வ்வொரு இனமும் அதனதன் இணையோடு காதல் கொள்வதே நடைமுறை. இதற்கு விதிவிலக்காக சில திரைபடங்களிலும் கதைகளிலும் தன் இனத்தில் அல்லாது மனித இன கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ விலங்குகளின் மேல் அளவற்ற காதல் கொண்டு டூயட் பாடுவதை பார்த்து ரசித்திருக்கிறோம். அது நடைமுறையில் சாத்தியமற்றது என்று அனைவரும் அறிந்திருந்தாலும் எத்தனை காலங்களுக்குத்தான் ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து பிள்ளை பெற்று வயதாகி சாவதைப் பார்ப்பது? எது பேசினாலும் பதிலுக்கு பேசாத வாதிடாத இணை கிடைப்பதில் யாருக்குத்தான் பிடிப்பில்லை?

மொழிபெயர்ப்பு கதைகளை அதிகளவில் வாசித்தது இல்லை. ‘தேன்’ சிறுகதை நூல் மலையாள மொழியில் பால் சக்காரியா அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது . தமிழில் நம் பவா செல்லதுரை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொத்தமாக 25  பக்கங்கள் மட்டுமே கொண்ட  சிறுகதை நூல் தான் தேன். ஒரு கற்புக்கரசன் கரடி ஒரு மனிதப் பெண்ணை காதலித்தால் என்ன நடக்கும்? காதலையும் கடந்து இரண்டும் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்? நம்மிலும் கரடி, நரி, சிங்கம், புலி, மாடுகளுடன்தான் பலரும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

ஆரம்பித்தவுடன் முடிந்தது போல தோன்றும் அளவிற்கு கதை சுவாரசியமாகவும் பகடியாகவும் அமைந்துள்ளது. கதையின் முடிவில் வாய் விட்டு சிரிப்பது உறுதி. கதையில் வரும் சில வரிகள் மட்டும் இங்கே..

  • காடுகளில் பால் ஊட்டுவதற்கு மட்டுமே முலைகள் பயன்படுகின்றன.காட்டின் பெண் விலங்குகளுக்கு தங்கள் முலைகள் குறித்த பெருமிதங்கள் எதுவுமில்லை. தவிர முலைக்கச்சைகளை தேடி அலைவதற்கான அவசியமுமில்லை.
  • உணவு மேசையில் அமர்ந்து கடவுள் டி.வி யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த காட்சியை அக்கரடி கண்டது.

“கடவுள் ஆசிர்வதித்து கூறிய ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியாயல் கரடி கடவுளையும், டி.வி யில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தையும் மாறிமாறிப் பார்க்க ஆரம்பித்தது. பின் அதிருப்தியோடு படகில் ஏறியது.”

  • இறுதியாக கரடியுடன் பிள்ளை பெற்று வீட்டுக்கு வரும் மகளிடம் அம்மா மருமகனை பற்றி விசாரிக்கும் போது அவள் அம்மா மகத்துவம். நான் இத்தனை தூரம் எதிர்பாக்கல. குடியில்ல, ஒரு பீடி சிகரெட்டில்ல, வாய் துர்நாற்றமில்ல, அரசியல் இல்ல, இன்னொரு பொண்ண தேடிப் போறதில்ல, சமையற்கட்டு மொத்தமா அவர் வசம், தேனும் பழமும் மட்டுமே சாப்பிடறதால விதவிதமான சமையல் செய்ய தேவையில்லை. துணி துவைக்க கஷ்டமில்ல. காரணம் அவர் துணி உடுத்தறதில்ல. அப்புறம் ரொம்ப முக்கியம். நான் குளிச்சு சிங்காரிச்சு இருக்கணும்னு அவசியமில்ல. ஏன்னா அவருக்கும் குளியல்ல பெரிய விருப்பமில்ல.

இக்கதையை படித்து முடித்ததும் ஆளாளுக்கு கரடியை தேடிப்போனால் நான் பொறுப்பல்ல.

சாய்வைஷ்ணவி


நூல் தகவல்:

நூல் : தேன்

பிரிவு:  சிறுகதைகள் | மொழிபெயர்ப்பு

மூலம்:  பால் சக்காரியா

தமிழில் : பவா செல்லதுரை

வெளியீடு : வம்சி புக்ஸ்

வெளியான ஆண்டு : 2017

விலை: ₹ 20