கி.ரா - புகழஞ்சலிசிறப்புப் பக்கங்கள்வாய்மொழி மரபின் பிதாமகன்

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -1


வாய்மொழிமரபின் பிதாமகன் மீதான புலநெறி, மேட்டிமை ஒவ்வாமைகளும் அவற்றின் காரணிகளும்

 

சற்றொப்ப நூற்றாண்டின் ஈற்றயலாய் இசைபட நிறைவாழ்வு வாழ்ந்தேகிய – மகத்தான சாதனைகள் படைத்த ஒரு கரிசக்காட்டுக் கதைசொல்லியின் இதிகாசந்தானே கி.ராவின் வாணாட் செய்தியே?

கி.ராவின் ஒரு தனி வீறான பெறலருங் கொடுப்பினைச் சாதனைகளை விதந்தோதியே சுட்டிச்  செல்லுமுகமாகவும்; அவர் மீதான ஒவ்வாமை எதிரீடுகள், அவருடைய ஒவ்வாமை வெளிப்பாடுகள் ; மேலும் அவ்விரண்டன் காரணிகள் குறித்தும் எடுத்துரைக்குமுகமாகவும்; அவருடனான என் அனுபவங்களைப் பகிர்முகமாகவுமே அமைந்தியலும் இப்பதிவே.

வாய்மொழி மரபும் வரிமொழி மரபும் இலக்கியக் கைகோள்களே. ‘வழக்கும் செய்யுளும் ஆயிருமுகத்தும்’, ‘பாடல் சான்ற புலநெறி வழக்கு’ என்றிவை பயின்றுவரும்.

எழுத்தையே அதிகாரமாகப் பார்த்த இருவர் கி.ராஜநாராயணனும், தொ.பரமசிவனும் ஆவர். இந்தப் புள்ளியில் இருந்துதான் இவர்களைப் பல்கலை வளாகப் பண்டித மரபினர் புறக்கணிக்க முயலும் ஒவ்வாமையின் காரணிகளை  இனங்காண இயலும்.

 

எழுத்துப் பிறப்பதற்கு முன்பே அறிவு பிறந்தது. எழுத்து வருபவனுக்குத் தான் அறிவுவரும் என்பது ஒரு பொய். அறிவென்பது எழுத்துமூலம் சார்ந்தது தான் என அப்படிக் கருதவைத்தது ஐரோப்பிய மெய்காண்முறை. எழுத்து மரபு பிறப்பதற்கு முன்னனாலேயே பிறந்த அறிவைத்தான் காரல் மார்க்ஸ் தொகுக்கப்படாத அறிவென்பார் என தொ.பரமசிவன் எடுத்துரைப்பார். (‘சாளரம் இலக்கியமலர் -2008)

பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைமைப்பதவியில் இருந்தவரான தொ.பவையே இத்தகு அணுகுமுறை சார்ந்தவர் களப்பணி ஆய்வை வலியுறுத்தியதும் மக்களிடம் போங்களென அவர் மாணவர்களிடம் வலியுறுத்தியதும் கல்வி வளாகக் காலனிய மனோபாவப் பேராசிரியர் இடையே ஒவ்வாமை ஏற்படுத்தியது என்றால்; ஏழாம் வகுப்புவரையே  ஏனோதானோ எனப்படித்த ஒரு கரிசக்காட்டுச் சம்சாரியான கி.ரா ஒரு பல்கலைப் பேராசிரியர் ஆனதை அத்தகு மனோபாவியரால் எப்படி ‘சகித்துக்கொள்ள’ இயலும்?

கல்வி நிறுவன விதிமுறைகளின்படி முறையான  பேராசிரியப் பணிக்கான கல்வியைப்பயிலாத உ.வே.சா, இல.ப.கரு.இராமநாதன், ஆ.சிவசுப்பிரமணியன் ஆகியோர் பணியமர்த்தமே  கல்வித்துறை வரலாற்றில் புறனடையானவை. அதற்கெல்லாம் அப்பால் அத்தொடர்பில் கிராவின் பேராசிரியப் பணியமர்வே முதற்சாதனையாகும்.

” வாய்மொழி வரலாற்றைப் பொது மொழி வரலாறு ஒருபோதும்  ஒத்துக் கொள்வதில்லை. ஆனாலதை மாற்றிக் கதைப்படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார். ‘கோபல்ல கிராமம்’ “கோபல்லபுரத்து மக்கள், இரண்டு படைப்புகளும் இதற்கு உதாரணங்களாகும்” -எஸ். இராமகிருஷ்ணன் (தமிழ் இந்து,  23.5.2021)

“மிகைப் படுத்தப் பட்ட புகழை, ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட புகழை அடைந்தவர் ராஜநாராயணன். அவருடைய கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இட்டுக் கட்டப் பட்டது.  தஞ்சாவூர் இலக்கியம், திருநெல்வேலி இலக்கியம், கொங்கு இலக்கியம் , திருவண்ணாமலை இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்துவதைப் போன்ற அபத்தம் வேறில்லை. இலக்கியம் வட்டாரம் சார்ந்ததல்ல. மொழி,நிலம் சார்ந்த விஷயங்களை வைத்து இலக்கியத்தைப் பிரிப்பது சரியில்லை, நியாயமும் இல்லை.”

“ராஜநாராயணன் முதல் தரமான, இலக்கியபூர்வமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய சிறந்த எழுத்தாளர்.(கதைசொல்லி என்பது செல்லம் கொஞ்சுதல். நான் செல்லம் கொஞ்ச விரும்பவில்லை).”  “அந்தப் பாலியல் கதைச் சேகரிப்பு அவருடைய பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது அவருக்கு அரசு மரியாதை தரப்படுவது ரொம்ப அதிகப்படியானதே.” – வண்ணநிலவன்

இவை இருவேறு படைப்பாளிகளின் தரப்புகள். எஸ்.ராவால் வாய்மொழி வரலாற்றைப் பொதுமொழிமரபு ஏற்காமையை  மாற்றி எவ்வாறவர் அதன் உண்மைளை வரலாற்றின் சாட்சியங்களாக்கினார் என இனங்காண இயல்கின்றது.

ஆனால் தமிழில் மகத்தான சாதனைகளைப் படைத்தவராகச் சொல்லப்படும் வண்ணநிலவனிடம் கி.ரா மீதான ஒவ்வாமைகள் எப்படி எல்லாம் வெளிப்படலாகின்றது?

அதனதற்கான அருகதை படைத்தே கி.ராவின் இசைபட வாழ்ந்த பெறுபேறுகளை ஒரு சகபடைப்பாளி ஆன வநியால் ஏன் ‘சகித்துக்கொள்ள’ முடியாமற் போயிற்று? மாற்றுத்தரப்புகளையும் காண்போம்:

“என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக இருப்பதானது, ஒரு சமூகத்தின் எழுத்தாளராக அவர் இருப்பதையே குறிக்கிறது. ஹெமிங்வே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எழுத்தாளர்; அதாவது, முழு அமெரிக்காவுக்குமான எழுத்தாளர் அல்ல அவர். இதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்குமே உண்மை” “எந்த எழுத்தாளரும் ஒட்டுமொத்த நாட்டுக்குமான எழுத்தாளர் கிடையாது; எல்லோருமே ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இப்படிக் குறிப்பிட்ட மொழியைப் பேசும் சமூகத்தை, குறிப்பிட்ட நிலப்பரப்பை, குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்தவராக இருப்பதென்பது ஒருவருடைய இலக்கியத்தின் மகத்துவத்தை எந்தவகையிலும் குறைத்துவிடாது.”

“அந்த வகையில் பேந்தரேவை தார்வாட்டைச் சேர்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்; குவெம்புவை மலநாட்டைச் சார்ந்த ஒரு உலக எழுத்தாளர் என்று சொல்வேன்.” – யு.ஆர்.அனந்தமூர்த்தி (‘தமிழ் இந்து’, 22.5.2021)

“கடந்த நூற்றாண்டில் உலக முழுக்கவே எல்லாச் சமூகங்களும் தத்தம் அளவில் தம் மக்களின் வரலாறுகளையும் சமகால வாழ்வையும் இலக்கியமாக்க முயன்றுகொண்டிருந்தன. இந்தச் செயல்பாட்டில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் ஒரு வகைமை என்றால் ஆப்பிரிக்க இலக்கியங்கள் இன்னொரு வகைமை. தெற்காசிய இலக்கியங்கள் அதில் இந்திய இலக்கியங்கள் வேறொரு வகைமை. இவை ஒவ்வொன்றும் நமக்கான பிரத்யேக அழகியல் மொழிகளைக் கொண்டிருந்தாலும்,  இவற்றின் மையமாய் இருந்தது இவற்றில் தொழிற்பட்ட இலக்கியத்தை ஜனநாயகமாக்குதல் என்ற செயல்பாடே. கி.ரா. அதன் தமிழ்முகமாய் இருந்தார். இந்த சர்வதேசத்தன்மையின் தமிழ்த்தலைமை கி.ரா. என்றே சொல்வேன்” – இளங்கோ கிருஷ்ணன் (‘தமிழ் இந்து’, 21.5.2021)

 

சர்வதேசத்தன்மையின் தமிழ்த்தலைமை’

மொழி, நிலம், வட்டாரம் சார்ந்து இலக்கியத்தைப் பிரிப்பது சரியில்லை, நியாயமும் இல்லை என்னும் வண்ணநிலவன் அத்தகு வகைமைப்பாட்டைப் போல் அபத்தம் வேறில்லை என்கின்றார். அவர் மட்டுந்தான் என்றில்லை. இவ்வாறே இமயமும்  கூடத் தலித்திய,  பெண்ணிய இலக்கிய வகைமைப்பாடுகளை மறுதலித்திடக் கூடியவரே. இவ்வாறே பெண்ணிய இலக்கிய வகைமைப்பாட்டையே புறக்கணிக்கும் பெண்களும் உளர்.

இவர்கள் அனைவருமே ஒரு புள்ளியில் ஒன்றக்கூடியோரே. அது யாதெனில்  இவர்கள் அனைவருமே வகைமைப்பாட்டின் உட்கிடையையே உணர்ந்துகொள்ள மாட்டாதாரே.

பொதுவியல்பு சிறப்பியல்பு எனவாங்கு பொதுமூலந்தேடுதலும், வேற்றுமையறிதலும் குறித்த புரிதல் அறவே வாய்க்கப்பெறாமையே இத்தகு பிறழ்திரிபாயே  பிழைத்துணருங் கோளாறுகளுக்கான காரணி எனலாம். தனித்த சிறப்பை விதந்தோதக் கூடியதே இத்தகு வகைமைப்பாடு.

மீள நாம் வண்ணநிலவனுக்கே வருவோம்.   நம் திணைமரபையும் உலகளாவிய இலக்கிய மரபையும் அவர் போல்வார் காணத்தவறினர் என்பதற்கான மாற்றுத்தரப்புகளே ‘குறிப்பிட்ட சமூக, நிலம், மொழி சார் உலக எழுத்தாளர்’ எனும் அனந்தமூர்த்தி கூற்றும்; ‘சர்வதேசத்தன்மையின் தமிழ்த்தலைமை’ எனும் இளங்கோவின் கூற்றுமாகும்.

 

மோடிப்பாடு’

இத்தொடர்பில் கோயில் மரவாகனங்களை முன்வைத்து ஆதிமூலமும், தஞ்சைப் பெரியகோயில் ஓவியங்களையும் ஆதிமுலக் கோட்டோவியங்களையும் முன்னிறுத்திச் சனாதனனும்  பாரம்பரிய வடிவங்களின் இயல்பையே கொண்டு அதேவேளையில் அவற்றை மீறிநின்று பேசத்தக்க, ‘மோடிப்படுத்தலை’ (Style of the Stylization),க் குறித்து எடுத்துரைப்பன இங்கே மனங்கொள்ளத்தக்கன. (‘அழியாக்கோடுகள்’)

“அவருடைய (ந.பிச்சமூர்த்தி) கவிதைகளில் ஓர் அற்புதமான ஒளி வீசும். அதாவது சொல்லையும் பொருளையும் மீறிஎழும் கருத்தின் ஒளி நிறைந்தது அவருடைய வாக்கு.” “அவர்காட்டும் படிவமும் பரிமாணமும் சித்திரத்தின் கோடுகளின்  விளிம்பை முறித்துக்கொண்டு மேலெழும் தன்மையுடையவை. அதாவது கண்பார்க்கும் கோடுகளுக்கும் அப்பால் கண்பார்க்காத கோடுகளில் அல்ட்ராவாகப் புலனாவன.” – கரிச்சான் குஞ்சு (‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’)

இத்தொடர்பில் பிச்சமூர்த்தி கவிதைகளை முன்னிறுத்திக் கரிச்சான் குஞ்சும்  இவ்வவாறு கவினுறச் சித்திரிப்பார்.

கதைசொல்லிங்கறது வ.நி –க்குஞ் செல்லங்கொஞ்சலாம். ‘நான் ஒரு கதைசொல்லி சொல்லணும். நான் அப்படித்தான் எழுதுவேன்” எனும் கி.ராவின் கூற்றே இதற்கு அறையும் மறுமொழி.

பின்நவீன/ பின் நவீனத்துவக்கதைசொல்லி’

“புதினங்களின் உரையாடலுக்கு மட்டும்தான் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவது என்று எழுதாத விதி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டுவந்த காலத்தில் ஒட்டுமொத்தப் படைப்பையும் பேச்சுவழக்கிலேயே எழுதி, புதியதடத்தை உருவாக்கியவர் கி.ரா. “ – தொல்.திருமாவளவன் (‘தமிழ் இந்து’, 21.5. 2021)

இத்தொடர்பில் கி.ராவின் சமாந்தர எழுத்தாளரான கு.அழகிரிசாமியே இதனைக் கண்டித்தும் கி.ரா அதனைப் பொருட்படுத்தவே இல்லை. கி.ரா் அப்படித்தான் நான் எழுதுவேன் என்றதேன்? கதைசொல்லி என்றால் கதையெழுதி அல்ல என்பதே. ஆம்!, அவருக்கு எல்லாமே கதைகளே. அவர் கதைகள் யாவுமே எழுதுகதைகள் அல்ல ‘சொல்கதைகளே’!

இவ்வகையில் வட்டார வழக்கிலுங்கூட அவர் கதைகள் வேறுபட்டுத் தனித்து வீற்றனவே. “நடந்ததைத் திருப்பிச் சொல்வதும், நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்வதும் ஒவ்வொரு வாய்க்கும் மாறுபடும்”

“அப்பொருள் ஒற்றை மெய்ப்பொருளாய் அமையாது. வாய்க்கேற்ப, இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப மாறுவதே சொல்கதை இயங்கியல்.” – ரமேஷ் பிரேதன்

கதை ஓன்றேனும் சொல்லல் பலவே!

ரமேஷும் பிரேமும் கிராவின் பத்துக் கதைகளை முன்வைத்தெழுதிய தம் ‘கி.ராவின் எழுத்துலகம்’ என்ற நூல் மூலம் கி.ரா என்னும் நாட்டார் கதைசொல்லி என்ற எளிய படிமத்தைச் சிதைவாக்கி அவரை ஒரு பின்நவீன/ பின்நவீனத்துவக் கதைசொல்லி என்ற புதியவாசிப்பு வழியே தம்மால் நிறுவப்பட்டதெனத் தொடர்வாரவரே.

 

பெண்ணிலை நோக்கில் கிரா

“கிராவின் பெண்ணுலகம் புனையப்பட்ட உலகம் அன்று”

“உண்மையான தோழமை உணர்வுடன் எழுதப்பட்ட எதார்த்த உலகம் அது. அவ்வுலகில் ஆணாதிக்கமோ அதிகார நோக்கமோ சொல்லாடலோ இல்லை” -இரா.பிரேமா (‘தமிழ் இந்து’,23.5.2021)

கி.ராவின் முதல் நாவலான  ‘கோபல்ல கிராமம்’  137 வயதான மங்கத்தாயம்மாள் என்னும் கதைசொல்லியின் வாய்மொழி வழக்கிலேயே சொல்லப்பட்டிருப்பதையும்; 1964 – இல் எழுதப்படட ‘கோமதி’ தான் திருநங்கையரைப்பற்றிய முதல்கதை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் பிரேமா.

“கோமதிக்கு முன்பிறந்த ஏழுபேரும் அசல்பெண்கள்  என்று சொல்லும் போதே ‘கோமதி’ யார் என்பதை உணர்த்திவிடுகிறார் கி.ரா.” என்னும் மா.ஞானபாரதி இந்தியக்கல்விக்குழும – பாடப்புத்தக மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்து:

” பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்மை, ,பெண்மை என்று பிரிப்பதும், இதனைச் சார்ந்து அவற்றின் செயல்பாடுகளையும் தன்மைகளையும் பிரிப்பதும், அறிவியல் பூர்வமானதல்ல” என்பதும், “ஒவ்வொரு பாலினமும் தன் மாற்றுப் பாலினத்தின் மீதான மரியாதையை வளர்க்கவேண்டும்” என்பதும் அந்தக் குழுமத்தின் ஒன்றாக இருப்பினும் மாற்றுப்பாலின மீதான மரியாதை பற்றியதிலுங் கூடக் குறிப்பில்லை எனத் தொடர்கின்றார்.  (‘கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’)

தகவல் தொடர்பியல் பயின்ற ஞானபாரதி இத்தொடர்பில் சுட்டிக்காட்டும் மெய்ம்மை (Fact) கவனிக்கத்தக்கது. இன்று நாம் புரட்சிகரமாகப் பேசிக்கொள்ளும் LGBT சிந்தனைகள் கிராமப்புறத்தில் அவ்வளவாக இறங்கியிராத காலச்சூழலில் அப்போதே ‘கோமதி’க்கு அந்த மரியாதையை வழங்கியுள்ளார் என வியக்கின்றார்.

கி.ரா.வின் ஆண்வகை மாதிரிகளின் மீதே குவிந்த தம் பெண்ணியநோக்கு ‘கோமதி’யைப் படிக்கும் போதே சிதையத் தொடங்கி, ‘தொண்டு’ படிக்கையில் முற்றிலுமாய் அழிந்தது என்கின்றார். அது ‘காமம்மா’ என்கிற ஒரு பாலியல் தொழிலாளியாகிய ‘புள்ளிக்காரி’ யின் கதை.

இப்படியெல்லாம் பிரேமாக்களாலும், இளைய ஞானபாரதிகளாலும் பாலியல் கதைத் தொகுப்பாளி சுதந்திரதேவிகளாலும் கிரா இனங்கண்டு கொண்டாடப்படுகையில் மறுபக்கமது வண்ணநிலவ வகையறாக்களால் “அந்தப் பாலியல் கதை சேகரிப்பு அவர் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது” என ஆணாதிக்க ஒழுக்கப்புனிதவாத ஒவ்வாமை லிங்கமையச் சொல்லாடல் ஆக வெளிப்படலாகின்றது.

‘எஸ்தர் சித்தி மகன்  அன்செஸ்ட் எழுதிய வநிக்கு அதைப்பற்றி எல்லாம் பேச அருகதை ஏதென்பது’ சரவணன் மாணிக்க வாசக எதிரீடு.

 

மனுஷ நாத்தமும், மனுஷ வாழ்வின் பெரிய ருசியும்..’

“மேல்வயித்துப்பசி, கீழ்வயித்துப்பசி இது ரெண்டும் மட்டும்தான் நெஜம். மிச்ச எல்லாமே கற்பனையும் கருத்துகளும் மட்டும்தான். எவ்வளவோ ஜனங்களைப்  பாத்திருக்கேன். மனுஜங்களோட ஆதார குணங்கள்ல எந்த வேறுபாட்டையும் நான் பாக்கலை.தலைமுறைகள் தாண்டியும் இது மாறலை.”

” காலமும் இடமும் கணக்கு இல்லை, மனுஷன் இருக்குற இடமெல்லாம் மனுஷ நாத்தம் இருக்கும்.” – கி.ராஜநாராயணன்.

இதுதான் அவரின் மனிதவாசிப்பின் பெறுபேறே. மனுஷப் பொறப்பெடுத்த நோக்கம் சந்தோஷமா வாழ்வதே அப்படில்லாம் ஆசப்பட்டாக்குல வாழ இந்தக் கலாச்சாரம் இடங்கொடுக்கல்லியே என ஆதங்கப்படுகின்றார்:

” ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாச்சாரம் இருந்துச்சு.விருப்பம் போல புடிச்சவங்களோட வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டு போய்டலாம்; இன்னொன்னு சேத்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் இது தெரியும்; ஊருக்கும் தெரியும் யாரும் தப்பா நெனைக்கிறது இல்லை.”

“தன்னுடைய 98 வருட மூன்றில் வாழ்க்கையில்  மூன்றில் இருபங்கு காலம் மரபார்ந்த இடைசெவல் கிராமத்தில் வாழ்ந்த கி.ரா, ஒரு பங்கு காலம் படுநவீனமான புதுச்சேரியில் வாழ்ந்தார்;பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் பணிநிமித்தமாக வந்தவர், ஊரும் மக்களும் பிடித்துப் போனதாலேயே கடைசிவரையில் புதுச்சேரியிலேயே வாழ்ந்தார்.

பண்பாட்டு ரீதியாக பிரெஞ்சு  மனநிலையை அவர் உன்னதமாகக் கருதினார்.” “குடும்பம் என்கிற அமைப்பே உடைய வேண்டும்; ஒரு கலாச்சாரத்தை மதிப்பிடப் பாலியல் சுதந்திரந்தான் அளவுகோல் என்று பேசிய கி.ரா.,

நவீன தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்த முக்கியமான பங்களிப்பு நாட்டார் மரபின் கதைசொல்லல் முறையை இதோடு கொண்டுவந்து இணைத்ததோடு முடியவில்லை; நாட்டார் மரபின் கலகத்தன்மையையும் அப்படியே கொண்டுவந்து சேர்த்தார்.” – சமஸ் (‘தமிழ் இந்து’, 22.5.2021)

கெட்டிதட்டிப் பாறையாய் இறுகிய சாதிய மனோபாவத்தால் இடைநிலைச் சாதியினரூடே கௌரவத்தின் பேரால் ஆணவக்கொலைகள் தொடர்கதைகள் ஆகிவரும் இன்றைய வெறுப்புவெறி நீலம்பாரித்த காலக்கட்டத்தில் இந்தக்  கரிசக்காட்டு மூப்பன் நேரெதிராகக் குடும்ப நிறுவனத்தைத் தகர்த்தெறியும் பாலியல் விடுதலை பேசி நிற்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமியரைக் காதலித்த தம் பேத்தியின் காதலைக் குடும்பத்தார் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமலே ஈடேற்றி மணமுடித்தே வைக்கின்றார்:

“வேறுபாடுகள் ஒண்ணுகூடி மறையும் போது ருசி மிகுந்திடுது. சேர்க்கைதான் மனுஷ வாழ்வின் பெரிய ருசி.”

அடடா  இவனல்லவோ மாமனிதன்? எம் தமிழ்க்குடியின் பெருவாழ்வுக் கரிசல் மூப்பன் நிறைவாழ்வு?

-தொ ட ரு ம்..


  • வே.மு.பொதியவெற்பன்

இக்கட்டுரையின் அனைத்து பாகங்களையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *