பை தேடி அடையும் பின் புலத்தில், அவற்றிற்கான சொற்கள் ஒரு பட்டுப் பூச்சியின் சிறகசைப்பை போல், தனக்கான மலர்களையும் வான வெளிகளையும் தேடிக் கொள்கின்றன. அந்தத் தேடலில் தான் மட்டுமே கண்டடைந்த சில ரகசியங்களை கவிதை என்ற ஊடகத்தின் வழியாக பொது வெளியில் பகிரும் போது, அந்த பூடகங்களும் புனைவுகளும் வாசகனை ஒரு புகை மூட்டத்தில் தள்ளி விடுபவையாக உள்ளன.
வாசகனை கண்களையும், மூளையையும் கசக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய நிலையில் தள்ளப் படுவது இன்றைய கவிதையின் போக்கு பற்றியும், அதன் மொழி பற்றியும் பல ஐயங்களை நமக்குள் எழுப்புகிறது.

ஆனாலும், கேள்விகளையும் ஐயங்களையும் தாண்டி தாண்டி கவிதைகள் இன்று முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு மொழி விளையாட்டு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இரா. கவியரசு அவர்களும் தனக்குத் தெரிந்த மொழி விளையாட்டில் உற்சாகமாக தனது வார்த்தைச் சோழிகளை உருட்டி விடுகிறார். இவரது கவிதைகளின் ஏதோ சில வரிகள் நம்மை வேறொரு தளத்தில் பயணிக்க வைக்கிறது.

 ரகசியங்களால் சோர்வுற்று
தூங்க மடி தேடுகிறேன்
“ரகசியங்களை உருவாக்கியவர்கள்
காகிதங்களை அழிக்கும்
மிஷினுக்குள் நுழைந்து
ரகசியங்களை அழித்து விட்டு வா

என்று ஆணையிடுகிறார்கள் ‘

சொல்லப்போனால் நமது பேரரசுகள், அவர்கள் உருவாக்கிய மதங்கள், அரசமைப்புகள், கோயில்கள் அவைகளுக்கு சொந்தமான நிலங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள் கூட உண்மையின் பக்கத்தில் இல்லை.

‘அரசதிகாரம்’ என்பது தனது பொய்மையின் முகங்களை வரைந்து வரைந்து வரலாறாக மாறத்துடிக்கிறது. ரகசியங்களை பாதுகாப்பவனும், ரகசியங்களை திருடுபவனும் வெவ்வேறு மனிதர்கள் அல்ல. நமக்குள் நாம் யாராக இருக்கிறோம்? என்பது கூட அந்தந்த அரசுகளின் கையில் இருக்கிறது. அரசைப் பொறுத்தவரை
நாம் என்பது மற்றுமொருவராக இருப்பதுதான்.

“பஞ்சு மிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்
எல்லாமும் தானாகவே மாறிவிடுவதால்
தோற்றுப் போய்
குழந்தையின் கால் விரல்களில்
துடிக்கும்
நரம்புகளின் பச்சையை
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது “

நாம் வாழும் இந்த வாழ்வு ஒளியால் அதிகம் நிரம்பியுள்ளது. அந்த வாழ்வின் இயக்கத்தை, ஒளியால் ஆன புறவுலகத்தை நமது கண்களால் கண்டு இன்புறுகிறோம். நாம் காணும் இயற்கை யாவும் ஒளியால் வளர்ந்து நமது வாழ்க்கைக் கான வளம் யாவையும் இந்த பூமியில் கொண்டு வந்து நிறைக்கின்றன. நமது புறக்கண்கள் ஒளியால் பார்வை பெறுகிறது. ஒளியின் வழியே தேடுபவை யாவும் நம் அகக் கண்களின் வழியே வேறொரு காட்சிப் படிமத்தை உருவாக்கி விடுகின்றன.

படைப்பாளியின் கருத்தியல் சார்ந்து அவரின் காட்சிப் படிமம் மேற் கண்ட “ஒளியுடன் பேசுதல் ” என்றொரு கவிதை வழியாக விரிகிறது.

புதிதாய் பிறந்திருக்கும் குழந்தையின் வீடு தேடி வெகு தூரம் பாய்ந்து வரும் ஒரு முற்றாத ஒளியை தேடிப் பிடிக்கும் முயற்சியில் பல ஒளி ஆண்டுகள் கடந்து பயணிப்பதாக கூறுகிறார். இறுதியில் பஞ்சு மிட்டாயின் நுண்ணிய இளஞ்சிவப்பில் ததும்பி அலையும் ஒளியொன்று குழந்தையின் கால் விரல் நரம்புகளின் பச்சையை முத்தமிட்டுக் கொண்டிருப்பதாக கவிதை முடிகிறது. குழந்தையின் உடல் வழியாக ஒளியின் பேச்சுக்களை அறிய முயலும் கவிதையாக ஒளியுடன் பேசுதல் கவிதையை அழகிய சொல்லாடல்களால் அமைத்திருக்கிறார்.

வெயில் /மழை /இலை /மணல் என்றொரு கவிதையில் எல்லாமே அதனதன் மொழியில் பேசுவது கவிதையின் மனத்தால் உற்றுக் கேட்கப் படுகிறது. அவற்றின் பாடலை, கதையை, துடிப்பை தன் சொற் பறவைகளின் குரல் வழியே தரையிறக்குகிறார்.

“காற்றின் தயவால்
கழன்று விழுகின்ற இலைகள்
மணலின் மடியைச் சேரும் போதெல்லாம்
நாவற்றதாகவே இருக்கின்றன “

மொழியின்றி இலை சல சலக்கும் ஒரு தருணத்திற்காக மௌனமாக காத்திருக்கும் அதன் இருப்பை மணல் மட்டுமே உள் வாங்கிக் கொள்கிறது. மணல் வழியே வெயிலும், மழையும், இலையும் தன் மொழியைக் கடத்தும் அதிசயங்களை

“மணலுக்கு எல்லாமே
வாங்குதல்தான் “

என்ற வரியின் மூலம் தான் சொல்ல வந்த கருத்திற்கு சுதியேற்றுகிறார்.

“புதிதாக உருவாக்க முயலும்
சுவாசக் காற்றில்
சிரித்துக் கொண்டே நெளிகிறது
தந்தையின் மூச்சு
இறப்பை உயிரோட்டமாக வரைய
கொலைக்களங்களில் நிற்க வேண்டியதில்லை “

சொற்களின் வழியே மூச்சுக்காற்றை நிர்ப்பந்தப் படுத்துவதும், இறப்பை உயிரோவியமாய் வாழ்வின் பக்கங்களில் தீட்ட முயல்வதுமாய் கவிதை வரிகளில் நுழைய முடியும் ஒரு அர்த்தம் நித்தியத்தின் வாயிலில் நின்ற படியே உள்ளது.

அதற்கான வாசிப்பு முறையில் நம்மை கவிதையில் எந்த இடத்தில் நிறுத்தி வைக்கிறது என்ற கேள்விக்கு இங்கு எந்த இடமும் இல்லை. கவிதை சொற்பூரணங்களில் மயங்கி சொக்கி கிடக்கிறது.

ஒவ்வொரு கவிதைக்கும் தேர்ந்த தலைப்புகள் உண்டு. எனினும் தலைப்பிலிருந்து தனக்கான வலையை சிலந்தி வலையாகப் பின்னி வாசக மனதை எதில் சிக்க வைக்க முடியும் என்ற முயற்சியில் தொடர்பற்ற வரிகள் இழுத்துக் கட்டப் படுகின்றன. இது படிப்பவருக்குள் என்ன வினையாற்றும் என்று தெரிய வில்லை.

“காதலை வைத்துக் கொண்டு
என்னதான் செய்வது
கனிவதற்குள் விழுங்கி விட வேண்டும் “

இந்த வரிகளுக்குள் -காதலை விழுங்கி விடத் துடிக்கும் ஒரு கவிஞரின் பார்வையில் காதல் என்பது ஒரு வைரம் பாய்ந்த மரமாகி விடுவதற்கான கால அவகாசங்கள் எதையும் கோரி நிற்கவில்லை என்பது போல் தெரிகிறது. கவிதை யை முழுவதும் வாசித்த பிறகு கவிதையின் முழுமையை அறிய முடியாத ஏதோ ஒன்று பலவாக சொற்களின் வழியே விழுந்து தெறிப்பனவாகவும் அமைந்துள்ளன.

வாசிப்பவரின் நேரடி உணர்வைத் தொடாத சொற்கள் கவிதையின் முன்னும் பின்னுமாக தன் அர்த்தம் தேடி அலைவதை தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் பார்க்க முடிகிறது.

தனக்கான சொற்களைத் தேடி கவிதை பழகும் ஒரு கவிஞராக “நாளை காணாமல் போகிறவர் ” என்ற தொகுப்பின் வழியே அறியப்படுகிறார் இரா. கவியரசு அவர்கள். சொற்கள் என்பவை கவிதைக்கான நடையில் அதன் பொருண்மையை இழந்து விடாமல், வாசிப்பவரின் மனதில் தன் இலக்கை நிறுத்துவதாக இருக்க வேண்டும். அந்த இலக்கிலிருந்து விலகிய சொற்கள் அதன் தனிமையில் தொலைந்து, பின் தேடி, பின் மீண்டும் தொலைவதாக முடிவற்ற ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை நிறுவிக் கொள்ள முடியாமல் அலைவுறும் ஆட்டத்தினிடையே ஒரு வாசகன் எங்கு கவிதையை தேடி அலைய முடியும்? தெரிந்தோ, தெரியாமலோ… கவிஞருக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் அந்த வண்ணத்துப் பூச்சியை பிடித்து அதைப் பறக்க விடுவதற்காக எத்தனிக்கும் முயற்சியில் பல இடங்களில் சொற்களால் வெற்றியை தழுவிக் கொள்ள முயன்றும் அதன் பொருளார்ந்த உணர்வுகளில் முழுமையை எட்ட முடியாமல் தோற்றம் பெற்றும் தன் அடையாளம் எதுவென கண்டடைவதற்கு இத் தொகுப்பின் வழியே கவிஞர் முயன்றுள்ளதை பார்க்க முடிகிறது.

முடிவிலியில் வளரத் துடிக்கும் வண்ணத்து பூச்சிக்கு என் வாழ்த்துக்கள் !


மஞ்சுளா

நூலாசிரியர் குறித்து:

இரா. கவியரசு (1986)

பிறந்தது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை கிராமத்தில்.

பெற்றோர் : M.K.ராஜேந்திரன் – கலாவதி

படித்தது மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கல்லூரியில் முதுகலை கணிணி அறிவியல்.

2013 முதல் சென்னை வாழ்க்கை .

தற்போது திருத்தணியில் வசித்து வருகிறார்.

மனைவி : கீதா ‘மகள்கள் : கண்மணி, மகிழ்மதி

[email protected]

9566835938

நூல் தகவல்:
நூல்: நாளை காணாமல் போகிறவர்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: இரா.கவியரசு
வெளியீடு:  தேநீர் பதிப்பகம்
வெளியான ஆண்டு ஆகஸ்ட் 2020
பக்கங்கள் : 96
விலை : ₹ 110
தொடர்புக்கு : +91 9080909600

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *