3. எழுத்து, புலனெறி மரபுகள் மீதான கிராவின் ஒவ்வாமைகளின் நதிமூல, ரிஷிமூலங்கள்.

 

தமிழன்பர் மாநாடு

உரைநடை இலக்கியத்துக்குக் கவிதை கண்ணனைக் கொல்ல நினைக்கும் கம்சனை மாதிரிக் கவிதை இருக்கிறது: இளைஞனை வளரவிடாமல் ஒரு பாறையைப் போல் அது அழுத்திக் கொண்டிருக்கிறது: அதன் சண்டாளத்தனம் உரைநடையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்றெல்லாம் கூறி அதனையும் பாடல் சான்ற புலநெறி வழக்கையும் கிரா முற்றாகப் புறக்கணிக்கின்றார்.

இத் தொடர்பில் 1933 – இல்  சென்னை பச்சையப்பன்கல்லூரியில் கூட்டப்பட்ட தமிழன்பர் மாநாடு குறித்து இங்கே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் அது புலநெறிமரபு, ரசனைமரபு, ‘மணிக்கொடி’ நவீனத்துவமரபு மூன்றன் ஊடாட்டங்களை நமக்கு உணர்த்தக்கூடியதொரு  வரலாற்று முகாமையான நிகழ்வேயாகும்.

‘பேசுவது போல் எழுதவேண்டும்’ என்பது அம்மாநாட்டில் முடிவு  செய்யப்படுவதாக இருந்தது. இத்தீயமுடிவு வெற்றி பெற்றிருப்பின் செந்தமிழ் வழக்கு ஒழியும் என்பதை உணர்ந்த பெரியார் அம்மாநாடு நன்முறையில் நடைபெற விரும்பினார். அதன் பயனாகத் திரு (‘குத்தூசி’)குருசாமி முதலிய தமிழ் வீரர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டு அதன் முடிவு நிறைவேறா வண்ணம் செய்தனர்.” – மா. இராசமாணிக்கனார் (‘பெரியார் பார்வை’ இதழ்த்தொகுப்பு)

இதில் ரசனைமரபினரின் பேசுவது போல் எழுத வேண்டும் எனும் தீயமுடிவின் வெற்றியால் செந்தமிழ் வழக்கு அழியும் எனும் பண்டிதமரபின் பதகளிப்பும்; கவிதையால் உரைநடையே அழிந்தொழியும் எனும் கிராவின் பதகளிப்பும் இருமுனைக் கோளாறுகளான பிறழ்திரிபுப் பிசகுகளே என்பேன்.

இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு  மணிக்கொடியாளர் தரப்பையும் ஒத்துறழ்ந்து நோக்குவோம். இம்மாநாட்டை  நடாத்தியது ரசிகமணி டிகேசியே! இதில் உவேசா, திருவிக, வையாபுரியார் முதலான தமிழறிஞர்களும் வட்டத்தொட்டி வகையறாவினரும் பங்கேற்றனர்.  இதில் உலக இலக்கிய இயக்கத்தில் தமிழ் இலக்கியத்தை இணைக்கும் ஒரு சொல்கூட இல்லை என்பதுடன் பாரதி அறவே புறக்கணிக்கப்பட்டதனையும், கம்பன் மட்டுமே கொண்டாடப்பட்டதையும் எடுத்துரைப்பார் பி•எஸ்•ராமையா (‘மணிக்கொடி காலம்’)

ஏனைப்பிற தமிழறிஞர் பண்டித  மனோபாவத்திலும் (வையாபுரியார் மட்டும் இதில் விதிவிலக்கே); வட்டத்தொட்டியர் ரசனைமனோ பாவத்திலும்; தம்முள் முரண்பட்ட போதிலும் மணிக்கொடியினரின் புதுவது புனையும் போக்கை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதில் தம்முள் ஒன்றியேகிடந்தனர்.

இந்தத் தமிழன்பர் மாநாடு நமக்கு பண்டிதமரபு ×’ வட்டத்தொட்டி’ ரசனை அபிப்ராயமரபு இவற்றுக்கூடான இருவேறு செல்நெறிமோதல் மட்டுமேயன்று. பெருஞ்செல்வாக்குப் படைத்த என

இராசமாணிக்கனார் சுட்டுவதன் பின்னணியில் வீற்றிருப்பவர் ஆச்சாரியாரே. சனாதனத்தின் தலையீட்டுத் தருணங்களிலெல்லாம் தமிழறிஞர்க்குப் பக்கபலமான காவலரணாய் அரவணைத்தவர் பெரியார்தாமே! இது அதன் உட்கிடையான அரசியல் மோதல்.

இம்மாநாட்டால்  பிடிபடலாகும் இன்னொரு மெய்மையும் உண்டு, அது ரசனைமரபாலும் பண்டிதமரபாலும் புரிந்துகொள்ள இயலாததாக மணிக்கொடி நவீனத்துவமரபு இருந்தது என்பதே!

 

 விமர்சகராகக் கநாசு அவதரிக்க நேரிட்ட விபரீதவிபத்து!

“நவீனத்துவப் படைப்புகள் அளித்த நேர்மறையான யதார்த்தத்தை அச்சமூகம் பொதுவாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட ஒரு தளத்தின் பிரதிநிதியாக நின்று கநாசு பேசினார். ராஜாஜிக்கு மட்டுமல்ல தெபொமீக்கும் புதுமைப்பித்தன் எழுத்து புரியவில்லை, பிடிக்கவில்லை. இச்சூழலில்தான் கநாசு விமர்சகராக நேர்ந்தது.” – ஜெயமோகன் (‘முதல் சுவடு’)

அபூர்வமாக இப்படியும் சிலதருணங்களில்  தப்பித்தவறி எப்போதேனும் ஜெமோ உண்மை உரைப்பதும் உண்டு. (‘சதுரங்க வேட்டை’ திரைப்பட வசனத்தில் மோசடிகளை நிறைவேற்றுமுகமாக கொஞ்சம் உண்மையுங்  கலந்திருக்கவேண்டும் என்னுந் தருணம்)

புலநெறிக்கும் படைப்புக்கலைக்கும் இடையிலான புரிந்துணர்வும் திசைவழிகளும் முரண்பட்ட சூழலே விமர்சனத்தில் தமக்கு அடிப்படையில் நம்பிக்கை கிடையாதென்ற கநாசுவே விமர்சக அவதாரம் எடுத்திட நேர்ந்த ஒரு விபரீத விபத்தே ஈதெனலாம்.

புதிய எழுத்துமுறைகளின் முன்னோடிகளே, அவற்றைக் குறித்த போதிய புரிந்துணர்வு வாய்க்கப்பெறா சமூகச்சூழலில் தத்தம் எழுத்து நெறியியல் பற்றியும் எடுத்துரைத்தாக வேண்டிய காலச்சூழல் நிர்ப்பந்தமே அவற்றைத் தீர்மானிக்கலாயின.

புதுமைப்பித்தன், மௌனி, குபரா மூவரையும் இனங்காணுமுகமாகவே, 1952 வாக்கில் தாம் விமர்சனத்தில் தலைப்பட்டதாகவும்,மக்களை இலக்கிய விமர்சகர் ஆக்கவே தாம் தொடர்ந்தியங்கியதாகவும் கநாசு தம் ‘உலக இலக்கியம்’ நூலிலும், ‘ஞானரதம்’ இதழிலுமாகப் பலகாலும் கநாசு வலியுறுத்தியே வரலாயினார்.

ஆனால் அதே மூச்சிலவர் தமக்கு விமர்சனத்தில் அடிப்படையில் நம்பிக்கை கிடையாதென்றும், தாம் செய்வது இலக்கிய விமர்சனம் இல்லை, அதைச் செய்வதாகவும் இல்லை எனவும் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியுந் தீர்க்கின்றார்.

அதனை எப்படி அணுக முற்படுகின்றார் தெரியுமா?: “படிப்பதில் சொந்த அபிப்ராயம் தான் முக்கியம். அறிவுபூர்வமாக எதையும் அலசி ஆராயவேண்டியது அவசியமே இல்லை.” “நாவல் தருகிற அனுபவத்தை ஏற்றுக்கொண்டு அமைவதுதான் நாம் செலுத்தவேண்டிய பக்தி. ஆம், பக்தி என்றுதான் சொல்கிறேன். பக்திஎன்பதை ஒரு இலக்கிய விமர்சன வார்த்தையாக ஏற்றுக்கொண்டே சொல்கிறேன்.” எனத் தொடர்வாரவார். இப்படி எல்லாம் வாசிப்பையே சச்சிதானந்த அநுபூதியாகவும்; இலக்கிய விமர்சனத்தைப்  படைப்புக்குச் செலுத்தித் தீரவேண்டிய நேர்த்திக்கடன் உளவடைப்பாகவும்: சிருஷ்டிக்கலையை ஏதோ சிதம்பர ரகசியமாகவும் மர்மப்பண்பையுங் கட்டமைத்திடுகின்றார்.

 

 போலிநியாயத்தின் பதிவுநவிற்சி’

இத்தொடர்பில்  கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி இருவரது மதிப்பீட்டுக் கணிப்புகளும் இங்கே மனங்கொள்ளத் தக்கனவவாம்:

ரசிகமணி நூல்களில் உணர்ச்சியையும், படிப்போர்க்கு உண்டாகும் பரவசம், புளகாங்கிதம் ஆனந்தம் ஆகியவற்றையே வற்புறுத்தி இருக்கிறாரெனவும், அம்மகிழ்ச்சி தரும் போலிநியாயத்தின் பதிவுநவிற்சி எனவும் எடுத்துரைப்பார் க.கைலாசபதி(‘இலக்கியமும் திறனாய்வும்’)

“உணர்ச்சியைத் தன்னுள் தான் முடிந்த முடிவாகக் கொள்ளும்நிலை குபரா ஏற்றுக்கொண்ட ஒன்றன்று. இது லாசரா ஏற்றுக்கொள்ளும் நிலை. இவ்வாதத்தை ஏற்றுக்கொண்டால் உணர்ச்சி வெளிப்பாட்டை ரஸிப்பது இலக்கிய வேட்கையின் பிரதான பணியாகிவிடும். இந்தநிலை நம்மை அறியாமலேயே இலக்கியம் என்பது ரஸித்துப் புளகாங்கமுறுவதற்கு மாத்திரம் உரிய பொருளே என்ற நிலைப்பாட்டுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும். ” – கார்த்திகேசு சிவத்தம்பி (‘மணிக்கொடி காலம் : முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும் ….)

“கம்பன் எனக்குந் தந்த இன்பங்களை அன்பர்களுடன் பங்கிட்டுக்கொள்ள விரும்புகிறேன் அதற்கு நான் உங்கள் முன்வைக்கும் ஒரே நிபந்தனை நான் கம்பன் என்று சொல்வதை நீங்கள் நம்பவேண்டும் அவ்வளவே. இதற்கு உட்பட்டால் கம்பனின் இன்பங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்.” “இது கம்பர் இல்லை என்றால் அவ்வளவுதான்.மேற்கொண்டு பேச்சில்லை”– டி.கே.சிதம்பரநாத முதலியார் (‘கம்பர் தரும் ராமாயணம்’)

“இதற்கான நியாயங்களை அவரது கம்பராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். அதற்கான காரணம் அவர் உள்ளுணர்விற்பட்ட ஒரு நியாயமே. டிகேசியின் இந்த முறையை மற்ற பேர் கடைப்பிடித்தால் குழப்பம் ஏற்படும்.டிகேசி எடுத்துக்கொண்ட சுதந்திரத்தைப் பிறர் வரிக்க முடியாது.”– சுஜாதா (‘ரசனை’)

“ஓரளவு வார்த்தைக்கு அகப்படாத ஒரு ரஸ அனுபவத்திற்கு உருத்தர முயல்வதே இலக்கிய விமர்சகன் செய்ய முயலுகிற காரியம். நான் சொல்கிறேன் என்பதற்காகவே இலக்கிய விமர்சனமாக அர்த்தம் உண்டாகிறது.” – க.நா.சுப்ரமண்யம்

நான் சொன்னால் நீங்க நம்பியே தீரணும், நான் இல்லைன்னா இல்லைதான் என்னும் டிகேசி குரலும்; நான் சொன்னேங்கிறதுக்காகவே அதற்கு இலக்கிய விமர்சனமாக அர்த்தம் உண்டாகிறது என்னுங் கநாசு குரலும்; அப்படியே முளைத்துச் செடியான தம்மைப்போலும் ‘தான்தோன்றிச்  சுயம்புலிங்கங்களு’க்கெல்லாம் படைப்பின் மீதான வினாக்களுக்குப்  பதில் சொல்லுந் தார்மீகப்பொறுப்பு ஏதுமில்லை எனும் கிரா குரலும் ஒரே புள்ளியில் சங்கமிப்பனவே. அது அவர் உள்ளுணர்வில் பிறந்த நியாயமென்றதனை நியாயப்படுத்த மடிதற்று முந்துறும் சுஜாதா ஆனால் அதற்கான சுதந்திரத்தை அவருக்கே ஆன பிரத்தியேக உரிமை  ஆக்கிவிடுகின்றார். ஆகக்கூடி இவர்கள் இலக்கியதைக் கடவுளாக்கி, விமர்சனத்தை பக்திபூர்வமாக உளவடைக்க வேண்டிய நேர்த்திக்கடனாக்கி அவர்களின் உள்ளொளித் தரிசனங்களை நமக்கு அருளிச்செய்யும் பூசாரிகளாக வீற்றிருக்கலாகின்றனர். கிரா பள்ளி ஆசிரியர்கள் பற்றிப் பேசுமுகமாக எவ்வாறெலாம், “மக்களிடம் போகக்கூடாது. ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களிடம் சென்று கேட்கவேண்டும். வேதம் படித்த சாதியினரும் அப்படித்தான் வைத்துக் கொண்டிருந்தார்கள்”  என்கின்றாரோ அப்படித்தானே இவர்களின் ரசனையதிகாரமும்  கோலோச்சிடலாகின்றது?

 

ரசனைப்பள்ளி சார் அத்வைத வணிக அபிப்ராயமரபு  ×  தத்துவ/  கோட்பாட்டுப்பள்ளி சார்அறிவு விவாத மரபு

“அனுபவம் தர்சனம் என்ற தன்னிலை சார்ந்த அபிப்ராயங்களை விமர்சனம் என்ற பெயரில் செய்துவந்ததன் மூலம் சாதியமேலாதிக்கம் இன்னொரு பெயரில் இலக்கியத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை.  பிராமணியத்தின்  மாற்றுவடிவங்களாக அவை இருந்தன. மொழியின் பயன்பாடு என்ற அளவில் இவை கோட்பாடு போலவும்  விமர்சனம் போலவும் தோற்றம் தந்தன – இதற்குள்ளிருந்த சாதிய ஒதுக்கம் மறைக்கப்பட்டது. இதையே நாம் ஒரு தியரி அடிப்படையில் பேசினால் எந்த வகையில் எந்த வடிவில் எந்த இடத்தில் ஒன்று சரியில்லை என்பதை விளக்கியாக வேண்டும். இதை நாம் எண்பதுகளில் தான் உருவாக்க முடிந்தது. பிராமணியச் சார்புடைய அனுபவவாதம் இதன்மூலம் உடைந்துபோனது.” – தமிழவன் (‘பேச்சு மறுபேச்சு..’)

(இப்படி எல்லாம் பேசிநின்ற தமிழவன் மீண்டும் மீண்டும் கநாசுவை தூக்கிப்பிடிப்பதை மட்டும் விட்டபாடில்லை!)

“கலாச்சாரம் கருத்தியல் சார்பு கொண்டது என்றாகும் போது – உள்ளொளி, பொறி என்று முன்பு பேசப்பட்டதெல்லாம் கருத்தியல் சார்ந்ததுதான் என்றாகிறது. ஆகத்தமது கருத்தியலை, அழகியலை அத்வைதத்தைத்தான் இவர்கள் கள்ளங்ககபடமற்ற உள்ளொளி என விற்றுக்கொண்டிருதனர் என்பதுதெளிவாகின்றது.” – ந.முத்துமோகன் (‘அமைப்பியல் பின் அமைப்பியல்’)

கநாசு, சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களை  முன்வைத்து வளர்க்கப்பட்ட கலை இலக்கியக்  தத்துவக் கோட்பாடுகள் யாவுமே

எந்தவொரு தத்துவ/ கலை/ இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தோ விவாதத்தை முன்னெடுத்தவை அல்ல என்னும் பிரேம்: ரமேஷ் எஸ்விஆர், தமிழவன், ஞானி, அ.மார்க்ஸ், பிரம்மராஜன் போன்றோர் தத்துவ/ கலை/ இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்து உரையாடலைத் தமிழ்ச்சூழலில் வளர்த்த அறிவுவிவாதமரபினர் என்பர் (‘பேச்சு மறுபேச்சு)

வெசா, செல்லப்பா, பிரமிள் மூவரையுமே  தம் திறனாய்வுச் சிக்கல்கள் குறித்த நூலில் ‘கநாசு குழு’ என்றே விளிக்கும் க.கைலாசபதி  அதில் பிரமிளைக் கநாசுவின் தவசுப்பிள்ளை (சமையற்காரர்) ஆகவே ஆக்கிவிடுவார்.

பிரமிளைத் தவிர்த்து ஞானக்கூத்தனைச் சேர்த்து அவர்களோடு ‘பிரக்ஞை’,  ‘யாத்ரா’,  ‘கணையாழி’ இதழ்களையும் அகப்படுத்தும் தொ.பரமசிவன் ‘வேதாந்தக் கருத்தியல் குழு’ என்றே பாவிப்பார். (‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ ஆய்வுகட்டுரையில்)

கோட்பாட்டு விமர்சனம், கல்வித்துறை, ரசனை எனவிமர்சனங்களை முப்பகுப்பாக்கும்  ஜெயமோகன் பிரமிளை ரசனை விமர்சகரெனவே வகைப்படுத்துவார். (‘முதல் சுவடு’)

பட்டியல்களை கநாசு இட்டாலென்ன ஏனை மற்றெவரேனும் இட்டாலென்ன பட்டியல் யாவுமே இட்டோனையே எப்போதும் குப்புறத்தள்ளியே குழிபறித்தும் விடும். காட்டாக என் பார்வையில் பிரமிளை அறிவுவிவாத மரபில் பிரேம் :ரமேஷ் விட்டதும்  பிழையே; கைலாசபதி கநாசு குழுவிலும், ஜெமோ ரசனைக் குழுவிலும் அடைத்ததும் பிசகே!

இவர்கள் யாவருமே விட்ட இடத்திலிருந்து நான் அவரவர் கருத்தியல்/ நெறியியல் இன்னின்ன என்றே அவரவர் தனிவீறு யாவற்றையுமே விதந்தோதியுள்ளேன்:

1.கநாசு:  வேதாந்தக்கருத்தியல், ரசனை அபிப்ராய நெறியியல்

2.சிசுசெ: காந்தியக்கருத்தியல். பகுப்பாய்வு விமர்சன நெறியியல்

3.பிரமிள்: சமயஞ்சாரா சித்தமரபியல், மூலப்படிம விமர்சன நெறியியல்

4. வெசா: சனாதனக்கருத்தியல், கலாரசனை நெறியியல் (‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’)

 

தான் நம்புவது மட்டுமே அறிவுதனக்குப் பிடித்தது மட்டுமே அழகு

கிராவின் ஒவ்வாமை நாட்டாமைகளுக்கான நதிமூலம் ‘வட்டத்தொட்டி’ ரசனைப்பள்ளியே. ரிஷிமூலம் டிகேசியே. எழுத்துமரபு, பாடல் சான்ற புலநெறி மரபு, கவிதை இவை யாவற்றையுமே அறவே புறக்கணித்த கிராவின் மகா அபத்தக்  கோளாறு எது போன்றது எனக் கிரா பாணியிலேயே கூறுவதானால் ‘குளத்துக்கிட்ட கோபிச்சுக்கிட்டுக் குண்டிகழுவ மாட்டேங்க கதேதேன் நாய்னா!’

“ஓமகுண்டம், சமஸ்கிருதம், இங்லீஷ், சங்கத்தமிழ், நாலுமே வந்து குட்டிச்சுவர் அடித்துவிட்டன.” “இப்போது எங்கே பார்த்தாலும் பயனில் சொல்லைத்தானே  காண்கிறோம். காரணம் மேலே சொன்னபடி மூன்று வடமொழி, இங்லீஷ், செந்தமிழ்.” – டிகேசி (‘ரஸஞ்ஞானி டிகேசி’)

இவற்றை மட்டுமா  புறக்கணித்தார் சிலப்பதிகாரம்,நவீனவியல், நவீனத்துவம் யாவற்றையும் பாரதியையும் கூடத்தானே புறக்கணித்தார்?

“தமிழ்நாடு என்கிற தனித்த தேசியம் இருக்கிறது என்பதை அறிவிப்பதற்காகவே சிலப்பதிகாரப் பிரதி கட்டமைக்கப்படுகிறது. இந்த நுண்ணோக்கினை அறியாத நிலையிலேதான் டிகேசி போன்ற இலக்கிய இரசிகர்கள் வரிப்பாடல்களையும், குரவைப்பாடல்களையும் (அவற்றையும் இளங்கோவடிகள் இயற்றவில்லை என்பார் டிகேசி.) எடுத்துவிட்டால் சிலப்பதிகாரத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கவேண்டிய அவலம் ஏற்பட்டது.” – க. பஞ்சாங்கம் (”சாளரம் இலக்கியமலர்’ 2008)

இப்படித் தொன்மையையும் நவீனத்தையும் அறவே துண்டித்து விட்டு ஓநாய்ச்சிறுவன் கதையாகவும் வெளிச்சத்தைக் கண்டலறும் ஆந்தை அவலமாகாவும் காணக்கிடக்கிறது ரசிகஞானியின் ‘வட்டத்தொட்டி’த் தொட்டிமீன் வாழ்க்கையே.

 

இமிடேசன் இலக்கியம்’: ‘ஐந்தாம்படை ரசிகர்’ நாசவேலை!

இவ்வளவுக்கும் அப்பால் அவர் கொண்டாடி நின்ற கம்பரும் அவரிடம் படாதபாடே பட்டுள்ளார். அவரது சமாந்தரக்கலைஞர்களே இத்தொடர்பில் அவரைக் கடுமையாக விமர்சித்தே உள்ளனர் :  “பொங்குபுகழ்க் கோசலையின் செல்வன்/ கானகம் போவதற்குக் கைகேசி செய்ததீமை/ இங்கிருந்த டிகேசி முதலோர் கும்பல்/ இனியசுவைக் கம்பனுக்கே  சூழ்கின் றார்கள்.”- சாலிவாஹணன் (‘கலாமோகினி’)

இத்தொடர்பில் சாலிவாஹணனே தம் ‘கலாமோகினி’ இதழில் ‘ஐந்தாம்படை ரசிகர்கள்’ என்றிரு கட்டுரைகளும் எழுதினார். டிகேசியும் அவரது ரசிகர் குழாமும் செய்துவருவது இலக்கியத்தில் நாசவேலையே  என்னுமவர் டிகேசி இராமாயணத்தை ‘இமிடேசன் இலக்கியம’ என்றார்.(‘சரஸ்வதி காலம்’)

குற்றாலத்தில் டிகேசி ‘கம்பர்தரும் ராமாயண’த்தை வெளியிட்ட போது வையாபுரியாரும் சென்றிருக்கிறார் எனவும்;  ஆனாலதில் உடன்பாடற்ற அவர் 14/4/ 1955 தேதிய ஹிந்து பத்திரிக்கையில் அதனை விமர்சித்தார் எனவும் அ.கா.பெருமாள் தம் ‘தமிழறிஞர் வரிசை’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்(‘தமிழினி’, டிச.2010)

இத்தொடர்பில் வேலூர்.வெ.கந்தசாமிக்கவிராயரும்! (புதுமைப்பித்தன்), திருச்சிற்றம்பலக்கவிராயரும் (தொ.மு.சிதம்பர ரகுநாதன்)  இணைந்தெழதிய வசைப்பாட்டில் டிகேசியின் கைவரிசையாலவர்.

“கரையான்  உருவெடுத்துக் கம்பன் வயிறெரிய/ சிரையாய்ச் சிரைத்துத் தினம்/ செந்தமிழைத் தின்றுதின்று/ ஓட்டைக் கருத்துக்களை ஒட்டிவச்சுப் பாத்திகட்டிப் / பம்மாத்துப் பண்ணிவரும்/ குற்றாலத்து அண்ணல்’ எனப் பாட்டுவாங்கிக் கட்டிக்கொண்டார்( ‘பறை – 1990)

டிகேசியின் இத்தகு கைங்கர்யம் யாவும் எத்தகைய லீலைகள் எனவும்; ‘செருகுகவிகள்’ என்றவர் எத்தனை எத்தனை பாடல்களைக் கம்பராமாயணத்திலிருந்து உருவித்தள்ளிவிட்டார் என்னும் பாவாணரே எவ்வளவு் மோசமாகத் திருத்தித் தம் ‘இடைச்செருகல்’களை நிகழ்த்தி உள்ளாரென எடுத்துக்காட்டான ஒரு பாடலுடனும் குறிப்பிட்டுள்ளார்:

“டிகேசி கம்பராமாயணம், பாலகாண்டம், அயோத்தியா காண்டம்’ என்னுந் தலைப்புடன் 1942 – ஆம் ஆண்டில்  டி.கே.சிதம்பரநாத முதலியார் ஒரு புதுமையான நூலை வெளியிட்டுள்ளார். கம்பராமாயணப் பாடல்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்டவை என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியே ஆகும். அவைகளுள் பாலகாண்டத்தில் உள்ள 1419 பாக்களில்  167 பாக்களே கம்பன் பாட்டு எனவும், அயோத்தியா காண்டத்தில் உள்ள 1212 பாக்களில் 553 பாடல்களே கம்பன்பாட்டு எனவும், பிற பாடல்களெல்லாம் ‘செருகுகவிகள்’ எனவும் முடிவுகட்டி, திரு டிகேசி அந்நூலை வெளியிட்டுள்ளார்.

இவ்விதம் அவர் இவ்வளவு  பாக்களையும் நீக்கியதற்கு இவர் இந்நூலின் முடிவுரையில் கூறுங் காரணங்கள் ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாதன. இவரால் வெளியிடப்பட்டுள்ள அந்த 722 பாடல்களில் பாடபேதமேனுங் காட்டாது 204 பாடல்களைத் தம் மனம்போனவாறு திரித்து ‘இவைதாம் கம்பன் பாடல்கள்’ எனச் சிறிதும் அஞ்சாமல் கூறியிருக்கிறால்கள்..” -ஞா.தேவநேயப் பாவாணர்(‘கலை எனப்படுவது இனக்கொலை என்றால்’)

இத்தொடர்பில் 1818 – இல் தாமஸ் பௌலர் ‘குடும்பத்திற்கான ஷேக்ஸ்பியர்’ எனக் குறுகத்தரித்து, ஆய்வுநெறியின்றி இவ்வாறு வெட்டித் தொகுக்கும் செயலுக்குப்’பௌலரிசம்’ எனும் வழக்கே ஏற்பட்டுள்ளதெனும் க.பஞ்சாங்கமே நாமிதனை ‘டிகேசியிஸம்’ எனவே வழங்கலாம் எனவும் இது  அங்கு சட்டப்படிக் குற்ற நடவடிக்கையே எனவும் எடுத்துரைப்பார்.(‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு’)

கிராவின் பலத்திற்கும் பலவீனத்துக்குமான நதிமூலம் இத்தகு வட்டத்தொட்டி ரசனைப்பள்ளியே; ரிஷிமுலம் டிகேசியே. எதிரியின் மூலபலத்தைக் குறியிலக்காக்கி அதனைத் தகர்த்தெறியும் பெரியாரின் வியூகமுறையே எனதிந்த தகர்ப்பாக்கக் கடவுத்திறப்பாகக் கையாளப்பட்டுள்ளது எனலாம்.

 

 முதலில் ஒழித்துக்கட்டப்பட வேண்டியமேட்டுக்குடி ரசனைத்துறை

“ரசனை என்பது வாழ்வின் தோற்று சௌகர்யங்களை அமிதமாகப் பெற்றுள்ள வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுதுபோக்கும் ஒரு மனநிலை. மிகவும் ஹைகிளாஸ் பொழுதுபோக்கு. வாழ்வின் கதியும், மனித இயல்பும் மனிதன் இவற்றை எதிர்த்து,இவற்றுக்கு அடிமைப்பட்டு ஈடுகட்டி வென்று, தோற்று வாழ்ந்து சமைக்கும் நிதர்சனம் கலையுருப் பெறும்போது அது மனத்தைக் கவராது. படிப்பவன் மனத்தைத் தாக்கும்;  விழிப்பூட்டும்;  அவனைத் தன்னுள் ஆழ்த்தி எடுத்து உலுக்கிவிடும்.” -பிரமிள்(‘ஞானரதம்’ – சி.சு.செல்லப்பா சிறப்பிதழ்)

“யதார்த்தவாதம் நமது சமூக உடல்களுக்குள் ஒரு வேர்த்தண்டினைப் போல் ஆழ ஒடியிருக்கிறது. இது மொழிவழியாகப் புனைவான ஒரு வாழ்தலின் இதம்தரும் சுகமாக உணரப்பட்டு அதுவே அழகியலாக அறியப்படுகிறது. எனவேதான் இலக்கியத்தை ரசனை, ருசி,சுவை போன்ற அடிப்படை மதிப்பீடுளால் நிர்ணயிக்க விமர்சனக் கோட்பாடுகள் உருவாகின. இது ரசிகமணி டிகேசியில் தொடங்கி இன்றைய அவரது வாரிசுகள் வரை வளர்ந்து வந்துள்ளது. இதற்கு வடமொழியில் ரசக்கோட்பாடு மரபான பலத்தைத் தருவதாகியது. இவ்வாறு ரசனைக்கு மாறுபட்டவை இலக்கியம் ஆகாது என்கிற எழுதப்படாத விதியின் படிககளாக எழுத்தாளரின் நினைவிலி மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.” – ஜமாலன்

“வாழ்க்கையின் பிரிக்கமுடியாத பகுதியாக படைப்புச் செயற்பாடும் அழகுணர்ச்சியும் ஒரு காலத்தில் இருந்தன. உழைப்பு இவற்றைக் களவாடிச் சென்று தனித்திறன் உயர்ரசனை உடையோருக்காக மாற்றி அமைத்துவிட்டது. கலை என்பது மேட்டுக்குடிப் பார்வையாளர்களின் ரசனைக்குத் தீனிபோடும் தனிச்சிறப்பானதொரு துறை என்ற நிலையை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.” – பாப்பிளாக்


வே.மு.பொதியவெற்பன்

 

இக்கட்டுரையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *