சொற்கள் உயிர்ப்பானவை, கவிதைகளுக்குள் சொற்கள் பிரவேசிக்கும்பொழுது அதற்கான அந்தஸ்தையும் அழகையும் பெற்றுவிடுகின்றன. பிறரின் மனதை அழுத்தங்கள் ஆக்குவதும் மென்மையாக்குவதும் சொற்களின் பிரத்தியேக வலிமை. அவ்வாறான சொற்களைத் தனது ஆக்கங்களில் பொருத்தி மிளிர வைக்கும்பொழுது படைப்பாளன் வாசகனால் கொண்டாடப்படுகின்றான். அப்படியாக முதலில் மிக அழகான சொற்களால் முகநூலில் கவிதைகளால் லயிக்க வைத்தவர்தான் நூலாசிரியர் மதுரா.
இங்கு “பெண் பறவைகளின் மரம்” என்ற கவிதைத் தொகுப்பு நிறையப் பேச வைக்கும் தொகுப்பாக உருவாக்கி இருக்கிறார் மதுரா. மரங்கள் பெண்களுக்கென்று தனித்து உள்ளதாவென்ற ஐயப்பாட்டுடன் வாசித்து நிற்கையில் தான் தெரிகின்றது சிறந்த ஒப்புமையென்று. ஆம் இன்னும் பெண்கள் தனக்கான வாழ்வில் சில கட்டமைப்பின் கட்டுப்பாடுகளில் தனக்கான குடும்பத்தின் மரத்தில்தான் சிறகடிக்கின்றார்கள். சமூகத்தில் இன்னும் பால்யத்திலிருந்து மணமாகிச்செல்லும் வரை தாய் தந்தையர் என்ற கட்டமைப்புக்குள்ளும், மணமான பின்பு கணவன், வயோதிகத்தில் பிள்ளைகளின் பிடியிலும் வாழ்வுச் சூழல் அமைந்துவிடுகின்றது. இப்படியான நகர்வுகளில் 96 பக்கங்களில் தனது சொற்களின் நளினத்தில் கவிதைகளை கரங்களில் தவழவிடுகின்றார் கவிஞர் மதுரா.
வழக்கம்போல்இம்முறையும் கடை முழுவதையும்அலாசியாகிவிட்டது……..பொருத்தமான ஒன்றுஅகப்படவே இல்லைபெரிதாகவோ சிறிதாகவோதுருத்திக்கொண்டோஏமாற்றியது…….ஓரளவு பொருந்துகிறவைஎல்லாம் என்னைப்பிரதிபலிப்பதாகவோஇருந்து தொலைத்தன…….பேசிப் பழகுகிறஎதிர்ப்படுகிற அத்தனைபேரும்கனகச்சிதமான ஒன்றோடுகடந்துபோகையில்எனக்கானது மட்டும்கிடைக்கவே இல்லை……வெகுநேரத் தேடலில்கடைக்காரர் காதோரமாய்சொன்னார்…….இதற்கேற்றபடிமுகத்தை மாற்றிக் கொள்ளுங்கள்…
சூரியத் துகள்களாய்
நீண்ட ஔிக்கீற்றில்
தகதகத்து பிரவகிக்கும்
மின்நதியென அதிர்வூட்டும்
பித்தனின் சிரசிலிருந்து
வழிந்தோடும் தேவநதி…..
முடிந்த வாழ்வைப் பூரணமாக்க
நீரினுள் நனைத்து
எரியூட்டி தகனமாகும்
உடல்கள் ஒருபுறம்……..
முடியாத பாவங்களை
கரைத்தெடுக்க
நதியினில் மூழ்கி
எழும் உயிருள்ள உடலங்கள்
ஒருபுறம்…..
இருப்போ, இல்லாமையோ
நிரந்தரமில்லாததை
அனுதினம்
உணர்த்தியபடியே
ஓடிக்கொணடிருக்கிறாள் கங்கை..
ஒரு படைப்பை உயர்த்திக் கொண்டாடுவது அப்படைப்பில் படைப்பாளன் கையாளும் சொற்களின் வலிமைதான் முக்கிய காரணமாகும். சொற்கள் அனைத்து உணர்வுகளையும் உருவாக்கிக்கொள்கின்ற தனமையைப பெறுகின்றன. சொற்களின் உணர்வுகள் வலிமையானதாகவும் எளிமையானதாகவும் படைப்பாளனின் மனநிலையில் தனித்துவம் பெறுகின்றன. அதே சமயம் சொற்களின் நயம் உணர்வின் உயிர்ப்புக்குள் தன்னை அடக்கிவிடும். அப்படியான சொற்களின் தன்மையை இக்கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் மதுரா. அதுவும் சொற்கள் தனது உயிர்ப்பு நிலையில் என்னவெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை மிக அழகாகக் கவிதைப் படுத்துகிறார்.
பகல் முழுதும்
சளசளத்து ஓய்ந்த
சொற்கள்
குவிந்து கிடக்கின்றன….யாமத்தின் நிசப்தத்தில்
நிலவின் மௌனமும்
கடலலையின் இரைச்சலும்
தவிர….
நாவு ஓய்வெடுக்கையிலும்
மனம மட்டும்
புரண்டு புரண்டு படுக்கிறத
கர்ப்பிணி போல…..உதிர்த்துப் போட்டவையும்
பெற்றுக் கொணடவையும்
மாறி மாறி உரசிப் பார்க்க
தனக்கான தராசில்
நிறுத்துக் கூர்தீட்டி
மீண்டும் உத்வேகமாய்
மறுநாள் வீரியமாய்
எழுந்து கொள்கின்றன.
எல்லாவற்றிற்குமான கேள்விக்கும் ஒரு பதில் இருக்கும். பதில் இல்லாத கேள்வி, கேள்வியாக முற்றுப்பெறுவதில்லை. அது தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் பதில் மிகவும் வலிமையானதாகும்.
உறைந்த மௌனத்திற்குப்
பின்னே சொற்கள்
கை பிசைந்து நிற்கின்றன.
அகந் திறந்த
உண்மைகளை
உரைக்கத் திராணியற்றுத்
திகைத்து தவிக்கின்றன.உதிரும் எதுவொன்றும்
பொருளற்றுப் பின்வாங்கிட
பலிபீடத்தில்
கழுத்தறுக்கப்பட
காத்துக்கிடக்கும் உயிரென
அங்கலாய்தத்து
அலைமோதுகின்றன….
தாய்மொழியோ, தேசியமொழியோ
எதுவும் பிரயோசனப்படாது
மௌனமே
ஆகச்சிறந்த மொழியாக
அங்கீகரிக்கப்படுகிறது
அநேக நேரங்களில்.
பயணங்கள் தொடக்க நிலையின் போதே தனக்கே உரித்தான தன்மையில் துவங்குகின்றது. முடிவு நிலையில் அதன் தன்மை முற்றிலும் மாறுபடலாம். வாழ்வில் ஜனனம் என்பதும் துவக்கம்தானே. தான் வாழ்ந்து முடிந்து தனது இறுதி நிலை எய்தும்போது துவங்கிய மனநிலையும் ஒரே தன்மை ஒருபோதும் அடைவதில்லை நிறைய மாற்றங்கள் அடைந்துதான் முடிவு நிலை எய்துகின்றன. அந்த தருணங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் நிறுத்தங்களில் பல மாறுதல்கள் சம்பவிக்கின்றன. அப்பொழுது நிறுத்தற்புள்ளிகளில் நடைபெறும் மாற்றத்தைக் கவிஞர் மதுரா தனது தொடு கோடுகளின் மூலம் சிறப்பாக வகைமைப்படுத்துகின்றார்.
முடிவுகளற்ற பயணங்களால்
நிறைந்து கிடக்கும் வீதியில்
நடக்க எத்தனிக்கும்
கால்கள் நீளமா? குட்டையா?தரை தழுவும்
பாதங்களில் பூமியின்
அட்சரேகை…சரியும்போது சமன்படுத்துதல்
மெய்நிலை….தொலைக்கவோ மீட்கவோ
இயலாத இடத்தில்
ஒரு முற்றுப்புள்ளி…வலசை திரும்பும்
பறவைகள் சுமந்தலையும்
ஆகாயத்திலிருந்து
ஒரு தொடுகோடு…மண்ணுளிப் பாம்புகளுக்கு
கால்களில்லை…..
இப்படியாகப் பெண் பறவைகளின் மரம் என்ற நூலில் 96 பக்கங்களில் வர்ணமடித்த ஓவியமாக சொற்களில் செதுக்கியுள்ளார் கவிஞர் மதுரா அவர்கள். அனைத்துக் கவிதைகளும் மேற்காண் குறிப்பிட்டுள்ளது போல மிகச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகின்றேன். வாசிக்க வாசிக்க வியக்க வைக்கும் கருத்துச் செறிவுகள் கொண்ட இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளையும் SRI.N.SRIVATSA அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருப்பது நூலின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது.
நல்ல கவிஞரை மீண்டும் இரண்டாவது நூலில் பெருமைப்படுத்தி இருக்கிறது படைப்பு பதிப்பகம். பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்!
மிகச்சிறந்த கவிதைகளைக் கவிஞர் மதுரா அவர்கள் பெண் பறவைகளின் மரம் என்ற நூலில் மலரவைத்தமைக்கு மனமுவந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நூல் : பெண் பறவைகளின் மரம் | Tree of Female Birds
பிரிவு: நவீனக் கவிதைகள்
ஆசிரியர் : மதுரா
மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில்: N.srivatsa
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2020
விலை: ₹ 100