நிறங்களை வைத்து படமாக எடுக்க முடியுமா என்றால், இந்த இயக்குனர் எடுக்க முடியும் என்கிறார். ஒவ்வொரு நிறமும் ஒரு உளவியல் தன்மையை விளக்கும் என்கிற ரீதியில் எளிதாக நாம் கடந்து விடுவோம். ஆனால் ஒரு நிறத்தை வைத்து, விசுவலாக அதை நம் விழிகளுக்குள் முழுவதுமாக நிறைத்து விட்டார் இயக்குனர்.

சிவப்பு என்றாலே ஆற்றல் மிக்க எண்ணங்களுடன், தேடலுடன் இருக்கக் கூடிய நபர்கள் தான் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பர்கள் என்பார்கள். உண்மையில் த்ரீ கலர்ஸ் ரெட் என்ற படத்தை இயக்கிய இயக்குனரின் கீஸ்லோவெய்ஸ்கியின் அகஉலக ஆற்றலை படம் முழுவதும் நாம் பார்க்க முடியும்.

உறவுகளைப் பற்றி ஒரு படம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எதுவென்றால், உறவின் மீது எந்த புனிதத்தன்மையும் கலக்காமல், அதனதன் தன்மையோடு திரையில் காண்பிக்கும் போது ஏற்படும் திருப்தி மட்டும் தான். அதில் எந்தவித பாரபாட்சம் பார்க்காமல் மனித குணங்களின் சாராம்சத்தை அப்படியே நம்மிடம் திரையிட்டு காண்பித்து இருக்கிறார் கீஸ்லோவெய்ஸ்கி.

வெரோனிக் இந்தப்பெயரின் அர்த்தமே அவள் அவளாக இருப்பதே, அதற்கேற்றாற்போல் அவள் மனதுக்குள் என்னவாக இருந்தாலோ அதே மாதிரி தான் அவள் இருந்தாள். நிஜத்தில் வெகுளியாகவும், மற்றவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவளாகவும், மனதளவில் சுதந்திரமாகவும் இருவேறு தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவள். சமூகத்தில் வெகுளியாக அவளுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே நம்புபவள். இதனால் சரி, தப்பு என்று ஆராய்ந்து பாராமல், அந்த நேரத்தில் அவளுக்கு என்ன செய்யத் தெரிகிறதோ அதைச் சுதந்திரமாக செய்பவள். அந்த வெகுளித்தனமே அவளை அவளாக இருப்பதை எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் அவளுக்கு நேர்மையாக வாழ முடிந்தது.

மாடலிங் செய்யும் பெண், அவள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் அருகில் அகஸ்டா என்ற ஆணுடன் மனம் விட்டு பேசக்கூடியவள். ஆனால் இருவரும் பார்க்க மாட்டார்கள். போனில் மட்டும் தினமும் நடக்கும் அனைத்தையும் பேசுவதால், அதை அவள் காதல் என்றே நம்பிக் கொண்டிருந்தாள். அகஸ்டா என்ன சொன்னாலும் அதை மட்டுமே கேட்பவள். இவள் சொல்வதை அகஸ்டா கண்டுக்க கூடமாட்டான்.

ஒரு நாள் இரவில் வெரோனிகா கார் ஓட்டிட்டு வரும் போது, ஒரு நாய் காரில் மோதி விடும். உடனே அந்த நாயைத் தூக்கி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், சிகிச்சை அளித்து விட்டு, நாயை பார்க்கும் பொழுது அந்த நாய்க்கு சொந்தக்காரர் வீட்டு அட்ரஸ், நாயின் கழுத்தில் உள்ள செயினில் இருக்கும். அந்த வீட்டுக்கு நாயை அழைத்துச் செல்வாள்.

அதில் அவருக்கும், வெரோனிக்காவுக்கும் சிறு மோதல் உருவாகும். அந்த வீட்டின் சொந்தக்காரர் ரிட்டயர்ட்டான ஜட்ஜ். மறுபடியும் அந்த ஜட்ஜை பார்க்க வெரோனிகா போகும் போது, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போனில் பேசுவதை இவர் டேப்ரிக்கார்டரில் சத்தமாக பாடல் போல் கேட்டுக் கொண்டு இருப்பார். அதைப் பார்க்கும் வெரோனிக்காவுக்கு அவரின் இந்த செயல் அருவருப்பைத் தருகிறது என்பாள். வயதான ஜட்ஜ் என்ன தான் அவரின் செயலுக்கு கதை சொன்னாலும், இளம் வயது பெண் ஒருத்தி வந்து உங்களை பார்க்க பிடிக்கவில்லை என்று சொல்வதை எந்த ஆணும் விரும்ப மாட்டான்.

அடுத்தநாளே ஒரு ஜட்ஜாக அவர் போய் கோர்ட்டில், அவர் செய்த செயலைப்பற்றி ஒப்புக் கொள்வார். உண்மையில் இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணின் வார்த்தைக்காக இப்படி செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டால், அங்கு தான் படத்தின் அடிநாதத்தை கீஸ்லோவெய்ஸ்கி வைக்கிறார்.

பொதுவாக காதலர்கள் கிட்ட ஏன் இவனை/இவளை காதலித்தாய் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் எல்லாமே, அவர்களின் அனுபவத்தில் உள்ள நபர்களின் பிம்பமே இவர்களை காதலிக்க காரணமாக இருந்தது என்பார்கள்.

வெரோனிக்காவுக்கு தன்னுடைய வார்த்தைக்காக இப்படி செய்து இருக்காரே என்ற பிரமிப்பும், ஜட்ஜ்க்கு ஒரு பெண்ணின் முன் இப்படி தலைகுனிந்து நின்றோமே என்ற குற்ற உணர்வும் சேர்ந்து இருவரையும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வர காரணமாக அமைந்து வந்து விடும். என்ன தான் தினம் தினம்  அகஸ்டாவுடன் போனில் பேசினாலும், நேரில் சந்திக்கும் போது உள்ள பார்வையின் பரிவு, இருவருக்குள் நடக்கும் சண்டையின் தன்மை, அதை சரி செய்ய ஒருவருக்கு ஒருவர் செய்யும் முயற்சி எல்லாமே அந்த இருஎதிர்பாலினத்தவரையும் சேர்த்தே தீரும். அப்படித்தான் இந்த வயது மீறலின் அத்தனையும் கடந்து ஒருவரை ஒருவர் அப்படியே ஈர்த்துக் கொள்வார்கள்.

சிவப்பு நிறத்தின் பாலியல் வேட்கையை இந்தப் படத்தில் வைத்த இடம் தான் வெரோனிக்காவின் தன்மையை விவரிக்கிறது. சிவப்பு நிறத்தின் தன்மையைக் கொண்ட பெண் என்றுமே தன்னுடைய பாலியல் துணையை ஒரு வேட்டையாகக் கருதுவாள். ஏனென்றால் அவள் அவளை விட வலிமையான ஆணை மட்டுமே பாலியல் துணைக்கு தேர்ந்து எடுப்பாள். அவளுக்கு கிடைக்கும் மனிதனை ஒரு முறையான இரையாக மட்டுமே கருதுவாள். இதில் அவளின் சுதந்திரம் மற்றும் வெளிப்படையானதன்மை என்றுமே இருக்கும் .

அப்படிதான் ஜட்ஜுடன் வெரோனிகா ஒரு வேட்டையை நிகழ்த்துவாள். நிஜவாழ்வில் தன்னை ஒரு வெகுளியாகவும், மனதளவில் தனக்கான தேடலின் சுதந்திரத்தை நடத்துபவளாகவும் இருக்கும் வெரோனிக்காவை பார்த்து குழப்பமடையும் அகஸ்ட்டாவுக்கு ஒன்றுமே புரியாது.

ஜட்ஜ் அவரின் இளம் பிராயத்தில் அவர் நேசித்த ஒரு பெண், வேறு ஒரு ஆணுடன் இருந்ததை நேரில் பார்த்து விடுவார். அதன் பின் அந்தப் பெண் ஒரு விபத்தில் மரணமடைகிறார். ஏன் தனக்கு மட்டும் இப்படி நடந்தது என்ற கேள்வியை மனதில் பல வருசமாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் எந்தக் காரணம் காரியமும் இன்றி ஏன் இப்படி சேர்ந்தோம் என்று ஜட்ஜ் கேட்கும் கேள்விக்கு பதில் தான் வெரோனிக்காவின் உறவு.

உன் எண்ணங்களுக்கான பதில் வந்தே தீரும். எந்தக் கேள்வியை கேட்டீயோ, அந்தக் கேள்விக்கான பதிலை நீ அனுபவித்து புரிந்து கொண்டு தான், இந்த வாழ்க்கை அடுத்த கேள்விக்கு உன்னைத் தயார்படுத்தும் என்பதை நமக்கும் புரிய வைத்து விடுகிறார்.

ஜட்ஜை விரும்பும் பொழுது, அகஸ்டாவிடம் கொஞ்சம் விலகி இருப்பாள் வெரோனிகா. அதற்கான காரணத்தை அகஸ்ட்டா எப்படி தேடி வெரோனிக்காவை மீட்டு எடுக்கிறானா அல்லது ஜட்ஜ்க்கு இளம் பிராயத்தில் அவர் நேசித்த பெண் நடந்த மாதிரி, வெரோனிகா அகஸ்டாவுக்கு செய்த பின் என்ன நடக்கிறது என்ற முக்கோண முடிச்சைத் தான் த்ரீ கலர்ஸ் ரெட் படத்தில் அவிழ்த்து இருக்கிறார் கீஸ்லோவெய்ஸ்கி.


எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *