(கவிஞர் சாய்வைஷ்ணவியின் வலசை போகும் விமானங்கள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து.)

துவக்கம்

கவிதை என்றால் சொல் புதிது, சுவை புதிது, சோதிமிகு நவகவிதை என்ற பாரதியின் பாடலே ஒரு வரையறையாக இன்றும் எடுத்துரைக்கிறது. நவீனம், பின்நவீனம், பின்காலனியம் என கவிதையின் போக்குகள் காலத்திற்குக் காலம் மேம்பட்டு தன் சீரிளமையை தனித்துக் காட்டுகிறது. சமகாலத்தில் கவிதை வஸ்து விலையாவதில்லை என்ற கூப்பாடுகளுக்கு மத்தியில் சிறப்பான தொகுப்புகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. கூச்சல் குழப்பங்கள் குறுங்குழுவாத போட்டிகளுக்கு நடுவே தன்னியல்பாக நல்ல கவிதைகள் வெளிவரவே செய்கின்றன. அந்தவகையில் சாய்வைஷ்ணவியின் வலசை போகும் விமானங்கள் தொகுப்பும் குறிப்பிடக்கூடிய ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 

 

செய்திக் குப்பைகள் அல்ல கவிதை

கவிதைச் செயல் என்பது ஒருபோதும் அறிக்கையாகவோ அல்லது செய்தி விபரணையாகவோ இருக்கவே முடியாது. (மிஹாத் – மறுத்தோடியின் கதையாடல்கள் பக்: 18). உண்மைதானே? செய்தித்தாள்களின் வர்ணனையை எல்லாம் நாம் கவிதை எனக் கொள்ள முடியாது அல்லவா. ஆனால் செய்திகளை நாம் உற்றுநோக்குமிடத்து நல்ல கவிதை ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு உதாரணமாக தொகுப்பின் முதல் கவிதையை நாம் பார்க்கலாம். மழை அதிகாரம் எனும் அக்கவிதையில் First impression is the Best impression என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இல்லையா அப்படியாக நம்மை தொகுப்புக்குள் அழைத்துச் செல்லும் அற்புதமான கவிதை. சாதியத்தின் ஆணவக் கொலை குறித்த செய்தியை அழகான கவிதையாக செதுக்கியிருக்கிறார். 

… 

சாலையற்ற ஊருக்குள் தெருவுக்குத் தெரு 

அதிகாரமாக வீற்றிருக்கும் 

சாதிப்பெயர்ப் பலகைகளை நுகர்ந்து 

மூத்திரம் பெய்து நகரும் தெருநாய்கள்

தேங்கிய நீர்குடித்துப் பசியாறிக்கொள்கின்றன 

மயில்கள் அகவித் திரிந்த கானகத்தில்

சற்று முன்னர்தான் கீதாவும் தாமஸும் 

மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்… (பக்:11)

இன்னும் அந்த ஓட்டம் முடிவடையாமல் இருக்கிறது. சாலையோரத்தில், சாக்கடை கால்வாயில், குப்பைமேட்டில், இரயில் தண்டவாளங்களில் என உயிரற்ற சிதைந்த உடலங்கள் கண்டெடுக்கப்படும் போதெல்லாம் இக்கவிதையின் தொடர் ஓட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. 

 

அகம், புறம், சமூகம்: 

வலசை போகும் விமானங்கள் தொகுப்பை அகம், புறம், அகப்புறம் (சமூகம்) என்ற வகைப்பாடுகளுக்குள் நாம் பொருத்திப் பார்க்கலாம். அகத்தின் பாடுகள் காதலாய்க் கசிந்துருகும் வேளையில் அன்புக்கு ஏங்கும் மனம், காமத்தின் தவிப்பும், பால் உறுப்புகளின் வளர்சிதை மிரட்சி என செல்கிறது. நிதானமற்ற காதல்” நேற்றிலிருந்து” (இது நேசப்புன்னகை அல்லது உடல் தொடாத மென் அரவணைப்பு), பஞ்சுத் தலையணை போன்றவை குறிப்பிடக்கூடிய உதாரணங்கள். அதிலும் விடாய் நாளில் இருப்பவள் உறங்கும் தன் துணைக்கு தரும் பஞ்சுத் தலையணை எத்தகைய அவஸ்தைக்கு உள்ளாகிறது என்பதும் அதே பஞ்சுத் தலையணையை குழந்தை விழாதிருக்க அணைப்பாக வைக்கையில் தனக்கான பாதுகாப்பை தாய்மையை அணைத்துக் கொள்வதைப் போல் பற்றியிருப்பதை விளக்குமிடம் கவிதைக்கான நல்ல திறப்பைத் தருகிறது.

 

“உன் சுகதுக்கங்களில்

சரிபாதியாய்ச் சங்கமித்திருக்கிறேன்.

நான் இடறிவிழும் போதெல்லாம்

எள்ளி நகைக்கும் நீ எழுந்திருக்கையில்

ஒரே ஒருமுறை கடைக் கண்களாவேனும்

கௌரவித்திருக்கிறாயா என்னை….

இரா.தமிழரசி.

தன்னைப் புறக்கணிக்கும் துணையிடம் கேள்வி எழுப்பும் இக்கவிதை போலவே இப்பிரதியில் குறட்டை விடும் குறியொன்றுகவிதையில் தனது மனதை, தேகத்தீயின் வேட்கையை புரிந்துகொள்ளாமல் குறட்டை விட்டு உறங்கும் தன் துணையை பரிகாசனையால் புறமொதுக்கும் கவிதை எனலாம். தன் துணையின் இயலாமையை நொந்து கொள்ளும் கவிதை. 

 

தாய்மையின் பல்வேறு படிமங்கள்: 

இப்பிரதியில் நான் மிரட்சியாக வாசித்த கவிதை “சின்னஞ்சிறு பூதம்” பாலுக்காக பசியில் அழும் குழந்தைக்கு முலைப்பாலூட்டுதல் என்பது ஒரு தாயின் கடமையாகிறது. அத்தகைய எதார்த்த உலகில் (இவரது என்பது தவறாகிவிடும் என்பதால் இப்பிரதியின் பார்வை என்றே கொள்ளவும்) இப்பிரதியின் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கிறது. பாலுக்காக வாய்பிளந்து வரும் குழந்தையை சின்னஞ்சிறு பூதம் என்கிறார். ஒருவேளை இன்றைய புறச்சூழலின் அழுத்தம் அல்லது பணிச்சுமையால் உறக்கமற்றிருப்பவளின் மன வெடிப்பு போன்றவை இப்படி சொல்ல எத்தனிக்கிறதா என்றால் அதுவும் சாத்தியப்படக் கூடியதாகவே உள்ளது. அதேவேளை அதீதமான அன்பின் தாய்மையின் செல்லக் கொஞ்சலில் இப்படியான வார்த்தைகள் கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன. சின்னஞ்சிறு பூதம் எனச் சொன்ன தாய் “பந்தத்தீ” கவிதையில் 

“கடுங்காய்ச்சல் கண்டிருக்கிறது குழந்தை

அழுதுகொண்டே இருக்கும் அதன்

வறண்ட நாவில் திணித்த காம்புகள்

வெந்து திரும்புகின்றன.”

என தாய்மையின் உச்சத்தில் பரிதவிக்கிறாள். 

அனஸ்தீசியா கருமுட்டைகள் என்றொரு கவிதை கருக்கலைப்புக் கூடத்தினை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைய நவீன உலகில் குழந்தைப் பேறு என்பதே பல இலட்சங்கள் புரளும் ஒரு வியாபார கேந்திரமாகி இருக்கிறது. குழந்தையின்மை ஒருபுறம் பலர் வாழ்வைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கருக்கலைப்பு என்பதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தக் கூடத்துக்குள் நீங்கள் ஒருமுறை சென்று வந்தால் நிச்சயம் இதுவரையில் நீங்கள் பெண்ணைப் பார்த்த பார்வையிலிருந்து மாறுபடுவீர்கள். இங்கே கருக்கலைப்பு என்பது புறவாழ்வின் நெருக்கடியால் தள்ளிப்போடுதலால் நிகழலாம், உடல் உபாதைகளின் விளைவால் நிகழலாம், அல்லது குடும்ப வன்முறையால் நிகழலாம், அல்லது பாலியல் வன்முறையால் நிகழலாம். இப்படி ஏதோவொரு காரணத்தால் கருக்கலைப்பு நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் 

ஆளுக்கொரு கருப்பையை வைத்தவனுக்கு 

அதில் குழந்தையை வைப்பதில்தான் சிக்கல்

என்ற வரிகள் இன்றைய Fertility Center என்ற கருத்தரித்தல் மையங்களின் பெருக்கத்தை கண்முன்னால் நிறுத்துகிறது. 

திறந்தே கிடக்கும் யோனிகள்” இதற்கு மாற்றுப் பிரதியாக நம்மோடு உரையாடுகிறது. மது தலைக்கேறியதும் விறைத்துக் கொள்ளும் ஆண்மைக்கு அவள் தேகம் ஒரு போதை என ஏழைப் பங்காளியின் பாடுகளைச் சொல்லிவந்து 

வருடம் தவறாது வாயில் திறக்கும் வசந்திக்கு 

இது ஏழாவது பிரசவம்” 

எனும் அதிர்ச்சியை நம்முள் உருவாக்கும் கவிதை அத்தனையும் குடிமகனின் சாயலில் இருப்பதாக மூத்த குடிமக்கள் நையாண்டி பேசுவதாக முடிக்கிறார். மதுவினால் ஏற்படும் சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டும் நல்ல சமூகக் கவிதையாகவும் பரிணமிக்கிறது. 

ஒஞ்சி உப்பி 

தானாகப் பீய்ச்சும் 

வெண்பாலை 

நீள்வயிறு ருசிக்க 

நிறைத்துக்கொள்கிறது 

அலுவலகக் கழிப்பறையின் 

கட்டாந்தரைக் குழந்தை.” (பக்:44)

என்ற கவிதை வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தாய்மாரின் தனங்கள் பால்கட்டி அவஸ்தைப்படும் நிலையை விளக்குகிறது. இன்றைக்கு இந்த நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பணியிடத்திலேயே குழந்தைகளுக்கான இடங்களும் பாலூட்டும் அறைகளும் என ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக கொண்டுவந்தவை என நாம் கருதினாலும் இன்று அரசுகள் முன்னெடுத்து வருவது சிறந்த மாற்றம்தான். 

 

விளம்பர மாயைகளை நொறுக்குதல்: 

பருவம் வந்த முளைப்பயிர்எனும் கவிதை உறவுப் பெண்களுக்கு இடையிலான உரையாடலாக நமக்கு பல விசயங்களை எடுத்தியம்புகின்றன. வயது கூடும்போது அளவு கூடும் என்ற நிஷா அக்கா, குழந்தைக்குப் பிறகு தொங்கிப் போகும் என்ற அத்தை, புற்றுநோய் கண்ட ஒன்றை அறுத்தெடுத்த பெரியம்மா என உரையாடல்கள்வழி அதைப்பற்றி ஆண்களின் எண்ணவோட்டத்தை அல்லது  விதவிதமான கச்சை கொண்டு பெண்ணின் மார்பு மீது விளம்பர உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் மோகித்தலை ரவிக்கை அணியாத பாட்டி சல்லி சல்லியாக உடைத்து விடுகிறார். 

ஏன் 

எதற்கு 

எப்படி 

பருவக் கேள்விகளை ஆராயவோ? 

மூடி மறைத்து பயந்தொழியவோ

என்ற கேள்விகளோடு தொக்கி நிற்கும் இக்கவிதையில்  தேவையில்லை இனியும் மூடி மறைத்து பயந்தொழியத் தேவையில்லை என்பதே என் வாசிப்பின் பதிலாக முன்வைக்கிறேன். 

உணவரசியல் நுண்ணரசியல்:

பான்டஸி கவிதைகளையும் இப்பிரதியாளர் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். சோதனை முயற்சிகள்தான் நல்ல கவிதைகளை அடையாளம்காட்டும். வழிதவறிய பறவைதான் புதிய காட்டை கண்டடையும் என்பதைப் போலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்புகளில் புதிய புதிய உத்திகளை செய்து பார்க்க வேண்டும்.  மின்மினிப் பேரன்கள்ஒரு மாற்றுச் சிந்தனையின் சொல்முறையைச் செய்கிறது. இதுவரை காலம் நாம் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைகளையே கேட்டு வந்தோம் இல்லையா. சமகாலத்தில் பீட்ஸாக்களே அந்த இடத்தை நிரப்புகின்றன. இது கால மாற்றம், உணவுக் கலாச்சாரம், தாராளமயமாக்கலின் நுண்ணரசியல் என பேசுகின்ற அசல் கவிதை. 

 

நாள் கிழமையற்றவர்கள்: 

“சாரி லீவு இல்லை”  என்ற கவிதையை வாசிக்கையில் அறிவொளிக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய கவிஞர் நீலா அவர்களின்

நாளும் கிழமையும் 

எங்களுக்கில்லை 

ஞாயிற்றுக்கிழமையும் 

பெண்களுக்கில்லை 

என்ற வரிகள் சட்டென நெஞ்சை முட்டி மோதி வெளிவருகின்றன.

 

உரைத்தல் திறம்: 

ஈரமற்ற புணர்வுகளில் விண்மீன்

தேடிக்கொண்டிருக்கும் அவளுக்கு 

என்புப் போர்த்திய மனம்.(பக்:25) 

கவிதை இப்பிரதியின் கிளாசிக்கான கவிதை என்பேன். செய்நேர்த்தியிலும் மொழிப் பயன்பாடும் அழகியல், அவலம், இல்லாமை, இயலாமை என்ற பண்புக்கூறுகளை ஒரு இயங்கியலின் நிலையாமையை என வார்த்தைகளை கனகச்சிதமாக நெய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

இதேபோல் பிரதியின் தலைப்பான விமானப் பறவை என்ற தலைப்பிட்ட கவிதையில் 

கதிர்குருவியின் இறகொன்று 

காற்றில் மிதந்தபடி இவன் காதில் 

சொல்லிப் போகிறது 

வலசை போகும் விமானங்கள்

ஒருபோதும் இறகு உதிர்ப்பதில்லை. 

காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் சென்ற பிரமிளின் சிறகிலிருந்து பிரிந்த இறகை நான் தரிசித்துக் கொண்டேன் எனில் மிகையல்ல. 

சிறுகதைகளுக்கான அம்சங்களை இப்பிரதியில் உள்ள குட்டிக் கவிதைகள் கொண்டிருக்கின்றன. இவற்றின் நூல் பிடித்து போனால் இப்பிரதியாளரால் நல்ல சிறுகதைகளையும் தர முடியும். 

முடிவாக:

பெண் உடலின் மதிப்பு தாழ்வானதாக கருதப்பட்டதற்கு எதிராக மிகைமதிப்புக் கொண்டதாக பெண் உடலைப் படைக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஹெலன் சிகஸூ. பெண் உடலரசியல் என்னும் பெண்ணியச் சிந்தனை இங்கிருந்துதான் வெளிப்பட்டது. இதுவே பெண் உடலைப் எழுதுதலாக மாறியது என லிங்கமைய வாதத்திற்கு எதிராக எழுத்தாளர் முபீன் சாதிகா அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அத்தகைய ஒரு சிந்தனையின் சமகாலப் போக்கின் புத்தெழுச்சியாக வலசை போகும் விமானங்கள் தொகுப்புவழி சாய்வைஷ்ணவி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். குறிஞ்சி நீங்கி மருதம் நின்று நினைவின் பாலயைப் பாடும் இப்பிரதியாளர் இன்னும் பலப்பல படைப்புகளை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


நூல் தகவல்:

நூல் :   வலசை போகும் விமானங்கள்

ஆசிரியர் :  சாய்வைஷ்ணவி

வகை :   கவிதைகள்

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :   ஜூன் 2022

பக்கங்கள் :  96

விலை : ₹  160

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *