சமீபத்தில் வெளிவந்த தே கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற மலையாளப் படத்தின் பேசுபொருளான குடும்பத்தில் பெண்களின் உழைப்புச் சுரண்டலையும் அவள் மீதான அத்துமீறல்களையும் காட்சிப்படுத்தி ஆண் களை வெட்கப்பட வைத்தது போல் கவிவாணனின் கதைகளில் குடும்பங்களுக்குள் சிக்கி தன் சுயம் இழந்து சாகும் வரை ஆண்களுக்கானவளாக வாழ்ந்து செத்து மடிகிற பெண்களின் அகத்தையும் புறத்தையும் எந்த திரையிட்டும் மறைக்க முயற்சி செய்யாமல் பெண் வாழ்வை அச்சு அசலாக தன் கதைகளுக்குள் சொல்லியிருக்கும் ஆசிரியர் கவிவாணனை மனதார பாராட்டலாம்.
பெய்கிற மழையில் எந்த துளியில் நனைந்து கொள்வதென ஓடி ஓடிச் சென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தன்னை நனைத்துக் கொள்ளும் சமூக அக்கறையுள்ள குழந்தையாய் மனிதவாழ்வின் இன்னல்களையெல்லாம் எழுதிவிட்டு அதை களைந்தெறியவும் முற்படுகிறார் கதையாசிரியர்.
கட்டைவிரலைக் கேட்காத துரோணர் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறார் இந்நூலை.
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் ச.தமிழ்ச் செல்வனின் வாழ்த்துரையில் ஆரம்பிக்கிறது கதைக்காட்சிகள். ஓவியர் ரசாவின் தூரிகைகளில் கதை மாந்தர்களை கண்முன் நிறுத்துகிறது.
சிறுகதைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்வின் பாடுகளைப் பேசுபொருளாகக் கொண்டு ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
“தோசை” என்கிற கதையில், இப்படித்தான் ஆண்களுக்குத் தகுந்தாற்போல் பெண்கள் மாறிக் கொள்கிறார்கள் என்ற வரிகள் பெண் வாழ்வின் வலிகளை ஆசிரியரால் உணரமுடிகிறது என்பதற்கு உதாரணமாக ஆரம்பிக்கிறது. தன் தன் தாயின் துயரங்களைக் கண்டு யோசிக்கும் ஒரு மகனின் மனநிலையிலிருந்து கவிவாணனின் கதை வானம் மெல்லத் துவங்குகிறது.
“ஜிமிக்கி கம்மல்” என்கிற கதைக்குள் நடுத்தர குடும்பத்தின் பொருளாதாரம் சூழலை மிக இயல்பாகச் சொல்ல முடிகிற இடம் பாராட்டுக்குரியது. அதுவும் இஸ்லாமியப் பெண்களுக்கு இருக்கும் குடும்ப நெருக்கடிகளும் உடல் வாதைகளும் அடக்குமுறைகளையும் சொல்லவந்திருக்கும் ஆசிரியரின் துணிச்சலைப் பாராட்டலாம். ஏனெனில், ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களின் உட்புகுந்து அவற்றைப் பிறர் விமர்சிப்பதற்கும் அதற்குள்ளாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதர் விமர்சிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உளப்பூர்வமாக பெண்வாழ்வை, அவளின் ஏக்கங்களை, கனவுகளை, கவனித்தாலன்றி இத்தனை நுணுக்கமாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
”ஆனாலும் உயரம்தான்” என்கிற கதையில் சலீமா என்கிற அந்த பெண் கதாபாத்திரம் ஆணை விட எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என நிரூபிக்கத் துடிக்கும் பெண்ணாக, அதிலும் தன்னை விட தன் கணவர் உயரமாக இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் ஆண் மேலாதிக்க மனநிலையில் இருப்பான் என்கிற யதார்த்த உணர்வோடு தடையை உடைக்க நினைக்கும் இடத்தில் பெண்ணின் அகமும் புறமுமாய் கொந்தளிக்கும் ஒரு இடத்தை மிக அற்புதமாக காட்சிப்படுகிறது.
முத்துமாரி (ஏ) நேகா என்கிற கதையில் உதாசீனப்படுத்தும் கணவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதும் கூண்டுடைப்பதுமாய் தனக்கான வாழ்வைத் தீர்மானிக்கிற பெண்களின் சுயம் விடுதலை அடைகிறது. அதோடு பெண்கல்வி சுற்றால் பல ஆண்களுக்குப் பிடிக்காத மனநிலையில் அவள் கற்ற கல்வியைக் கூட மறைத்து கல்யாணம் செய்து வைக்க நமது கலாச்சாரச் சூழலை யோசிக்க வைக்கும் இடமாக இருக்கிறது கதையின் போக்கு. மறுமணம் புரிய தீர்மானிக்கும் இடத்தில் புரிந்துணர்வு கொண்ட பிறகு மஞ்சள் கயிறு எதற்கு ? எனக் கேட்கும் இடம் அழகு.
போகிற போக்கில் நாட்டின் அரசியலையும் நையாண்டி செய்யும் சாமர்த்தியம் கைகூடி வந்திருக்கிறது ஆசிரியருக்கு.
கல்வி என்பது வாழ்க்கைக்கானதாக இல்லை அது வேலைக்கான எந்திரங்களாக மனிதர்களைத் தயார் செய்கிறது” — என்ற வரிகள் யோசிக்க வைக்கிறது. ஒரு தாத்தாவின் மனநிலை ஒரு பேத்தியைத் தேடுவதில்லை அவளின் அன்பை அடைதல் என்பது உணர்த்துகிற அழகான கதையாக இருக்கிறது.
“வந்து போகாத அப்பா” என்கிற கதையில் ” குடும்ப பொறுப்பற்ற ஆண்கள் உண்டு ஆனால் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் தாய் உண்டா ” என்கிற வரிகளை ஞாபகப்படுத்துகிறது;
குடும்பத்தை நிராகரித்துவிட்டு நிம்மதி தேடி வெளியேறும் ஆண்களின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் பலரைப் பார்த்துக் கடந்து போயிருக்கிறோம். ஆனால் தன் குழந்தைகளுக்காக வாழ்நாளைத் தொலைத்து வளர்க்கும் தாயைப் பார்த்து உறைந்து நின்று இருக்கிறோம்.அப்படித்தான் பெண் சுமைகளைக் கூட கடமையாகவே கடந்துபோகிறாள்.
“அழகுத்தாய் டீக்கடை” யிலும் கூட ஒருத்தி உதாசீனப்படுத்தும் ஆணிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுதந்திர வாழ்வைக் கையிலெடுக்கிறாள்.
அதே பெண் ” புதிர் வினை என்கிற கதையில் எதற்காக தன்னைவிட்டுப் பிரிந்துபோனான் கணவன் எனத் தெரியாமலே தன் கடமைகளை முடித்து கேள்விக்கான விடை தெரியாமலே செத்துப்போகிறாள்.
கதைச் சூழலை இன்னும்கூட புரியும்படியாக சொல்வதும், உரையாடல்களை இயல்பான மொழியாகவும் செய்திருந்தால் வாசக மனம் இன்னும் சுலபமாக உள்நுழைந்திட முடியும் என்பதை அடுத்தடுத்த படைப்புகளில் சரிசெய்துகொள்ளலாம் ஆசிரியர்.
இன்னும் இன்னும் எழுதித் தீர்க்க முடியா பெண்வாழ்வை தன் பேனாவில் முடிந்தவரைப் பதிவு செய்யுங்கள். அவளின் துளி நீரையாவது அது துடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதுங்கள் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
நூல் : புதிர்வினை ஆசிரியர் : கவிவாணன் வகை : சிறுகதைகள் வெளியீடு : தமிழ் அலை வெளியான ஆண்டு : டிசம்பர் 2020 பக்கங்கள் : 125 விலை : ₹ 120
மதுரையை சார்ந்த பா.மகாலட்சுமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்& கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழுவிலுள்ளார். இதுவரை இவரின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
1. குளத்தில் மிதக்கும் சிறகு,
2. கூழாங்கற்கள் உருண்ட காலம்