ஷஹிதா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஜே.எம்.கூட்ஸியின் மானக்கேடு (Disgrace) நாவலை முன்வைத்து விமர்சனக் கட்டுரை.
மருத்துவரை அணுகி ஆண்மை நீக்கம் செய்துகொண்டால் என்ன என்று சிந்திக்கும் அளவிற்கு கட்டடற்ற பாலியல் விழைவால் சிக்கலான வாழ்க்கையை வாழ்பவன், தன்னுடைய உயரம், தோற்றம், ஆலிவ் நிறச்சருமம், அலையாயும் கேசம், காந்தத்தன்மை இவைகளின் தீர்க்கத்தால் மோகிக்கும் பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு வரவழைத்து விடலாம் என்று நினைத்து அப்படியாகவே அதன் செயல்முறை வெற்றியில் பத்தாண்டுகள் வாழ்ந்து, இலையுதிர் காலத்தில் யுக்திகள் செல்லாக் காசாகும்போது அவன் நாடிச் செல்வது பாலியல் விடுதிகளை.
பாலியல் இச்சையும் அதற்கான ஈர்ப்பும் இணக்கமும் எல்லோரிடமும் ஒரேமாதிரியாக அமைவதுமில்லை எழுவதுமில்லை. சொராயா ஒரு நிறுவனத்தின் பாலியல் தொழிலாளி. மகளின் வயதுடையவள் என்றாலும் ஒரு வருடமாக பிரதி வியாழன் மதியவேளைகளில் அவளை நாடிச் செல்வது அவனது வழக்கம். அவளை மட்டுமே நாடிச்செல்வதற்கு இணக்கமும் ஈர்ப்பும் உபரியாக அவளிடமிருந்து அவனுக்கு கிடைப்பதால் இருக்கலாம். ஒருநாள் கடைத்தெருவில் பிள்ளைகளுடன் சேர்த்து அவளைபார்த்த பிறகு, அவளும் அவன் பார்ப்பதைப் பார்த்தப்பிறகு இருவருக்குமான தொடர்பு துண்டித்து போகிறது.
இவன் பித்தத்தை அவள் தெளிவித்ததாலா? அல்லது இவனது பித்தம் அவளால் தலைக்கேறியதாலா? அவளை மறக்க முடியாமல் துப்பறியும் நிறுவனத்தின் உதவியால் விலாசம் கண்டறிந்து அவள் முன்னால் போய் மீண்டும் நிற்கிறான்;
ஒரு பெண்நரியின் கூண்டுக்குள் அவளுடைய கன்றுகள் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கொன்றுண்ணி வேறு எதை எதிர்பார்க்க முடியும்? டேவிட் லூரிக்கு நேர்வதும் கிடைப்பதும் இந்தக் கேள்வியினால் முகிழும் பதில்.
நாவலின் முதல் அத்தியாயம் சிறுகதையாக முற்று பெற்றாலும், அடுத்தடுத்து அவனது உணர்வின் உணர்ச்சியின் அறிவின் ஒட்டுமொத்த திசையையும் யூகிக்க வைக்கிறது, வாசிக்கவும் நகர்த்துகிறது.
இனம், மதம், சாதி, மொழி, பதவி, செல்வம், அறிவு, அதிகாரம், நிலப்பரப்பு போன்ற பாகுபாட்டால் மட்டும் வேற்றுமையின் நிராகரிப்பு ஏற்படுவதில்லை. அது மனிதக்குலத்தில் ஆண் பெண்ணுக்கு இடையிலும் கூட நிலவுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் நைச்சியம் – இதில் பொதுப்படையானது அடிமைப்படுத்துதல், யார் யாரை அடிமைப்படுத்துகிறார்கள்? என்பதற்கான பதிலில் ஒருபக்கம் விடுதலைக்கான உணர்வு வெறியாகவும் இன்னொரு பக்கம் ஆளுமைக்கான ருசி வெறியாகவும் தத்தம் நியாயங்களோடு சமர் புரிகிறது.
தன்னால் பிறருக்கு நேரும் அவமானங்கள் அறிவினாலும், பிறரால் தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்கு நிகழக்கூடிய அவமானங்களை உணர்ச்சியின் கண்கொண்டு பார்க்கப்படும்போது முதல் பிம்பம் அந்நியமாகவே தெரியும்.
எப்படி தன்னுடைய மகள் லூசிக்கு நேர்ந்தது விருப்பத்திற்கு மாறான வல்லுறவோ, 20 வயது கல்லூரி மாணவியுடன் 53 வயது பேராசிரியர் டேவிட் லூரி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்வதும் வல்லுறவே… மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் நம்மிடம் சொல்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பிற்கு போதிய அவகாசம் அவளுக்கு வழங்கப்பட்டதா? அங்கு ஒரு அத்துமீறல் நிகழ்த்தப்படுகிறது. அவளது விருப்பதைக் குறித்தெல்லாம் துளியும் கவலையில்லாது ஆக்கிரமித்து, உணர்ச்சிகள் வடிந்ததும் அகத்தாய்வு செய்து, தன்னுள் கிளர்ந்தெழும் இன்பத்தின் வேட்கை போதாமையின் தவிப்பில்தான் என்று சமாதானமாகும் டேவிட் லூரி தன் அனுபவத்தின், அறிவின், மற்றவர்களின் சுதந்திரத்தின் மீதான ஞானம் சிறிதுமில்லாத முதியவனாகவே இருக்கிறார்.
புலன்கள் மரத்து போவதற்கு முன்பான இறுதி எழுச்சி மூளையை செயலிழக்க வைத்துவிடுமா என்ன?புலன்களுக்கான இனிய விருந்தின் இறுதி இருக்கையை விடாமல் பற்றிக்கொள்ளும் லூரியைப் போன்ற முதியவர்கள் அசூரத்தனமாக வளர்ந்து பலனளிக்கும் அவமானதை மட்டுமே விதைக்கிறார்கள்.
“செயலுறாத வேட்கைகளைப் பாதுகாத்து மறைத்து வைத்து வளர்ப்பதைக் காட்டிலும் குழந்தையாக இருக்கும் போதே அதைக் கொன்று விடுவது நல்லது” என்கிற ப்ளேக்கின் வரிகள் வெற்றுபடிமமாக டேவிட் லூரியின் மனதில் மேலோட்டமாகப் படிந்திருப்பதால்தான் என்னவோ பைரன் குறித்து அவரது ஆய்வும் புத்தகமும் எழுதப்படாத மனமயக்கமாக நிறைவேறாமல் போகிறது.
அவமானம் சமூகத்தின் பார்வையால் மட்டும் ஏற்படுவதில்லை, அகவுணர்ச்சியாலும் ஏற்படும். அதன் வல்லமை பாதிக்கப்பட்டவர் பாதிப்பை ஏற்படுத்தியவர் இருவரையும் காயப்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காயம் ஏற்படுகிறது. அதை அவர்கள் கவனிக்காமல் போகும்போது அது சீழ்பிடித்து ரணமாகி உயிரையும் பறித்து விடுகிறது. நெருக்கமாக இருப்பவர்களின் மீதும் அதீத தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தளவிற்கு என்பது அது கற்பனையினால் பாதிக்கப்பட்ட நபரின் காயத்தின் வடிவத்தைப் பார்த்து வலியை உருவகித்துக் கொள்ளல், உண்மையில் ஒருபோதும் ஒருவரின் வலியையும் அவமானத்தையும் தனதாக்கிக்கொள்ள இயலாது. கற்பனை ஒருபோதும் உண்மையாகாது. பாவனை பொய்மையை மட்டுமே விட்டுச்செல்கிறது. பேராசரியர் தன்மகளிடம் பிரயோகித்து தோற்றுப்போவதைப் போல.
இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா கூட்ஸி நாவலை மொழியாக்கம் செய்தது சவால் நிறைந்த பணியாக இருந்தது என்கிறார், மறுப்பதற்கில்லை. ஆனால் மொழிபெயர்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் சொற்கள் (தமிழைப் பொறுத்தவரை) வாசிப்பிற்கான இடறலைத் தந்துவிடும் வகையில் தேர்வுசெய்யக் கூடாது. மூலத்தின் நெருக்கத்திற்கு அது தடையை ஏற்படுத்துகிறது. தமிழ் மொழியில் சொற்களுக்கா பஞ்சம்? கண்ணியப்படுத்துகிறாளில்லை, கழுவுகிறாளில்லை, நிகழ்கிறதில்லை… என்று சுய வழக்கு வழியே எழுதினால் அது பொருந்தாத சாயலையே தருகின்றன. நாட்டுப்புற உழத்தி, இயக்காழி என்பதெல்லாம் பத்திகளோடு பொருந்திப் போகிறதா? நாவலில் புணர்ச்சி விதிகளுக்கு மாறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல இடங்களையும் காட்டலாம்… ஆனால் இவ்வளவையும் மீறி இந்நாவல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால் கூட்ஸியின் எழுத்து வல்லமையை தன்னால் முடிந்தவரை பிரதிபலித்திருக்கும் மொழிபெயர்பாளர் ஷஹிதாவின் முயற்சி. வாழ்த்துகள் ஷஹிதா.
2003இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இருமுறை புக்கர் பரிசு, மூன்றுமுறை CNA விருது பெற்றிருக்கும் நாவலாசிரியர், கட்டுரையாளர், பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஜான் மாக்ஸ்வெல் கூட்ஸி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் (1940) பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை டச்சு பின்புலமும், தாயார் டச்சு-ஜெர்மன்-போலீஷ் மொழி பேசுபவராகவும் இருந்தனர். அவ்வப்போது ஆங்கில இலக்கிய உலகில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கூட்ஸி 2002இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்து 2006இல் அதன் குடிமகனாகி தற்போதுவரை அடிலெய்டில் வசித்து வருகிறார்.
பிரிவினைவாதத்துக்குப் பிந்தைய ஆப்பிரிக்க சமூகம் விலங்குகள் நலன் என்ற இரண்டு புறஎல்லைகளை மீறி சகிக்க முடியாத மனித மனங்களின் உள்தரிசனத்தையும் இந்நாவல் தருகிறது. ‘உலகை மாற்றிய நூறு புத்தகங்கள்’ என்று பிபிசி பட்டியலிட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. எதிர் வெளியீடு இந்நாவலை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நூல் : மானக்கேடு ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி தமிழில் : ஷஹிதா வகை : மொழிபெயர்ப்பு - நாவல் வெளியீடு : எதிர் வெளியீடு வெளியான ஆண்டு : 2022 விலை : ₹ 399 நூலைப் பெற : ethirveliyeedu.com/products/மானக்கேடு
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.
வணக்கம் மஞ்சுநாத்,
உலக இலக்கியங்களைத் தேடித்தேடி படிப்பதில் சோம்பலும், பொறுமையும் அற்ற என்னைப் போன்றவர்களுக்கு தங்களது விமர்சனம், அறிமுகம் போன்றவை உலகைக்காட்டும் ஏழையில் சாளரத்தைப் போன்றவை. தங்களது விமர்சனத்தை வெளியிட்ட, ‘எதிர் வெளியீடு’ நிறுவனத்திற்கும் எனதன்பு.
தொடரட்டும் இப்பணி,
சரஸ்வதி சுவாமிநாதன்