கி.ரா - புகழஞ்சலிசிறப்புப் பக்கங்கள்வாய்மொழி மரபின் பிதாமகன்

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2


 

"ஆதியிலேயே கவிதை இருந்தது

அப்போதே அது இசையை மணந்தது" பொதிகைச்சித்தர்

 

2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள்

 

26.12.2021 அன்று ‘தளம்’ இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை பா.இரவிக்குமார், மனுஷி இருவராலும் பதிவு செய்யப்பட்டது. அதற்கவர் விதித்திருந்த விசித்திர நிபந்தனை யாதெனில் அதையவர் மறைவிற்குப் பின்னரே வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனாலும் அதிலுள்ள அவர் கருத்துக்களைத்  தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட கிரா இசைந்தமைக்கிணங்க அக்கட்டுரை ‘தளம்’:15, ஜன. 2014 இதழில் வெளியாயிற்று.

 

கிராவின் ‘தளம்’ கட்டுரை மீதெழும் கேள்விகள்

ஏனவர் இப்படி  நிர்ப்பந்திக்கின்றார்?

“இன்றைக்கொரு கருத்துச் சொல்வேன். சிந்தனை மாறும். நாளைக்கு இன்னொருத்தர் வந்து கேட்கும் போது இன்னொரு கருத்துச் சொல்வேன், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. நிரந்தரமான கருத்தை உயிரோடு இருப்பவனிடம் போய்த் தேடாதீர்கள்”

” ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்ளலாமே. கிரா இல்லை,  காலமாகிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகி விட்டன என்றால்

என்ன செய்வீர்கள்? படைப்பின் மூலநதானே தேடுவீர்கள்? அதை இப்போதே செய்யலாமே?.” “அப்படியே  முளைத்துச் செடியான

எங்களைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, நாங்கள் காலமானதும், எங்கள் விஷயங்கள் அனைத்தையும் திரட்டி என்னதான்

சொல்லியிருக்கிறோம் என்று பாருங்கள். ஏதாவது பிடிபட்டால் எடுத்து எழுதியும் வைக்கலாம். இதை இப்படிப் பதிவு செய்வதே நேர்மை.”

கருத்துக்களும் நிலைப்பாடுகளும் மாறக் கூடியனவே. மாறுதலொன்றே மாறாதென்பதே மாறாவிதி.  இதெல்லாமே சரிதான்.  என்னைப் பொறுத்தவரையில் அத்தகு மாற்றங்களுக்கான ஏதுக்களை  முன்னிறுத்தத் தவற மாட்டேன். நான் சொன்னேன் என்பதற்காக அது காலாவதி ஆகிப்போனால் அவற்றையே மீளமீள  நியாயப்படுத்த முனையாமல் உரிமை நீக்கம்(dis own) செய்தே கடப்பேன்.

ஏனவர் செவ்வி(பேட்டி) எனும் அருமையான பண்பாட்டுக் கருவியையே நிராகரிக்கின்றார்.?

அப்படி நிராகரிப்பவர் அதைக் கட்டுரையாக்கி வெளியிட எதற்காக இசைவளிக்கின்றார்?

அடுத்து என் கேள்விகள்  பிரச்சினையாளரை.  (பேட்டி கொடுப்பவர்) நோக்கியல்ல! பேட்டி எடுத்த இருவரை  நோக்கித்தான்.

நானாக இருப்பின் அவர்  நிபந்தனையைத் தான் முதலில் கேள்விக்குள்ளாக்குவேன். அப்படியும் அவர் இசையாக்கால் கட்டுரையாக்க அனுமதி கேளாமல் அச்செல்வியையே நிராகரிப்பேன். ஏன் கிரா மானுடத்தின் மகத்தான பேறாம் உரையாடலையே மறுதலித்தார்?

 

கதைசொல்முறை அறிவும் விமர்சன அறிவும்

இத்தகு வினாக்களுக்கான விடை இதோ:

“லையோத்தர் என்று ஒரு பிரஞ்சுத் தத்துவவவாதி இருக்கிறார். அவரது ‘பின்நவீனத்துவ நிலைமை’ என்ற நூல் இரண்டு விஷயங்களைப் பேசுகின்றது. ஒன்று கதை சொல் அறிவு. இன்னொன்று விமர்சன அறிவு. கதைசொல் அறிவு சோதனை செய்து பார்த்துக் கண்டடையும் அறிவல்ல. கதைசொல்லும் போது அக்கதையைக் கேட்பவன் எப்படிக் கதைக்குள் வந்து விடுகிறானோ அதுபோல் இது இருப்பதை நியாயப்படுத்தும் அறிவு. விமர்சன அறிவு மாற்றத்தைக் கோரும் அறிவு.” – தமிழவன் (‘தமிழுணர்வின் வரைபடம்’)

ஒருவரை அவர் படைப்பின் வாயிலாக அறிவதைக்காட்டிலும் அவருடனான ஒரு செவ்வியின் மூலம் அறிவதே கூடுதல் சாத்தியம் உடையதாக அமைந்தியலும். அதுவுங்கூட புரிந்துணர்வின் அலைநீளம் ஒத்திசைக்கும் ஒரு சகபயணி உரிய பிரச்சினையாளனுடன் அதனை நிகழ்த்துகையில்  தானது சிறந்த உரையாடல் எனும் பரிமாணத்தை எய்தும்.

காட்டாகப் பிரமிளுடனான காலசுப்ரமணியம்,  மா.அரங்கநாதனுடனான எஸ்.சண்முகம் செவ்விகளையும் வாசிக்கையில் இது பிடிபடும். நான் அவர்கள் குறித்த மேலதிகப் புரிதல்களைக் கண்டடைய அவையே என்னை ஆற்றுப்படுத்தின.

“வாதப் பிரதிவாதங்களின் அறைகூவலை ஏற்று அதேவேளையில் அன்பும் உண்மையும் நிலவுகிற ஒரு பரிவர்த்தனையை ஒரு மகா புருஷனால் சாதிக்க முடியும் எனது கட்டுரைகளிலிருந்து தொடரக்கூடிய சிந்தனைகளை நானே ஊக்குவித்துக்கொள்ள வேண்டி இருப்பதுடன் இலக்கியச்  சிற்றேட்டுலகின் குழப்பமான நிலைகளிலிருந்து ஒதுங்கிச் சம்பாஷணைகளிலேயே நான் என்னை வெளியிட்டுள்ளேன்.”

“உண்மையில் பேட்டியின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும் தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தைப் பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து அவன் சம்பந்தப்பட்ட பொதுவிழ்வின் மீது தெளிவுகாண உபயோகிக்கவேண்டும். பிரச்சினையாளன் பேசவிரும்பாத விஷயங்களைக் கூடப் பேசவைக்கிற ஒரு பேட்டியாளன் மூலம் இவ்வளவும் நிறைவேறி ஒரு கலாச்சாரநிலை உருப்பெறவும் வளரவும் முடியும். “- பிரமிள் (பிரமிள் படைப்புகள்:5)

இத்தொடர்பில் தெருக்கூத்துக் கலைஞர்கள் உடனான செவ்வித் தொகுப்பிலிருந்து ஒத்துறழ்ந்து காணுமுகமாக ஒரு பதிவு:

“கலைஞனை அணுகுவதும் அணுகியிருப்பதும் அவனது உட்கிடையை உள்வாங்குவதும் பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமாய் ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்குப் புதுமையானவன், நிகரானவன் உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச்சிறந்தது. மற்றங்கே நமது தேடலை விருப்பத்தைக் கேள்விகளாக்கி வேண்டிய விடை எதிர்நோக்கிப் பரிட்சித்தோமானால் நாமிங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே. “-  தவசிக் கருப்புசாமி (‘அருங்கூத்து’)

இவ்வாறு  பூச்சிய மதிப்பெண்ணே பெறக்கூடியவர்களான ப.செம்மலை உடனான பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட பேட்டிகள் அந்நூலில் ஒட்டாமல் கிடக்க; புரிந்துணர்வின் அலைநீளம்  ஒத்திசைக்கும் என வித்தை தெரிந்த தவசிக்களால் போட்டு வாங்கி வரவழைக்கும் சிறப்பும் அதிலேயே காணக்கிடக்கின்றதே.

ஒட்டுமொத்தப் பள்ளி ஆசிரியர்களுமே அவர் பார்வைக்குக் கற்றுச்சொல்லிக் கிளிப்பிள்ளைகள் ஆகவும், அச்சுவார்ப்புச் செங்கற்கள் ஆகவும் காட்சி அளிப்பதை என்னென்பது?

அறிவென்பது எழுத்துமூலம் சார்ந்தது எனக் கருதுவது அய்ரோப்பிய மெய்காண்முறை; எழுத்துமரபு, நகர்ப்புறம், பிரம்மாண்டம் இவை யாவும் அதிகாரத்தின் பல்வேறு வடிவங்கள், இவற்றிற்கு எதிரான சிந்தனைகள் எனவாங்கு  தொ.பரமசிவன் கூறுமாப்போல்

எழுத்துமரபு அதிகாரத்தை கிரா எதிர்ப்பதுவரை ஏற்புடையதே. ஆனால் அதற்கும் அப்பாலாக அவரது எழுத்து, மொழி,கவிதை,இலக்கியத் தோற்றம்,உரைநடை தொடர்பான அபிப்ராயங்கள் யாவுமே தடாலடியான அதிர்ச்சி மதிப்புத் தீர்ப்புகளாகவும் ஆன ரசனையதிகார நாட்டாமைகள் ஆகவே எஞ்சி நிற்கின்றன.

 

மொழி குறித்த கிராவின் நோக்கு : மானுடவியல், வரலாற்றியல் பார்வைகளுக்குப் புறம்பானதே!

“மொழி மேல் உள்ளவை பற்று,  மோகம், காமம், வெறி எனப்பல பரிமாணங்கள். ஒன்றுமே பேசமுடியாது” “தாய் தடுத்தாலும் விடமாட்டேன் என்று ஒருவன் கறுவுகிறான். உன் மொழியைப் பழித்தால் அவனை விடாதே கொன்றுவிடு என்று சொல்கிறான்”

இந்த கிரா எதிர்வினையை வாசித்த அக்கணமே என்னில் மின்னல் வெட்டியது “எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனாலதைப் பிறர்மேல் விடமாட்டேன்’ என்னும் ஞானக்கூத்த ‘வக்ரோக்தி’யே!

ஏனெனில் இவ்விருவர் எதிர்வினைகளுமே பாரதிதாசனுக்கு ஆனவைதாம். எது பாரதிதாசனுக்கு உயிர்மூச்சோ, அதுவே கூத்தனார்க்குப் பெருமூச்சாம். ஆனால்  கிராவுக்கேன்  பாரதிதாசன் மீது இத்துணை வன்மம்? பாரதிதாசன் கவிதை எதற்கான எதிர்வினையோ அதைப்பற்றிப் பேசாமல் உரிய பனுவற் சூழமைவு புலப்படாமல் இப்படி இடையில் உருவி எடுத்தாள்வது எத்தகைய அறம்? மாறாக மொழி குறித்த பாரதிதாசன் பார்வை எத்தகையது? எவ்வாறது மொழி குறித்த மானுடவியலார்,  வரலாற்றாளர் பார்வைகளுடன் சங்கமிக்கலாகின்றது? அவர்கள் பார்வை எத்தகையது?

“வெறும் தமிழ்வெறி என்று இந்த மூலப்படிம உணர்வை (Pre – mordial sentiment) கொச்சைப்படுத்துபவர்கள் மூடர்கள்என்பதுதான் என் கருத்து. இந்த மூலப்படிம உணர்வை நடுநிலையான எல்லா மானுடவியலாளர்களும் வரலாற்றாளர்களும் அங்கீகரித்துள்ளனர். யூஜின் இர்ஜிக், கிளிபோட் நீட்ஸ், பெர்டன்ஸ்டைன் போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்.” – தமிழவன் (‘தமிழுணர்வின் வரைபடம்’)

“மொழி வெறுமனே ஒரு கருவியல்ல. கத்தியும் கவசமும் அல்ல கழற்றியெறிய, அது ஒரு சட்டையுமல்ல. அது மனித இருப்பின்  ஓர் இலச்சினை, பண்பாட்டின் முத்திரை, தனி மனிதனை சமூகப்படுத்தும் ஒரு மாயப்பின்னல், தந்தை தாயாய், பாட்டன் பாட்டியாய், முப்பாட்டன் முப்பாட்டியாய்;  முன்னொரு காலத்திலிருந்து, பின்வரும் காலவெளிகளில் உயிரோடு உணர்வு சுமந்துவரும் ஒரு வரலாற்றுச் செய்கை.” – தி.சு.நடராசன் (‘தமிழின் அடையாளம்)

மானுடவியலாளர், வரலாற்றாளர்தம் மொழி குறித்த நோக்குநிலையும், பாரதிதாசனின்  பார்வைகளும் சங்கமிக்கும் சங்குமுகம் இதுதான்:

"இனத்தைச் செய்தது மொழிதான்; இனத்தின்

மனத்தைச்செய்தது மொழிதான்; மனத்தை

மொழிப்பற் றினின்று

பிரிப்பது முயற்கொம்பு." - பாரதிதாசன்பாரதிதாசன்

 

கவிதை மீதான கிராவின் நச்சுக்கடுப்பு

மொழி குறித்து மட்டுந்தான் என்றில்லை பாரதி, பாரதிதாசன் கவிதைகள் யாவற்றையுமே கிரா புறக்கணிக்கின்றாரே?

“எனக்கு இங்கொரு கோபம், மகாகோபம் உண்டு. எதை எல்லாம் நீங்கள் உச்சிமீது வைத்துக் கொண்டாடுகிறீர்களோ அவை காதுக்கு இனிமையான, ராகதாள அமைப்புடைய அந்தஅளவில் ரசிக்கத்தக்க வெறும் பாடல்கள் மட்டுமே. அவை இன்னொரு  விபரீதத்தை மொழிக்குச் செய்துவிடுகின்றன.” எனத் தொடர்வாரவரே!

பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் எல்லாமே அப்படிப்பட்ட பாடல்களா என்ன? இடைவெட்டாய் இன்னொரு குறுக்கீடு. கிராவின்  நூலான ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ வெளிவந்த காலச்சூழலில் நிறப்பிரிகை சார்பில்   ஒரு நிகழ்வை நடத்தினோம். அதிலவர் பேசுகையில் கர்நாடகசங்கீதம் காஞ்சிப்பட்டு, நாட்டர் பாடல்கள் சுங்கடிப்புடைவைகளே என்றார்.  அதற்கு நான், “புனைவில் நாட்டார் வழக்காற்றைக் கையாளும்,  அல் புனைவில் மக்கள்தமிழை வலியுறுத்தும் கரிசக்காட்டு நாய்னா இசையில் மட்டும் நாட்டார் பாடல்களைப் போற்ற மறுக்கின்றார்? இது புனைகதைகளில் சனரஞ்சகத்தை வலியுறுத்தும் கல்கியே கர்நாடக சங்கீதத்தில் அதனை மறுக்கும் விலாங்குத்தனம் போலத்தானே?” எனக் குறுக்கிட்ட போது அவர் அவ்வாறு  ஒப்பிட்டவர்  இதெல்லாமே பொதியவெற்பனின்  தாய்மொழிப் பற்றின் விளைவே என்றாரவார். அப்படியே இதையே நானும் உங்களுக்கே திருப்பி அடிக்கலாந்தானே நாய்னா? என்ற போது சிரித்துக் கடந்தார்.

பல்லவிகள் கீர்த்தனங்கள் மற்றுமுள்ள

                பலநுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள்ளோரின்

நல்லுதவி பெற்றுத்தான் தமிழிசைக்கு

                நாம்ஏற்றம் தேடுவது முடியுமென்று

சொல்லுகின்றார் சிலபுலிகள் அவர்க்கு நானும்

                சொல்லுகின்றேன் சுண்ணமிடிப் பார்கள்பாடும்

பல்வகைஇ லேசான இசைகள் போதும்

                பாரதியா ரேபோதும்; தியாகர் வேண்டாம்”

– (‘மணக்காதா’)

 

“தமிழிசை மரபு தம் குருநாதரைப் போலப் பாவேந்தருக்கும் முன்னோர் சொத்தாயிற்று. கண்ணதாசன் வரையிலான மரபுக்கவிஞர்கள், தமிழிசை உணர்வும் அறிமுகமும்  உடையவர்கள் தாமே? புதுக்கவிதைதான் பிறந்தவுடன் தமிழிசையினை மணமுறிவு செய்துவிட்டது” – தொ.பரமசிவன்

இலக்கிய வரலாற்றில் கவிதையே உரைநடைக்கு முந்தையது. இதைத் தான் ஆதியிலேயே கவிதை இருந்தது அப்போதே அது இசையை மணந்தது என்றேன் நான். ஆதிக்கவிதை நாட்டார் பாடலாகத்தானே இருக்க இயலும்? ‘செவிநுகர் கனிகள்’ என்பானே கம்ப நாடனும்? சங்கப் பாடல்களிலும் கம்பராமாயணத்தையும்  அவற்றின் உள்ளார்ந்த இசைக்கூறுகள் துலங்கப் பாடிக்காட்டுவாரே அரிமளம் பத்மநாபன்? ‘தாயின் பனிக்குடத்திலேயே தாலாட்டுக் கேட்டோர் நாமெ’ன்பாரே அறிவுமதி.

‘உற்பத்தியின் போதும் உழைப்பின் போதும் பயன் படுத்தும் ஒரே கலை வடிவம் பாடல் மட்டுமே’ என்பாரே கத்தர்.

ஆனால் கிராவோ ‘அதிலிருந்து தான் இது(உரைநடையிலிருந்தே  கவிதை) வந்தது என்ற அறிவு கூடவா இல்லை?’ எனச் சினக்கின்றார்.

“கவிதையே இலக்கியப் படைப்புகளில் உரையை விடக் காலத்தால் முந்தியது என்னும் பெரும்பான்மைக் கோட்பாட்டை முதலில் மறுத்தவர் எமர்சன்” என்னும் செ.ரவீந்திரன், “உரை இருந்திருக்கிறது தமிழர்கள் ஊமையில்லை” எனக் கநாசு தரப்பையும் சுட்டிக்காட்டுகின்றார்.(‘தளம்’:15)

உச்சபட்ச நச்சுக்கடுப்போடு கிரா “கவிதையின் சண்டாளத்தனம் உரைநடையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்” என்னும் போது ‘கவிதையின் சண்டாளத்தனம்’ எனுமவர் சொற்பாவிப்புக்கு வன்கண்டனமே எம்ஜிஆர் கதாநாயகன் ஆகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்த ‘கூண்டுக்கிளி’ யில் கதாநாயகி நண்பன் மனைவியான தன்னிடமே முறைதவறி நடக்க முயலுகையில் ‘பெண்டாள நினைத்தாயோ சண்டாளா’ எனக் கதறும் வசனத்தைக் கேட்டபோது  சண்டாளா என்பதன் அர்த்தம் அப்போது நானறியேன். அதன் பொருள் ‘புலையன்’ என சாதிரீதியில் இழிவுபடுத்தும் வசையே!

ஆனாலின்று அவரை எப்போதும் கருசக்காட்டு நாய்னா என விளிப்பதே என் வழமை. அதற்கே கூடப் பொதுவெளியில் அப்படி விளிக்காதீர் எனக் கண்டனம் எழக்கூடிய இற்றைப்பாட்டில்  அவருடைய அகராதியில் மட்டும் சண்டாளா என்றால் ஆதிக்கத்தனம் என்றே பொருள் போலும் ?

ஏலவே நான் சுட்டிக்காட்டியவாறே எழுத்தின் அதிகாரத்தை எதிர்ப்பதைப் பொறுத்தவரைக்கும் கிராவோடு ஒத்தெண்ணத்தக்க தொப போலாது கிரா ‘பாடல் சான்ற புலநெறி வழக்கை’ அறவே புறக்கணிப்பதை என்னென்பது?

-தொ ட ரு ம்..


  • வே.மு.பொதியவெற்பன்

 

இக்கட்டுரையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *